Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

காணாமற்போனதைக் கண்டுபிடித்தல்

காணாமற்போனதைக் கண்டுபிடித்தல்

அதிகாரம் 85

காணாமற்போனதைக் கண்டுபிடித்தல்

தாழ்மையோடு கடவுளை சேவிக்க போகும் ஆட்களை தேடிக் கண்டுபிடிப்பதற்காக இயேசு ஆர்வமுள்ளவராக இருக்கிறார். ஆகையால் அவர் ராஜ்யத்தைப் பற்றி பேர்போன பாவிகள் உட்பட ஒவ்வொருவரையும் தேடி பேசுகிறார். அப்பேர்ப்பட்ட ஆட்கள் அவருக்குச் செவி கொடுப்பதற்காக அவரிடம் இப்பொழுது நெருங்கி வருகின்றனர்.

பரிசேயர்களும் வேதபாரகரும் இதைக் கண்டபோது, தாங்கள் தகுதியற்றவர்கள் என்பதாகக் கருதும் ஜனங்களோடு அவர் கூட்டுறவு கொள்கிறார் என்று இயேசுவை குறைகூறுகின்றனர். அவர்கள் இவ்வாறு முணுமுணுக்கின்றனர்: “இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார்.” அது அவர்களுடைய மதிப்புக்கு எவ்வளவு தாழ்வாக உள்ளது! பரிசேயர்களும் வேதபாரகரும் பொது மக்களை தங்கள் கால்களுக்கு கீழே இருக்கும் அழுக்கைப் போல் நடத்துகின்றனர். உண்மையில், அப்பேர்ப்பட்டவர்களிடமாக அவர்கள் கொண்டிருக்கும் ஏளன இகழ்ச்சியை காண்பிப்பதற்கு அவர்கள் அம்ஹரட்ஸ், “[பூமியின்] தேசத்தின் ஜனங்கள்” என்ற எபிரெய சொற்றொடரை உபயோகப்படுத்துவர்.

மறுபட்சத்தில், இயேசு ஒவ்வொருவரையும் மதிப்போடும், தயவோடும், இரக்கத்தோடும் நடத்துகிறார். இதன் விளைவாக தவறான காரியங்களைப் பழக்கமாக செய்பவர்கள் என்று நன்கு அறியப்பட்டிருக்கும் ஆட்கள் உட்பட இப்பேர்ப்பட்ட தாழ்மையானவர்களில் அநேகர் அவருக்குச் செவிகொடுப்பதற்கு ஆவலுள்ளவர்களாயிருக்கின்றனர். ஆனால் தாங்கள் தகுதியற்றவர்கள் என்பதாக கருதுபவர்களின் சார்பாக இயேசு எடுக்கும் முயற்சிகளைக் குறித்து பரிசேயர்களின் குற்றச்சாட்டைப் பற்றியென்ன?

ஓர் உவமையை உபயோகிப்பதன் மூலம் இயேசு அவர்களுடைய எதிர்ப்புக்கு பதிலளிக்கிறார். அவர்கள் நீதிமான்களாகவும், கடவுளுடைய மந்தைக்குள் பாதுகாப்பாய் இருக்கிறார்கள் என்றும் வெறுக்கத்தக்க அம்ஹரட்ஸ் வழித்தவறிச் சென்று, காணாமற்போன நிலையில் இருக்கின்றனர் என்ற பரிசேயர்களின் சொந்த நோக்குநிலையிலிருந்தே அவர் பேசுகிறார். அவர் கேட்கையில், செவிகொடுத்துக் கேளுங்கள்:

“உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாயிருந்து, அவைகளில் ஒன்று காணாமற் போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலே விட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்குமளவும் தேடித்திரியானோ? கண்டுபிடித்த பின்பு, அவன் சந்தோஷத்தோடே அதைத் தன் தோள்களின் மேல் போட்டுக்கொண்டு, வீட்டுக்கு வந்து, சிநேகிதரையும் அயலகத்தாரையும்கூட வரவழைத்து: காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன் என்னோடு கூடச் சந்தோஷப்படுங்கள் என்பான் அல்லவா?”

பின்பு, இயேசு தம் கதையின் பொருத்தத்தை இவ்வாறு விளக்குகிறார்: “அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக் குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப் பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.”

