Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடைசி நாட்களின் அடையாளம்

கடைசி நாட்களின் அடையாளம்

அதிகாரம் 111

கடைசி நாட்களின் அடையாளம்

இதற்குள் செவ்வாய்கிழமை மதியம் ஆகிறது. கீழேயிருக்கும் ஆலயத்தை பார்த்த வண்ணம் இயேசு ஒலிவமலையின் மேல் உட்கார்ந்திருக்கையில், பேதுரு, அந்திரேயா, யாக்கோபு, யோவான் ஆகியோர் அவரிடம் தனித்து வருகின்றனர். அவர்கள் ஆலயத்தைக் குறித்து அக்கறையுடையவர்களாய் இருக்கின்றனர், ஏனென்றால் ஒரு கல்லின் மேல் ஒரு கல்லிராதபடிக்கு அது இடிக்கப்பட்டு போகும் என்று இயேசு அப்போது தானே முன்னறிவித்திருந்தார்.

ஆனால் அவர்கள் இயேசுவை அணுகி வருகையில், இன்னுமதிகமான காரியங்களை தங்கள் மனங்களில் கொண்டிருக்கின்றனர் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. சில வாரங்களுக்கு முன்பு, அவர் தம் “பிரசன்னத்தைக்” குறித்து பேசியிருந்தார், அந்தச் சமயத்தின் போது “மனுஷகுமாரன் வெளிப்படுவார்.” மேலும் இதற்கு முன்பு ஒரு சமயம், “காரிய ஒழுங்குமுறையின் முடிவை” பற்றி அவர் அவர்களிடம் சொல்லியிருந்தார். ஆகையால் அப்போஸ்தலர்கள் அதிக ஆர்வமுள்ளவர்களாய் இருக்கின்றனர்.

“இவைகள் (எருசலேமுக்கும் அவளுடைய ஆலயத்துக்கும் அழிவில் விளைவடையும் சம்பவங்கள்) எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்ல வேண்டும்” என்று அவர்கள் கேட்கிறார்கள். அவர்களுடைய கேள்வி மூன்று பாகங்களை உடையதாயிருந்தது. முதலாவது, எருசலேம் மற்றும் அதன் ஆலயத்தின் முடிவை பற்றியும், அடுத்து, ராஜ்ய வல்லமையில் இயேசுவின் பிரசன்னத்தைக் குறித்தும், இறுதியில் இந்தக் காரிய ஒழுங்கு முறையின் முழு முடிவைக் குறித்தும் அவர்கள் அறிய விரும்புகின்றனர்.

கேள்வியின் மூன்று பாகங்களுக்கும் இயேசு நீண்ட பதிலளிக்கிறார். யூத ஒழுங்குமுறை எப்போது முடிவடையும் என்பதைக் காட்டும் ஓர் அடையாளத்தை அவர் கொடுக்கிறார்; ஆனால் அவர் அதற்கு மேல் கூடுதலாகவும் சொல்கிறார். அவருடைய எதிர்கால சீஷர்கள் தாங்கள் அவருடைய பிரசன்னத்தின் போதும், முழு காரிய ஒழுங்கு முறையின் முடிவின் அருகாமையிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்பதை அறிந்து கொள்ளும்படி அவர்களை விழிப்புடன் இருக்கச் செய்யும் ஓர் அடையாளத்தையும் அவர் கொடுக்கிறார்.

வருடங்கள் கடந்து செல்கையில், இயேசுவின் தீர்க்கதரிசனம் நிறைவேற்றமடைகிறதை அப்போஸ்தலர்கள் காண்கின்றனர். ஆம், அவர் முன்னறிவித்த அதே காரியங்கள், அவர்களுடைய நாட்களில் நடக்க ஆரம்பிக்கின்றன. ஆகையால் 37 வருடங்களுக்கு பின் பொ.ச. 70-ல் உயிரோடிருக்கும் கிறிஸ்தவர்கள், யூத ஒழுங்குமுறை அதனுடைய ஆலயத்தோடு அழிக்கப்படுகையில் எதிர்பாராத நிலையில் இல்லை.

என்றபோதிலும், கிறிஸ்துவின் பிரசன்னமும், காரிய ஒழுங்கு முறையின் முடிவும் பொ.ச. 70-ல் நடைபெறவில்லை. ராஜ்ய வல்லமையில் அவருடைய பிரசன்னம் வெகு காலத்துக்கு பின் நடக்கிறது. ஆனால் எப்போது? இயேசுவின் தீர்க்கதரிசனத்தை ஆராய்ச்சி செய்வது இதை வெளிக்காட்டுகிறது.

“யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்” என்று இயேசு முன்னறிவிக்கிறார். “ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்,” பஞ்சங்களும், பூமியதிர்ச்சிகளும், கொள்ளைநோய்களும் உண்டாகும் என்று அவர் சொல்கிறார். அவருடைய சீஷர்கள் பகைக்கப்பட்டு கொலை செய்யப்படுவார்கள். கள்ளத்தீர்க்கதரிசிகள் எழும்பி அநேகரை வஞ்சிப்பார்கள். அக்கிரமம் அதிகரிக்கும், பெரும் எண்ணிக்கையான ஜனங்களின் அன்பு தணிந்து போகும். அதே சமயத்தில், கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தி சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்.

