Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஒரு தேசம் இழக்கப்படுகிறது, ஆனால் அனைவரும் அல்ல

ஒரு தேசம் இழக்கப்படுகிறது, ஆனால் அனைவரும் அல்ல

அதிகாரம் 79

ஒரு தேசம் இழக்கப்படுகிறது, ஆனால் அனைவரும் அல்ல

ஒரு பரிசேயனின் வீட்டுக்கு முன் கூடியிருந்தவர்களோடு இயேசு கொண்டிருந்த கலந்தாலோசிப்புக்கு பிறகு சிறிது நேரத்துக்குள்ளாக “பிலாத்து (ரோம ஆளுநர் பொந்தியு) சில கலிலேயருடைய இரத்தத்தை அவர்களுடைய பலிகளோடே கலந்திருந்தான்” என்று சிலர் அவரிடம் சொல்கின்றனர். எருசலேமுக்குள் தண்ணீர் கொண்டு வருவதற்கு கால்வாய்ப் பாலம் ஒன்றை கட்டுவதற்கு, ஆலய கருவூலத்திலிருந்து பணத்தை எடுத்து உபயோகித்த பிலாத்துவை ஆயிரக்கணக்கான யூதர்கள் எதிர்த்த போது கொலை செய்யப்பட்ட கலிலேயர்களாக இவர்கள் ஒருவேளை இருக்கலாம். தங்களுடைய சொந்த துன்மார்க்க செயல்களினால் கலிலேயர்கள் பேரிழப்புக்கு ஆளானார்கள் என்று இவ்விஷயத்தை இயேசுவிடம் எடுத்துக் கூறுகின்றனர்.

என்றபோதிலும், இயேசு இவ்வாறு கேட்பதன் மூலம் அவர்களை சரி செய்கிறார்: “அந்தக் கலிலேயருக்கு அப்படிப்பட்டவைகள் சம்பவித்ததினாலே, மற்ற எல்லாக் கலிலேயரைப் பார்க்கிலும் அவர்கள் பாவிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ? அப்படியல்ல” என்று இயேசு பதிலளிக்கிறார். பின்பு அவர் யூதர்களை எச்சரிக்க இந்தச் சம்பவத்தை உபயோகிக்கிறார்: “நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள்.”

தொடர்ந்து, இயேசு கால்வாய்ப் பாலம் கட்டுவதோடு சம்பந்தப்பட்ட மற்றொரு உள்ளூர் துயர நிகழ்ச்சியையும் நினைவுக்குக் கொண்டு வருகிறார். அவர் கேட்கிறார்: “சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப் பேரைக் கொன்றதே; எருசலேமில் குடியிருக்கிற மனுஷரெல்லாரிலும் அவர்கள் குற்றவாளிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ?” இல்லை, இந்த நபர்கள் அவர்கள் செய்த தீமையினால் மரிக்க நேரிடவில்லை என்று இயேசு சொல்கிறார். மாறாக, இப்பேர்ப்பட்ட துயர சம்பவங்களுக்கு “சமயமும் எதிர்பாரா நிகழ்ச்சிகளும்” பொதுவாக காரணமாயிருக்கின்றன. என்றபோதிலும் இயேசு மறுபடியும் எச்சரிப்பதற்கு இச்சமயத்தை உபயோகிக்கிறார்: “நீங்கள் மனந்திரும்பாமற் போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப் போவீர்கள்.”

பின்பு இயேசு ஒரு பொருத்தமான உவமையைக் கொடுத்து விளக்குகிறார்: “ஒருவன் தன் திராட்சத் தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான்; அவன் வந்து அதிலே கனியைத் தேடினபோது ஒன்றுங் காணவில்லை. அப்பொழுது அவன் தோட்டக்காரனை நோக்கி: இதோ, மூன்று வருஷமாய் இந்த அத்தி மரத்திலே கனியைத் தேடி வருகிறேன்; ஒன்றையுங் காணவில்லை, இதை வெட்டிப் போடு, இது நிலத்தையும் ஏன் கெடுக்கிறது என்றான். அதற்கு அவன்: ஐயா, இது இந்த வருஷமும் இருக்கட்டும்; நான் இதைச் சுற்றிலுங் கொத்தி, எருப்போடுவேன். கனி கொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப் போடலாம் என்று சொன்னான்.”

