Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளின் வலது பக்கத்தில்

கடவுளின் வலது பக்கத்தில்

அதிகாரம் 132

கடவுளின் வலது பக்கத்தில்

பெந்தெகொஸ்தே நாளன்று பரிசுத்த ஆவி ஊற்றப்பட்டது, இயேசு திரும்பவும் பரலோகத்தில் வந்து சேர்ந்திருக்கிறார் என்பதற்கு அத்தாட்சியாயிருக்கிறது. அதற்கு சிறிது காலத்துக்குப் பின்பு சீஷனாகிய ஸ்தேவானுக்கு கொடுக்கப்பட்ட தரிசனமும்கூட அவர் அங்கே இருக்கிறார் என்பதை நிரூபிக்கிறது. உண்மையோடு சாட்சி கொடுத்ததன் காரணமாக அவன் கல்லெறியப்படுவதற்கு முன்பு, ஸ்தேவான் வியப்பால் இவ்வாறு கூறுகிறான்: “அதோ வானங்கள் திறந்திருக்கிறதையும், மனுஷகுமாரன் தேவனுடைய வலதுபாரிசத்தில் நிற்கிறதையும் காண்கிறேன்.”

கடவுளுடைய வலதுபாரிசத்தில் இருக்கையில், இயேசு தம் தகப்பனிடமிருந்து வரப்போகும் பின்வரும் கட்டளைக்காக காத்திருக்கிறார்: “நீர் உம்முடைய சத்துருக்களின் நடுவே ஆளுகைச் செய்யும்.” ஆனால் அதற்கிடையே, தம் சத்துருக்களுக்கு விரோதமாக நடவடிக்கை எடுக்கும் வரை, இயேசு என்ன செய்கிறார்? தம்முடைய அபிஷேகம்பண்ணப்பட்ட சீஷர்கள் மீது அவர் அரசாளுகிறார் அல்லது ஆட்சிசெய்கிறார். அவர்களுடைய பிரசங்க வேலையில் அவர்களை வழிநடத்துகிறார். உயிர்த்தெழுதலின் மூலம் அவருடைய பிதாவின் ராஜ்யத்தில் உடன் அரசர்களாக ஆவதற்கு அவர்களைத் தயாரிக்கிறார்.

உதாரணமாக, மற்ற தேசங்களில் சீஷராக்கும் வேலையை முன்நின்று வழிநடத்த இயேசு சவுலை (பின்னர் பவுல் என்ற அவனுடைய ரோம பெயரால் அறியப்படுகிறான்) தேர்ந்தெடுக்கிறார். சவுல் கடவுளுடைய சட்டத்துக்கு வைராக்கியமுள்ளவனாக இருக்கிறான், என்றபோதிலும் அவன் யூத மதத்தலைவர்களால் தவறாக வழிநடத்தப்படுகிறான். இதன் விளைவாக, சவுல் ஸ்தேவானுடைய கொலையை அங்கீகரிப்பது மட்டுமல்லாமல், பிரதான ஆசாரியனாகிய காய்பாவிடமிருந்து அதிகாரம் பெற்றுக்கொண்டு, இயேசுவை பின்பற்றும் ஆண்களையும் பெண்களையும் கைது செய்து, எருசலேமுக்கு திரும்ப கொண்டு வருவதற்கு தமஸ்குவுக்குச் செல்கிறான். சவுல் பிரயாணமாய் சென்று கொண்டிருக்கையில், திடீரென ஓர் ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசிக்கிறது, அவன் தரையிலே விழுகிறான்.

“சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்” என்று காணக்கூடாத ஓர் ஊற்றுமூலத்திலிருந்து ஒரு சப்தம் கேட்கிறது. “ஆண்டவரே, நீர் யார்?” என்று சவுல் கேட்கிறான்.

“நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே” என்று பதில் வருகிறது.

