Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

காணாமற்போன ஒரு மகனின் கதை

காணாமற்போன ஒரு மகனின் கதை

அதிகாரம் 86

காணாமற்போன ஒரு மகனின் கதை

காணாமற்போன ஓர் ஆட்டையும் காணாமற்போன ஒரு வெள்ளிக்காசையும் மறுபடியும் கண்டுபிடிப்பதைப் பற்றிய உவமைகளை அப்பொழுதுதான் பரிசேயர்களிடம் சொல்லி முடித்து, இயேசு இப்பொழுது மற்றொரு உவமையை தொடர்ந்து சொல்கிறார். இது ஓர் அன்பான தகப்பனைப் பற்றியும், அவருடைய இரண்டு குமாரர்களை அவர் நடத்தும் விதத்தையும் பற்றியது. அவர்களில் ஒவ்வொருவருக்கும் வினைமையான குறைபாடுகள் இருக்கிறது.

முதலில், இந்த உவமையின் முக்கிய கதாபாத்திரமாகிய இளைய மகன் இருக்கிறான். தன் தகப்பனால் தயக்கமின்றி தனக்கு கொடுக்கப்பட்ட தன் சுதந்திரவீதத்தை ஆஸ்தியை சேர்த்துக் கொள்கிறான். அதன் பின்பு அவன் வீட்டை விட்டுச் சென்று அதிக ஒழுக்கக்கேடான வாழ்க்கை முறையில் ஈடுபடுகிறான். ஆனால் இயேசு கதையை சொல்லும் போது செவிகொடுத்துக் கேளுங்கள், கதாபாத்திரங்கள் யாரை பிரதிநிதித்துவம் செய்கின்றனர் என்பதை நீங்கள் நிர்ணயிக்க முடியுமா என்று பாருங்கள்.

இயேசு இவ்வாறு துவங்குகிறார்: “ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள். அவர்களில் இளையவன் தகப்பனை நோக்கி: தகப்பனே, ஆஸ்தியில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தர வேண்டும் என்றான். அந்தப்படி அவன் [தகப்பன்] அவர்களுக்குத் தன் ஆஸ்தியைப் பங்கிட்டுக் கொடுத்தான்.” தான் பெற்றுக் கொண்டதைக் கொண்டு இந்த இளையவன் என்ன செய்கிறான்?

இயேசு விவரிக்கிறார்: “சில நாளைக்குப் பின்பு, இளைய மகன் எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு, தூர தேசத்துக்குப் புறப்பட்டுப் போய், அங்கே துன்மார்க்கமாய் ஜீவனம் பண்ணி, தன் ஆஸ்தியை அழித்துப் போட்டான்.” உண்மையில் அவன் தன் பணத்தை விபசாரிகளோடு வாழ்ந்து செலவழிக்கிறான். அதற்குப் பின்பு கடினமான காலங்கள் வருகின்றன. இயேசு தொடர்ந்து சொல்கிறார்:

“எல்லாவற்றையும் அவன் செலவழித்த பின்பு, அந்தத் தேசத்திலே கொடிய பஞ்சமுண்டாயிற்று. அப்பொழுது அவன் குறைவுபடத் தொடங்கி, அந்தத் தேசத்துக் குடிகளில் ஒருவனிடத்தில் போய் ஒட்டிக்கொண்டான். அந்தக் குடியானவன் அவனைத் தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான். அப்பொழுது பன்றிகள் தின்கிற தவிட்டினாலே தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான், ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை.”

நியாயப்பிரமாண சட்டத்தின்படி இந்த மிருகங்கள் அசுத்தமானவைகள் ஆதலால், பன்றிகளை மேய்க்கும் வேலையை எடுத்துக் கொள்ளும் கட்டாய நிலைக்கு வருவது எவ்வளவு இழிவானதாயிருக்கிறது! பன்றிகளுக்கு கொடுக்கப்பட்ட உணவை விரும்பும் அளவுக்கு அவனை செய்வித்த கொடுமையான பசி தான் அவனுக்கு அதிக வேதனையை கொடுத்தது. அவனுடைய பயங்கரமான பெருங் கஷ்டத்தின் காரணமாக “அவனுக்குப் புத்தி தெளிந்தது” என்று இயேசு சொன்னார்.

