Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கழுமரத்தில் வாதனை

கழுமரத்தில் வாதனை

அதிகாரம் 125

கழுமரத்தில் வாதனை

இயேசுவோடுகூட இரண்டு கள்ளர்கள் கொலை செய்யப்படுவதற்கு கொண்டு போகப்படுகின்றனர். நகரத்துக்கு அருகாமையில் கபாலஸ்தலம் அல்லது கொல்கொதா என்றழைக்கப்படும் இடத்தில் ஊர்வலம் ஒரு நிறுத்தத்துக்கு வருகிறது.

கைதிகளின் வஸ்திரங்கள் கழற்றப்படுகின்றன. வெள்ளைப்போளம் கலந்த திராட்சரசம் கொடுக்கப்படுகிறது. எருசலேமின் பெண்களால் இது தயாரிக்கப்பட்டிருக்கிறது, மரத்தில் அறையப்பட்டவர்களுக்கு இந்த வலியை தணிக்கும் மருந்து கலவையை கொடுப்பதற்கு ரோமர்கள் மறுப்பதில்லை. என்றபோதிலும், இயேசு அதை ருசிபார்த்தபோது, அவர் குடிப்பதற்கு மறுக்கிறார். ஏன்? அவருடைய விசுவாசத்திற்கு உச்சக்கட்டமான இந்தப் பரீட்சையின் போது தம்முடைய எல்லா மன வல்லமைகளையும் முழுவதுமாக தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க அவர் விரும்புகிறார்.

இயேசு இப்போது கழுமரத்தின் மேல் கிடத்தப்பட்டு அவருடைய கைகள் அவருடைய தலைக்கு மேலாக வைக்கப்படுகின்றன. அடுத்து போர்ச்சேவகர்கள் அவருடைய கைகளுக்குள்ளும், அவருடைய கால்களுக்குள்ளும் பெரிய ஆணிகளை அடிக்கின்றனர். அந்த ஆணிகள் அவருடைய மாம்சத்துக்குள்ளும் தசைநார்களுக்குள்ளும் குத்தி ஊடுருவிச் செல்கையில் அவர் வலியால் துடிக்கிறார். கழுமரம் செங்குத்தாக உயர்த்தப்படும் போது, உடலின் பாரம் நக புண்களில் கிழிப்பதால் வலி கடும் வேதனையை தருகிறது. என்றபோதிலும், பயமுறுத்துவதற்குப் பதிலாக, இயேசு ரோம போர்ச்சேவகருக்காக ஜெபிக்கிறார்: “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே.”

பிலாத்து கழுமரத்தின் மேல் ஓர் அறிவிப்புக்குறியை எழுதி வைத்திருக்கிறான். அது இவ்வாறு வாசிக்கிறது: “நசரேயனாகிய இயேசு யூதருடைய ராஜா.” இயேசுவுக்கு மரியாதை கொடுப்பதனால் மட்டும் இதை எழுதாமல், இயேசுவுக்கு மரணதண்டனையை யூத ஆசாரியர்கள் தன்னை அச்சுறுத்தி பெற்றுக்கொண்டதற்காக தன் வெறுப்பைக் காட்டவும் இதை எழுதுகிறான். எல்லாரும் அந்த அறிவிப்புக்குறியை வாசிப்பதற்காக பிலாத்து—எபிரெயு, அதிகாரப்பூர்வமான மொழியான லத்தீன், சாதாரண கிரேக்கு—ஆகிய மூன்று மொழிகளில் அதை எழுதி வைக்கிறான்.

காய்பாவும் அன்னாவும் உட்பட பிரதான ஆசாரியர்கள் கலக்கமடைகின்றனர். இந்த நேரடியான அறிவிப்பு அவர்களுடைய வெற்றிக்களிப்பு நேரத்தை கெடுத்து விடுகிறது. ஆகையால் அவர்கள் எதிர்க்கின்றனர்: “யூதருடைய ராஜா என்று நீர் எழுதாமல், தான் யூதருடைய ராஜா என்று அவன் சொன்னதாக எழுதும்.” ஆசாரியர்களிடம் அடகு வைக்கப்பட்டவரைப் போல் சேவித்ததினால் சினமடைந்து, பிலாத்து வெறுப்புடன் இவ்வாறு உறுதியாக கூறுகிறான்: “நான் எழுதினது எழுதினதே.”

கொலைசெய்யப்படும் இடத்தில் ஆசாரியர்கள் ஒரு பெரிய ஜனக்கூட்டத்தோடு இப்போது கூடுகின்றனர், ஆசாரியர்கள் அறிவிப்புக்குறியின் அத்தாட்சியை மறுத்து வாதாடுகின்றனர். நியாயசங்க விசாரணைகளின் போது இதற்கு முன்பு கொடுத்த அதே பொய் அத்தாட்சியை அவர்கள் திரும்பவும் சொல்கின்றனர். ஆகையால், அந்த வழியாய் நடந்துபோகிறவர்கள் பழிதூற்ற ஆரம்பிப்பது ஆச்சரியப்படுவதற்கில்லை, தங்கள் தலைகளை ஏளனமாகத் துலுக்கி இவ்வாறு சொல்கின்றனர்: “தேவாலயத்தை இடித்து, மூன்று நாளைக்குள்ளே கட்டுகிறவனே, உன்னை நீயே ரட்சித்துக் கொள்; நீ தேவனுடைய குமாரனானால் சிலுவையிலிருந்து [கழுமரத்திலிருந்து, NW] இறங்கி வா.”

