Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஒரு தர்க்கம் எழும்புகிறது

ஒரு தர்க்கம் எழும்புகிறது

அதிகாரம் 115

ஒரு தர்க்கம் எழும்புகிறது

இதற்கு முன்பு மாலையில் தம்முடைய அப்போஸ்தலர்களின் கால்களை கழுவுவதன் மூலம் இயேசு தாழ்மையான சேவையில் ஓர் அழகான பாடத்தை கற்பித்தார். அதற்கு பிறகு, நெருங்கி வரும் தம் மரணத்தின் ஞாபகார்த்தத்தை அவர் அறிமுகப்படுத்தினார். அப்போதுதான் இவைகளெல்லாம் நடந்து முடிந்திருக்க, வியப்பூட்டும் ஒரு சம்பவம் நடக்கிறது. தங்களில் எவன் பெரியவனாயிருப்பான் என்பதன் பேரில் அப்போஸ்தலர்களுக்குள்ளே ஒரு கோபமான வாக்குவாதம் உண்டாகிறது! வெகு காலமாக தொடர்ந்திருக்கும் விவாதத்தின் ஒரு பாகமே இது என்பது தெளிவாக இருக்கிறது.

இயேசு மலையின் மேல் மறுரூபமாக்கப்பட்ட பிறகு, தங்களில் எவன் பெரியவன் என்று தங்களுக்குள்ளே அப்போஸ்தலர்கள் தர்க்கம் பண்ணினார்கள் என்பதை நினைவுபடுத்திப் பாருங்கள். மேலும், யாக்கோபும் யோவானும் ராஜ்யத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஸ்தானங்கள் வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர், இது அப்போஸ்தலர்களுக்குள்ளே கூடுதலான சண்டை ஏற்படுவதில் விளைவடைந்தது. இப்போது, அவர்களோடு தம்முடைய கடைசி இரவில் மறுபடியும் அவர்கள் சண்டையிடுவதை காண்பது இயேசுவுக்கு எவ்வளவு விசனமாயிருக்கும்! அவர் என்ன செய்கிறார்?

அவர்களுடைய நடத்தைக்காக அப்போஸ்தலர்களை திட்டுவதற்கு பதிலாக, மறுபடியும் இயேசு அவர்களோடு பொறுமையாக காரணங்காட்டி விளக்குகிறார்: “புறஜாதியாரின் ராஜாக்கள் அவர்களை ஆளுகிறார்கள்; அவர்கள் மேல் அதிகாரம் செலுத்துகிறவர்களும் உபகாரிகள் என்னப்படுகிறார்கள். உங்களுக்குள்ளே அப்படியிருக்கக்கூடாது; . . . பந்தியிருக்கிறவனோ, பணிவிடை செய்கிறவனோ, எவன் பெரியவன்? பந்தியிருக்கிறவன் அல்லவா?” பின்பு, தம்முடைய உதாரணத்தை அவர்களுக்கு ஞாபகப்படுத்தி அவர் இவ்வாறு சொல்கிறார்: “அப்படியிருந்தும், நான் உங்கள் நடுவிலே பணிவிடைக்காரனைப் போல் இருக்கிறேன்.”

அவர்களுடைய அபூரணங்கள் மத்தியிலும், அப்போஸ்தலர்கள் இயேசுவோடு அவருடைய பாடுகளின் போது நிலைத்திருந்தனர். ஆகையால் அவர் சொல்கிறார்: “ஆகையால், என் பிதா எனக்கு ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்தினது போல, நானும் உங்களுக்கு ஏற்படுத்துகிறேன்.” இயேசுவுக்கும் அவரை உண்மையாய் பின்பற்றுபவர்களுக்கும் இடையே உள்ள இந்தத் தனிப்பட்ட உடன்படிக்கை, அவருடைய அரசாட்சியில் பங்கு கொள்வதற்கு அவரோடு அவர்களை சேர்க்கிறது. ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையான 1,44,000 பேர்கள் மட்டுமே ஒரு ராஜ்யத்துக்கான இந்த உடன்படிக்கைக்குள் இறுதியில் எடுத்துக் கொள்ளப்படுகின்றனர்.

ராஜ்ய ஆட்சியில் கிறிஸ்துவோடு பங்குகொள்ளும் இந்த மகத்தான எதிர்பார்ப்பு அப்போஸ்தலர்களுக்கு அளிக்கப்பட்டிருந்தாலும், தற்போது அவர்கள் ஆவிக்குரிய விதத்தில் பெலவீனமாய் இருக்கின்றனர். “இந்த இராத்திரியிலே நீங்களெல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள்” என்று இயேசு சொல்கிறார். அவர் பேதுருவுக்காக ஜெபம் செய்திருக்கிறார் என்பதை அவனிடம் சொல்லி, இவ்வாறு இயேசு ஊக்குவிக்கிறார்: “நீ குணப்பட்ட பின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து.”

