Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஒரு கொடுங்கோலனிடமிருந்து தப்பித்தல்

ஒரு கொடுங்கோலனிடமிருந்து தப்பித்தல்

அதிகாரம் 8

ஒரு கொடுங்கோலனிடமிருந்து தப்பித்தல்

யோசேப்பு அவசரமான செய்தி சொல்வதற்காக மரியாளை எழுப்புகிறான். யெகோவாவின் தூதன் அப்பொழுது தான் அவனிடம் தோன்றி, “ஏரோது பிள்ளையைக் கொலை செய்யத் தேடுவான்; ஆதலால் நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொல்லும் வரைக்கும் அங்கே இரு,” என்று சொல்கிறான்.

உடனடியாக மூன்று பேரும் தப்பித்துப் போகிறார்கள். அது சரியான சமயமாக இருக்கிறது, ஏனெனில் வானசாஸ்திரிகள் தன்னை ஏமாற்றிவிட்டு தேசத்தை விட்டு ஓடிப்போனார்கள் என்பதை ஏரோது அறிய வந்தான். அவர்கள் இயேசுவை பார்த்த உடனே அவனிடம் வந்து திரும்ப அறிவிக்கும்படி சொல்லியிருந்தான் என்பதை ஞாபகப்படுத்திப் பாருங்கள். ஏரோது அதிக கோபமாயிருக்கிறான். எனவே இயேசுவை கொல்லும் முயற்சியில், பெத்லகேமிலும் அதன் மாநிலங்களிலுமுள்ள இரண்டு வயதும் அதற்குக் கீழ்ப்பட்ட வயதிலிருந்த ஆண் பிள்ளைகளையெல்லாம் கொல்லும்படியாக ஏரோது கட்டளையிடுகிறான். கிழக்கிலிருந்து வந்த வானசாஸ்திரிகளிடமிருந்து தான் முன்னதாக பெற்ற தகவலின் அடிப்படையில் அவன் இந்த வயதை கணக்கிடுகிறான்.

எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றுபோடுவதை பார்ப்பது அதிக பயங்கரமானது! ஏரோதின் காவலாளிகள் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் வலுக்கட்டாயமாய் பிரவேசிக்கிறார்கள். அவர்கள் ஓர் ஆண் பிள்ளையை பார்க்கும்போது அதன் தாயின் கையிலிருந்து குழந்தையைப் பறித்துக் கொள்கிறார்கள். எத்தனை குழந்தைகளை அவர்கள் கொன்றார்கள் என்று நமக்கு தெரியாது, ஆனால் தாய்மார்களின் மிகுந்த அழுகையும் கூக்குரலும் கடவுளுடைய தீர்க்கதரிசியாகிய எரேமியாவால் சொல்லப்பட்ட பைபிளில் உள்ள ஒரு தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுகிறது.

இதற்கிடையில், யோசேப்பும் அவனுடைய குடும்பமும் எகிப்திற்கு பத்திரமாக சென்று, இப்போது அங்கே வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் ஓர் இரவில் யெகோவாவின் தூதன் மறுபடியும் யோசேப்புக்கு சொப்பனத்தில் தோன்றுகிறான். “நீ எழுந்து, பிள்ளையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்துக்குப் போ; பிள்ளையின் பிராணனை வாங்கத் தேடினவர்கள் இறந்துபோனார்கள்” என்று தேவதூதன் கூறினான். கடவுளுடைய குமாரன் எகிப்திலிருந்து வரவழைக்கப்படுவான் என்ற இன்னொரு பைபிள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக, அந்தக் குடும்பம் தங்களுடைய தாய்நாட்டிற்கு திரும்புகிறார்கள்.

யோசேப்பு, அவர்கள் எகிப்துக்கு ஓடிப்போகும் முன்பு தங்கியிருந்த யூதேயாவிலுள்ள பெத்லகேம் ஊரிலே சென்று தங்கிவிட உத்தேசித்தான். ஆனால் ஏரோதின் கெட்ட மகனான அர்கெலாயு இப்போது யூதேயாவின் ராஜா என்று அவன் அறிய வருகிறான், இன்னொரு சொப்பனத்தில் இதன் ஆபத்தைப் பற்றி யெகோவாவால் எச்சரிக்கப்படுகிறான். எனவே யோசேப்பும் அவனுடைய குடும்பமும் வடக்கே சென்று கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலே வாசம் பண்ணுகிறார்கள். யூத மத வாழ்க்கை மையத்திற்கப்பால் இருந்த இந்தச் சமுதாயத்தில்தான் இயேசு வளர்ந்து வருகிறார். மத்தேயு 2:13-23; எரேமியா 31:15; ஓசியா 11:1.

▪ வானசாஸ்திரிகள் திரும்பி வராதபோது, ஏரோது ராஜா என்ன பயங்கரமான காரியத்தை செய்கிறான், ஆனால் இயேசு எப்படிப் பாதுகாக்கப்படுகிறார்?

▪ எகிப்திலிருந்து திரும்பியபோது, யோசேப்பு ஏன் மறுபடியும் பெத்லகேமில் தங்கவில்லை?

▪ இந்தக் காலப் பகுதியில் என்ன பைபிள் தீர்க்கதரிசனங்கள் நிறைவேறுகின்றன?