இயேசு தம்முடைய கதையை தொடர்ந்து விளக்குகிறார்: “என் தகப்பனுடைய கூலிக்காரர் எத்தனையோ பேருக்குப் பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன். நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ் செய்தேன். இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல, உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக் கொள்ளும் என்பேன் என்று [தனக்குத்தானே, NW] சொல்லி; எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான்.”

இங்கு சிந்திக்க வேண்டியது: அவன் வீட்டை விட்டுச் சென்ற போது, அவனுடைய தகப்பன் அவனை எதிர்த்து, கோபமாக கூச்சல் போட்டிருந்தால், அந்த மகன் தான் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி ஒரே எண்ணம் உடையவனாய் இருந்திருக்க மாட்டான். அவன் தன் சொந்த தேசத்தில் வேறு எங்காவது வேலை தேட முயற்சி செய்வதற்கு திரும்பி வர அவன் ஒருவேளை தீர்மானித்திருப்பான், ஏனென்றால் அப்பொழுது அவன் தன் தகப்பனை எதிர்ப்பட வேண்டிய அவசியமிருக்காது. என்றபோதிலும், அது போன்ற எந்தவித எண்ணமும் அவன் மனதில் இருக்கவில்லை. அவன் தன் வீட்டில் தான் இருக்க விரும்பினான்!

தெளிவாகவே, இயேசுவின் உவமையில் இருக்கும் தகப்பன் நம்முடைய அன்பான, இரக்கமுள்ள பரலோக தகப்பன், யெகோவா தேவனை பிரதிநிதித்துவம் செய்கிறார். காணாமற்போன அல்லது கெட்ட மகன் அறியப்பட்ட பாவிகளை பிரதிநிதித்துவம் செய்கிறான் என்பதை நீங்கள் ஒருவேளை உணர்ந்து கொள்ளலாம். இயேசு பேசிக்கொண்டிருக்கும் பரிசேயர்கள், இதற்கு முன்பு இயேசு இப்பேர்ப்பட்டவர்களோடு போஜனம்பண்ணியதற்காக அவரைக் குற்றம் சாட்டினர். ஆனால் மூத்த குமாரன் யாரை பிரதிநிதித்துவம் செய்கிறான்?

காணாமற்போன மகன் கண்டுபிடிக்கப்பட்ட போது

இயேசுவின் உவமையில் உள்ள காணாமற்போன குமாரன் அல்லது கெட்ட குமாரன் தன் தகப்பனின் வீட்டுக்குத் திரும்பி வந்தபோது, என்ன விதமான வரவேற்பை பெற்றுக்கொள்கிறான்? இயேசு அதை விவரிக்கையில் செவிகொடுத்துக் கேளுங்கள்:

“அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு, அவனை முத்தஞ் செய்தான்.” நம்முடைய பரலோக தகப்பனாகிய யெகோவாவை நன்கு பிரதிநிதித்துவம் செய்யும் என்னே ஓர் இரக்கமுள்ள, அனலான இருதயமுள்ள தகப்பன்!

தன் மகனின் ஒழுக்கங்கெட்ட வாழ்க்கையை தகப்பன் கேட்டிருக்கக்கூடும். என்றபோதிலும், விவரமான விளக்கத்துக்கு காத்திராமல் அவர் அவனை வீட்டில் வரவேற்கிறார். இயேசுவுக்கும்கூட அப்பேர்ப்பட்ட வரவேற்கும் ஆவி இருக்கிறது, உவமையில் உள்ள கெட்ட குமாரனால் பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட பாவிகளையும் வரிவசூலிப்பவர்களையும் அணுகுவதில் அவர் முதற்படி எடுத்தார்.