பொ.ச. 70-ல் எருசலேம் அழிக்கப்பட்டதற்கு முன்பு இயேசுவின் தீர்க்கதரிசனம் மட்டுப்படுத்தப்பட்ட நிறைவேற்றத்தைக் கொண்டிருந்தாலும், அதனுடைய பெரிய நிறைவேற்றம் அவருடைய பிரசன்னத்தின் போதும், காரிய ஒழுங்குமுறையின் முடிவின் போதும் நடக்கிறது. 1914 முதற்கொண்டு, நடைபெறும் உலக சம்பவங்களைப் பற்றிய கவனமான ஆராய்ச்சி, இயேசுவின் பெருஞ்சிறப்பு வாய்ந்த தீர்க்கதரிசனம் அந்த வருடத்திலிருந்து அதன் பெரும் நிறைவேற்றத்தை அடைந்து கொண்டிருக்கிறது என்பதை வெளிக்காட்டுகிறது.

இயேசு கொடுக்கும் அடையாளத்தின் மற்றொரு பாகம், “பாழாக்குகிற அருவருப்பின்” தோற்றமாகும். பொ.ச. 66-ல் இந்தப் பாழாக்கும் அருவருப்பு, ஆலய மதிலை அடியோடு வீழ்த்தும் எருசலேமை சுற்றி நிற்கும் ரோம “சேனைகள்” வடிவில் தோன்றுகிறது. “பாழாக்கும் அருவருப்பு” அது நிற்கக் கூடாத இடத்தில் நின்றுகொண்டிருக்கிறது.

அடையாளத்தின் பெரிய நிறைவேற்றத்தில், பாழாக்கும் அருவருப்பு சர்வதேச சங்கமும், அதைத் தொடர்ந்து வந்த ஐக்கிய நாட்டு சங்கமும் ஆகும். உலக சமாதானத்துக்கான இந்த அமைப்பு, கடவுளுடைய ராஜ்யத்துக்கு பதிலீடாக கிறிஸ்தவமண்டலத்தால் நோக்கப்படுகிறது. எவ்வளவு அருவருப்பாயிருக்கிறது! ஆகையால் காலப்போக்கில் ஐக்கிய நாட்டு சங்கத்தோடு கூட்டுறவுக்கொண்டிருக்கும் அரசியல் அதிகாரங்கள் கிறிஸ்தவமண்டலத்தின் (அடையாளக் குறிப்பான எருசலேம்) மேல் திரும்பி அவளைப் பாழாக்கும்.

ஆகையால் இயேசு இவ்வாறு முன்னறிவிக்கிறார்: “உலகமுண்டானது முதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும்.” பொ.ச. 70-ல் எருசலேமின் அழிவின் போது பத்து லட்சத்துக்கும் மேலான ஆட்கள் அழிக்கப்பட்டதானது உண்மையிலேயே மிகுந்த உபத்திரவமாக இருந்தபோதிலும், நோவாவின் நாளின் பூகோள ஜலப்பிரளயத்தைவிட மிகுந்த உபத்திரவமாக இல்லை. இயேசுவின் தீர்க்கதரிசினத்தின் இந்தப் பாகத்தின் பெரிய நிறைவேற்றம் இன்னும் நிறைவேற வேண்டியதாயிருக்கிறது.

கடைசி நாட்களின் போது நம்பிக்கை

செவ்வாய், நிசான் 11 முடிவடைகையில் ராஜ்ய வல்லமையில் அவருடைய பிரசன்னத்தின் அடையாளத்தைக் குறித்தும், காரிய ஒழுங்குமுறையின் முடிவைப் பற்றியும் இயேசு தம்முடைய அப்போஸ்தலர்களோடு கலந்தாலோசிப்பை தொடருகிறார். கள்ளக்கிறிஸ்துக்களைப் பின்பற்றி செல்வதை பற்றி அவர் அவர்களை எச்சரிக்கிறார். “கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சி”ப்பதற்காக முயற்சிகள் செய்யப்படும் என்று அவர் சொல்கிறார். ஆனால், தூரப்பார்வையுடைய கழுகுகளைப் போல், இந்தத் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் மெய்யான ஆவிக்குரிய உணவு காணப்படும் இடத்தில், அதாவது, தம் காணக்கூடாத பிரசன்னத்தில் வந்திருக்கும் மெய்யான கிறிஸ்துவோடு கூடுவார்கள். அவர்கள் தவறாக வழிநடத்தப்பட்டு ஒரு கள்ளக்கிறிஸ்துவுடன் கூட்டிச் சேர்க்கப்படமாட்டார்கள்.

கள்ளக் கிறிஸ்துக்கள் ஒரு காணக்கூடிய தோற்றத்தை மட்டும் தான் கொடுக்க முடியும். அதற்கு எதிர்மாறாக, இயேசுவின் பிரசன்னம் காணக்கூடாததாயிருக்கும். இயேசு சொல்கிற விதமாய் அது மானிட சரித்திரத்தில் திகில் உண்டாக்கும் ஒரு சமயத்தில் நடக்கும்: “சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும்.” ஆம், இது மனிதவர்க்கத்தின் வாழ்க்கையிலேயே அதிக இருண்ட காலப்பகுதியாக இருக்கும். அது பகல் நேரத்தின் போது சூரியன் இருண்டுவிட்டதைப் போன்றும், மேலும் இரவில் சந்திரன் தன் ஒளியை கொடாதிருப்பதைப் போன்றும் இருக்கும்.

“வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்” என்று இயேசு தொடர்ந்து சொல்கிறார். சடப்பொருளாலான வானங்கள் தீமையை முன்னறிவித்துக் காட்டும் ஒரு தோற்றத்தை எடுத்துக் கொள்ளும் என்று அவர் குறிப்பிட்டுக் காட்டுகிறார். வானங்கள் வெறுமென பறவைகள் பறக்கும் இடமாக மட்டும் இருக்காது, ஆனால் அவைகள் யுத்த விமானங்கள், ஏவுகணைகள் மேலும் விண்வெளி ஆய்வுக்கூடங்களாலும் நிறைந்திருக்கும். முந்தைய மானிட சரித்திரத்தில் அனுபவித்திராத அளவுக்கு பயமும் வன்முறையும் மிகுந்து இருக்கும்.

அதன் விளைவாக “ஜனங்களுக்குத் தத்தளிப்பும் இடுக்கணும் உண்டாகும்; சமுத்திரமும் அலைகளும் முழக்கமாயிருக்கும். . . . ஆதலால் பூமியின் மேல் வரும் ஆபத்துகளுக்குப் பயந்து எதிர் பார்த்திருக்கிறதினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்து போம்” என்று இயேசு சொல்கிறார். உண்மையிலேயே, மானிட வாழ்க்கையின் அதிக இருண்ட காலப்பகுதியான இது “மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். . . . பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்” என்ற அந்தச் சமயத்திற்கு வழிநடத்தும்.

ஆனால் இந்தப் பொல்லாத ஒழுங்குமுறையை அழிப்பதற்கு ‘மனுஷகுமாரன் வல்லமையோடு’ வரும்போது எல்லாருமே புலம்பிக் கொண்டிருக்க மாட்டார்கள். கிறிஸ்துவோடு அவருடைய பரலோக ராஜ்யத்தில் பங்குகொள்ளப் போகும் “தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்,” 1,44,000 பேரும் அவர்களுடைய கூட்டாளிகள் “வேறே ஆடுகள்” என்று முன்பு இயேசு அழைத்தவர்களும் புலம்பமாட்டார்கள். மானிட சரித்திரத்தின் மிக இருண்ட காலப்பகுதியின் போது வாழ்ந்திருந்த போதிலும், இவர்கள் இயேசுவின் பின்வரும் உற்சாகமூட்டுதலுக்கு பிரதிபலிக்கின்றனர்: “இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்து பார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்.”

கடைசி நாட்களின் போது வாழப்போகும் தம்முடைய சீஷர்கள் முடிவின் அருகாமையை நிர்ணயிப்பதற்கு இயேசு இந்த உவமையைக் கொடுக்கிறார்: “அத்திமரத்தையும் மற்றெல்லா மரங்களையும் பாருங்கள். அவைகள் துளிர்க்கிறதை நீங்கள் காணும்போது வசந்த காலம் சமீபமாயிற்றென்று அறிகிறீர்கள். அப்படியே இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்றென்று அறியுங்கள். இவையெல்லாம் சம்பவிக்குமுன் இந்தச் சந்ததி ஒழிந்து போகாதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.”

ஆகையால் அடையாளத்தின் அநேக வித்தியாசமான அம்சங்கள் நிறைவேற்றமடைகிறதை அவருடைய சீஷர்கள் காணும்போது இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவு சமீபமாயிருக்கிறது என்பதையும் கடவுளுடைய ராஜ்யம் விரைவில் எல்லா துன்மார்க்கத்தையும் அழித்துவிடும் என்பதையும் அவர்கள் உணர வேண்டும். உண்மையில், இயேசு முன்னறிவிக்கும் எல்லா காரியங்களின் நிறைவேற்றத்தை காணும் ஜனங்களின் வாழ்நாட் காலத்துக்குள்ளாகவே முடிவு வரும்! பெரும் காரியங்கள் நடக்கப்போகும் கடைசி நாட்களின் போது உயிரோடு இருக்கப்போகும் சீஷர்களுக்கு இயேசு இவ்வாறு அறிவுரை கூறுகிறார்:

“உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள் மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள். பூமியிலெங்கும் குடியிருக்கிற அனைவர்மேலும் அது ஒரு கண்ணியைப் போல வரும். ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள்.”

புத்தியுள்ள கன்னிகைகளும் புத்தியில்லாத கன்னிகைகளும்

ராஜ்ய வல்லமையில் தம் பிரசன்னத்துக்கான ஓர் அடையாளத்தைக் கேட்ட தம்முடைய அப்போஸ்தலர்களின் வேண்டுகோளுக்கு இயேசு பதிலளித்துக் கொண்டிருந்தார். இப்போது அவர் அந்த அடையாளத்தின் கூடுதலான அம்சங்களை மூன்று உவமைகளில் அல்லது உதாரணங்களில் கொடுக்கிறார்.

அவருடைய பிரசன்னத்தின்போது வாழ்ந்துகொண்டிப்பவர்களால் ஒவ்வொரு உவமையின் நிறைவேற்றமும் கவனிக்கப்படும். முதலாவது உவமையை பின்வரும் வார்த்தைகளால் அவர் அறிமுகப்படுத்துகிறார்: “அப்பொழுது, பரலோக ராஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு, மணவாளனுக்கு எதிர்கொண்டு போகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும். அவர்களில் ஐந்து பேர் புத்தியுள்ளவர்களும், ஐந்து பேர் புத்தியில்லாதவர்களுமாயிருந்தார்கள்.”

‘பரலோக ராஜ்யம் பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும்’ என்ற சொற்றொடர் மூலம், பரலோக ராஜ்யத்தை சுதந்தரிப்பவர்களில் பாதி பேர் புத்தியில்லாதவர்கள் என்றும் பாதி பேர் புத்தியுள்ளவர்கள் என்றும் இயேசு அர்த்தப்படுத்தவில்லை! மாறாக, பரலோக ராஜ்யத்தின் சம்பந்தமாக இப்படியொரு அம்சம் இருக்கிறது அல்லது ராஜ்யத்தோடு தொடர்புடைய விவரங்கள் இப்படியொரு காரியத்துக்கு ஒப்பாக இருக்கும் என்று அவர் அர்த்தப்படுத்துகிறார்.

