Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஒப்படைக்கப்பட்டு கொண்டுபோகப்படுகிறார்

ஒப்படைக்கப்பட்டு கொண்டுபோகப்படுகிறார்

அதிகாரம் 124

ஒப்படைக்கப்பட்டு கொண்டுபோகப்படுகிறார்

சித்திரவதை செய்யப்பட்ட இயேசுவின் அமைதலான கண்ணியத்தால் உந்தப்பட்ட பிலாத்து மறுபடியும் அவரை விடுதலை செய்வதற்கு முயற்சி செய்கிறான், அப்போது பிரதான ஆசாரியர்கள் இன்னுமதிக கோபமடைகின்றனர். அவர்களுடைய பொல்லாத நோக்கத்தை எதுவும் குறுக்கிட அனுமதிக்கக்கூடாது என்று அவர்கள் உறுதியாயிருக்கின்றனர். ஆகையால் அவர்கள் தங்கள் கூப்பாட்டை மீண்டும் ஆரம்பிக்கின்றனர்: “சிலுவையில் [கழுமரத்தில், NW] அறையும்! சிலுவையில் அறையும்!”

“நீங்களே இவனைக் கொண்டு போய்ச் சிலுவையில் அறையுங்கள்” என்று பிலாத்து பதிலளிக்கிறான். (அவர்களுடைய ஆரம்ப உரிமைபாராட்டுதல்களுக்கு முரணாக, போதுமான அளவு வினைமையாயிருக்கும் மத சம்பந்தமான குற்றங்களுக்கு குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கு யூதர்களுக்கு ஒருவேளை அதிகாரமிருக்கலாம்.) அடுத்து, ஐந்தாவது முறையாக பிலாத்து இயேசுவை குற்றமற்றவர் என்று அறிவிக்கிறான்: “நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன்.”

தங்களுடைய அரசியல் சம்பந்தமான குற்றச்சாட்டுகள் விளைவுகளை உண்டாக்க தவறினதைக் கண்ட யூதர்கள், அநேக மணிநேரங்களுக்கு முன்பு நியாயசங்கத்துக்கு முன்பாக இயேசுவின் விசாரணையின் போது உபயோகித்த தேவதூஷணம் என்ற மதசம்பந்தமான குற்றச்சாட்டின் பேரில் திரும்புகின்றனர்: “எங்களுக்கு ஒரு நியாயப்பிரமாணமுண்டு, இவன் தன்னைத் தேவனுடைய குமாரனென்று சொன்னபடியினால், அந்த நியாயப்பிரமாணத்தின்படியே, இவன் சாக வேண்டும்.”

இந்தக் குற்றச்சாட்டு பிலாத்துவுக்கு புதிதாய் இருக்கிறது, இது அவனை இன்னும் அதிக பயமடையச் செய்கிறது. அவனுடைய மனைவியின் சொப்பனமும் இயேசுவின் ஆள்தன்மையின் குறிப்பிடத்தக்க பலமும் குறிப்பிட்டுக் காட்டுகிறபடி இயேசு ஒரு சாதாரண மனிதன் அல்ல என்பதை அவன் இதற்குள் உணருகிறான். ஆனால் “தேவனுடைய குமாரன்?” இயேசு கலிலேயாவிலிருந்து வந்தவர் என்பதை பிலாத்து அறிந்திருக்கிறான். என்றபோதிலும், அவர் இதற்கு முன்பு வாழ்ந்திருக்கக்கூடுமோ? அவரை மறுபடியும் அரண்மனைக்குள் கொண்டு சென்று, பிலாத்து இவ்வாறு கேட்கிறான்: “நீ எங்கேயிருந்து வந்தவன்?”

