Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஒரு குஷ்டரோகிக்கு இரக்கங்காட்டுதல்

ஒரு குஷ்டரோகிக்கு இரக்கங்காட்டுதல்

அதிகாரம் 25

ஒரு குஷ்டரோகிக்கு இரக்கங்காட்டுதல்

இயேசுவும் அவருடைய நான்கு சீஷர்களும் கலிலேயாவின் பட்டணங்களைச் சுற்றி வருகையில், அவர் செய்யும் அதிசயமான காரியங்களைப் பற்றிய செய்தி அந்த மாவட்டம் முழுவதும் பரவுகிறது. அவருடைய செயல்களைப் பற்றிய பேச்சு, குஷ்டரோகத்தால் நோயுற்ற ஒரு மனிதன் இருக்கும் பட்டணத்தை எட்டுகிறது. மருத்துவன் லூக்கா அவனைக் “குஷ்டரோகம் நிறைந்”திருப்பதாக விவரிக்கிறான். இந்தப் பயங்கர நோய் அதன் முற்றிய நிலைகளில், உடலின் பற்பல பாகங்களைப் படிப்படியாய் உருக்குலைத்துப் போடுகிறது. ஆகவே இந்தக் குஷ்டரோகி வருந்தத்தக்க நிலையில் இருக்கிறான்.

இயேசு இந்தப் பட்டணத்துக்கு வந்து சேருகையில், இந்தக் குஷ்டரோகி அவரை அணுகுகிறான். கடவுளுடைய சட்டத்தின்படி, ஒரு குஷ்டரோகி, மற்றவர்கள் மிக நெருங்கிவந்து நோய்த் தொற்றிக்கொள்வதற்கு ஆளாக்காதபடி பாதுகாக்க, “தீட்டு, தீட்டு” என்று எச்சரித்து சத்தமிடவேண்டும். இந்தக் குஷ்டரோகி இப்பொழுது முகங்குப்புற விழுந்து: “ஆண்டவரே, உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மாலே ஆகும்,” என்று இயேசுவிடம் கெஞ்சுகிறான்.

இந்த மனிதன் இயேசுவில் எத்தகைய விசுவாசம் கொண்டிருக்கிறான்! எனினும், அவனுடைய நோய் அவனை எவ்வளவு வருந்தத்தக்க நிலையில் தோன்றச் செய்திருக்க வேண்டும்! இயேசு என்ன செய்வார்? நீங்கள் என்ன செய்வீர்கள்? மிகுந்த இரக்கத்தால் தூண்டப்பட்டு, இயேசு தம்முடைய கையை நீட்டி அந்த மனிதனைத் தொட்டு: “எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு,” என்று சொல்லுகிறார். உடனே குஷ்டரோகம் அவனைவிட்டு நீங்குகிறது.

இதைப் போன்று இவ்வளவு இரக்கமுள்ள ஒருவர் உங்கள் அரசராயிருக்க நீங்கள் விரும்புவீர்களா? இந்தக் குஷ்டரோகியை இயேசு நடத்தும் முறை, அவருடைய ராஜ்ய ஆட்சியின்போது பின்வரும் பைபிள் தீர்க்கதரிசனம் நிறைவேற்றப்படும் என்ற உறுதியான நம்பிக்கை அளிக்கிறது: ‘பலவீனனுக்கும் ஏழைக்கும் அவர் இரக்கங்காட்டுவார், ஏழையானவர்களின் ஆத்துமாக்களை இரட்சிப்பார்.’ ஆம், நோயுற்ற எல்லாருக்கும் உதவி செய்ய நாடும் தம்முடைய இருதயத்தின் ஆவலை இயேசு அப்பொழுது நிறைவேற்றுவார்.

இந்தக் குஷ்டரோகியைச் சுகப்படுத்துவதற்கு முன்பே இயேசுவின் ஊழியம் ஜனங்களுக்குள் மிகுந்த கிளர்ச்சியை உண்டுபண்ணிக் கொண்டிருந்தது. ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக, இயேசு இப்பொழுது: ‘நீ இதை ஒருவருக்கும் சொல்லாதே,’ என்று, சுகப்படுத்தப்பட்ட மனிதனுக்குக் கட்டளையிடுகிறார். பின்பு அவர்: “போய் உன்னை ஆசாரியனுக்குக் காண்பித்து, நீ சுத்தமானதினிமித்தம் மோசே கட்டளையிட்டபடியே அவர்களுக்குச் சாட்சியாகச் செலுத்து,” எனக் கூறுகிறார்.

ஆனால் அந்த மனிதன் அவ்வளவு மகிழ்ச்சியுற்றிருப்பதால் அந்த அற்புதத்தைத் தனக்குள் வைத்துக்கொள்ள முடியவில்லை. அவன் போய் எங்கும் இந்தச் செய்தியைப் பரப்பத் தொடங்குகிறான். இது ஜனங்களுக்குள் அத்தகைய கவனத்தையும் அவாவையும் தூண்டிவிட்டதால் இயேசு ஒரு பட்டணத்துக்குள் வெளிப்படையாய்ச் செல்ல முடியவில்லை. இதனால் ஒருவரும் வாழாதத் தனித்த இடங்களில் இயேசு தங்குகிறார், எல்லா இடங்களிலுமிருந்து ஜனங்கள் அவர் சொல்வதைக் கேட்கவும் தங்கள் நோய்கள் சுகமாக்கப்படவும் அங்கே வருகிறார்கள். லூக்கா 5:12-16; மாற்கு 1:40-45; மத்தேயு 8:2-4; லேவியராகமம் 13:45; 14:10-13; சங்கீதம் 72:13; ஏசாயா 42:1, 2.

▪ குஷ்டரோகம் என்ன விளைவை உண்டுபண்ணக்கூடும்? குஷ்டரோகி என்ன எச்சரிக்கைக் கொடுக்க வேண்டும்?

▪ ஒரு குஷ்டரோகி இயேசுவை நோக்கி எப்படி வேண்டிக்கொள்கிறான், இயேசு கொடுத்தப் பதிலிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

▪ சுகப்படுத்தப்பட்ட மனிதன் எவ்வாறு இயேசுவுக்குக் கீழ்ப்படிய தவறுகிறான், அதன் விளைவுகள் என்ன?