Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஒரு பரிசேயனோடு உணவு அருந்துதல்

ஒரு பரிசேயனோடு உணவு அருந்துதல்

அதிகாரம் 76

ஒரு பரிசேயனோடு உணவு அருந்துதல்

இயேசு பேசமுடியாத ஒரு மனிதனை சுகப்படுத்தினதற்கான வல்லமையின் ஊற்றுமூலத்தைப் பற்றி கேள்வி கேட்ட குறை காண்பவர்களுக்கு பதிலளித்த பிறகு, ஒரு பரிசேயன் அவரைப் போஜனத்துக்கு அழைக்கிறான். சாப்பிடுவதற்கு முன்னால், தங்கள் கைகளை முழங்கை வரைக்கும் கழுவும் சடங்கில் பரிசேயர்கள் ஈடுபடுகின்றனர். அவர்கள் இதை உணவுக்கு முன்னும் பின்னும், அதற்கிடையிலும்கூட செய்வர். இந்தப் பாரம்பரியம் கடவுளுடைய எழுதப்பட்ட சட்டத்தை மீறாமல் இருந்த போதிலும், சடங்காச்சார சுத்தம் என்ற விஷயத்தில் இது கடவுள் தேவைப்படுத்துவதற்கு மேலாகச் செல்கிறது.

இயேசு இந்தப் பாரம்பரியத்தை கடைப்பிடிக்க தவறின போது, அவருக்கு விருந்தளிப்பவன் ஆச்சரியப்படுகிறான். அவன் தன் ஆச்சரியத்தை வார்த்தைகளால் தெரிவிக்காவிட்டாலும், இயேசு அதைக் கண்டுபிடித்து சொல்கிறார்: “பரிசேயராகிய நீங்கள் போஜனபான பாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள், உங்கள் உள்ளமோ கொள்ளையினாலும் பொல்லாப்பினாலும் நிறைந்திருக்கிறது. மதிகேடரே, வெளிப்புறத்தை உண்டாக்கினவர் உட்புறத்தையும் உண்டாக்கவில்லையோ?”

இவ்வாறாக இயேசு சடங்காச்சாரமாக தங்கள் கைகளைக் கழுவி, ஆனால் துன்மார்க்கத்திலிருந்து தங்கள் இருதயங்களைக் கழுவத் தவறும் பரிசேயர்களின் மாய்மாலத்தை வெளிப்படுத்துகிறார். அவர் புத்திமதி கொடுக்கிறார்: “உங்களுக்கு உண்டானவைகளில் பிச்சை கொடுங்கள், அப்பொழுது சகலமும் உங்களுக்குச் சுத்தமாயிருக்கும்.” அவர்களுடைய அளிப்பு நீதிமான்களைப் போல் பாசாங்கு செய்து, மற்றவர்களை கவர்ச்சிக்க வேண்டும் என்ற விருப்பத்தால் இல்லாமல், அன்பான இருதயத்தால் உந்துவிக்கப்பட்டு இருக்க வேண்டும்.

“பரிசேயரே, உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாம் மருக்கொழுந்து முதலிய சகலவித பூண்டுகளிலும் தசமபாகம் கொடுத்து, நியாயத்தையும் தேவ அன்பையும் விட்டுவிடுகிறீர்கள்; இவைகளையும் செய்ய வேண்டும், அவைகளையும் விடாதிருக்க வேண்டுமே.” வயல்களிலிருந்து அறுவடையாகும் பொருட்களில் தசமபாகத்தை அல்லது பத்தில் ஒரு பாகத்தை செலுத்த வேண்டும் என்று இஸ்ரவேலுக்கு கடவுளுடைய சட்டம் தேவைப்படுத்துகிறது. ஒற்தலாம், மருக்கொழுந்து என்பவைகள் உணவுக்கு நல்ல மணமான சுவையூட்டுவதற்கு பயன்படுத்தப்படும் சிறு செடிகள் அல்லது பூண்டுகள். இந்த அற்பமான பூண்டுகளில் பத்தில் ஒரு பாகத்தை பரிசேயர்கள் கவனமாகச் செலுத்துகின்றனர், ஆனால் அன்பு காண்பிப்பது, தயவாயிருப்பது, அடக்கமாயிருப்பது போன்ற அதிமுக்கியமான தேவைகளை புறக்கணிக்கிறதற்காக இயேசு அவர்களை கண்டிக்கிறார்.

இன்னுமதிகமாய் கண்டிப்பவராய் இயேசு சொல்கிறார்: “பரிசேயரே, உங்களுக்கு ஐயோ, ஜெப ஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும், சந்தைகளில் வந்தனங்களையும் விரும்புகிறீர்கள். . . . உங்களுக்கு ஐயோ, மறைந்திருக்கிற பிரேதக்குழிகளைப் போலிருக்கிறீர்கள், அவைகள் மேல் நடக்கிற மனுஷருக்கு அவைகள் தெரியாதிருக்கிறது!” அவர்களுடைய அசுத்தம் வெளிப்படையாய்த் தெரியவில்லை. பரிசேயர்களின் மதம் வெளிப்புறத்தில் நன்றாகத் தோற்றமளிக்கிறது, ஆனால் உள்ளே உபயோகமற்றதாய் இருக்கிறது! அது மாய்மாலத்தின் பேரில் சார்ந்திருக்கிறது.