இயேசு மெளனமாக இருக்கிறார். தாம் ஒரு ராஜா என்றும், ஆனால் தம்முடைய ராஜ்யம் இவ்வுலகத்தின் பாகமாயில்லை என்றும் அவர் முதலில் பிலாத்துவிடம் சொல்லியிருக்கிறார். இப்போது எந்தக் கூடுதலான விளக்கமும் ஒரு பிரயோஜனமான நோக்கத்தை சேவிக்காது. இயேசு பதிலளிக்க மறுப்பதால் பிலாத்துவின் பெருமை புண்படுகிறது, அவன் இயேசுவின் மேல் கோபங்கொண்டு பின்வரும் வார்த்தைகளைச் சொல்கிறான்: “நீ என்னோடே பேசுகிறதில்லையா? உன்னைச் சிலுவையில் அறைய எனக்கு அதிகாரமுண்டென்றும், உன்னை விடுதலைபண்ண எனக்கு அதிகாரமுண்டென்றும், உனக்குத் தெரியாதா?”

“பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாதிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமுமிராது” என்று இயேசு மரியாதையோடு பதிலளிக்கிறார். பூமிக்குரிய அலுவல்களை நிர்வகிப்பதற்கு மானிட ஆட்சியாளர்களுக்கு கடவுளால் கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரத்தை அவர் குறிப்பிடுகிறார். “ஆனபடியினாலே, என்னை உம்மிடத்தில் ஒப்புக்கொடுத்தவனுக்கு அதிக பாவமுண்டு” என்று இயேசு கூடுதலாக சொல்கிறார். உண்மையிலேயே, இயேசுவை அநியாயமாக நடத்துவதற்கு பிரதான ஆசாரியனாகிய காய்பா அவனுடைய கூட்டாளிகள் யூதாஸ் காரியோத்து ஆகியோர் பிலாத்துவை விட அதிக பாரமான உத்தரவாதத்தை உடையவர்களாயிருக்கின்றனர்.

இயேசுவால் இன்னுமதிகமாக கவர்ச்சிக்கப்பட்டு, இயேசு ஒருவேளை தெய்வீக ஆரம்பத்தைக் கொண்டிருக்கலாம் என்று பயமடைந்து, அவரை விடுதலை செய்வதற்கு பிலாத்து தன் முயற்சிகளை மீண்டும் தொடங்குகிறான். என்றபோதிலும், யூதர்கள் பிலாத்துவை எதிர்த்து தடுக்கின்றனர். அவர்கள் தங்கள் அரசியல் குற்றச்சாட்டை மறுபடியும் சொல்லி தந்திரமாக பயமுறுத்துகின்றனர்: “இவனை விடுதலை பண்ணினால் நீர் இராயனுக்குச் சிநேகிதனல்ல; தன்னை ராஜாவென்கிறவனெவனோ அவன் இராயனுக்கு விரோதி.”

அதிக கடினமான பாதிப்புகளின் மத்தியிலும் பிலாத்து இயேசுவை மறுபடியும் வெளியே கொண்டு வருகிறான். “இதோ, உங்கள் ராஜா!” என்று அவன் மறுபடியும் அவர்களை இணங்க வைக்க முயற்சி செய்கிறான்.

“இவனை அகற்றும் அகற்றும், சிலுவையில் அறையும்!”

“உங்கள் ராஜாவை நான் சிலுவையில் அறையலாமா?” என்று பிலாத்து நம்பிக்கையிழந்த நிலையில் கேட்கிறான்.

ரோமர்களின் ஆட்சியின் கீழ் யூதர்கள் எரிச்சல் அடைந்திருந்தனர். உண்மையிலேயே அவர்கள் ரோம ஆதிக்கத்தை இழிவாகக் கருதுகின்றனர்! என்றபோதிலும், பிரதான ஆசாரியர்கள் மாய்மாலமாய் இவ்வாறு சொல்கின்றனர்: “இராயனேயல்லாமல் எங்களுக்கு வேறே ராஜா இல்லை.”

தன் அரசியல் ஸ்தானம், நற்பெயர் ஆகியவற்றுக்காகப் பயந்து, பிலாத்து இறுதியில் யூதர்களின் கடுமைதணியாத வேண்டுகோளுக்கு இணங்கிவிடுகிறான். அவன் இயேசுவை ஒப்படைத்துவிடுகிறான். போர்ச்சேவகர் சிவப்பான மேலங்கியை கழற்றி, அவருடைய வஸ்திரங்களை அவருக்கு உடுத்துகின்றனர். இயேசு கொல்லப்படுவதற்கு கொண்டு போகப்படுகையில், அவர் தம் சொந்த வாதனை மரத்தை சுமக்கும்படி செய்கின்றனர்.