திரும்பி வருகையில் அவனுடைய வருத்தமான, வாட்டமான முகத்தோற்றத்தை கவனிப்பதன் மூலம், சந்தேகமில்லாமல் தன் மகனின் மனந்திரும்புதலைக் குறித்து சில கருத்துக்களை இயேசுவின் உவமையில் உள்ள அறிவுக்கூர்மையுள்ள தகப்பன் கொண்டிருக்கிறான் என்பது உண்மைதான். ஆனால் அந்தத் தகப்பனின் அன்பான முயற்சி, மகன் தன் பாவங்களை அறிக்கையிடுவதை சுலபமாக்குகிறது. இயேசு சொல்கிறவிதமாய்: “குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ் செய்தேன். இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல, உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக் கொள்ளும்.”

என்றபோதிலும், அந்த வார்த்தைகள் மகனின் உதடுகளில் இருந்து மறைவதற்கு முன்பே அவனுடைய தகப்பன் செயல்படுகிறான், தன் ஊழியக்காரருக்கு இவ்வாறு கட்டளையிடுகிறான்: “நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள். கொழுத்த கன்றைக் கொண்டு வந்து அடியுங்கள். நாம் புசித்து, சந்தோஷமாயிருப்போம். என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற் போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான்.” பின்னர் அவர்கள் “சந்தோஷப்படத்” தொடங்கினார்கள்.

இதற்கிடையில், அந்தத் தகப்பனின் “மூத்த குமாரன் வயலிலிருந்தான்.” கதையின் மீதிப் பாகத்தை செவிகொடுத்துக் கேட்பதன் மூலம் அவன் யாரை பிரதிநிதித்துவம் செய்கிறான் என்பதை நீங்கள் அடையாளங் கண்டுபிடிக்க முடியுமா என்று பாருங்கள். மூத்த குமாரனைப் பற்றி இயேசு இவ்வாறு சொல்கிறார்: “அவன் திரும்பி வீட்டுக்குச் சமீபமாய் வருகிறபோது, கீத வாத்தியத்தையும் நடனக் களிப்பையும் கேட்டு; ஊழியக்காரரில் ஒருவனை அழைத்து: இதென்ன என்று விசாரித்தான். அதற்கு அவன்: உம்முடைய சகோதரன் வந்தார், அவர் மறுபடியும் சுகத்துடனே உம்முடைய தகப்பனிடத்தில் வந்து சேர்ந்தபடியினாலே அவருக்காகக் கொழுத்த கன்றை அடிப்பித்தார் என்றான்.” அவன் அதிக கோபமடைந்து உள்ளே செல்வதற்கு விருப்பமில்லாதவனாய் இருந்தான். பின்பு அவனுடைய தகப்பன் வெளியே வந்து அவனைக் கெஞ்சிக் கேட்க ஆரம்பித்தான். அவன் தன் தகப்பனுக்கு இவ்வாறு பதிலளித்தான், “இதோ, இத்தனை வருஷகாலமாய் நான் உமக்கு ஊழியஞ் செய்து, ஒருக்காலும் உம்முடைய கற்பனையை மீறாதிருந்தும், என் சிநேகிதரோடே நான் சந்தோஷமாயிருக்கும்படி நீர் ஒருக்காலும் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியையாவது கொடுக்கவில்லை. வேசிகளிடத்தில் உம்முடைய ஆஸ்தியை அழித்துப் போட்ட உம்முடைய குமாரனாகிய இவன் வந்தவுடனே கொழுத்த கன்றை இவனுக்காக அடிப்பித்தீரே.”

மூத்த குமாரனைப் போன்று, பாவிகளிடமாக இரக்கத்தையும் கவனத்தையும் காண்பித்ததற்காக குற்றம் சாட்டியது போல் யார் இருக்கின்றனர்? பரிசேயர்களும் வேதபாரகரும் அல்லவா? பாவிகளை இயேசு வரவேற்கிறார் என்ற அவர்களுடைய குற்றச்சாட்டு இந்த உவமையைச் சொல்லத் தூண்டியதால், தெளிவாகவே அவர்களைத் தான் மூத்த குமாரன் பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும்.