இப்பேர்ப்பட்ட கண்டனத்தை கேட்டுக் கொண்டிருந்த, கடவுளுடைய சட்டத்தில் நன்கு பழக்கப்பட்டிருந்த ஒரு வழக்கறிஞன் குறை கூறுகிறான்: “போதகரே, நீர் இப்படிச் சொல்லுகிறதினால் எங்களையும் நிந்திக்கிறீரே.”

இந்தச் சட்ட வல்லுநர்களையும்கூட இயேசு உத்தரவாதமுள்ளவர்களாய் ஆக்கி, சொல்கிறார்: “நியாயசாஸ்திரிகளே, உங்களுக்கு ஐயோ, சுமக்க அரிதான சுமைகளை மனுஷர் மேல் சுமத்துகிறீர்கள்; நீங்களோ உங்கள் விரல்களில் ஒன்றினாலும் அந்தச் சுமைகளைத் தொடவும் மாட்டீர்கள். உங்களுக்கு ஐயோ, உங்கள் பிதாக்கள் கொலை செய்த தீர்க்கதரிசிகளுக்குக் [ஞாபகார்த்த, NW] கல்லறைகளைக் கட்டுகிறீர்கள்.”

இயேசு குறிப்பிடும் சுமைகள், வாய்மொழி சார்ந்த பாரம்பரியங்கள், ஆனால் இந்த வழக்கறிஞர்கள் ஜனங்களுக்கு சுலபமாக்குவதற்கு ஒரு சிறு கட்டளையைக்கூட நகர்த்தமாட்டார்கள், தீர்க்கதரிசிகளை கொலை செய்வதற்கும்கூட அவர்கள் இணங்கிப் போவார்கள் என்று இயேசு வெளிப்படுத்தி அவர் எச்சரிக்கிறார்: “ஆபேலின் இரத்தம் முதல் பலிபீடத்துக்கும் தேவாலயத்துக்கும் நடுவே கொலையுண்ட சகரியாவின் இரத்தம் வரைக்கும், உலகத் தோற்றமுதற்கொண்டு சிந்தப்பட்ட சகல தீர்க்கதரிசிகளுடைய இரத்தப்பழியும் இந்தச் சந்ததியினிடத்தில் கேட்கப்படத்தக்கதாக அப்படிச் செய்வார்கள் . . . நிச்சயமாகவே இந்தச் சந்ததியினிடத்தில் அது கேட்கப்படும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.”

மீட்டுக்கொள்ளத்தக்க மனிதவர்க்க உலகம், ஆதாமுக்கும் ஏவாளுக்கும் பிள்ளைகள் பிறந்தபோது ஆரம்பித்தது. ஆக “உலகத் தோற்றத்தின்” போது ஆபேல் வாழ்ந்தான். வஞ்சகமாய் சகரியா கொலைசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஒரு சீரிய படை யூதாவை முழுவதும் கொள்ளையடித்தது. ஆனால் இயேசு தம்முடைய சொந்த சந்ததி அதனுடைய பேரளவான துன்மார்க்கத்துக்காக அதிமோசமாகக் கொள்ளையிடப்படும் என்று முன்னறிவிக்கிறார். இந்தக் கொள்ளையடிப்பு ஏறக்குறைய 38 வருடங்களுக்குப்பின் பொ.ச. 70-ல் நடந்தது.

தம்முடைய கண்டனத்தைத் தொடர்ந்து, இயேசு சொல்கிறார்: “நியாயசாஸ்திரிகளே, உங்களுக்கு ஐயோ, அறிவாகிய திறவுகோலை எடுத்துக் கொண்டீர்களே, நீங்களும் உட்பிரவேசிக்கிறதில்லை, உட்பிரவேசிக்கிறவர்களையும் தடைபண்ணுகிறீர்கள்!” சட்ட வல்லுநர்கள் கடவுளுடைய வார்த்தையை ஜனங்களுக்கு விளக்கி அதனுடைய அர்த்தத்தை வெளிப்படுத்த கடமைப்பட்டிருக்கின்றனர். ஆனால் அவர்கள் இதைச் செய்யத் தவறுகின்றனர், விளங்கிக் கொள்வதற்கான வாய்ப்பையும் ஜனங்களிடமிருந்து எடுத்துப் போடுகின்றனர்.

பரிசேயர்களும் சட்ட வல்லுநர்களும் இயேசு தங்களை வெளிப்படுத்தியதற்காக அவர் மேல் கடுங்கோபங்கொள்கின்றனர், அவர் வீட்டை விட்டுப் புறப்படும் போது, அவர்கள் அவரை மூர்க்கமாக எதிர்க்க ஆரம்பிக்கின்றனர், மேலும் அவரை அவர்கள் கேள்விகள் கேட்டு நெருக்குகின்றனர். அவர் சொல்வதில் ஏதாவது பிழை கண்டுபிடித்து, அதற்காக அவரை அவர்கள் கைது செய்யலாம் என முயற்சி செய்கின்றனர். லூக்கா 11:37–54; உபாகமம் 14:22; மீகா 6:8; 2 நாளாகமம் 24:20–25.

▪ இயேசு ஏன் பரிசேயர்களையும் சட்ட வல்லுநர்களையும் கண்டிக்கிறார்?

▪ ஜனங்கள் மீது என்ன சுமைகளை வழக்கறிஞர்கள் வைக்கின்றனர்?

▪ “உலகத் தோற்றம்” எப்போது?