Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஒரு பிறந்த நாள் விருந்தில் கொலை

ஒரு பிறந்த நாள் விருந்தில் கொலை

அதிகாரம் 51

ஒரு பிறந்த நாள் விருந்தில் கொலை

தம்முடைய அப்போஸ்தலருக்கு அறிவுரைகள் கொடுத்த பிறகு, இயேசு அவர்களைப் பிராந்தியத்தில் ஊழியம் செய்ய இரண்டிரண்டு பேராக அனுப்புகிறார். அநேகமாக சகோதரர்களாயிருந்த பேதுருவும் அந்திரேயாவும், யாக்கோபும் யோவானும், பிலிப்பும் பற்தொலொமேயும், தோமாவும் மத்தேயுவும், யாக்கோபும் ததேயுவும், சீமோனும் யூதாஸ்காரியோத்தும் ஒன்றாகப் போயிருப்பார்கள். இந்த ஆறு ஜோடி சுவிசேஷகர்களும் ராஜ்யத்தின் நற்செய்தியை அறிவிக்கிறார்கள், மற்றும் அவர்கள் போகும் இடமெல்லாம் அற்புத சுகமளித்தலை நடப்பிக்கிறார்கள்.

இதற்கிடையில், முழுக்காட்டுபவனாகிய யோவான் இன்னும் சிறையில் இருக்கிறான். இப்போது அங்கே அவன் ஏறக்குறைய இரண்டு வருடங்களாக இருக்கிறான். ஏரோது அந்திப்பா தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளை தன் மனைவியாகக் கொண்டது தவறு என்று யோவான் வெளியரங்கமாக அறிக்கை செய்தான் என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். ஏரோது அந்திப்பா மோசேயின் நியாயப்பிரமாணத்தைப் பின்பற்றுவதாக உரிமைபாராட்டினதால், யோவான் இந்த விபசார பிணைப்பைச் சரியாகவே வெளியாக்கினான். ஏரோது யோவானைச் சிறைவைத்தான், ஒருவேளை ஏரோதியாளின் ஏவுதலால் அப்படிச் செய்திருக்கக்கூடும்.

ஏரோது அந்திப்பா, யோவான் ஒரு நீதிமான் என்பதை உணர்ந்து அவனுக்கு செவிசாய்ப்பதில் மகிழ்ச்சியுமடைகிறான். ஆகவே அவனை வைத்து என்ன செய்வது என்பதை அவன் அறியாதவனாய் இருக்கிறான். மறுபட்சத்தில் ஏரோதியாளோ யோவானை வெறுத்து, அவனை மரணத்துக்கு ஒப்புவிக்க வகைதேடிக் கொண்டிருக்கிறாள். கடைசியாக, அவள் காத்துக்கொண்டிருந்த சந்தர்ப்பம் வருகிறது.

பொ.ச. 32-ம் வருடத்திய பஸ்கா ஆசரிப்புக்கு சற்று முன்பு, ஏரோது தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக ஒரு பெரிய விருந்தை ஏற்பாடு செய்கிறான். இந்த விருந்தில் ஏரோதின் பிரபுக்களும், இராணுவ அதிகாரிகளும், கலிலேயாவைச் சேர்ந்த பிரதான மனுஷரும் கூடிவந்திருக்கின்றனர். மாலை சாயும் நேரம், தன்னுடைய முந்தின கணவராகிய பிலிப்புவுக்குப் பிறந்த ஏரோதியாளின் இளம் மகள் சலோமே விருந்தினரை மகிழ்விக்க நடனமாடும்படி அனுப்பப்படுகிறாள். அங்கே கூடியிருந்த ஆண்கள் அவளுடைய நடனத்தில் மயங்கிவிடுகின்றனர்.

ஏரோது சலோமேயின் நடனத்தில் உள்ளம் மகிழ்ந்து, “நீ எதைக் கேட்டாலும் தருவேன்,” என்று சொல்லுகிறான். “நீ என்னிடத்தில் எதைக் கேட்டாலும், அது என் ராஜ்யத்தில் பாதியானாலும் அதை உனக்குத் தருவேன்,” என்றும் அவன் ஆணையிட்டுச் சொல்லுகிறான்.

பதில் சொல்லுவதற்கு முன்பு, சலோமே தன்னுடைய தாயிடம் கலந்து பேசி முடிவெடுக்க போகிறாள். “நான் என்ன கேட்கவேண்டும்,” என்று அவளை வினவுகிறாள்.

கடைசியில் எதிர்பார்த்துக்கொண்டிருந்த சந்தர்ப்பம் வந்தது! “யோவான் ஸ்நானனுடைய தலை,” என்று ஏரோதியாள் எவ்வித தயக்கமுமில்லாமல் பதில் சொல்லுகிறாள்.

சலோமே வேகமாக ஏரோதிடம் திரும்பிவந்து, “நீர் இப்பொழுதே ஒரு தாலத்தில் யோவான் ஸ்நானனுடைய தலையை எனக்குத் தரவேண்டும்,” என்று கேட்கிறாள்.

ஏரோதுக்கு அதிக துக்கம் உண்டாகிறது. என்றாலும், அங்கு வந்திருந்த விருந்தினர் அவனுடைய ஆணையைக் கேட்டதால், அது ஒரு குற்றமற்ற மனிதனைக் கொல்லுவதாக இருந்த போதிலும், அதைக் கொடுக்காமலிருக்க முடியாத சிக்கலான நிலைக்குள்ளாகிறான். யோவான் ஸ்நானனைக் கொன்று அவன் தலையைக் கொண்டுவருவதற்காக சேவகன் கட்டளையிடப்பட்டு உடனடியாகச் சிறைக்கு அனுப்பப்படுகிறான். சீக்கிரத்திலேயே அவன் ஒரு தாலத்தில் யோவானின் தலையைக் கொண்டுவந்து, சலோமேயிடம் கொடுக்கிறான். அவளோ அதைத் தன் தாயிடம் எடுத்துச் செல்கிறாள். நடந்த சம்பவத்தைக் கேள்விப்பட்ட யோவானின் சீஷர்கள் வந்து, அவனுடைய உடலை எடுத்து அதை அடக்கம்பண்ணுகிறார்கள். பிறகு நடந்ததை இயேசுவுக்கு அறிவிக்கிறார்கள்.

பின்பு, ஏரோது, இயேசு வியாதிகளைச் சுகப்படுத்துவதையும், பிசாசுகளைத் துரத்துவதையும் கேள்விப்படும்போது, இயேசுவை மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்துவிட்ட யோவான் என்று நினைத்து பயப்படுகிறான். அதற்குப் பின்பு அவன் இயேசுவைப் பார்க்க வேண்டுமென்று வெகுவாய் ஆசைப்படுகிறான், அவருடைய பிரசங்கத்தைக் கேட்பதற்கு அல்ல, ஆனால் தன்னுடைய பயம் பலமான ஆதாரத்தின் பேரில் சார்ந்ததா இல்லையா என்பதை உறுதிசெய்துகொள்வதற்காகவே. மத்தேயு 10:1–5; 11:1; 14:1–12; மாற்கு 6:14–29; லூக்கா 9:7–9.

▪ யோவான் ஏன் சிறையில் இருக்கிறான்? ஏரோது அவனைக் கொல்ல விரும்பாததற்குக் காரணம் என்ன?

▪ ஏரோதியாளால் கடைசியில் யோவானை எப்படிக் கொல்ல முடிகிறது?

▪ யோவானின் மரணத்திற்குப் பின்னர், ஏரோது ஏன் இயேசுவைப் பார்க்க விரும்புகிறான்?