தன் மூத்த குமாரனுக்கு தகப்பன் விடுக்கும் வேண்டுகோளோடு இயேசு தம்முடைய கதையை முடிக்கிறார்: “மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது. உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்; ஆனபடியினாலே, நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாயிருக்க வேண்டுமே.”

இயேசு இவ்வாறு மூத்த குமாரன் இறுதியில் என்ன செய்கிறான் என்பதை விளக்காமலே விட்டுவிடுகிறார். உண்மையிலேயே, இயேசுவின் மரணத்துக்கும் உயிர்த்தெழுதலுக்கும் பின் “ஆசாரியர்களில் அநேகர் விசுவாசத்துக்குக் கீழ்ப்படிந்தார்கள்.” இயேசு இங்கே பேசிக்கொண்டிருக்கும் “மூத்த குமாரன்” வகுப்பைச் சேர்ந்தவர்களில் சிலர் இதில் ஒருவேளை இருந்திருக்கக்கூடும்.

ஆனால் நவீன காலங்களில் இந்த இரண்டு குமாரர்கள் யாரை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்? யெகோவாவோடு ஓர் உறவுக்குள் செல்வதற்கு ஓர் அடிப்படையைக் கொண்டிருக்கப் போதுமான அளவுக்கு அவருடைய நோக்கங்களைப் பற்றி அறிந்திருப்பவர்களை இது குறிக்கிறது. மூத்த குமாரன் “சிறு மந்தை” அல்லது “பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேறானவர்களின் . . . சபையின்” அங்கத்தினருள் சிலரை பிரதிநிதித்துவம் செய்கிறான். மூத்த குமாரனின் மனநிலையைப் போன்ற அதே மனநிலையை இவர்களும் மேற்கொண்டனர். “வேறே ஆடுகளாகிய” பூமிக்குரிய வகுப்பை வரவேற்பதற்கு அவர்களுக்கு விருப்பம் இல்லாமல் இருந்தது, முக்கிய கவனத்தை அவர்கள் தங்கள் மீது திருப்பிக்கொள்கின்றனர் என்பதாக அவர்கள் நினைத்தனர்.

மறுபட்சத்தில், கெட்ட குமாரன், இந்த உலகம் அளிக்கும் இன்பங்களை அனுபவிப்பதற்காக விட்டுச் செல்லும் கடவுளுடைய ஜனங்களை பிரதிநிதித்துவம் செய்கிறான். என்றபோதிலும், காலப்போக்கில், இவர்கள் மனந்திரும்பி கடவுளின் சுறுசுறுப்பான ஊழியர்களாக ஆகின்றனர். மன்னிப்புக்கான தங்கள் தேவையை உணர்ந்து அவரிடம் திரும்பும் ஆட்களிடம் உண்மையிலேயே எவ்வளவு அன்பாகவும் இரக்கமுள்ளவராகவும் தகப்பன் இருக்கிறார்! லூக்கா 15:11–32; லேவியராகமம் 11:7, 8; அப்போஸ்தலர் 6:7; லூக்கா 12:32; எபிரெயர் 12:23; யோவான் 10:16.

▪ யாரிடம் இயேசு இந்த உவமையை அல்லது கதையை சொல்கிறார், ஏன்?

▪ இக்கதையில் முக்கிய கதாபாத்திரமாக இருப்பது யார், அவனுக்கு என்ன நேரிடுகிறது?

▪ தகப்பனும், இளைய குமாரனும் இயேசுவின் நாளிலிருந்த யாரை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்?

▪ தம்முடைய உவமையில் உள்ள இரக்கமுள்ள தகப்பனின் முன்மாதிரியை இயேசு எவ்வாறு பிரதிபலித்தார்?

▪ தன் சகோதரன் வரவேற்கப்பட்டதைக் குறித்து மூத்த குமாரனின் நோக்குநிலை என்ன, பரிசேயர்கள் எவ்வாறு மூத்த குமாரனைப் போல் நடந்து கொள்கின்றனர்?

▪ இயேசுவின் உவமை நம்முடைய நாளில் என்ன பொருத்தத்தைக் கொண்டிருக்கிறது?