Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுள் கேட்கும் எல்லாவற்றையும் இயேசு செய்து முடிக்கிறார்

கடவுள் கேட்கும் எல்லாவற்றையும் இயேசு செய்து முடிக்கிறார்

அதிகாரம் 133

கடவுள் கேட்கும் எல்லாவற்றையும் இயேசு செய்து முடிக்கிறார்

அவனுடைய அநீதியான உலகத்தையும் மாவீர-ராஜாவாகிய இயேசு கிறிஸ்து நீக்கும் போது, அங்கே சந்தோஷப்படுவதற்கு என்னே காரணம் இருக்கும்! கடைசியாக இயேசுவின் சமாதானமான ஆயிர வருட ஆட்சி ஆரம்பிக்கிறது!

இயேசு மற்றும் அவருடைய உடன் அரசர்களின் வழிநடத்துதலின் கீழ், அர்மகெதோனை தப்பிப்பிழைப்பவர்கள் அந்த நீதியான போரினால் உண்டாக்கப்பட்ட பாழான நிலையை சுத்தம் செய்வர். பூமியில் தப்பிப் பிழைப்பவர்களும்கூட சில காலத்துக்கு பிள்ளைகளைப் பிறப்பிப்பார்கள், பூமியை ஒரு பகட்டான பூங்காவைப் போன்ற தோட்டமாக்குவதற்கு சந்தோஷமான பண்படுத்தும் வேலையில் இவர்கள் பங்கு கொள்வர்.

காலப்போக்கில் இயேசு இந்த அழகான பரதீஸை அனுபவிப்பதற்கு கல்லறைகளிலிருந்து லட்சக்கணக்கான ஆட்களை வெளியே கொண்டு வருவார். தம்முடைய சொந்த உத்தரவாதத்தின் நிறைவேற்றமாக அவர் இதைச் செய்வார்: “பிரேதக் குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்.”

கழுமரத்தில் இயேசுவின் பக்கத்தில் மரித்த முன்னாள் கள்ளன் அவர் உயிர்த்தெழுப்பப் போகிறவர்களில் ஒருவனாக இருப்பான். இயேசு அவனுக்கு இவ்வாறு வாக்களித்ததை நினைவுபடுத்திப் பாருங்கள்: “இன்றைக்கு நான் மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன், நீ என்னுடனே கூடப் பரதீசிலிருப்பாய்.” (NW) இயேசுவோடு ஒரு ராஜாவாக அரசாளுவதற்கு அந்த மனிதன் பரலோகத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டான், இயேசு மறுபடியும் ஒரு மனிதனாக ஆகி அவனோடு பரதீஸிய பூமியில் வாழ மாட்டார். மாறாக, அவர் அவனை பரதீஸில் உயிர்த்தெழுப்பி அடுத்த பக்கத்தில் உள்ள படத்தின் மூலம் விளக்கிக் காட்டியிருக்கிறபடி அவனுடைய ஆவிக்குரிய மற்றும் சரீரப்பிரகாரமான தேவைகளை கவனித்துக் கொள்ளும்படியாக பார்த்துக் கொள்வதன்மூலம் முன்னாள் கள்வனுடன் இயேசு இருப்பார்.

அதை நினைத்துப் பாருங்கள்! இயேசுவின் அன்பான கவனிப்பின் கீழ், இந்த முழு மானிட குடும்பமும்—அர்மகெதோனை தப்பிப் பிழைப்பவர்கள், அவர்களுடைய பிள்ளைகள், அவருக்குக் கீழ்ப்படியும் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பப்பட்ட லட்சக்கணக்கான ஆட்கள்—மானிட பரிபூரணத்தை நோக்கி வளருவர். யெகோவா, தம்முடைய அரச குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் மனிதவர்க்கத்தோடு ஆவிக்குரிய விதத்தில் வாசம் செய்வார். பரலோகத்திலிருந்து யோவான் கேட்ட சப்தம் சொல்கிறபடி, “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை.” பூமியில் எந்த நபரும் துன்பப்படவோ அல்லது நோய்வாய்ப்படவோ மாட்டார்.

