Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளுடைய குரல் மூன்றாவது முறையாக கேட்கப்படுகிறது

கடவுளுடைய குரல் மூன்றாவது முறையாக கேட்கப்படுகிறது

அதிகாரம் 104

கடவுளுடைய குரல் மூன்றாவது முறையாக கேட்கப்படுகிறது

இயேசு தாம் சீக்கிரத்தில் எதிர்ப்பட வேண்டிய மரணத்தைக் குறித்து ஆலயத்தில் இருக்கும் போது வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறார். அவருடைய பிதாவின் நற்பெயர் எவ்வாறு பாதிக்கப்படும் என்பது அவருடைய முக்கிய அக்கறையாயிருக்கிறது, ஆகையால் அவர் இவ்வாறு ஜெபிக்கிறார்: “பிதாவே, உமது நாமத்தை மகிமைப்படுத்தும்.”

அப்போது ஒரு பலத்த குரல் பரலோகங்களிலிருந்து வந்து இவ்வாறு அறிவிக்கிறது: “மகிமைப்படுத்தினேன், இன்னமும் மகிமைப்படுத்துவேன்.”

சுற்றி நின்றுகொண்டிருந்த ஜனங்கள் குழப்பமடைகின்றனர். “தேவதூதன் அவருடனே பேசினான்” என்று சிலர் சொல்ல ஆரம்பிக்கின்றனர். இடிமுழக்கமுண்டாயிற்று என்று மற்றவர்கள் சொல்லிக்கொள்கின்றனர். ஆனால் உண்மையில், பேசியவர் யெகோவா தேவன்! என்றபோதிலும், இயேசுவோடு சம்பந்தப்பட்டதில் கடவுளுடைய குரல் கேட்கப்பட்டது இது முதல் தடவை அல்ல.

மூன்றரை வருடங்களுக்கு முன்பு இயேசுவின் முழுக்காட்டுதலின் போது, இயேசுவைப் பற்றி கடவுள், “இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்” என்று சொன்னதை யோவான் ஸ்நானன் கேட்டான். பின்னர், முந்தைய பஸ்காவுக்கு சில காலத்துக்குப் பின்பு, அவர்களுக்கு முன்பாக இயேசு மறுரூபமான போது, “இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள்” என கடவுள் அறிவித்ததை யாக்கோபு, யோவான், பேதுரு ஆகியோர் கேட்டனர். இப்போது, மூன்றாவது முறையாக நிசான் 10-ம் தேதி இயேசுவின் மரணத்துக்கு நான்கு நாட்களுக்கு முன்பு, கடவுளுடைய குரல் மனிதர்களால் மறுபடியும் கேட்கப்படுகிறது. ஆனால் இம்முறை பெரும் எண்ணிக்கையான மக்கள் கூட்டம் கேட்கும் அளவுக்கு யெகோவா பேசுகிறார்!

இயேசு இவ்வாறு விளக்குகிறார்: “இந்தச் சத்தம் என்னிமித்தம் உண்டாகாமல் உங்கள் நிமித்தமே உண்டாயிற்று.” இயேசு உண்மையிலேயே கடவுளுடைய குமாரன், வாக்குப்பண்ணப்பட்ட மேசியா என்ற அத்தாட்சியை இது கொடுக்கிறது. “இப்பொழுதே இந்த உலகத்துக்கு நியாயத்தீர்ப்பு உண்டாகிறது; இப்பொழுதே இந்த உலகத்தின் அதிபதி புறம்பாகத் தள்ளப்படுவான்” என்று இயேசு தொடர்ந்து சொல்கிறார். இயேசுவின் உண்மையான வாழ்க்கைப் போக்கு, இந்த உலகத்தின் அதிபதியாகிய பிசாசாகிய சாத்தான் “புறம்பாகத் தள்ளப்பட,” கொல்லப்பட தகுதியுள்ளவன் என்பதை உறுதி செய்கிறது.

அணுகி வந்துகொண்டிருக்கும் அவருடைய மரணத்தின் விளைவுகளை சுட்டிக் காட்டுபவராய் இயேசு சொல்கிறார்: “நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும் போது, எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக் கொள்ளுவேன்.” அவருடைய மரணம் எந்த விதத்திலும் ஒரு தோல்வியாயில்லை, ஏனென்றால் அதன் மூலம் அவர் மற்றவர்கள் நித்திய ஜீவனை அனுபவிப்பதற்காக தம்மிடமாக இழுத்துக் கொள்ளுவார்.

ஆனால் ஜனக்கூட்டம் எதிர்ப்பு தெரிவிக்கிறது: “கிறிஸ்து என்றென்றைக்கும் இருக்கிறார் என்று வேதத்தில் சொல்லியதை நாங்கள் கேட்டிருக்கிறோம், அப்படியிருக்க மனுஷகுமாரன் உயர்த்தப்பட வேண்டியதென்று எப்படிச் சொல்லுகிறீர்; இந்த மனுஷகுமாரன் யார்.”