பரலோக ராஜ்யத்துக்கு செல்லப்போகும் அல்லது அவ்வாறு செல்லப்போவதாக உரிமைப்பாராட்டிக் கொள்ளும் எல்லா கிறிஸ்தவர்களையும் இந்தப் பத்து கன்னிகைகள் அடையாளமாக குறிக்கின்றனர். பொ.ச. 33-ன் பெந்தெகொஸ்தே நாளன்று, கிறிஸ்தவ சபை உயிர்த்தெழுப்பப்பட்ட, மகிமைப்படுத்தப்பட்ட மணவாளனாகிய இயேசு கிறிஸ்துவுக்கு கலியாணம் செய்து கொடுப்பதாக வாக்களிக்கப்பட்டது. ஆனால் கலியாணம் எதிர்காலத்தில், குறிக்கப்படாத சமயத்தில் பரலோகத்தில் நடைபெற வேண்டியதாயிருந்தது.

இந்த உவமையில், பத்துக் கன்னிகைகள் மணவாளனை வரவேற்று, கலியாண ஊர்வலத்தில் சேர்ந்து கொள்வதற்கு வெளியே செல்கின்றனர். அவர் வந்து சேரும்போது, அவர்கள் தங்கள் தீவட்டிகளைக் கொண்டு ஊர்வலம் செல்லும் வழியை பிரகாசிக்கச் செய்வர், மணவாளன் தம்முடைய மணவாட்டிக்காக ஆயத்தம் செய்யப்பட்டிருக்கும் வீட்டுக்கு அவளை கொண்டு வருகையில் அவருக்கு இவ்வாறாக மரியாதை செலுத்துவர். என்றபோதிலும், இயேசு இவ்வாறு விளக்குகிறார்: “புத்தியில்லாதவர்கள் தங்கள் தீவட்டிகளை எடுத்துக்கொண்டு போனார்கள், எண்ணெயையோ கூடக்கொண்டு போகவில்லை. புத்தியுள்ளவர்கள் தங்கள் தீவட்டிகளோடுங்கூடத் தங்கள் பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டுபோனார்கள். மணவாளன் வரத் தாமதித்த போது, அவர்கள் எல்லாரும் நித்திரை மயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள்.”

மணவாளன் நீண்ட தாமதமாக வருவது, அரசாட்சி செய்யும் ராஜாவாக கிறிஸ்துவின் பிரசன்னம் வெகுகாலம் கழித்து வரவேண்டியிருந்தது என்பதை குறிப்பிடுகிறது. அவர் இறுதியில் தம்முடைய சிங்காசனத்துக்கு 1914-ம் வருடத்தில் வருகிறார். அதற்கு முந்தின நீண்ட இரவின் போது, எல்லா கன்னிகைகளும் தூங்கிவிடுகின்றனர். ஆனால் அவர்கள் இதற்காக கண்டனம் செய்யப்படவில்லை. தங்களுடைய தீவட்டிகளுக்கு எண்ணெய் இல்லாததன் காரணமாக புத்தியில்லாத கன்னிகைகள் கண்டனம் செய்யப்படுகின்றனர். மணவாளன் வந்து சேருவதற்கு முன்பே அந்தக் கன்னிகைகள் எவ்வாறு விழித்தெழுகின்றனர் என்பதை இயேசு விளக்குகிறார்: “நடுராத்திரியிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டு போகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று. அப்பொழுது, அந்தக் கன்னிகைகள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்தினார்கள். புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களை நோக்கி: உங்கள் எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சங்கொடுங்கள், எங்கள் தீவட்டிகள் அணைந்து போகிறதே என்றார்கள். புத்தியுள்ளவர்கள் பிரதியுத்தரமாக: அப்படியல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் போதாமலிராதபடி, நீங்கள் விற்கிறவர்களிடத்திற் போய், உங்களுக்காக வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள்.”

மெய்க்கிறிஸ்தவர்களை சுடர்களைப் போல பிரகாசிக்கச் செய்யும் காரியத்தை எண்ணெய் அடையாளப்படுத்துகிறது. இது ஏவப்பட்ட கடவுளுடைய வார்த்தை, அதன் பேரிலும் அந்த வார்த்தையை அவர்கள் புரிந்து கொள்வதற்கு உதவிடும் பரிசுத்த ஆவியின் பேரிலும் கிறிஸ்தவர்கள் இறுக்கமான பிடியை வைத்திருக்கின்றனர். கலியாண விருந்துக்குச் செல்லும் ஊர்வலத்தின் போது, மணவாளனை வரவேற்பதில் புத்தியுள்ள கன்னிகைகளுக்கு ஒளி கொடுப்பதற்கு ஆவிக்குரிய எண்ணெய் உதவுகிறது. ஆனால் புத்தியில்லாத கன்னிகை வகுப்பார் தங்களுக்குள்ளே, தங்களுடைய பாத்திரங்களில் தேவையான ஆவிக்குரிய எண்ணெயை கொண்டில்லாமல் இருக்கின்றனர். ஆகையால் என்ன நடக்கிறது என்பதை இயேசு இவ்வாறு விவரிக்கிறார்:

“அப்படியே அவர்கள் (புத்தியில்லாத கன்னிகைகள்) (எண்ணெய்) வாங்கப் போனபோது மணவாளன் வந்துவிட்டார்; ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடேகூடக் கலியாண வீட்டுக்குள் பிரவேசித்தார்கள்; கதவும் அடைக்கப்பட்டது. பின்பு, மற்றக் கன்னிகைகளும் வந்து: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்க வேண்டும் என்றார்கள். அதற்கு அவர்: உங்களை அறியேன் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.”

