Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கண்ணீர் ஆனந்தப்பரவசமாக மாறியது

கண்ணீர் ஆனந்தப்பரவசமாக மாறியது

அதிகாரம் 47

கண்ணீர் ஆனந்தப்பரவசமாக மாறியது

இரத்தப்போக்குள்ள ஸ்திரீ குணமடைந்ததை யவீரு கண்டபோது இயேசுவின் அற்புத சக்திகளில் அவன் கொண்டிருந்த நம்பிக்கை சந்தேகமின்றி அதிகரிக்கிறது. அந்த நாளின் முற்பகுதியில், மரணத்தை நெருங்கி கிடந்த, 12 வயதான தன் அருமை மகளுக்கு உதவ வரும்படி யவீருவால் இயேசு அழைக்கப்பட்டிருந்தார். ஆனாலும், இதற்கிடையில், யவீரு எதற்காக அதிகம் பயப்படுகிறானோ அது நேரிடுகிறது. ஸ்திரீயிடம் இயேசு இன்னும் பேசிக் கொண்டிருக்கும்போது, சில ஆட்கள் வந்து அமைதியாக யவீருவிடம் சொல்லுகிறார்கள்: “உங்கள் மகள் இறந்துவிட்டாள்! ஏன் போதகரை இன்னும் தொந்தரவு செய்யவேண்டும்?”

எவ்வளவு துக்கமளிக்கும் செய்தியாக உள்ளது! சற்று யோசியுங்கள்: சமூகத்தில் அதிக மரியாதையைப் பெற்ற இந்த மனிதன், இப்பொழுது அவரது மகளின் மரணத்தைப்பற்றி அறிந்து முழுவதும் உதவியற்றவராக இருக்கிறார். என்றாலும், இயேசு உரையாடலை கேட்டுவிடுகிறார். ஆகவே, யவீருவிடம் திரும்பி, உற்சாகமளிக்கும் வகையில் கூறுகிறார்: “பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு.”

இயேசு அந்தத் துயரம் மிகுந்த மனிதனுடன்கூட அவன் வீட்டிற்கு திரும்புகிறார். அவர்கள் வந்து சேர்ந்தபோது, அதிக குழப்பத்தையும், அழுகையையும் கூக்குரலையும் காண்கிறார்கள். ஜனக்கூட்டமொன்று கூடியுள்ளது. மேலும், அவர்கள் தங்களைத் தாங்களே துயரத்தில் அடித்துக்கொள்கிறார்கள். இயேசு உள்ளே அடியெடுத்து வைத்தவுடன் கேட்கிறார்: “நீங்கள் சந்தடிபண்ணி அழுகிறதென்ன? பிள்ளை மரிக்கவில்லை, நித்திரையாயிருக்கிறாள்.”

இதைக் கேட்டவுடன், அந்த ஜனங்கள் ஏளனமாக இயேசுவை பார்த்து நகைக்க ஆரம்பித்தார்கள்; ஏனென்றால் அந்தச் சிறுமி உண்மையாகவே மரித்திருந்தாளென்று அவர்கள் அறிந்திருந்தார்கள். ஆழ்ந்த தூக்கத்திலிருந்து எவ்வாறு எழுப்ப முடியுமோ அவ்வாறே மரணத்திலிருந்து, அவருக்குக் கடவுளால் கொடுக்கப்பட்ட வல்லமைகளால், ஆட்களை மரணத்திலிருந்து உயிருடன் திரும்பி கொண்டுவரமுடியும் என்பதைக் காட்டுவதற்கே, இயேசு இவ்வாறு அவள் தூங்கிக்கொண்டுதான் இருக்கிறாள் என்றார்.

இயேசு இப்போது பேதுரு, யாக்கோபு, யோவான், மற்றும் மரித்த பெண்ணின் தாயையும் தந்தையையும் தவிர மற்ற எல்லாரையும் வெளியே அனுப்பிவிடுகிறார். பிறகு இந்த ஐவரையும் அழைத்துக்கொண்டு அந்த இளம்பெண் படுத்திருந்த இடத்திற்குள் பிரவேசிக்கிறார். அவள் கையைப் பற்றிக்கொண்டு இயேசு கூறுகிறார்:தலீத்தாகூமி,” இதன் மொழிபெயர்க்கப்பட்ட அர்த்தம்: “சிறுபெண்ணே எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன்.” மேலும், உடனே அந்தப் பெண் எழுந்து நடக்க ஆரம்பிக்கிறாள்! இந்தக் காட்சி அவளுடைய பெற்றோரை ஆனந்தப்பரவசத்தால் அனைத்தையும் மறக்கச் செய்கிறது.

பிள்ளைக்கு சாப்பிட ஏதேனும் கொடுக்கும்படி சொல்லிய பிறகு, இயேசு யவீருவிடமும் அவன் மனைவியிடமும் என்ன நடந்ததென்று யாரிடமும் சொல்லவேண்டாம் என்று ஆணையிட்டார். ஆனால் இயேசு சொல்லியும்கூட, அதைப் பற்றிய பேச்சு அந்தப் பகுதி முழுவதும் பரவுகிறது. இது இயேசு செய்த இரண்டாம் உயிர்த்தெழுதலாகும். மத்தேயு 9:18-26; மாற்கு 5:35-43; லூக்கா 8:41-56.

▪ என்ன செய்தியை யவீரு பெறுகிறான்? இயேசு எப்படி அவனை உற்சாகப்படுத்துகிறார்?

▪ அவர்கள் யவீருவின் வீட்டிற்கு வந்துசேர்ந்தபோது அங்கு என்ன நிலைமை இருக்கிறது?

▪ மரித்த பிள்ளை தூங்கிக் கொண்டுதான் இருக்கிறாள் என்று இயேசு ஏன் கூறுகிறார்?

▪ உயிர்த்தெழுதலைப் பார்த்த, இயேசுவுடன் இருந்த அந்த ஐவர் யார்?