Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கப்பர்நகூமில் கூடுதலான அற்புதங்கள்

கப்பர்நகூமில் கூடுதலான அற்புதங்கள்

அதிகாரம் 23

கப்பர்நகூமில் கூடுதலான அற்புதங்கள்

இயேசு தம்முடைய முதல் நான்கு சீஷர்களை—பேதுரு, அந்திரேயா, யாக்கோபு மற்றும் யோவானை—தம்மைப் பின்பற்றி வரும்படியாக அழைத்த பின்னர் ஓய்வுநாளில், அவர்கள் அனைவரும் கப்பர்நகூமிலிருந்த ஜெப ஆலயத்துக்குப் போகிறார்கள். இயேசு அங்கே போதிக்கத் தொடங்குகிறார். அவர் வேதபாரகரைப் போலப் போதியாமல், அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தப்படியால் ஜனங்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.

இந்த ஓய்வுநாளில் அசுத்த ஆவியுள்ள ஒரு மனுஷன் இருக்கிறான். சிறிது நேரத்துக்குப் பின்பு அவன் உரத்த சத்தமாக: “நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக் கெடுக்கவா வந்தீர்? உம்மை இன்னார் என்று அறிவேன், நீர் தேவனுடைய பரிசுத்தர்” என்று சொல்கிறான்.

அந்த மனிதனைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தது உண்மையில் சாத்தானின் தூதர்களில் ஒருவனே. இயேசு பிசாசை அதட்டி, “நீ பேசாமல் இவனை விட்டுப் புறப்பட்டுப் போ” என்கிறார்.

உடனே அந்த அசுத்த ஆவி அவனை அலைக்கழித்து, மிகுந்த சத்தமிடுகிறது. ஆனால் அவனுக்கு ஒரு சேதமுஞ் செய்யாமல் அவனை விட்டுப் போய்விடுகிறது. எல்லாரும் ஆச்சரியப்படுகிறார்கள்! “இது என்ன?” என்று அவர்கள் கேட்கிறார்கள். ‘இவர் அதிகாரத்தோடே அசுத்த ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார், அவைகள் இவருக்குக் கீழ்ப்படிகிறதே’ என்கிறார்கள். இந்தச் செய்தி சுற்றுப்புறப் பகுதிகளுக்கு பரவுகிறது.

ஜெப ஆலயத்தை விட்டுப் புறப்பட்டு இயேசுவும் அவருடைய சீஷர்களும், சீமோனின் அதாவது பேதுருவின் வீட்டுக்குப் போகிறார்கள். அங்கே பேதுருவின் மாமி கடும் ஜுரத்தில் வியாதியாய் கிடக்கிறாள். ‘தயவுசெய்து அவளுக்கு உதவுங்கள்’ என்று அவர்கள் அவரை வேண்டிக்கொள்கிறார்கள். இயேசு அவளிடத்துக்குப் போய், கையிலே தூக்கி அவளை எழுந்திருக்கச் செய்கிறார். உடனே அவள் குணமடைந்து அவர்களுக்கு உணவு தயாரிக்க ஆரம்பிக்கிறாள்!

பின்னால் சூரியன் அஸ்தமனமானபோது, எல்லா இடங்களிலிருந்தும் ஆட்கள் சகல பிணியாளிகளையும் அழைத்துக்கொண்டு பேதுருவின் வீட்டுக்கு வர ஆரம்பிக்கிறார்கள். சீக்கிரத்தில் பட்டணத்தார் எல்லாரும் வீட்டு வாசலுக்கு முன்பாக கூடிவிடுகிறார்கள்! அவர்களுடைய வியாதிகள் என்னவாக இருந்தபோதிலும் இயேசு சகல பிணியாளிகளையும் சொஸ்தமாக்கிவிடுகிறார். பிசாசுகளையும் துரத்திவிடுகிறார். அவர் விரட்டிய பிசாசுகள் அவர்களைவிட்டு வெளியே வருகையில், “நீர் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்று சத்தமிடுகின்றன. ஆனால் அவரை கிறிஸ்து என்று பிசாசுகள் அறிந்திருந்தபடியால் அவர் அவைகளைப் பேசவொட்டாமல் அதட்டுகிறார். மாற்கு 1:21-34; லூக்கா 4:31-41; மத்தேயு 8:14-17.

▪ இயேசு தம்முடைய நான்கு சீஷர்களையும் அழைத்தப் பின்பு, ஓய்வு நாளில் ஜெப ஆலயத்திலே என்ன நடக்கிறது?

▪ ஜெப ஆலயத்தை விட்டுப் புறப்பட்டு இயேசு எங்கே போகிறார்? அங்கே என்ன அற்புதத்தை அவர் நடப்பிக்கிறார்?

▪ பின்னால் அதே நாளில் மாலையில் என்ன சம்பவிக்கிறது?