Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடைசி பஸ்காவில் மனத்தாழ்மை

கடைசி பஸ்காவில் மனத்தாழ்மை

அதிகாரம் 113

கடைசி பஸ்காவில் மனத்தாழ்மை

பேதுருவும் யோவானும், இயேசுவிடமிருந்து பெற்றுக்கொண்ட கட்டளையின்படி பஸ்காவுக்காக ஆயத்தங்கள் செய்வதற்கு ஏற்கெனவே எருசலேமுக்கு வந்து சேர்ந்திருக்கின்றனர். இயேசு, பிற்பாடு, மற்ற பத்து அப்போஸ்தலர்களோடு கூட பிற்பகலில் வந்து சேருகிறார். இயேசுவும் அவருடைய கூட்டத்தாரும் ஒலிவமலையிலிருந்து கீழே இறங்கி வருகையில் சூரியன் அடிவானத்தில் அமிழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த மலையிலிருந்து பட்டணத்தை இயேசு பகல்நேரத்தில் காண்பது இது கடைசிமுறையாயிருக்கிறது.

விரைவில் இயேசுவும் அவருடைய கூட்டத்தாரும் பட்டணத்துக்கு வந்து சேருகின்றனர், பஸ்காவை கொண்டாடப்போகும் வீட்டுக்கு அவர்கள் செல்கின்றனர். பெரிய மேலறைக்குச் செல்லும் படிகளில் ஏறுகின்றனர், பஸ்காவை அவர்கள் தனிப்பட்ட விதமாய் கொண்டாடுவதற்கான எல்லா ஆயத்தங்களையும் காண்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்காக இயேசு ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார், அதை அவர் இவ்வாறு சொல்கிறார்: “நான் பாடுபடுகிறதற்கு முன்னே உங்களுடனேகூட இந்தப் பஸ்காவைப் புசிக்க மிகவும் ஆசையாயிருந்தேன்.”

பஸ்காவில் பங்குகொள்பவர்கள் பாரம்பரியமாக நான்கு கோப்பை திராட்சரசம் பருகுவர். மூன்றாவது கோப்பையை பெற்றுக்கொண்ட பின்பு, இயேசு நன்றி செலுத்தி, இவ்வாறு சொல்கிறார்: “நீங்கள் இதை வாங்கி, உங்களுக்குள்ளே பங்கிட்டுக் கொள்ளுங்கள். தேவனுடைய ராஜ்யம் வருமளவும் நான் திராட்சப்பழரசத்தைப் பானம் பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.”

போஜனத்தின் போது, இயேசு எழுந்து, தம் மேல் வஸ்திரங்களை கழற்றி வைத்துவிட்டு, ஒரு துவாலையை எடுத்துக் கொண்டு, ஒரு பாத்திரத்தை தண்ணீரால் நிரப்புகிறார். சாதாரணமாக, விருந்தளிப்பவர், விருந்தினரின் கால்களை கழுவுவதை பார்த்துக் கொள்வார். ஆனால் இந்த நிகழ்ச்சியில் விருந்தளிப்பவர் இல்லாததால் இயேசு இந்தத் தனிப்பட்ட சேவையை கவனித்துக் கொள்கிறார். அப்போஸ்தலர்களில் யாராவது ஒருவர் அதை செய்வதற்கு சந்தர்ப்பத்தை பயன்படுத்தியிருக்கலாம், அவர்களுக்குள்ளே இன்னும் போட்டி மனப்பான்மை இருப்பதால், ஒருவரும் முன்வரவில்லை. இப்போது இயேசு அவர்களுடைய கால்களை கழுவ ஆரம்பித்த போது அவர்கள் தடுமாற்றம் அடைகின்றனர்.

இயேசு பேதுருவிடம் வந்த போது, அவன் எதிர்ப்பு தெரிவிக்கிறான்: “நீர் ஒருக்காலும் என் கால்களைக் கழுவப்படாது.”

“நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை” என்று இயேசு சொல்கிறார்.

“ஆண்டவரே, என் கால்களை மாத்திரமல்ல, என் கைகளையும் என் தலையையும்கூடக் கழுவ வேண்டும்” என்று பேதுரு பிரதிபலிக்கிறான்.

“முழுகினவன் தன் கால்களை மாத்திரம் கழுவவேண்டியதாயிருக்கும், மற்றப்படி அவன் முழுவதும் சுத்தமாயிருக்கிறான்; நீங்களும் சுத்தமாயிருக்கிறீர்கள், ஆகிலும் எல்லாரும் அல்ல” என்று இயேசு பதிலளிக்கிறார். யூதாஸ்காரியோத்து அவரைக் காட்டி கொடுப்பதற்கு திட்டமிட்டிருப்பதை அவர் அறிந்திருப்பதால் அவர் இதை சொல்கிறார்.

தம்மை காட்டிக்கொடுக்கப்போகிறவனாகிய யூதாஸ் உட்பட 12 பேரின் கால்களையும் இயேசு கழுவின பின்பு, தம் மேல் வஸ்திரங்களைப் போட்டுக் கொண்டு, மறுபடியும் மேஜையில் உட்காருகிறார். பின்பு அவர் இவ்வாறு கேட்கிறார்: “நான் உங்களுக்குச் செய்ததை அறிந்திருக்கிறீர்களா? நீங்கள் என்னைப் போதகரென்றும், ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள், நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர் தான். ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால் நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள். நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன். மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்ல, அனுப்பப்பட்டவன் தன்னை அனுப்பினவரிலும் பெரியவனல்ல. நீங்கள் இவைகளை அறிந்திருக்கிறபடியினால், இவைகளைச் செய்வீர்களானால், பாக்கியவான்களாயிருப்பீர்கள்.”

மனத்தாழ்மையான சேவைக்கு என்னே ஓர் அழகான பாடம்! தாங்கள் அதிக முக்கியமானவர்கள் என்று எண்ணிக்கொண்டு மற்றவர்கள் எப்போதும் தங்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று அப்போஸ்தலர்கள் முதலிடத்தை நாடிக்கொண்டிருக்கக்கூடாது. இயேசு வைத்த மாதிரியை அவர்கள் பின்பற்ற வேண்டும். இது ஆசாரமுறைப்படியான கால் கழுவுதல் அல்ல, வேலை எவ்வளவு கீழ்த்தரமானதாகவோ அல்லது விருப்பமில்லாததாகவோ இருந்தாலும் பட்சபாதமின்றி சேவை செய்வதற்கு மனவிருப்பமுள்ளவர்களாயிருக்க செய்யப்படும் ஒன்று. மத்தேயு 26:20, 21; மாற்கு 14:17, 18; லூக்கா 22:14–18; 7:44; யோவான் 13:1–17.

▪ பஸ்காவை கொண்டாடுவதற்கு பட்டணத்துக்குள் நுழைகையில் எருசலேமை இயேசு கண்டதில் எது தனித்தன்மை வாய்ந்ததாய் இருக்கிறது?

▪ பஸ்காவின் போது, ஸ்தோத்திரம் சொன்ன பிறகு, என்ன கோப்பையை இயேசு 12 அப்போஸ்தலர்களுக்கு அனுப்புகிறார்?

▪ இயேசு பூமியில் இருக்கையில், விருந்தினர்களுக்கு என்ன தனிப்பட்ட சேவை வழக்கமாக செய்யப்பட்டது, இயேசு மற்றும் அப்போஸ்தலர்களால் கொண்டாடப்பட்ட பஸ்காவின் போது, அது ஏன் செய்யப்படவில்லை?

▪ தம்முடைய அப்போஸ்தலர்களின் கால்களைக் கழுவிய அந்தத் தாழ்ந்த சேவையை இயேசு செய்ததன் நோக்கம் என்னவாயிருந்தது?