Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஓய்வு நாளில் எது நியாயம்?

ஓய்வு நாளில் எது நியாயம்?

அதிகாரம் 32

ஓய்வு நாளில் எது நியாயம்?

கலிலேய கடலருகேயுள்ள ஒரு ஜெப ஆலயத்துக்கு இயேசு வந்தபோது, அது மற்றொரு ஓய்வுநாளாக இருக்கிறது. அங்கே, சூம்பிய வலது கையையுடைய ஒரு மனுஷன் இருக்கிறான். வேதபாரகரும் பரிசேயரும் இயேசு அவனை சொஸ்தமாக்குவாரோ என்று அவர் மேல் நோக்கமாயிருக்கிறார்கள். கடைசியாக அவர்கள், “ஓய்வுநாளில் சொஸ்தமாக்குவது நியாயமா” என்று கேட்கிறார்கள்.

உயிர் ஆபத்தில் இருந்தால் மட்டுமே ஓய்வுநாளில் சொஸ்தமாக்குவது நியாயம் என்பதாக யூத மதத்தலைவர்கள் நம்புகிறார்கள். உதாரணமாக, ஓய்வுநாளில் எலும்பு முறிவை சரி செய்து பொருத்துவதோ அல்லது ஒரு சுளுக்குக்கு கட்டுப்போடுவதோ நியாயமில்லை என்பதாக அவர்கள் கற்பிக்கிறார்கள். ஆகவே வேதபாரகரும் பரிசேயர்களும் அவர் மேல் குற்றஞ்சாட்டும்படிக்கு இயேசுவிடம் இதைக் கேட்கிறார்கள்.

ஆனால் இயேசுவோ அவர்களுடைய விவாதத்தை அறிந்திருக்கிறார். அதே சமயத்தில் வேலை செய்வதை தடைசெய்யும் ஓய்வுநாள் சட்டத்தை மீறுவது எது என்பது பற்றி கண்டிப்பான வேத ஆதாரமற்ற கருத்து அவர்களுக்கிருப்பதை அவர் புரிந்துகொள்கிறார். அதன் காரணமாகவே சூம்பின கையையுடைய மனுஷனிடம், “எழுந்து, நடுவே நில்” என்று சொல்வதன் மூலம், கிளர்ச்சிமிக்க நேர்முக சந்திப்புக்கு மேடையை தயார் செய்கிறார்.

இப்பொழுது இயேசு, வேதபாரகர் மற்றும் பரிசேயர்களிடமாகத் திரும்பி, “உங்களில் எந்த மனுஷனுக்காகிலும் ஒரு ஆடு இருந்து, அது ஓய்வுநாளில் குழியிலே விழுந்தால், அதைப் பிடித்துத் தூக்கிவிட மாட்டானோ?” என்று சொல்கிறார். ஓர் ஆட்டில், பண முதலீடு உட்பட்டிருந்ததன் காரணமாக, அடுத்த நாள் வரையாக ஒருவேளை நோயுற்று அதன் விலைமதிப்பை இழந்து போகும்படி அதைக் குழியிலே அவர்கள் விட்டுவிட மாட்டார்கள். தவிர, வேதவாக்கியம் சொல்வதாவது: “நீதிமான் தன் மிருக ஜீவனைக் காப்பாற்றுகிறான்.”

ஓர் இசைவு பொருத்தத்தை இங்கே உணர்த்துகிறவராய், இயேசு தொடர்ந்து “ஆட்டைப் பார்க்கிலும் மனுஷனானவன் எவ்வளவோ விசேஷித்திருக்கிறான்! ஆதலால், ஓய்வுநாளிலே நன்மை செய்வது நியாயந்தான்” என்று சொன்னார். இப்படிப்பட்ட நியாயமான இரக்கமுள்ள விளக்கத்தை மறுத்து வாதிட இயலாமல் மதத் தலைவர்கள் பேசாமல் இருக்கிறார்கள்.

கோபத்தோடும் அவர்களுடைய பிடிவாதமான மதிக்கேட்டைப் பார்த்து துக்கமடைந்தவராயும் இயேசு அவர்களெல்லாரையும் சுற்றிப் பார்க்கிறார். பின்பு அந்த மனுஷனை நோக்கி: “உன் கையை நீட்டு” என்கிறார். அவன் தன் கையை நீட்டுகிறான். அவன் கை சொஸ்தமாகிறது.

அந்த மனுஷனுடைய கை சொஸ்தமானதைக் குறித்து மகிழ்ச்சியடைவதற்கு பதிலாக, பரிசேயர்கள் புறப்பட்டுப் போய், இயேசுவை கொலை செய்வதற்காக ஏரோதியரோடே கூட ஆலோசனைப் பண்ணுகிறார்கள். இந்த அரசியல் கட்சியில் சதுசேயர்களும்கூட உறுப்பினர்களாக இருந்திருக்க வேண்டுமென்று தெரிகிறது. பொதுவாக, இந்த அரசியல் கட்சியும் பரிசேயர்களும் வெளிப்படையாக ஒருவருக்கொருவர் விரோதமாகவே இருக்கிறார்கள். ஆனால் இயேசுவை எதிர்ப்பதில் அவர்கள் உறுதியாக ஐக்கியப்பட்டவர்களாக இருக்கிறார்கள். மத்தேயு 12:9–14; மாற்கு 3:1–6; லூக்கா 6:6–11; நீதிமொழிகள் 12:10; யாத்திராகமம் 20:8–10.

▪ இயேசுவுக்கும் யூத மதத் தலைவர்களுக்குமிடையே கிளர்ச்சிமிக்க நேர்முக சந்திப்புக்கு பின்னணி அமைப்பு என்னவாக இருக்கிறது?

▪ ஓய்வு நாளில் சொஸ்தப்படுத்துவதன் சம்பந்தமாக யூத மதத் தலைவர்கள் நம்புகிறது என்ன?

▪ அவர்களுடைய தவறான கருத்துக்களை மறுத்து வாதிட இயேசு என்ன உதாரணத்தைப் பயன்படுத்துகிறார்?