Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கலிலேயாவில் மற்றொரு பிரசங்கிப்பு பயணம்

கலிலேயாவில் மற்றொரு பிரசங்கிப்பு பயணம்

அதிகாரம் 49

கலிலேயாவில் மற்றொரு பிரசங்கிப்பு பயணம்

இயேசு தம்முடைய தீவிரமான இரண்டு வருட பிரசங்கிப்புக்குப் பின், காரியங்களை அப்படியே விட்டுவிட்டு வேலையை தளர்த்திக் கொள்வாரா? அதற்கு மாறாக, அவர் தம்முடைய போதிக்கும் வேலையை இன்னும் விரிவாக்குவதற்காக மூன்றாவது முறை பிரயாணம் செய்து கலிலேயாவிற்கு வருகிறார். அவர் அந்தப் பிராந்தியத்தில் இருக்கும் நகரங்கள், கிராமங்களுக்கு விஜயம் செய்து, தேவாலயங்களில் கற்பித்து, ராஜ்யத்தின் நற்செய்தியை பிரசங்கித்து வருகிறார். இந்தப் பிரயாணத்தின்போது இயேசு கவனித்த நிலைமைகள், அவரை மேலும் தீவிரமாக பிரசங்க ஊழியத்தை செய்யும்படியான தேவையை வற்புறுத்துகிறது.

இயேசு எங்கெல்லாம் சென்றாரோ அங்கெல்லாம் மக்கள் ஆவிக்குரிய சுகத்தையும் ஆறுதலையும் பெறுவதற்கான தேவையோடு இருப்பதை கவனிக்கிறார். அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போலத் தொய்ந்து போனவர்களும், சிதறப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகுகிறார். தம்முடைய சீஷர்களை நோக்கி, “அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆதலால் அறுப்புக்கு எஜமானன் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றார்.”

இயேசு ஒரு செயல் முறையான திட்டத்தை வைத்திருந்தார். அவர் ஏறக்குறைய ஓராண்டுக்கு முன்னால் தேர்ந்தெடுத்த தம்முடைய 12 அப்போஸ்தலர்களையும் வரவழைக்கிறார். அவர்களை இரண்டிரண்டு பேராக பிரித்து, போதனை செய்யும் ஆறு அணிகளாக தொகுத்து பின்வரும் காரியங்களை அவர்களுக்கு கட்டளையாக கொடுக்கிறார். அவர் விளக்குகிறார்: “நீங்கள் புறஜாதியார் நாடுகளுக்குப் போகாமலும் சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும், காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள். போகையில், பரலோக ராஜ்யம் சமீபத்திருக்கிறது என்று பிரசங்கியுங்கள்” என்றார்.

அவர்கள் பிரசங்கிக்க வேண்டிய அந்த ராஜ்யம் இயேசு மாதிரி ஜெபத்தில் அவர்கள் ஜெபிக்க வேண்டும் என்று கற்றுக்கொடுத்த அந்த ராஜ்யமே. அந்த ராஜ்யம் சமீபமாயிருக்கிறது என்பது, கடவுளின் முன்குறிக்கப்பட்ட ராஜாவாக இயேசு கிறிஸ்து அவர்கள் மத்தியில் பிரசன்னமாக இருப்பதை அது குறிப்பிடுகிறது. அந்த மீமானிட அரசாங்கத்தின் நற்சாட்சி பெற்ற பிரதிநிதிகளாக தம்முடைய சீஷர்கள் இருப்பதை உறுதி செய்வதற்காக பிணியாளிகளை சுகப்படுத்தவும், மரித்தவர்களையும்கூட உயிரோடு எழுப்பும் வல்லமையை இயேசு அவர்களுக்கு கொடுக்கிறார். இவ்விதமான சேவைகளை இலவசமாக செய்யும்படி கட்டளை கொடுக்கிறார்.

அடுத்ததாக இயேசு தம்முடைய சீஷர்கள் போதிக்கும் பயணத்தை மேற்கொள்ளும்பொழுது பொருள் சம்பந்தமான முன்தயாரிப்புகளைக் கொண்டிருக்கலாகாது என்று கூறுகிறார். “உங்கள் கச்சைகளில் பொன்னையாவது வெள்ளியையாவது செம்பையாவது, வழிக்காகப் பையையாவது, இரண்டு அங்கிகளையாவது, பாதரட்சைகளையாவது, தடியையாவது தேடிவைக்க வேண்டாம்; வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்.” செய்தியை போற்றுபவர்கள் அதற்கு பிரதிபலித்து ஆகாரத்தையும், தங்குவதற்கு வீட்டையும் கொடுப்பார்கள். இயேசு “எந்தப் பட்டணத்திலாவது கிராமத்திலாவது நீங்கள் பிரவேசிக்கும்போது, அதிலே பாத்திரமானவன் யாரென்று விசாரித்து, நீங்கள் புறப்படுமளவும் அவனிடத்தில் தங்கியிருங்கள்” என்கிறார்.

பிறகு ராஜ்ய செய்தியோடு வீட்டுக்காரர்களை எவ்வாறு அணுகவேண்டும் என்பதற்கான சில கட்டளைகளை கொடுக்கிறார். “ஒரு வீட்டிற்குள் பிரவேசிக்கும்போது அதை வாழ்த்துங்கள். அந்த வீடு பாத்திரமாயிருந்தால், நீங்கள் கூறின சமாதானம் அவர்கள் மேல் வரக்கடவது; அபாத்திரமாயிருந்தால் நீங்கள் கூறின சமாதானம் உங்களிடத்தில் திரும்பக்கடவது. எவனாகிலும் உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்கள் வார்த்தைகளைக் கேளாமலும்போனால், அந்த வீட்டையாவது பட்டணத்தையாவது விட்டுப் புறப்படும்போது, உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள்.”

அவர்களுடைய செய்தியைப் புறக்கணிக்கும் நகரத்தின் மீது வரும் நியாயத்தீர்ப்பு உண்மையிலேயே கடுமையாக இருக்கும் என்று இயேசு வெளிப்படுத்துகிறார். அவர் விளக்குகிறார்: “நியாயத்தீர்ப்பு நாளிலே அந்தப் பட்டணத்திற்கு நேரிடுவதைப் பார்க்கிலும் சோதோம் கொமோரா நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்கிறார். மத்தேயு 9:35–10:15; மாற்கு 6:6-12; லூக்கா 9:1-5.

▪ இயேசு எப்பொழுது மூன்றாவது கலிலேய பயணத்தை ஆரம்பிக்கிறார்? எதைக் குறித்து இந்தப் பயணம் அவருக்கு உறுதி செய்கிறது?

▪ தம்முடைய 12 அப்போஸ்தலர்களை பிரசங்கிப்பதற்கு அனுப்பும் போது என்ன கட்டளைகளை அவர் அவர்களுக்குக் கொடுக்கிறார்?

▪ தேவனுடைய ராஜ்யம் அருகாமையில் இருக்கிறது என்று சீஷர்கள் போதிப்பது ஏன் சரியானதாக இருக்கிறது?