Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கப்பர்நகூமுக்குத் திரும்பினார்

கப்பர்நகூமுக்குத் திரும்பினார்

அதிகாரம் 26

கப்பர்நகூமுக்குத் திரும்பினார்

இயேசுவின் புகழ் தூர இடங்களுக்கும் பரவிவிட்டிருந்தது. அநேக மக்கள் அவர் தங்கியிருக்கும் இடத்திற்கே பயணம் செய்கிறார்கள். என்றாலும் சில நாட்களுக்குப் பிறகு அவர் கலிலேயா கடல் வழியாய் கப்பர்நகூமுக்குத் திரும்புகிறார். அவர் வீடு திரும்பிவிட்டார் என்ற செய்தி பட்டணம் முழுவதும் வேகமாக பரவுகிறது, அநேகர் அவர் இருக்கும் வீட்டிற்கு வருகிறார்கள். எருசலேம் போன்ற தூர இடங்களிலிருந்து பரிசேயர்களும் வேதபாரகரும் வருகிறார்கள்.

கூட்டம் அவ்வளவு அதிகமாக இருந்ததால் எவரும் அறைக்குள் செல்ல முடியாதளவுக்கு வாசலில் ஒரே நெரிசல். உண்மையிலேயே ஆச்சரியமான ஒரு சம்பவத்திற்காக எல்லாம் தயாராக இருக்கிறது. இந்தச் சமயத்தில் என்ன நடக்கிறது என்பது அதிக முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனென்றால் மானிட துயரத்திற்குக் காரணமாயிருப்பவற்றை நீக்கிப்போடுவதற்கும், தாம் விரும்பும் யாவருக்கும் நல்ல சுகத்தை மீண்டும் கொடுப்பதற்குமான சக்தி இயேசுவுக்கு இருக்கிறது என்பதை நாம் போற்றுவதற்கு உதவி செய்கிறது.

கூடிவந்திருந்த அந்தக் கூட்டத்தாருக்கு இயேசு போதித்துக்கொண்டிருக்கும்போது, நான்கு பேர் ஒரு திமிர்வாதக்காரனை அவனுடைய படுக்கையோடு தூக்கிக்கொண்டு வருகிறார்கள். தங்களுடைய நண்பனை இயேசு சுகப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறார்கள், ஆனால் கூட்டத்தின் நெரிசலால் அவர்கள் உள்ளே பிரவேசிக்க முடியவில்லை. ஒரே ஏமாற்றம்! இருந்தாலும் அவர்கள் விட்டுவிடவில்லை. அவர்கள் தட்டையான கூரை மீது ஏறி, ஒரு திறப்பு உண்டாக்கி அந்தத் திமிர்வாதக்காரனை படுக்கையோடு இயேசுவுக்குப் பக்கத்தில் இறக்கினார்கள்.

இவர்கள் குறுக்கிட்டதற்காக இயேசு கோபப்படுகிறாரா? இல்லவே இல்லை! மாறாக, அவர்களுடைய விசுவாசம் அவரை அதிகமாகக் கவர்ந்தது. அந்தத் திமிர்வாதக்காரனிடம், “உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது,” என்கிறார். ஆனால் இயேசு உண்மையிலேயே பாவங்களை மன்னிக்க முடியுமா? முடியாது என்றுதான் வேதபாரகரும் பரிசேயரும் நினைக்கிறார்கள். “இவன் இப்படித் தேவதூஷணம் சொல்லுகிறதென்ன? தேவன் ஒருவரேயன்றிப் பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார்,” என்று தங்கள் இருதயங்களில் யோசிக்கிறார்கள்.

அவர்களுடைய நினைவுகளை அறிந்தவராக இயேசு அவர்களிடம், “நீங்கள் உங்கள் இருதயங்களில் இப்படிச் சிந்திக்கிறதென்ன? உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, எழுந்து நடவென்று சொல்வதோ, எது எளிது?” என்று கேட்கிறார்.

பூமியில் பாவங்களை மன்னிப்பதற்கு அவருக்கு அதிகாரம் இருக்கிறது என்பதையும் அவர் எக்காலத்தில் வாழ்ந்தோரிலும் உண்மையிலேயே மிகப் பெரிய மனிதர் என்பதையும் வெளிக்காட்டும் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியை தம்மைக் குறைகாண்பவர்கள் உட்பட ஜனக்கூட்டத்தார் அனைவரும் காணும்படி இயேசு அனுமதிக்கிறார். இயேசு அந்தத் திமிர்வாதக்காரனிடம் திரும்பி, “நீ எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ,” என்கிறார். அவன் உடனே அப்படிச் செய்கிறான், எல்லாருக்கும் முன்பாக அவன் தன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடக்கிறான்! ஆச்சரியமடைந்த அந்த ஆட்கள், “நாம் ஒருக்காலும் இப்படிக் கண்டதில்லை!” என்று சொல்லி தேவனை மகிமைப்படுத்தினார்கள்.

இயேசு பாவங்களை வியாதியோடு சம்பந்தப்படுத்தி பேசுவதையும் பாவங்கள் மன்னிக்கப்படுவது சரீர சுகமடைவதுடன் சம்பந்தப்பட்டிருப்பதையும் நீங்கள் கவனித்தீர்களா? முதல் பெற்றோராயிருந்த ஆதாம் பாவம் செய்தான் என்றும், அந்தப் பாவத்தின் பலனாகிய வியாதியையும் மரணத்தையும் நாம் எல்லாருமே சுதந்தரித்திருக்கிறோம் என்றும் பைபிள் விளக்குகிறது. ஆனால் கடவுளுடைய ராஜ்ய ஆட்சியின் கீழ் கடவுளை நேசித்து அவரை சேவிக்கும் எல்லாருடைய பாவங்களையும் இயேசு மன்னித்திடுவார், பின்பு எல்லா வியாதிகளும் நீக்கப்பட்டுவிடும். அது எவ்வளவு நன்றாக இருக்கும்! மாற்கு 2:1-12; லூக்கா 5:17-26; மத்தேயு 9:1-8; ரோமர் 5:12, 17-19.

▪ உண்மையிலேயே குறிப்பிடத்தக்க ஒரு சம்பவம் நடைபெறுவதற்கான சூழ்நிலை என்னவாக இருந்தது?

▪ திமிர்வாதக்காரன் இயேசுவிடம் எப்படி வந்துசேர்ந்தான்?

▪ நாம் எல்லாருமே ஏன் பாவிகளாயிருக்கிறோம்? ஆனால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதும் பரிபூரண சுகத்தை அடைவதும் கூடிய காரியம் என்ற நம்பிக்கையை இயேசு எப்படி அளித்தார்?