இயேசுவின் ஆயிரம் வருட ஆட்சியின் முடிவுக்குள், பலுகிப் பெருகி பூமியை நிரப்பும்படி ஆதியில் கடவுள் முதல் மானிட ஜோடியாகிய ஆதாமுக்கும் ஏவாளுக்கும் சொன்ன போது நோக்கம் கொண்டிருந்தபடி நிலைமை இருக்கும். ஆம், பரிபூரண மானிடர்களால் ஆன ஒரு நீதியான இனத்தால் பூமி நிரப்பப்படும். இயேசுவின் மீட்கும் கிரய பலியின் நன்மைகள் ஒவ்வொருவருக்கும் பொருத்தப்பட்டிருப்பதால் இது இப்படியிருக்கும். ஆதாமின் பாவத்தின் காரணமாக இருக்கும் மரணம் இனிமேலும் இருக்காது!

ஆக, யெகோவா தம்மிடம் கேட்டிருந்த எல்லாவற்றையும் இயேசு நிறைவேற்றி முடித்திருப்பார். ஆகையால், ஆயிரம் வருட முடிவின் போது, ராஜ்யத்தையும் பரிபூரணமாக்கப்பட்ட மனித குடும்பத்தையும் அவர் தம் தகப்பனிடம் ஒப்படைப்பார். பின்பு கடவுள் சாத்தானையும் அவனுடைய பேய்களையும் மரணத்தைப் போன்ற செயலற்ற நிலையிலிருந்து விடுவிப்பார். என்ன நோக்கத்துக்காக?

ஆயிரம் வருட முடிவுக்குள் பரதீஸில் வாழ்ந்து கொண்டிருக்கும் அநேகர் தங்களுடைய விசுவாசம் ஒருபோதுமே சோதிக்கப்படாத உயிர்த்தெழுப்பப்பட்ட நபர்களாய் இருப்பர். மரிப்பதற்கு முன்பு, அவர்கள் கடவுளுடைய வாக்குகளை ஒருபோதும் அறிந்திருந்தது இல்லை, ஆகையால் அவர்கள் அவைகளில் விசுவாசத்தை வெளிக்காட்ட முடியவில்லை. பின்னர் உயிர்த்தெழுப்பப்பட்டு பைபிள் சத்தியங்களைக் கற்றுக்கொண்ட பின்பு, எந்தவித எதிர்ப்புமின்றி பரதீஸில் கடவுளை சேவிப்பது அவர்களுக்கு சுலபமாக இருந்தது. அவர்கள் கடவுளை தொடர்ந்து சேவிப்பதிலிருந்து நிறுத்துவதற்கு முயற்சி செய்ய சாத்தானுக்கு சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டால், பரீட்சையின் கீழ் அவர்கள் உண்மையுள்ளவர்களாக நிரூபிப்பார்களா? இந்தக் கேள்வியைத் தீர்ப்பதற்கு, சாத்தான் விடுதலையாக்கப்படுவான்.

இயேசுவின் ஆயிரம் வருட ஆட்சிக்குப் பின், முடிவு செய்ய முடியாத எண்ணிக்கையான ஜனங்களை கடவுளை சேவிப்பதிலிருந்து திருப்பி விடுவதில் சாத்தான் வெற்றியடைந்தவனாக நிரூபிப்பான் என்று யோவானுக்குக் வெளிப்படுத்தப்பட்ட தரிசனம் காட்டுகிறது. ஆனால் கடைசி சோதனை முடிவடையும் போது, சாத்தானும் அவனுடைய பேய்களும் அவர்களால் தவறாக வழிநடத்தப்பட்ட அனைவரும் என்றென்றைக்கும் அழிக்கப்படுவர். மறுபட்சத்தில், முழுமையாக சோதிக்கப்பட்ட உண்மையுள்ளோர் தப்பிப்பிழைத்து நித்திய காலமாக தங்களுடைய பரலோக தகப்பனின் ஆசீர்வாதங்களை அனுபவிப்பதற்கு தொடர்ந்து வாழ்வர்.

கடவுளுடைய மகிமையான நோக்கங்களை நிறைவேற்றுவதில் தெளிவாகவே இயேசு ஒரு முக்கியமான பங்கை வகித்தார், தொடர்ந்து அந்தப் பங்கை வகிப்பார். கடவுளின் பெரிய பரலோக ராஜாவாக அவர் நிறைவேற்றி முடிக்கும் எல்லாவற்றின் விளைவாக என்னே ஒரு மகத்தான எதிர்காலத்தை நாம் அனுபவிக்கலாம். என்றபோதிலும், ஒரு மனிதனாக இருந்தபோது அவர் செய்த எல்லாவற்றையும் நாம் மறந்துவிட முடியாது.