பரிசேயர்கள் தங்களை நீதிமான்களென்றும், மனந்திரும்புவதற்கான தேவை தங்களுக்கில்லை என்றும் எண்ணிக் கொள்கின்றனர். இரண்டு வருடங்களுக்கு முன்பு, இயேசு வரிவசூலிப்பவர்களோடும், பாவிகளோடும் போஜனம்பண்ணியதற்காக அவர்களில் சிலர் அவரைக் குற்றஞ் சாட்டியபோது, அவர் அவர்களிடம் இவ்வாறு சொன்னார்: “நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன்.” மனந்திரும்புவதற்கான தங்களுடைய தேவையை காணத் தவறும் சுயநீதியுள்ள பரிசேயர்கள் பரலோகத்தில் எந்தச் சந்தோஷத்தையும் கொண்டு வருவதில்லை. ஆனால் உண்மையில் மனந்திரும்பின பாவிகள் சந்தோஷத்தைக் கொண்டுவருகின்றனர்.

காணாமற்போன பாவிகளை திரும்பவும் கொண்டுவருவது அதிக சந்தோஷத்துக்குரிய காரியம் என்ற குறிப்பை இரு மடங்கு உறுதியானதாக ஆக்குவதற்கு இயேசு மற்றொரு உவமையை சொல்கிறார். அவர் சொல்கிறார்: “ஒரு ஸ்திரீ பத்து வெள்ளிக்காசை உடையவளாயிருந்து, அதில் ஒரு வெள்ளிக்காசு காணாமற்போனால், விளக்கைக் கொளுத்தி, வீட்டைப் பெருக்கி, அதைக் கண்டுபிடிக்கிற வரைக்கும் ஜாக்கிரதையாய்த் தேடாமலிருப்பாளோ? கண்டுபிடித்த பின்பு, தன் சிநேகிதிகளையும் அயல்வீட்டுக்காரிகளையும் கூட வரவழைத்து: காணாமற்போன வெள்ளிக் காசைக் கண்டு பிடித்தேன், என்னோடு கூடச் சந்தோஷப்படுங்கள் என்பாள் அல்லவா?”

பின்பு இயேசு அதே போன்ற ஒரு பொருத்தத்தை கொடுக்கிறார். அவர் தொடர்ந்து சொல்கிறார்: “அதுபோல மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் தேவனுடைய தூதருக்கு முன்பாகச் சந்தோஷமுண்டாயிருக்கிறது என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.”

காணாமற்போன பாவிகளை மறுபடியும் மீட்டுக்கொள்வதற்கான கடவுளுடைய தூதர்களின் அன்பான அக்கறை எவ்வளவு குறிப்பிடத்தக்கதாயிருக்கிறது! இதற்கு விசேஷ காரணம், ஒரு சமயம் தாழ்வானவர்களாக, இழிவாகக் கருதப்பட்ட அம்ஹரட்ஸ் இறுதியில் கடவுளுடைய பரலோக ராஜ்யத்தின் அங்கத்தினர்களாக ஆகின்றனர். இதன் விளைவாக, தேவதூதர்களுக்கும் மேலான ஒரு ஸ்தானத்தை பரலோகத்தில் அவர்கள் அடைகின்றனர்! ஆனால் பொறாமை அல்லது புறக்கணிக்கப்பட்டதாக உணர்ச்சி கொள்வதற்கு பதிலாக இப்பேர்ப்பட்ட பாவமுள்ள மானிடர்கள், பரிவிரக்கமுள்ள பரலோக ராஜாக்களாகவும் ஆசாரியர்களாகவும் சேவை செய்வதற்கு அவர்களை தகுதியாக்கியிருக்கும் வாழ்க்கையின் சூழ்நிலைமைகளை எதிர்ப்பட்டு மேற்கொண்டிருக்கின்றனர் என்பதை தேவதூதர்கள் தாழ்மையோடு போற்றுகின்றனர். லூக்கா 15:1–10; மத்தேயு 9:13; 1 கொரிந்தியர் 6:2, 3; வெளிப்படுத்துதல் 20:6.

▪ பேர்போன பாவிகளோடு இயேசு ஏன் கூட்டுறவு கொள்கிறார், பரிசேயர்களிடமிருந்து என்ன குற்றச்சாட்டை அவர் பெறுகிறார்?

▪ பரிசேயர்கள் பொதுமக்களை எவ்வாறு நோக்குகின்றனர்?

▪ என்ன உவமைகளை இயேசு உபயோகிக்கிறார், அவைகளிலிருந்து நாம் என்ன கற்றுக் கொள்ளலாம்?

▪ தேவதூதர்களின் சந்தோஷம் ஏன் குறிப்பிடத்தக்கதாய் இருக்கிறது?