கிறிஸ்து தம்முடைய பரலோக ராஜ்யத்தில் வந்து சேர்ந்த பிறகு, மெய்யான அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களாலான புத்தியுள்ள கன்னிகை வகுப்பார், இருளால் மூடப்பட்ட இந்த உலகத்தில் திரும்பி வந்த மணவாளனுக்கு துதியுண்டாக ஒளி வீசச்செய்வதற்கான தங்கள் சிலாக்கியத்துக்கு விழித்தெழுகின்றனர். ஆனால் புத்தியில்லாத கன்னிகைகளால் படமாகக் குறிப்பிடப்படுபவர்கள் இந்தப் புகழ்ச்சியுடன் வரவேற்பு கொடுப்பதற்கு தயாரற்ற நிலையில் இருக்கின்றனர். ஆகையால் நேரம் வருகிறபோது, கிறிஸ்து பரலோகத்தில் கலியாண விருந்துக்கு அவர்களுக்கு கதவை திறக்காமல் இருக்கிறார். அவர் அவர்களை வெளியே இவ்வுலகின் மிக ஆழ்ந்த இரவின் இருளில் மற்ற எல்லா அக்கிரமச்செய்கைக்காரரோடும் சேர்ந்து அழிவதற்கு விட்டுவிடுகிறார். “மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்” என்று இயேசு முடிக்கிறார்.

தாலந்துகளைப் பற்றிய உவமை

மற்றொரு உவமையை சொல்வதன் மூலம் இயேசு ஒலிவ மலையின் மேல் தம்முடைய அப்போஸ்தலர்களோடு கலந்தாலோசிப்பை தொடர்கிறார், மூன்று தொடர்ச்சியான உவமைகளில் இரண்டாவது உவமையாக இதைச் சொல்கிறார். ஒரு சில நாட்களுக்கு முன்பு, அவர் எரிகோவில் இருந்த போது ராஜ்யம் வருவதற்கு இன்னும் நீண்ட எதிர் காலம் இருக்கிறது என்பதைக் காண்பிப்பதற்கு இராத்தல்கள் பற்றிய உவமையை அவர் சொன்னார். இப்போது அவர் சொல்லும் உவமை, அதே போன்ற அநேக அம்சங்களைக் கொண்டிருக்கிறது, ராஜ்ய வல்லமையில் கிறிஸ்துவின் பிரசன்னத்தின் போது அதனுடைய நிறைவேற்றத்தில் செய்யப்படும் வேலைகளை விவரிக்கிறது. அவருடைய சீஷர்கள் பூமியில் இன்னும் இருக்கையில், அவருடைய “ஆஸ்திகளை” அதிகரிப்பதற்கு வேலை செய்ய வேண்டும் என்பதை இது சிறப்பித்துக் காட்டுகிறது.

இயேசு இவ்வாறு ஆரம்பிக்கிறார்: “அன்றியும், பரலோக ராஜ்யம் [அதாவது, ராஜ்யத்தோடு சம்பந்தப்பட்ட சூழ்நிலைமைகள்] புறத்தேசத்துக்குப் பிரயாணமாய்ப் போகிற ஒரு மனுஷன், தன் ஊழியக்காரரை அழைத்து, தன் ஆஸ்திகளை அவர்கள் வசமாய் ஒப்புக்கொடுத்தது போல் இருக்கிறது.” பரலோகத்துக்குப் பிரயாணம் செய்வதற்கு முன்பு தம்முடைய ஊழியக்காரரிடம்—பரலோக ராஜ்யத்துக்கு செல்லவிருந்த சீஷர்களிடம்—தம்முடைய ஆஸ்திகளை ஒப்படைத்த இயேசுவே அந்த மனிதன். இந்த ஆஸ்திகள் சொல்லர்த்தமான உடைமைகள் அல்ல, மேலுமான சீஷர்களை கொண்டுவருவதற்கு அதற்குள் அவர் கட்டிய ஆற்றலையுடைய பண்படுத்தப்பட்ட நிலத்தை அவை பிரதிநிதித்துவம் செய்கின்றன.

பரலோகத்துக்கு ஏறிப்போவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு இயேசு தம் ஆஸ்திகளை தம்முடைய ஊழியக்காரரிடம் ஒப்படைக்கிறார். அதை அவர் எவ்வாறு செய்கிறார்? பூமியின் நெடுந்தொலைவான பகுதிகள் வரை ராஜ்ய செய்தியை பிரசங்கிப்பதன் மூலம், அவர் அவர்களை பண்படுத்தப்பட்ட நிலத்தில் தொடர்ந்து வேலை செய்யுமாறு அறிவுரை கூறுகிறார். அதை இயேசு இவ்வாறு சொல்கிறார்: “அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக, ஒருவனிடத்தில் ஐந்து தாலந்தும், ஒருவனிடத்தில் இரண்டு தாலந்தும், ஒருவனிடத்தில் ஒரு தாலந்துமாகக் கொடுத்து, உடனே பிரயாணப்பட்டுப் போனான்.”