கடவுளுடைய சொந்த குரலைக் கேட்டது உட்பட எல்லா அத்தாட்சியும் இருந்த போதிலும், இயேசு உண்மையான மனுஷகுமாரன், வாக்குப்பண்ணப்பட்ட மேசியா என்று அநேகர் நம்புவதில்லை. ஆறு மாதங்களுக்கு முன்பு கூடாரப் பண்டிகையின் போது செய்தது போலவே இயேசு மறுபடியும் தம்மை “ஒளி” என்று அழைத்து, தமக்கு செவிகொடுத்துக் கேட்டுக்கொண்டிருப்பவர்களை இவ்வாறு உற்சாகப்படுத்துகிறார்: “ஒளி உங்களோடிருக்கையில் நீங்கள் ஒளியின் பிள்ளைகளாகும்படிக்கு, ஒளியினிடத்தில் விசுவாசமாயிருங்கள்.” இந்தக் காரியங்களைச் சொன்ன பின்பு, அவருடைய உயிருக்கு ஆபத்து இருப்பதனால் இயேசு அவ்விடத்தை விட்டுச் சென்று மறைந்து கொள்கிறார்.

இயேசுவின் பேரில் யூதர்களின் விசுவாசமின்மை ‘இந்த ஜனங்கள் குணப்படாமலும் ஆரோக்கியமாகாமலுமிருக்க அவர்களுடைய கண்கள் குருடாக்கப்பட்டு, இருதயம் கடினமாக்கப்படுகிறது’ என்ற ஏசாயாவின் வார்த்தைகளை நிறைவேற்றுகிறது. யெகோவாவின் பரலோக மன்றங்களையும் இயேசு மனிதனாக பிறப்பதற்கு முன்பு யெகோவாவோடு மகிமையோடு இருந்ததையும் ஏசாயா தரிசனத்தில் கண்டான். என்றபோதிலும், யூதர்கள் ஏசாயா எழுதிய காரியங்களின் நிறைவேற்றமாக, இவர் தான் வாக்குப்பண்ணப்பட்ட மீட்பர் என்ற அத்தாட்சியை பிடிவாதமாக ஏற்க மறுத்துவிடுகின்றனர்.

மறுபட்சத்தில், ஆட்சியாளர்களில் அநேகர் (தெளிவாகவே, நியாயசங்கத்தின், யூத உயர்நீதி மன்றத்தின் அங்கத்தினர்கள்) உண்மையில் இயேசுவில் விசுவாசம் வைக்கின்றனர். இப்படிப்பட்ட ஆட்சியாளர்களில் இருவர் நிக்கொதேமுவும், அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பும் ஆவர். ஆனால் இந்த ஆட்சியாளர்கள் ஜெப ஆலயத்தில் தங்கள் ஸ்தானங்களிலிருந்து நீக்கப்படுவார்களோ என்ற பயத்தின் காரணமாக தற்சமயத்துக்கு தங்கள் விசுவாசத்தை அறிவிக்கத் தயங்குகின்றனர். இப்படிப்பட்டவர்கள் எவ்வளவு காரியங்களை இழந்துவிடுகின்றனர்!

இயேசு தொடர்ந்து சொல்கிறார்: “என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் என்னிடத்தில் அல்ல, என்னை அனுப்பினவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறான். என்னைக் காண்கிறவன் என்னை அனுப்பினவரைக் காண்கிறான். . . . ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமற்போனால், அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை; நான் உலகத்தை நியாயந்தீர்க்க வராமல், உலகத்தை இரட்சிக்க வந்தேன். . . . நான் சொன்ன வசனமே அவனைக் கடைசி நாளில் நியாயந்தீர்க்கும்.”

இயேசுவின் பேரில் விசுவாசம் வைப்பவர்கள் இரட்சிக்கப்படுவதற்காக அவரை அனுப்பும்படி மனிதவர்க்க உலகத்துக்கான யெகோவாவின் அன்பு அவரை உந்துவித்தது. ஜனங்கள் இரட்சிக்கப்படுவது இயேசு பேசும்படியாக கடவுள் கட்டளையிட்ட காரியங்களுக்கு அவர்கள் கீழ்ப்படிவார்களா என்பதன் பேரில் நிர்ணயிக்கப்படும். “கடைசி நாளில்” கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சியின் போது நியாயத்தீர்ப்பு நடைபெறும்.

இயேசு இவ்வாறு சொல்லி முடிக்கிறார்: “நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்க வேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார். அவருடைய கட்டளை நித்திய ஜீவனாயிருக்கிறதென்று அறிவேன்; ஆகையால் நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன்.” யோவான் 12:28–50; 19:38, 39; மத்தேயு 3:17; 17:5; ஏசாயா 6:1, 8–10.

▪ இயேசுவைக் குறித்து கடவுளுடைய குரல் எந்த மூன்று சமயங்களில் கேட்கப்பட்டது?

▪ ஏசாயா தீர்க்கதரிசி இயேசுவின் மகிமையை எவ்வாறு கண்டார்?

▪ இயேசுவில் விசுவாசம் வைக்கும் ஆட்சியாளர்கள் யார், ஆனால் அவர்கள் ஏன் அவரை வெளிப்படையாக அறிக்கை செய்யவில்லை?

▪ “கடைசி நாள்” எது? அப்போது எதன் அடிப்படையில் ஜனங்கள் நியாயந்தீர்க்கப்படுவர்?