இயேசு மூன்று வருடங்களுக்கு மேல் யூத தேசத்துக்குள் விசுவாசத்தை பண்படுத்த முயற்சி செய்திருக்கிறார். ஆனால் அவருடைய உழைப்பின் பலனாக சில நூற்றுக்கணக்கான சீஷர்கள் மட்டுமே எண்ணப்படலாம். இப்போது, அவருடைய ஊழியத்தின் நான்காம் வருடத்தின் போது, அவர் தம் முயற்சிகளை தீவிரமாக்குகிறார், யூதேயா மற்றும் பெரேயாவில் வைராக்கியத்தோடு பிரசங்கிப்பதன் மூலமும் கற்பிப்பதன் மூலமும் அவர் அடையாளப் பூர்வமாக தோண்டி யூதேய அத்திமரத்தைச் சுற்றி உரம் போடுகிறார். என்றபோதிலும் எந்தப் பயனும் இல்லை! தேசம் மனந்திரும்ப மறுக்கிறது, ஆகையால் அழிவுக்கான வழியில் இருக்கிறது. தேசத்தில் வெகு சிலரே பிரதிபலிக்கின்றனர்.

சிறிது காலத்துக்குப் பிறகு இயேசு ஒரு ஜெப ஆலயத்தில் ஓர் ஓய்வுநாளில் போதித்துக் கொண்டிருக்கிறார். பிசாசு தொல்லையினால் 18 வருடங்களாக கூனியாயிருந்த ஒரு பெண்ணை அவர் அங்கே காண்கிறார். இரக்கத்தோடு இயேசு அவளைப் பார்த்து சொல்கிறார்: “ஸ்திரீயே, உன் பலவீனத்தினின்று விடுதலையாக்கப்பட்டாய்.” அப்போது அவர் தன் கைகளை அவள் மீது வைக்கிறார், உடனடியாக அவள் நிமிர்ந்து கடவுளை மகிமைப்படுத்த ஆரம்பிக்கிறாள்.

என்றபோதிலும் ஜெபஆலயத் தலைவன் கோபமடைகிறான். “வேலை செய்கிறதற்கு ஆறு நாள் உண்டே, அந்த நாட்களிலே நீங்கள் வந்து சொஸ்தமாக்கிக் கொள்ளுங்கள், ஓய்வுநாளிலே அப்படிச் செய்யலாகாது” என்று அவன் எதிர்ப்பு தெரிவிக்கிறான். சுகப்படுத்துவதற்கு இயேசுவுக்கு இருக்கும் வல்லமையை ஜெபஆலயத் தலைவன் ஒப்புக்கொள்கிறான், ஆனால் சுகமடைவதற்காக ஜனங்கள் ஓய்வுநாளில் வருவதை அவன் கண்டனம் செய்கிறான்!

“மாயக்காரனே, உங்களில் எவனும் ஓய்வுநாளில் தன் எருதையாவது தன் கழுதையையாவது தொழுவத்திலிருந்து அவிழ்த்துக் கொண்டு போய், அதற்குத் தண்ணீர் காட்டுகிறதில்லையா? இதோ, சாத்தான் பதினெட்டு வருஷமாய்க் கட்டியிருந்த ஆபிரகாமின் குமாரத்தியாகிய இவளை ஓய்வுநாளில் இந்தக் கட்டிலிருந்து அவிழ்த்துவிட வேண்டியதில்லையா?” என்று இயேசு பதிலளிக்கிறார்.

இதைக் கேட்டபோது, இயேசுவை எதிர்ப்பவர்கள் வெட்கமடைகின்றனர். என்றபோதிலும், ஜனக்கூட்டத்தார் இயேசு செய்யும் எல்லா மகிமையானக் காரியங்களையும் பார்த்து சந்தோஷப்படுகின்றனர். அதற்குப் பிரதிபலிப்பாக, கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய இரண்டு தீர்க்கதரிசன உவமைகளை இயேசு மறுபடியும் சொல்கிறார். ஏறக்குறைய ஒரு வருடத்துக்கு முன்பு கலிலேயக் கடலில் ஒரு படகிலிருந்து சொன்ன உவமைகள் அவை. லூக்கா 13:1–21; பிரசங்கி 9:11, NW; மத்தேயு 13:31–33.

▪ என்ன துயரச் சம்பவங்கள் இங்கே குறிப்பிடப்பட்டிருக்கின்றன, அவைகளிலிருந்து என்ன பாடத்தை இயேசு கற்பிக்கிறார்?

▪ கனி கொடாத அத்தி மரத்தைப் பற்றியும், மேலும் அதைக் கனி கொடுக்க வைப்பதற்காக எடுத்த முயற்சிகளைப் பற்றியும் என்ன பொருத்தம் செய்யப்படலாம்?

▪ இயேசுவின் குணமாக்கும் வல்லமையை ஜெபஆலயத் தலைவன் எவ்வாறு ஒப்புக்கொள்கிறான், என்றபோதிலும் இயேசு எவ்வாறு அந்த மனிதனின் மாய்மாலத்தை வெளிப்படுத்துகிறார்?