எட்டு தாலந்துகள்—கிறிஸ்துவின் ஆஸ்திகள்—ஊழியக்காரரின் திறமைகள் அல்லது ஆவிக்குரிய தகுதிகளுக்குத்தக்கதாய் இவ்வாறு விநியோகிக்கப்பட்டன. ஊழியக்காரர் சீஷர்களின் வகுப்புகளுக்கு அடையாளமாக இருக்கின்றனர். முதல் நூற்றாண்டில், ஐந்து தாலந்துகளைப் பெற்றுக்கொண்ட வகுப்பு அப்போஸ்தலர்களையும் உள்ளடக்கியது என்பது தெளிவாயிருக்கிறது. ஐந்து மற்றும் இரண்டு தாலந்துகளை பெற்றுக்கொண்ட ஊழியக்காரர் இருவரும் அவர்களுடைய ராஜ்ய பிரசங்கிப்பின் மூலமும் சீஷர்களை உண்டுபண்ணுவதன் மூலமும் அவைகளை இருமடங்காக ஆக்கினர். என்றபோதிலும், ஒரு தாலந்தை பெற்றுக்கொண்ட ஊழியக்காரன் அதை நிலத்தில் புதைத்து வைத்தான் என்று இயேசு சொல்கிறார்.

“வெகுகாலமான பின்பு அந்த ஊழியக்காரருடைய எஜமான் திரும்பி வந்து, அவர்களிடத்தில் கணக்குக் கேட்டான்” என்று இயேசு தொடர்ந்து சொல்கிறார். ஏறக்குறைய 1900 ஆண்டுகளுக்குப் பிறகு, 20-ம் நூற்றாண்டில் கணக்குகளை சரிபார்க்க கிறிஸ்து திரும்பி வந்தார், ஆகையால் அது உண்மையிலேயே “வெகு காலமான பின்பாக” இருந்தது. அடுத்து இயேசு இவ்வாறு விளக்குகிறார்:

“அப்பொழுது, ஐந்து தாலந்தை வாங்கினவன், வேறு ஐந்து தாலந்தைக் கொண்டு வந்து: ஆண்டவனே, ஐந்து தாலந்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே; அவைகளைக் கொண்டு, இதோ, வேறு ஐந்து தாலந்தைச் சம்பாதித்தேன் என்றான். அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின் மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.” இரண்டு தாலந்துகளைப் பெற்றுக்கொண்டவன் அதே போன்று தன் தாலந்துகளை இரு மடங்காக ஆக்கினான், அவன் அதே பாராட்டுதலையும் பலனையும் பெற்றுக்கொண்டான்.

இந்த உண்மையுள்ள ஊழியக்காரர் எவ்வாறு தங்களுடைய எஜமானின் சந்தோஷத்திற்குள் பிரவேசிக்கின்றனர்? அவர் புறதேசத்துக்கு தம் தகப்பனிடம் பரலோகத்துக்குச் சென்ற போது ராஜ்ய உடைமையை பெற்றுக்கொண்டது அவர்களுடைய எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் சந்தோஷமாயிருக்கிறது. நவீன காலங்களில் இருக்கும் உண்மையுள்ள ஊழியர்களை பொறுத்தவரை, கூடுதலான ராஜ்ய உத்தரவாதங்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதனால் அவர்கள் மிகுந்த சந்தோஷம் உடையவர்களாய் இருக்கின்றனர், மேலும் அவர்கள் பூமிக்குரிய வாழ்க்கையை முடிக்கையில், பரலோக ராஜ்யத்துக்கு உயிர்த்தெழுப்பப்படும் உச்சநிலையான சந்தோஷத்தை கொண்டிருப்பர். ஆனால் மூன்றாவது ஊழியக்காரனைப் பற்றியென்ன?

“ஆண்டவனே, நீர் . . . கடினமுள்ள மனுஷன் என்று அறிவேன். ஆகையால், நான் பயந்து, போய் உமது தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன்; இதோ, உம்முடையதை வாங்கிக்கொள்ளும்” என்று இந்த ஊழியக்காரன் குறைகூறுகிறான். இந்த ஊழியக்காரன் பண்படுத்தப்பட்ட நிலத்தில் வேண்டுமென்றே, பிரசங்கித்து சீஷர்களை உண்டுபண்ணுவதன் மூலம் வேலை செய்ய மறுத்தான். ஆகையால் எஜமான் அவனை “பொல்லாதவனும் சோம்பனுமான ஊழியக்காரனே” என்று அழைத்து, பின்வரும் தீர்ப்பை அறிவிக்கிறார்: “அவனிடத்திலிருக்கிற தாலந்தை எடுத்து, . . . பிரயோஜனமற்ற ஊழியக்காரனாகிய இவனைப் புறம்பான இருளிலே தள்ளிப்போடுங்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.” இந்தப் பொல்லாத ஊழியக்கார வகுப்பைச் சேர்ந்தவர்கள், புறம்பே தள்ளப்பட்டு, எந்த ஆவிக்குரிய சந்தோஷமும் இல்லாதவர்களாய் விடப்படுகின்றனர்.

கிறிஸ்துவை பின்பற்றுகிறோம் என்று உரிமைபாராட்டிக் கொள்ளும் அனைவருக்கும் இது ஒரு பயபக்தியான பாடத்தை அளிக்கிறது. அவருடைய பாராட்டுதலையும் வெகுமதியையும் அவர்கள் அனுபவிக்க வேண்டுமென்றால், புறம்பான இருளிலே தள்ளிப்போடப்பட்டு இறுதியில் அழிக்கப்படுவதை தவிர்க்க வேண்டுமென்றால் பிரசங்க வேலையில் ஒரு முழுமையான பங்கை கொண்டிருப்பதன் மூலம் அவர்களுடைய பரலோக எஜமானின் ஆஸ்திகளை அதிகரிப்பதற்கு அவர்கள் உழைக்க வேண்டும். இதைக் குறித்ததில் நீங்கள் ஊக்கமாயிருக்கிறீர்களா?