தமஸ்குவுக்குச் சென்று அங்கு சொல்லப்படும் கட்டளைகளுக்காக காத்திருக்கும்படி அற்புதமான ஒளியால் குருடாக்கப்பட்ட சவுலுக்கு இயேசு சொல்கிறார். பின்பு இயேசு தம்முடைய சீஷர்களில் ஒருவனாகிய அனனியாவுக்கு ஒரு தரிசனத்திலே காட்சியளிக்கிறார். சவுலைக் குறித்து இயேசு அனனியாவிடம் இவ்வாறு சொல்கிறார்: “அவன் புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்து கொண்ட பாத்திரமாயிருக்கிறான்.”

உண்மையிலேயே, இயேசுவின் ஆதரவோடு சவுலும் (பவுல் என்று இப்போது அழைக்கப்படுகிறான்) மற்ற சுவிசேஷகர்களும் தங்களுடைய பிரசங்க வேலையிலும் கற்பிக்கும் வேலையிலும் மிகப்பெரிய வெற்றியைக் கொண்டிருக்கின்றனர். உண்மையில், தமஸ்குவுக்குச் செல்லும் சாலையில் இயேசு அவனுக்கு காட்சியளித்ததிலிருந்து ஏறக்குறைய 25 வருடங்களுக்குப் பிறகு, “அந்தச் சுவிசேஷம் வானத்தின் கீழிருக்கிற சகல சிருஷ்டிகளுக்கும் பிரசங்கிக்கப்பட்டு வருகிறது” என்று பவுல் எழுதுகிறான்.

அநேக ஆண்டுகள் கடந்த பின்பு, இயேசு தம்முடைய அன்பான அப்போஸ்தலனாகிய யோவானுக்கு ஒரு தொடர்ச்சியான தரிசனங்களைக் கொடுக்கிறார். பைபிள் புத்தகமாகிய வெளிப்படுத்துதலில் யோவான் விவரிக்கும் இப்படிப்பட்ட தரிசனங்கள் மூலம் இயேசு “ராஜ்ய வல்லமையில்” திரும்ப வருவதை யோவான் காண்கிறான். “ஆவிக்குள்ளாகி” எதிர்காலத்தில் வரவேண்டியிருந்த “கர்த்தருடைய நாளுக்கு” தான் எடுத்துச் செல்லப்பட்டதாக யோவான் கூறுகிறான். அந்த “நாள்” எது?

கடைசி நாட்களைப் பற்றிய இயேசுவின் சொந்த தீர்க்கதரிசனம் உட்பட பைபிள் தீர்க்கதரிசனங்களின் ஒரு கவனமான படிப்பு, “கர்த்தருடைய நாள்” சரித்திரம் படைந்த ஆண்டாகிய 1914-லிருந்து ஆரம்பமானது என்பதை வெளிக்காட்டுகிறது, ஆம், இந்தச் சந்ததிக்குள்ளாகவே! ஆகையால் 1914-ம் ஆண்டில் தானே இயேசு காணக்கூடாத விதத்தில், பொதுமக்கள் காணத்தக்க ஆரவாரம் ஏதுமின்றி அவருடைய உண்மையுள்ள ஊழியர்கள் மட்டுமே அவர் திரும்பி வந்திருந்ததை அறிந்திருக்கும் விதத்தில் திரும்பினார். அவருடைய சத்துருக்களுக்கு மத்தியிலே கீழ்ப்படுத்தும்படி அந்த வருடத்தில் யெகோவா இயேசுவுக்கு கட்டளை கொடுத்தார்!

தம் தகப்பனின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து சாத்தானையும் அவனுடைய தூதர்களையும் கீழே பூமிக்குத் தள்ளுவதன் மூலம் இயேசு பரலோகங்களை சுத்தம் செய்தார். இது ஒரு தரிசனத்தில் நடப்பதைக் கண்டபிறகு, ஒரு பரலோக குரல் இவ்வாறு அறிவிப்பதை யோவான் கேட்கிறான்: “இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது தேவனுடைய ராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் உண்டாயிருக்கிறது!” ஆம், 1914-ல் கிறிஸ்து ராஜாவாக அரசாள ஆரம்பித்தார்!