“பிள்ளைகளே, இன்னும் கொஞ்சக்காலம் நான் உங்களுடனேகூட இருப்பேன்; நீங்கள் என்னைத் தேடுவீர்கள்; ஆனாலும் நான் போகிற இடத்துக்கு நீங்கள் வரக்கூடாதென்று நான் யூதரோடே சொன்னது போல இப்பொழுது உங்களோடும் சொல்லுகிறேன். நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்தது போல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்” என்று இயேசு விளக்குகிறார்.

“ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர்?” என்று பேதுரு கேட்கிறான்.

“நான் போகிற இடத்துக்கு இப்பொழுது நீ என் பின்னே வரக்கூடாது, பிற்பாடு என் பின்னே வருவாய்” என்று இயேசு பதிலளிக்கிறார்.

“ஆண்டவரே, நான் இப்பொழுது உமக்குப் பின்னே ஏன் வரக்கூடாது?” பேதுரு அறிந்துகொள்ள விரும்புகிறான். “உமக்காக என் ஜீவனையும் கொடுப்பேன்.”

“எனக்காக உன் ஜீவனைக் கொடுப்பாயோ?” என்று இயேசு கேட்கிறார். “இன்றைக்கு, இந்த இராத்திரியிலே, சேவல் இரண்டுதரம் கூவுகிறதற்கு முன்னே, நீ மூன்றுதரம் என்னை மறுதலிப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.”

“நான் உம்மோடே மரிக்க வேண்டியதாயிருந்தாலும் உம்மை மறுதலிக்க மாட்டேன்” என்று பேதுரு எதிர்ப்புத் தெரிவிக்கிறான். இதே காரியத்தை சொல்வதில் மற்ற அப்போஸ்தலர்களும் சேர்ந்துகொண்ட போது, பேதுரு பெருமையுடன் இவ்வாறு சொல்கிறான்: “உமது நிமித்தம் எல்லாரும் இடறலடைந்தாலும், நான் இடறலடையேன்.”

பணப்பையும் உணவு பையும் இன்றி தாம் அப்போஸ்தலர்களை கலிலேய பிரசங்க பயணத்துக்கு அனுப்பிய சமயத்தை குறிப்பிட்டு, இயேசு இவ்வாறு கேட்கிறார்: “ஏதாகிலும் உங்களுக்குக் குறைவாயிருந்ததா?”

“ஒன்றும் குறைவாயிருந்ததில்லை” என்று அவர்கள் பதிலளிக்கின்றனர்.

“இப்பொழுதோ பணப்பையும் உணவு பையும் உடையவன் அவைகளை எடுத்துக் கொள்ளக்கடவன்; பட்டயம் இல்லாதவன் தன் வஸ்திரத்தை விற்று ஒன்றைக் கொள்ளக்கடவன். அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்று எழுதியிருக்கிற வாக்கியம் என்னிடத்தில் நிறைவேற வேண்டியதென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். என்னைப் பற்றிய காரியங்கள் முடிவு பெறுங்காலம் வந்திருக்கிறது” என்று அவர் சொல்கிறார்.

அவர் அக்கிரமக்காரரோடு அல்லது சட்டம் மீறுபவர்களோடு கழுமரத்தில் அறையப்படும் சமயத்தை இயேசு குறிப்பிட்டுக் காட்டுகிறார். தம்மைப் பின்பற்றுபவர்கள் அதற்குப்பின்பு கடுமையான துன்புறுத்தலை எதிர்ப்படுவர் என்பதையும் அவர் குறிப்பிட்டுக் காட்டுகிறார். “ஆண்டவரே, இதோ, இங்கே இரண்டு பட்டயம் இருக்கிறது” என்று அவர்கள் சொல்கின்றனர்.

“போதும்” என்று அவர் பதிலளிக்கிறார். அவர்கள் தங்களோடு பட்டயங்களை வைத்திருப்பது, விரைவில் இயேசுவை மற்றொரு முக்கியமான பாடம் கற்பிக்கும்படி அனுமதிக்கும் என்பதை நாம் காண்போம். மத்தேயு 26:31–35; மாற்கு 14:27–31; லூக்கா 22:24–38, NW; யோவான் 13:31–38; வெளிப்படுத்துதல் 14:1–3.

▪ அப்போஸ்தலர்களின் தர்க்கம் ஏன் அவ்வளவு ஆச்சரியமாயிருக்கிறது?

▪ இயேசு எவ்வாறு அந்தத் தர்க்கத்தை கையாளுகிறார்?

▪ தம் சீஷர்களோடு இயேசு செய்யும் உடன்படிக்கையினால் என்ன நிறைவேற்றப்படுகிறது?

▪ என்ன புதிய கட்டளையை இயேசு கொடுக்கிறார்? அது எவ்வளவு முக்கியமானதாய் இருக்கிறது?

▪ என்ன மட்டுக்குமீறிய தன்னம்பிக்கையை பேதுரு வெளிக்காட்டுகிறான்? இயேசு என்ன சொல்கிறார்?

▪ பணப்பையையும் உணவு பையையும் எடுத்துச் செல்வதைப் பற்றிய இயேசுவின் கட்டளைகள், அவர் இதற்கு முன்பு கொடுத்த கட்டளையிலிருந்து ஏன் வித்தியாசமாய் இருக்கின்றன?