ராஜ்ய வல்லமையில் கிறிஸ்து வந்துசேரும்போது

இயேசு இன்னும் தம் அப்போஸ்தலர்களோடு ஒலிவ மலையில் இருக்கிறார். அவருடைய பிரசன்னம் மற்றும் இந்தக் காரிய ஒழுங்கு முறையின் முடிவைக் குறித்து ஓர் அடையாளத்தை அவர்கள் கேட்டதற்கு பதிலளிப்பவராய், தொடர்ச்சியான மூன்று உவமைகளில் கடைசி உவமையை அவர் இப்போது அவர்களுக்குச் சொல்கிறார்: “அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமைப்பொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின் மேல் வீற்றிருப்பார்” என்று இயேசு ஆரம்பிக்கிறார்.

தூதர்களை அவர்களுடைய பரலோக மகிமையில் மானிடர்கள் காண முடியாது. ஆகையால் மனுஷகுமாரனாகிய இயேசு கிறிஸ்து தூதர்களோடு வந்து சேருவது மானிட கண்களுக்கு காணக்கூடாததாய் இருக்க வேண்டும். அவர் வந்து சேருவது 1914-ம் வருடம் நடக்கிறது. ஆனால் என்ன நோக்கத்துக்காக? இயேசு இவ்வாறு விளக்குகிறார்: “அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறது போல அவர்களை அவர் பிரித்து, செம்மறியாடுகளைத் தமது வலதுபக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடது பக்கத்திலும் நிறுத்துவார்.”

சாதகமான பக்கத்துக்கு பிரிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடக்கும் என்பதை விவரிப்பவராய் இயேசு இவ்வாறு சொல்கிறார்: “அப்பொழுது, ராஜா தமது வலது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக் கொள்ளுங்கள்.” இந்த உவமையில் உள்ள செம்மறியாடுகள் கிறிஸ்துவோடு பரலோகத்தில் ஆட்சி செய்ய மாட்டார்கள், ஆனால் அதனுடைய பூமிக்குரிய பிரஜைகளாக இருக்கும் கருத்தில் ராஜ்யத்தை சுதந்தரித்துக் கொள்வர். மனிதவர்க்கத்தை மீட்டுக்கொள்வதற்கான கடவுளுடைய ஏற்பாட்டிலிருந்து நன்மை அடையக்கூடிய பிள்ளைகளை ஆதாமும் ஏவாளும் முதலில் பிறப்பித்த போது “உலகம் உண்டானது” ஏற்பட்டது.

ஆனால் ராஜாவின் சாதகமான வலது பக்கத்துக்கு செம்மறியாடுகள் ஏன் பிரிக்கப்படுகின்றனர்? “பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன், என்னைச் சேர்த்துக் கொண்டீர்கள்; வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள்” என்று ராஜா பதிலளிக்கிறார்.

செம்மறியாடுகள் பூமியில் இருப்பதனால், தங்களுடைய பரலோக ராஜாவுக்கு அவர்கள் எவ்வாறு இப்படிப்பட்ட சிறந்த கிரியைகளை செய்திருப்பார்கள் என்பதை அறிந்துகொள்ள விரும்புகிறார்கள். “ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உமக்குப் போஜனங் கொடுத்தோம்? எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவராகக்கண்டு உம்முடைய தாகத்தைத் தீர்த்தோம்? எப்பொழுது உம்மை அந்நியராகக் கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம்? எப்பொழுது உம்மை வஸ்திரமில்லாதவராகக் கண்டு உமக்கு வஸ்திரங்கொடுத்தோம்? எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவும் காவலிலிருக்கிறவராகவும் கண்டு, உம்மிடத்தில் வந்தோம்?”

“மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்று ராஜா பதிலளிக்கிறார். அவரோடு பரலோகத்தில் ஆட்சி செய்யப்போகும் 1,44,000 பேரில் பூமியில் மீதியாயிருக்கும் நபர்கள் கிறிஸ்துவின் சகோதரர்கள் ஆவர். அவர்களுக்கு நன்மை செய்வது, அவருக்கு நன்மை செய்வதை போன்றே இருக்கிறது என்று இயேசு சொல்கிறார்.

அடுத்து, ராஜா வெள்ளாடுகளை நோக்கி இவ்வாறு சொல்கிறார்: “சபிக்கப்பட்டவர்களே, என்னை விட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள். பசியாயிருந்தேன், நீங்கள் எனக்குப் போஜனங் கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், நீங்கள் என் தாகத்தைத் தீர்க்கவில்லை; அந்நியனாயிருந்தேன், நீங்கள் என்னைச் சேர்த்துக் கொள்ளவில்லை; வஸ்திரமில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு வஸ்திரங் கொடுக்கவில்லை; வியாதியுள்ளவனாயும் காவலிலடைக்கப்பட்டவனாயும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்க வரவில்லை.”

