Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஓய்வு நாளில் கதிர்களை கொய்தல்

ஓய்வு நாளில் கதிர்களை கொய்தல்

அதிகாரம் 31

ஓய்வு நாளில் கதிர்களை கொய்தல்

சீக்கிரமாக இயேசுவும் அவருடைய சீஷர்களும் கலிலேயாவுக்கு திரும்பி வர எருசலேமை விட்டு புறப்படுகிறார்கள். அது வசந்த காலமாக இருக்கிறது. வயல் வெளியிலே, தாள்களில் கதிர்கள் காணப்படுகின்றன. சீஷர்கள் பசியாயிருக்கிறார்கள். ஆகவே அவர்கள் கதிர்களைக் கொய்து தின்னத் தொடங்குகிறார்கள். ஆனால் அது ஓய்வுநாளாக இருந்தபடியால், அவர்களுடைய செய்கைகள் கவனிக்கப்படாமல் இல்லை.

எருசலேமிலுள்ள மதத் தலைவர்கள், இயேசு ஓய்வுநாளை மீறுவதாக குற்றஞ்சாட்டி அவரைக் கொலை செய்ய அப்பொழுது தான் முயற்சி செய்திருந்தார்கள். இப்பொழுது பரிசேயர், “இதோ, ஓய்வுநாளில் செய்யத் தகாததை உம்முடைய சீஷர்கள் செய்கிறார்களே” என்று குற்றஞ்சாட்டுகிறார்கள்.

கதிர்களை கொய்து தின்பதற்காக, அவைகளை கைகளில் தேய்ப்பது அறுவடை செய்வதாகவும் போரடிப்பதாகவும் இருக்கிறது என்பதாக பரிசேயர்கள் உரிமை பாராட்டுகிறார்கள். ஆனால் வேலை என்றால் என்ன என்பது பற்றிய அவர்களுடைய கண்டிப்பான விளக்கம் ஓய்வுநாளை பாரமுள்ளதாக ஆக்கியது. ஆனால் அதுவோ மகிழ்ச்சியுள்ள, ஆவிக்குரிய வகையில் கட்டியெழுப்பும் ஒரு சமயமாக இருக்க வேண்டியதாக இருந்தது. ஆகவே ஓய்வுநாள் பற்றிய யெகோவா தேவனின் சட்டம் இப்படியாக அனாவசியமான கண்டிப்போடு பின்பற்றப்பட வேண்டும் என்பது ஒருபோதும் அவருடைய நோக்கமாயிருக்கவில்லை என்பதை காண்பிக்க இயேசு வேதப்பூர்வமான உதாரணங்களை எடுத்துச் சொல்கிறார்.

பசியாயிருந்தபோது தாவீதும் அவனுடைய மனிதர்களும், வாசஸ்தலத்தின் அருகே நின்று தேவ சமுகத்தப்பங்களை புசித்தார்கள். அப்பங்கள் யெகோவாவுடைய சந்நிதியிலிருந்து எடுக்கப்பட்டு அதற்கு பதிலாக சூடான அப்பம் வைக்கப்பட்டிருந்த போதிலும், பொதுவாக அவைகளை ஆசாரியர்கள் புசிப்பதற்காக ஒதுக்கி வைப்பதே பழக்கமாக இருந்தது. என்றபோதிலும் இந்தச் சூழ்நிலைமைகளின் கீழ் அவைகளை புசித்ததற்காக தாவீதும் அவனுடைய மனிதர்களும் கண்டனம் செய்யப்படவில்லை.

மற்றொரு உதாரணத்தைக் கொடுப்பவராய் இயேசு சொன்னதாவது: “ஓய்வுநாட்களில் ஆசாரியர்கள் தேவாலயத்தில் ஓய்ந்திராமல், ஓய்வு நாளை வேலை நாளாக்கினாலும், குற்றமில்லாதிருக்கிறார்கள் என்று நீங்கள் வேதத்தில் வாசிக்கவில்லையா?” ஆம், ஓய்வுநாளிலும்கூட ஆசாரியர்கள் ஆலயத்தில் மிருக பலிகளுக்குத் தயார் செய்வதற்காக வெட்டிக் கொண்டும் மற்ற வேலைகளை பார்த்துக் கொண்டுமிருக்கிறார்கள்! ஆனால் “தேவாலயத்திலும் பெரியவர் இங்கே இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்கிறேன்” என்று இயேசு சொல்கிறார்.

பரிசேயர்களுக்கு அறிவுரை கூறுபவராய் இயேசு தொடர்ந்து சொன்னதாவது: “‘பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன்’ என்பதன் கருத்து இன்னதென்று அறிந்தீர்களானால், குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்தமாட்டீர்கள்.” பின்னர் அவர் முடிவாகச் சொன்னதாவது: “மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார்.” இங்கே இயேசு அர்த்தப்படுத்தியது என்ன? இயேசு தம்முடைய ஆயிரவருட கால சமாதான ராஜ்ய ஆட்சியைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்.

இப்போது 6,000 ஆண்டுகளாக பிசாசாகிய சாத்தானின் கீழ் மனிதவர்க்கத்தினர் கடினமான அடிமைத்தனத்தை அனுபவித்து வந்திருக்கிறார்கள். வன்முறையும் போருமே இதுவரையாக வாழ்க்கை முறையாக இருந்திருக்கிறது. மறுபட்சத்தில், கிறிஸ்துவின் பெரிய ஓய்வுநாள் ஆட்சி இப்படிப்பட்ட எல்லாவிதமான துன்பங்களிலிருந்தும் ஒடுக்குதலிலிருந்தும் இளைப்பாறுவதற்குரிய ஒரு காலமாக இருக்கும். மத்தேயு 12:1–18; லேவியராகமம் 24:5–9; 1 சாமுவேல் 21:1–6; எண்ணாகமம் 28:9; ஓசியா 6:6.

▪ இயேசுவின் சீஷர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டு என்ன? இயேசு இதற்கு எவ்விதமாக பதிலளிக்கிறார்?

▪ பரிசேயர்களின் என்ன குறைபாட்டை இயேசு எடுத்துக் காண்பிக்கிறார்?

▪ என்ன விதத்தில் இயேசு “ஓய்வுநாளுக்கு ஆண்டவராயிருக்கிறார்”?