இதற்குள் வெள்ளிக்கிழமை, நிசான் 14 காலையின் நடுப்பகுதியாகிறது; ஒருவேளை அது மதியத்தை நெருங்கிக் கொண்டிருக்கலாம். இயேசு வியாழக்கிழமை காலையிலிருந்து இளைப்பாறவில்லை. ஒன்றன் பின் ஒன்றாக கடும்வேதனையூட்டும் அனுபவங்களை அவர் அனுபவித்திருக்கிறார். எனவே, கழுமரத்தின் பாரத்தினால் அவருடைய பலம் சீக்கிரத்தில் குன்றிப்போகிறது. ஆகையால் அவ்வழியே சென்று கொண்டிருந்த ஆப்பிரிக்காவில் உள்ள சிரேனே ஊரானாகிய சீமோன் அவருக்காக அவருடைய மரத்தை சுமக்கும்படி வற்புறுத்தப்பட்டான். அவர்கள் தொடர்ந்து சென்று கொண்டிருக்கையில் பெண்கள் உட்பட அநேக ஜனங்கள் துக்கத்தால் தங்களை அடித்துக் கொண்டு இயேசுவுக்காக புலம்பி அழுகின்றனர்.

அந்தப் பெண்களை திரும்பிப் பார்த்து, இயேசு இவ்வாறு சொல்கிறார்: “எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள். இதோ, மலடிகள் பாக்கியவதிகளென்றும், பிள்ளைப்பெறாத கர்ப்பங்களும் பால்கொடாத முலைகளும் பாக்கியமுள்ளவைகளென்றும் சொல்லப்படும் நாட்கள் வரும். . . . பச்சைமரத்துக்கு இவைகளைச் செய்தால், பட்டமரத்துக்கு என்ன செய்ய மாட்டார்கள்?”

யூத தேசத்து மரத்தை இயேசு குறிப்பிடுகிறார், இயேசுவின் பிரசன்னத்தாலும், அவரை நம்பும் மீதியானோர் இருப்பதாலும், அந்த மரத்துக்கு இன்னும் ஈரம் இருக்கிறது. ஆனால் இவைகளை அத்தேசத்திலிருந்து எடுத்து விட்டால், ஆவிக்குரிய விதத்தில் மரித்துப் போன மரம் மட்டுமே, ஆம், ஒரு வாடிப்போன வதங்கிய தேசிய அமைப்பு மட்டுமே மீதம் இருக்கும். ரோம சேனைகள் கடவுளின் நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுபவர்களாக சேவித்து யூத தேசத்தை பாழாக்கும் போது ஓலமிட்டு அழுவதற்கு எப்பேர்ப்பட்ட காரணம் இருக்கும்! யோவான் 19:6–17; 18:31; லூக்கா 23:24–31; மத்தேயு 27:31, 32; மாற்கு 15:20, 21.

▪ மதத்தலைவர்கள் தங்களுடைய அரசியல் குற்றச்சாட்டுகள் விளைவுகளை உண்டாக்க தவறிய போது, இயேசுவுக்கு விரோதமாக என்ன குற்றச்சாட்டு செய்கின்றனர்?

▪ பிலாத்து ஏன் அதிக பயமடைகிறான்?

▪ இயேசுவுக்கு நேரிடும் காரியங்களுக்காக பெரும் பாவம் யார் மீது சுமரும்?

▪ இறுதியில், ஆசாரியர்கள் பிலாத்து இயேசுவை கொலைசெய்வதற்கு ஒப்புகொடுக்குமாறு எவ்வாறு செய்கின்றனர்?

▪ அவருக்காக அழுதுகொண்டிருக்கும் பெண்களிடம் இயேசு என்ன சொல்கிறார்? மரத்தை “பச்சை” என்றும் பின்னர் “பட்ட” என்றும் குறிப்பிடுவதன் மூலம் அவர் எதை அர்த்தப்படுத்துகிறார்?