இயேசு மனமுவந்து பூமிக்கு வந்து தம் தகப்பனைப் பற்றி நமக்கு கற்பித்தார். இதற்கும் மேலாக அவர் கடவுளின் மதிப்பு வாய்ந்த குணாதிசயங்களை தம் முன்மாதிரியின் மூலம் விளக்கினார். அவருடைய விழுமிய தைரியமும் ஆண்மையும், அவருடைய ஈடு இணையற்ற ஞானமும், ஒரு போதகராக அவருடைய மேம்பட்ட திறமையும், அவருடைய தைரியமான தலைமையேற்று நடத்தும் ஆற்றலும், அவருடைய மென்மையான இரக்கமும், பிறரிடத்தில் தம்மை வைத்துப் பார்க்கும் தன்மையும் நம் இருதயங்களைத் தொடுகின்றன. நாம் ஜீவனைப் பெற ஒரே வழியான மீட்கும் பொருளை அளிக்கையில் அவர் எவ்வாறு விவரிக்க முடியாத விதத்தில் துன்பப்பட்டார் என்பதை நாம் நினைவுபடுத்திப் பார்க்கும் போது, நம்முடைய இருதயங்கள் நிச்சயமாகவே அவருக்கான போற்றுதலோடு தூண்டப்படுகின்றன!

உண்மையிலேயே இயேசுவின் வாழ்க்கையைப் பற்றிய இந்தப் படிப்பில் என்னே ஒரு மனிதனை நாம் கண்டோம்! அவருடைய பெரும்புகழ் வெளிப்படையாகவும் உணர்ச்சியில் ஆழ்த்திவிடக்கூடியதாயும் இருக்கிறது. ரோம தேசாதிபதியாகிய பொந்தியு பிலாத்துவின் வார்த்தைகளை எதிரொலிக்க நாம் உந்தப்படுகிறோம்: “இதோ, இந்த மனுஷன்!” ஆம், உண்மையிலேயே அவர் “இந்த மனுஷன்,” எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப்பெரிய மனிதர்!

அவருடைய மீட்பின் கிரய பலியின் ஏற்பாட்டை நாம் ஏற்றுக்கொள்வதன் மூலம், ஆதாமிலிருந்து சுதந்தரிக்கப்பட்ட பாவம் மற்றும் மரணத்தின் சுமை நம்மீதிருந்து நீக்கப்படக்கூடும், இயேசு நம்முடைய “நித்திய பிதா”வாக ஆகக்கூடும். நித்திய ஜீவனைப் பெறப் போகும் அனைவரும் அறிவைப் பெற்றுக்கொள்ள வேண்டும், கடவுளைப் பற்றி மட்டுமல்ல, அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றியும்கூட அறிவு பெற்றுக்கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட ஜீவனைத் தரும் அறிவைப் பெற்றுக்கொள்வதற்கு இப்புத்தகத்தை வாசிப்பதும் படிப்பதும் உங்களுக்கு உதவி செய்வதாக. 1 யோவான் 2:17; 1:7; யோவான் 5:28, 29; 3:16; 17:3; 19:5; லூக்கா 23:43; ஆதியாகமம் 1:28; 1 கொரிந்தியர் 15:24–28; வெளிப்படுத்துதல் 20:1–3, 6–10; 21:3, 4; ஏசாயா 9:6.

▪ அர்மகெதோனை தப்பிப்பிழைப்பவர்களுக்கும் அவர்களுடைய பிள்ளைகளுக்கும் என்ன சந்தோஷமான சிலாக்கியம் இருக்கும்?

▪ அர்மகெதோனை தப்பிப்பிழைப்பவர்களோடும் அவர்களுடைய பிள்ளைகளோடும்கூட கூடுதலாக யார் பரதீஸை அனுபவிப்பர்? என்ன அர்த்தத்தில் இயேசு அவர்களோடு இருப்பார்?

▪ ஆயிரம் வருட கடைசியில் நிலைமை என்னவாக இருக்கும்? இயேசு அப்போது என்ன செய்வார்?

▪ சாத்தான் அபிஸிலிருந்து ஏன் விடுவிக்கப்படுவான்? அவனுக்கும் அவனைப் பின்பற்றும் அனைவருக்கும் இறுதியில் என்ன நேரிடும்?

▪ இயேசு எவ்வாறு நம்முடைய “நித்திய பிதா”வாக ஆகக்கூடும்?