என்றபோதிலும், வெள்ளாடுகள் இவ்வாறு குறைகூறுகின்றனர்: “ஆண்டவரே, உம்மைப் பசியுள்ளவராகவும், தாகமுள்ளவராகவும், அந்நியராகவும், வஸ்திரமில்லாதவராகவும், வியாதிப்பட்டவராகவும், காவலிலடைக்கப்பட்டவராகவும் நாங்கள் எப்பொழுது கண்டு, உமக்கு உதவி செய்யாதிருந்தோம்?” செம்மறியாடுகள் சாதகமாக நியாயந்தீர்க்கப்படும் அதே அடிப்படையில் வெள்ளாடுகள் கண்டனத் தீர்ப்பளிக்கப்படுகின்றனர். “மிகவும் சிறியவர்களாகிய [என்னுடைய சகோதரர்கள்] இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்று இயேசு பதிலளிக்கிறார்.

ஆகையால் மிகுந்த உபத்திரவத்தில் இந்தத் துன்மார்க்க ஒழுங்கு முறையின் முடிவுக்கு முன்பு, ராஜ்ய வல்லமையில் கிறிஸ்துவின் பிரசன்னம் ஒரு நியாயத்தீர்ப்பு காலமாக இருக்கும். வெள்ளாடுகள் “நித்திய ஆக்கினையை அடையவும், நீதிமான்களோ [செம்மறியாடுகள்] நித்திய ஜீவனை அடையவும் போவார்கள்.” மத்தேயு 24:2–25:46; 13:40, 49; மாற்கு 13:3–37; லூக்கா 21:7–36; 19:43, 44; 17:20–30; 2 தீமோத்தேயு 3:1–5; யோவான் 10:16; வெளிப்படுத்துதல் 14:1–3.

▪ அப்போஸ்தலர்களின் கேள்வியை எது தூண்டுகிறது? ஆனால் அவர்கள் வேறு எதையும் தங்கள் மனங்களில் கொண்டிருக்கின்றனர்?

▪ இயேசுவின் தீர்க்கதரிசனத்தின் எந்தப் பாகம் பொ.ச. 70-ல் நிறைவேற்றமடைகிறது? ஆனால் அப்போது என்ன நடைபெறவில்லை?

▪ இயேசுவின் தீர்க்கதரிசனம் எப்போது முதல் நிறைவேற்றத்தைக் கொண்டிருக்கிறது? ஆனால் எப்போது அது பெரிய நிறைவேற்றத்தைக் கொண்டிருக்கிறது?

▪ பாழாக்கும் அருவருப்பு, அதன் முதல் நிறைவேற்றத்திலும், இறுதி நிறைவேற்றத்திலும் என்ன?

▪ மிகுந்த உபத்திரவம் எருசலேமின் அழிவோடு அதனுடைய இறுதி நிறைவேற்றத்தை ஏன் கொண்டில்லை?

▪ கிறிஸ்துவின் பிரசன்னத்தை என்ன உலக நிலைமைகள் குறிக்கின்றன?

▪ எப்போது ‘பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் புலம்புவார்கள்?’ ஆனால் கிறிஸ்துவை பின்பற்றுபவர்கள் என்ன செய்து கொண்டிருப்பார்கள்?

▪ முடிவு எப்போது வரும் என்பதை அவருடைய எதிர்கால சீஷர்கள் கண்டுணர உதவி செய்வதற்கு என்ன உவமையை இயேசு கொடுக்கிறார்?

▪ கடைசி நாட்களின் போது வாழப்போகும் தம் சீஷர்களுக்கு இயேசு என்ன புத்திமதி கொடுக்கிறார்?

▪ பத்து கன்னிகைகளால் அடையாளங் காட்டப்படுவது யார்?

▪ கிறிஸ்தவ சபை எப்போது மணவாளனுக்கு திருமண நிச்சயம் செய்யப்பட்டது? தன் மணவாட்டியை கலியாண விருந்துக்கு அழைத்துச் செல்ல மணவாளன் எப்போது வந்து சேருகிறார்?

▪ எண்ணெய் எதை பிரதிநிதித்துவம் செய்கிறது, அதைக் கொண்டிருப்பது புத்தியுள்ள கன்னிகைகள் எதைச் செய்வதற்கு உதவுகிறது?

▪ கலியாண விருந்து எங்கே நடைபெறுகிறது?

▪ என்ன மகத்தான வெகுமதியை புத்தியில்லா கன்னிகைகள் இழந்துவிடுகின்றனர், அவர்களுடைய முடிவு என்ன?

▪ தாலந்துகளைப் பற்றிய உவமை என்ன பாடத்தை கற்பிக்கிறது?

▪ ஊழியக்காரர் யார், அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட ஆஸ்திகள் என்ன?

▪ கணக்குகளை சரிபார்ப்பதற்கு எஜமான் எப்போது வருகிறார், அவர் எதைக் காண்கிறார்?

▪ உண்மையுள்ள ஊழியக்காரர் பிரவேசிக்கும் சந்தோஷம் என்ன? பொல்லாத ஊழியக்காரனாகிய மூன்றாவது ஊழியக்காரனுக்கு என்ன நடக்கிறது?

▪ கிறிஸ்துவின் பிரசன்னம் ஏன் காணக்கூடாததாய் இருக்க வேண்டும்? அந்தச் சமயத்தில் அவர் என்ன வேலை செய்கிறார்?

▪ என்ன கருத்தில் செம்மறியாடுகள் ராஜ்யத்தை சுதந்தரித்துக் கொள்கின்றனர்?

▪ “உலகமுண்டானது” எப்போது நடைபெற்றது?

▪ என்ன அடிப்படையில் ஜனங்கள் செம்மறியாடுகள் அல்லது வெள்ளாடுகளாக நியாயந்தீர்க்கப்படுகின்றனர்?