Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

காட்டிக்கொடுக்கப்படுவதும் கைது செய்யப்படுவதும்

காட்டிக்கொடுக்கப்படுவதும் கைது செய்யப்படுவதும்

அதிகாரம் 118

காட்டிக்கொடுக்கப்படுவதும் கைது செய்யப்படுவதும்

யூதாஸ் போர்ச்சேவகரின் கூட்டத்தையும், பிரதான ஆசாரியர்கள், பரிசேயர்கள், மேலும் மற்ற ஆட்களையும் கெத்செமனே தோட்டத்துக்குள் வழிநடத்திச் செல்கையில் அப்போது நேரம் நள்ளிரவையும் கடந்துவிட்டிருக்கிறது. இயேசுவை காட்டிக் கொடுப்பதற்கு 30 வெள்ளிக்காசுகள் யூதாசுக்கு கொடுப்பதாக ஆசாரியர்கள் ஒத்துக்கொண்டிருக்கின்றனர்.

இதற்கு முன்பு யூதாஸ் பஸ்கா போஜனத்திலிருந்து அனுப்பிவிடப்பட்ட போது, அவன் பிரதான ஆசாரியர்களிடம் நேரே சென்றிருக்கிறான். இவர்கள் உடனடியாக தங்கள் சொந்த அலுவலர்களையும், போர்ச்சேவகரின் கூட்டத்தையும் ஒன்றாக கூடிவரச் செய்தனர். இயேசுவும் அவருடைய அப்போஸ்தலர்களும் பஸ்காவை கொண்டாடிய இடத்துக்கு அவர்களை யூதாஸ் முதலில் வழிநடத்திச் சென்றான். அவர்கள் அவ்விடத்தை விட்டு புறப்பட்டு விட்டனர் என்பதை கண்டுபிடித்த போது, ஆயுதங்களை தாங்கிய பெரிய கூட்டம் பந்தங்களையும், தீவட்டிகளையும் எடுத்துக் கொண்டு எருசலேமுக்கு வெளியே கெதரோன் பள்ளத்தாக்கை கடந்து யூதாசை பின்பற்றி சென்றனர்.

ஒலிவ மலையின் மேல் இக்கூட்டத்தை யூதாஸ் வழிநடத்திச் செல்கையில், இயேசுவை எங்கே கண்டுபிடிப்பது என்பதை தான் நிச்சயமாக அறிந்திருப்பதாக உணருகிறான். கடந்த வாரத்தின் போது, இயேசுவும், அப்போஸ்தலர்களும் பெத்தானியாவுக்கும் எருசலேமுக்கும் இடையே பிரயாணம் செய்து கொண்டிருக்கையில், அவர்கள் ஓய்வு எடுப்பதற்கும் சம்பாஷிப்பதற்கும் அடிக்கடி கெத்செமனே தோட்டத்துக்குச் சென்றனர். ஆனால் இப்போது இயேசு ஒலிவ மரங்களுக்கு நடுவே இருட்டில் மறைந்திருந்ததால், போர்ச்சேவகர்கள் அவரை எவ்வாறு அடையாளம் கண்டுபிடிக்க முடியும்? இதற்கு முன்பு அவர்கள் அவரை ஒருபோதும் பார்த்திருக்க மாட்டார்கள். ஆகையால் யூதாஸ் ஓர் அடையாளத்தைக் கொடுக்கிறான்: “நான் எவனை முத்தஞ்செய்வேனோ அவன் தான், அவனைப் பிடித்துப் பத்திரமாய்க் கொண்டு போங்கள்.”

யூதாஸ் அந்தப் பெரிய கூட்டத்தை தோட்டத்துக்குள் வழிநடத்திச் செல்கிறான், இயேசுவை அவருடைய அப்போஸ்தலர்களோடு காண்கிறான், நேரே அவரிடம் செல்கிறான்: “ரபீ, வாழ்க” என்று சொல்லி அவரை மிகவும் பாசத்தோடு முத்தம் செய்கிறான்.

“சிநேகிதனே, என்னத்திற்காக வந்திருக்கிறாய்?” என்று இயேசு கேட்கிறார். பின்பு, தம் சொந்த கேள்விக்கு பதிலளிப்பவராய் அவர் இவ்வாறு சொல்கிறார்: “யூதாசே, முத்தத்தினாலேயா மனுஷகுமாரனைக் காட்டிக் கொடுக்கிறாய்?” தம்மைக் காட்டிக் கொடுப்பவனிடம் இன்னும் பேசவேண்டிய அவசியமில்லை! எரிந்துகொண்டிருக்கும் பந்தங்கள், தீவட்டிகளின் வெளிச்சத்துக்குள் இயேசு சென்று இவ்வாறு கேட்கிறார்: “யாரைத் தேடுகிறீர்கள்?”

“நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம்” என்று பதில் வருகிறது.

அவர்கள் எல்லாருக்கும் முன்பாக தைரியமாக நின்று “நான் தான்” என்று இயேசு பதிலளிக்கிறார். அவருடைய தைரியத்தால் வியப்படைந்து, என்ன எதிர்பார்ப்பது என்று தெரியாமல், அந்த மனிதர்கள் பின்னிட்டுத் தரையிலே விழுகிறார்கள்.