பரலோகத்தில் யெகோவாவை வணங்குபவர்களுக்கு இது என்னே ஒரு நற்செய்தி! அவர்கள் இவ்வாறு ஊக்குவிக்கப்படுகின்றனர்: “பரலோகங்களே! அவைகளில் வாசமாயிருக்கிறவர்களே! களிகூருங்கள்.” ஆனால் பூமியில் இருப்பவர்களுக்கு இருக்கும் நிலைமை என்ன? “பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன், தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து மிகுந்த கோபங் கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்து வரும்” என்று பரலோகத்திலிருந்து வந்த குரல் தொடர்ந்து சொல்கிறது.

நாம் இப்போது அந்தக் கொஞ்சக்காலப் பகுதியில் இருக்கிறோம். கடவுளுடைய புதிய உலகத்துக்குள் செல்வதற்கு அல்லது அழிக்கப்படுவதற்கு ஜனங்கள் இப்போது பிரிக்கப்பட்டு வருகின்றனர். உண்மை என்னவெனில் கிறிஸ்துவின் வழிநடத்துதலின் கீழ் பூமி முழுவதும் பிரசங்கிக்கப்பட்டு வரும் கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்திக்கு நீங்கள் எவ்வாறு பிரதிபலிக்கிறீர்கள் என்பதன் பேரில் உங்களுடைய சொந்த முடிவு இப்போது நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

ஜனங்களைப் பிரிக்கும் வேலை முடிந்த பிறகு, சாத்தானின் முழு காரிய ஒழுங்கு முறையையும், அதை ஆதரிக்கும் அனைவரையும் பூமியிலிருந்து ஒழிப்பதற்கு கடவுளுடைய பிரதிநிதியாக இயேசு கிறிஸ்து சேவிப்பார். அர்மகெதோன் என்று பைபிளில் அழைக்கப்படும் யுத்தத்தில் எல்லா துன்மார்க்கத்தையும் நீக்கிப் போடுவதை இயேசு நிறைவேற்றி முடிப்பார். அதற்குப் பிறகு, இந்தப் பிரபஞ்சத்தில் யெகோவா தேவனுக்கு அடுத்தபடி மிகப் பெரிய நபராயிருக்கும் இயேசு, சாத்தானையும் அவனுடைய தூதர்களையும் பிடித்து, பாதாளத்திலே “அபிஸ்,” மரணத்தைப் போன்ற செயலற்ற நிலையிலே ஓர் ஆயிரம் ஆண்டுகள் வரை அவர்களைக் கட்டி வைப்பார். அப்போஸ்தலர் 7:55–60; 8:1–3; 9:1–19; 16:6–10; சங்கீதம் 110:1, 2; எபிரெயர் 10:12, 13; 1 பேதுரு 3:22; லூக்கா 22:28–30; கொலோசெயர் 1:13, 23; வெளிப்படுத்துதல் 1:1, 10; 12:7–12; 16:14–16; 20:1–3; மத்தேயு 24:14; 25:31–33.

▪ இயேசு பரலோகத்துக்கு ஏறிப்போன பின்பு, அவர் எங்கே இருக்கிறார்? அவர் எதற்காக காத்திருக்கிறார்?

▪ பரலோகத்துக்கு ஏறிப்போன பின்பு இயேசு யார் மீது ஆளுகை செய்கிறார்? அவருடைய ஆட்சி எவ்வாறு வெளிப்படுத்திக் காட்டப்படுகிறது?

▪ “கர்த்தருடைய நாள்” எப்போது ஆரம்பமானது? அதன் ஆரம்பத்தில் என்ன நடைபெற்றது?

▪ இன்று முன்னேற்றமடைந்துகொண்டிருக்கும் என்ன பிரிக்கும் வேலை, நம்மில் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட விதமாகப் பாதிக்கிறது? என்ன அடிப்படையில் இந்தப் பிரிக்கும் வேலை செய்யப்படுகிறது?

▪ பிரிக்கும் வேலை முடிவடையும் போது, என்ன சம்பங்கள் பின்தொடரும்?