“மற்றவர்களை ரட்சித்தான்; தன்னைத்தான் ரட்சித்துக் கொள்ளத் திராணியில்லை” என்று பிரதான ஆசாரியர்களும் அவர்களுடைய நெருங்கிய மத நண்பர்களும் உடன் சேர்ந்து சொல்கின்றனர். “இவன் இஸ்ரவேலின் ராஜாவானால் இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும், அப்பொழுது இவனை விசுவாசிப்போம். தன்னைத் தேவனுடைய குமாரனென்று சொல்லி, தேவன் மேல் நம்பிக்கையாயிருந்தானே; அவர் இவன் மேல் பிரியமாயிருந்தால் இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும்.”

இப்படிப்பட்ட சூழ்நிலைமைகளின் கீழ் போர்ச்சேவகரும்கூட இயேசுவை கேலி செய்கின்றனர். அவர்கள் அவருக்கு ஏளனமாக காடியைக் கொடுக்கின்றனர், அவருடைய வறண்ட உதடுகளுக்கு சற்று கீழே அதை பிடித்துக்கொண்டு, “நீ யூதரின் ராஜாவானால், உன்னை இரட்சித்துக்கொள்” என்று அவர்கள் பரியாசம் பண்ணுகின்றனர். கள்ளர்களும்கூட—இயேசுவின் வலது பக்கத்தில் அறையப்பட்டிருப்பவனும், இடது பக்கத்தில் இருக்கும் மற்றொருவனும்—அவரை கேலி செய்கின்றனர். அதை நினைத்துப் பாருங்கள்! எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர், ஆம், எல்லா காரியங்களையும் சிருஷ்டிப்பதில் யெகோவா தேவனோடு பங்கு கொண்ட ஒருவர், இந்த எல்லா பழிதூற்றுதல்களையும் மனஉறுதியுடன் சகிக்கிறார்!

போர்ச்சேவகர்கள் இயேசுவின் மேல் வஸ்திரங்களை எடுத்து அவைகளை நான்கு பாகங்களாகப் பிரிக்கின்றனர். இவைகள் யாருடையதாகும் என்பதைக் காண அவர்கள் சீட்டுப் போடுகின்றனர். தையலில்லாமல் இருந்த அங்கி உயர்ந்த ரகமானதாயிருக்கிறது. ஆகையால் போர்ச்சேவகர் ஒருவரோடொருவர் இவ்வாறு பேசிக் கொள்கின்றனர்: “இதை நாம் கிழியாமல், யாருக்கு வருமோ என்று இதைக் குறித்துச் சீட்டுப் போடுவோம்.” ஆக அவர்கள் அறியாமலேயே பின்வரும் வசனத்தை நிறைவேற்றுகின்றனர்: “என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின் மேல் சீட்டுப் போட்டார்கள்.”

சிறிது நேரத்துக்குப் பிறகு, இயேசு உண்மையிலேயே ஒரு ராஜாவாக இருக்க வேண்டும் என்பதை கள்ளர்களில் ஒருவன் உணர ஆரம்பிக்கிறான். ஆகையால், தன் கூட்டாளியை கண்டித்து இவ்வாறு சொல்கிறான்: “நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா? நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்; நாம் நடப்பித்தவைகளுக்குத் தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே.” அடுத்து அவன் இயேசுவை நோக்கி வேண்டுகோள் செய்கிறான்: “நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்.”

“இன்று நான் உனக்கு மெய்யாகவே சொல்லுகிறேன், நீ என்னுடனே கூடப் பரதீசிலிருப்பாய்” என்று இயேசு பதிலளிக்கிறார். இயேசு பரலோகத்தில் ராஜாவாக ஆட்சி செய்யும் போது இந்த மனந்திரும்பிய கள்ளனை உயிர்த்தெழுப்பி பூமியில் பரதீஸில் வாழும்படி ஜீவனுக்குக் கொண்டு வரும் போது இந்த வாக்கு நிறைவேற்றமடையும். அர்மகெதோனைத் தப்பிப்பிழைப்பவர்களும் அவர்களுடைய கூட்டாளிகளும் இப்பரதீஸைப் பண்படுத்தும் சிலாக்கியத்தைக் கொண்டிருப்பர். மத்தேயு 27:33–44; மாற்கு 15:22–32; லூக்கா 23:27, 32–43, NW; யோவான் 19:17–24.

▪ வெள்ளைப்போளம் கலந்த திராட்சரசத்தைக் குடிப்பதற்கு இயேசு ஏன் மறுக்கிறார்?

▪ இயேசுவின் கழுமரத்தில் ஏன் ஓர் அடையாளக்குறி பதிக்கப்படுகிறது? பிலாத்துவுக்கும் பிரதான ஆசாரியர்களுக்குமிடையே அது என்ன வார்த்தைகளை பரிமாறிக்கொள்ளச் செய்கிறது?

▪ கழுமரத்தில் இருக்கையில் என்ன கூடுதலான பழிதூற்றுதலை இயேசு பெற்றுக்கொள்கிறார்? அதை எது தூண்டுகிறது?

▪ இயேசுவின் வஸ்திரங்களோடு என்ன செய்யப்பட்டது என்பதில் தீர்க்கதரிசனம் எவ்வாறு நிறைவேற்றப்படுகிறது?

▪ கள்ளர்களில் ஒருவன் என்ன மாற்றம் செய்கிறான்? அவனுடைய வேண்டுகோளை இயேசு எவ்வாறு நிறைவேற்றுவார்?