“நான்தானென்று உங்களுக்குச் சொன்னேனே; என்னைத் தேடுகிறதுண்டானால், இவர்களைப் போகவிடுங்கள்” என்று இயேசு அமைதியாக தொடர்ந்து சொல்கிறார். சிறிது நேரத்துக்கு முன்பு மேலறையில் இருக்கையில், அவர் தம் உண்மையுள்ள அப்போஸ்தலர்களை காத்துக்கொண்டதாகவும், “கேட்டின் மகன் தவிர” அவர்களில் ஒருவனையும் இழந்து போகவில்லையென்றும் இயேசு தம் பிதாவிடம் ஜெபத்தில் சொல்லியிருந்தார். ஆகையால், அவருடைய வார்த்தை நிறைவேற்றமடைவதற்காக, அவர் தம்மைப் பின்பற்றுபவர்களை போகவிடும்படியாக கேட்கிறார்.

போர்ச்சேவகர்கள் தங்கள் சுயநிலையை மறுபடியும் அடைந்து, எழுந்து நின்று, இயேசுவை கட்ட ஆரம்பித்த போது, என்ன நடக்கப் போகிறது என்பதை அப்போஸ்தலர்கள் கண்டுணர்கின்றனர். “ஆண்டவரே, பட்டயத்தினாலே வெட்டுவோமா?” என்று அவர்கள் கேட்கின்றனர். இயேசு பதிலளிப்பதற்கு முன்பே பேதுரு, அப்போஸ்தலர்கள் கொண்டு வந்திருக்கும் இரண்டு பட்டயங்களில் ஒன்றை எடுத்து, பிரதான ஆசாரியனின் அடிமையாகிய மல்குஸ் என்பவனை தாக்குகிறான். பேதுருவின் வீச்சு அடிமையின் தலையை தவறுகிறது, ஆனால் அவனுடைய வலது காதை வெட்டுகிறது.

இயேசு குறுக்கிட்டு “இம்மட்டில் நிறுத்துங்கள்” என்று சொல்கிறார். மல்குஸ்-ன் காதைத் தொட்டு அவர் காயத்தை குணமாக்குகிறார். பின்பு அவர் ஒரு முக்கியமான பாடத்தை கற்பிக்கிறார். பேதுருவை நோக்கி இவ்வாறு கட்டளையிடுகிறார்: “உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள். நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டரென்று நினைக்கிறாயா?”

கைது செய்யப்படுவதற்கு இயேசு மனமுள்ளவராய் இருக்கிறார், அதை அவர் இவ்வாறு விளக்குகிறார்: “இவ்விதமாய்ச் சம்பவிக்க வேண்டும் என்கிற வேதவாக்கியங்கள் எப்படி நிறைவேறும்?” பின்பு மேலும் சொல்கிறார்: “பிதா எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் பானம்பண்ணாதிருப்பேனோ?” அவருக்கான கடவுளுடைய சித்தத்தோடு அவர் முற்றிலும் இசைவாய் இருக்கிறார்!

அடுத்து இயேசு கூட்டத்தாரை நோக்கி இவ்வாறு சொல்கிறார்: “கள்ளனைப் பிடிக்கப் புறப்படுகிறது போல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்க வந்தீர்களா?” என்று அவர் கேட்கிறார். “நான் தினந்தோறும் உங்கள் நடுவிலே உட்கார்ந்து தேவாலயத்தில் உபதேசம் பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது, நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே. ஆகிலும் தீர்க்கதரிசிகள் எழுதியிருக்கிற வசனங்கள் நிறைவேறும்படி இவைகளெல்லாம் சம்பவிக்கிறது.”

அப்போது போர்ச்சேவகர் கூட்டமும், போர்ச் சேவகருக்குத் தலைவனும், யூதருடைய அலுவலர்களும் இயேசுவைப் பிடித்து அவரைக் கட்டுகின்றனர். இதைப் பார்த்த போது, அப்போஸ்தலர்கள் இயேசுவை விட்டு ஓடிப்போகிறார்கள். என்றபோதிலும், ஓர் இளம் மனிதன்—அது ஒருவேளை சீஷனாகிய மாற்குவாக இருக்கலாம்—ஜனக்கூட்டத்தார் நடுவே இருக்கிறான். இயேசு பஸ்காவை கொண்டாடின வீட்டில் அவன் ஒருவேளை இருந்திருக்கலாம், அதற்கு பிறகு அங்கிருந்து ஜனக்கூட்டத்தாரை பின்தொடர்ந்து வந்திருக்கிறான். இப்போது, அவன் அடையாளங் கண்டுகொள்ளப்படுகிறான், அவனை பிடிப்பதற்கு முயற்சி எடுக்கப்படுகிறது. ஆனால் அவன் தன் வஸ்திரத்தை போட்டு விட்டு ஓடிப்போகிறான். மத்தேயு 26:47–56; மாற்கு 14:43–52; லூக்கா 22:47–53; யோவான் 17:12; 18:3–12.

▪ இயேசுவை கெத்செமனே தோட்டத்தில் காணமுடியும் என்று யூதாஸ் ஏன் நிச்சயமாக உணருகிறான்?

▪ இயேசு எவ்வாறு தம் அப்போஸ்தலர்களின் பேரில் அக்கறையை வெளிப்படுத்துகிறார்?

▪ இயேசுவை பாதுகாக்க பேதுரு என்ன நடவடிக்கை எடுக்கிறான்? ஆனால் இயேசு அதைக்குறித்து பேதுருவிடம் என்ன சொல்கிறார்?

▪ அவருக்காக கடவுள் வைத்திருக்கும் சித்தத்தோடு தாம் முழுவதும் இணக்கமாய் இருப்பதை இயேசு எவ்வாறு வெளிப்படுத்துகிறார்?

▪ அப்போஸ்தலர்கள் இயேசுவை விட்டுச்சென்ற போது, யார் அங்கு இன்னும் தங்கியிருப்பது? அவனுக்கு என்ன நேரிடுகிறது?