Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்துவின் ராஜ்ய மகிமைக்கு ஒரு முற்காட்சி

கிறிஸ்துவின் ராஜ்ய மகிமைக்கு ஒரு முற்காட்சி

அதிகாரம் 60

கிறிஸ்துவின் ராஜ்ய மகிமைக்கு ஒரு முற்காட்சி

பிலிப்பு செசரியா பகுதிகளுக்குள் இயேசு வந்திருக்கிறார், அப்போஸ்தலர்கள் உட்பட்ட ஒரு ஜனக்கூட்டத்துக்கு கற்பித்துக் கொண்டிருக்கிறார். அவர் இந்த அதிர்ச்சியூட்டும் அறிவிப்பை அவர்களிடம் சொல்கிறார்: “இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லையென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.”

‘இயேசு எதை அர்த்தப்படுத்தக்கூடும்?’ என்று சீஷர்கள் ஆச்சரியப்பட்டிருக்க வேண்டும். ஏறக்குறைய ஒரு வாரத்துக்குப் பின்பு, இயேசு பேதுரு, யாக்கோபு, யோவானை தம்மோடு கூட்டிக்கொண்டு, எல்லாருமாக மிக உயரமான ஒரு மலையின் மேல் ஏறுகின்றனர். சீஷர்கள் தூக்கக் கலக்கத்தில் இருப்பதனால், அது ஒருவேளை இரவு நேரமாயிருக்கக்கூடும். இயேசு ஜெபித்துக் கொண்டிருக்கையில், அவர் அவர்களுக்கு முன்பாக மறுரூபமாகுகிறார். அவருடைய முகம் சூரியனைப் போல் பிரகாசிக்க ஆரம்பிக்கிறது, அவருடைய வஸ்திரங்கள் வெளிச்சத்தைப் போல் பளிச்சிடுகின்றன.

பின்னர், “மோசேயும் எலியாவும்” என்று அடையாளங் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு உருவங்கள் தோன்றி, ‘எருசலேமில் நிகழப் போகிற அவருடைய புறப்படுதலைப்’ பற்றி இயேசுவிடம் பேச ஆரம்பிக்கின்றனர். அந்தப் புறப்படுதல், இயேசுவின் மரணத்தையும், அதைத் தொடர்ந்த உயிர்த்தெழுதலையும் குறிக்கிறது. ஆக, இந்தச் சம்பாஷணை பேதுரு விரும்பியபடி அவருடைய கீழ்த்தரமான மரணம் தவிர்க்கப்பட வேண்டிய ஏதோவொன்றல்ல என்பதை நிரூபிக்கிறது.

இப்போது முழுமையாக விழித்துக்கொண்டு சீஷர்கள் வியப்புடன் கூர்ந்து கவனித்துக் கொண்டும், கேட்டுக் கொண்டுமிருக்கின்றனர். இது ஒரு தரிசனமாக இருந்தாலும், இது அவ்வளவு மெய்ம்மையாகத் தோன்றுகிறதினால் பேதுரு காட்சியில் பங்கெடுக்க ஆரம்பிக்கிறான்: “ஆண்டவரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது; உமக்கு சித்தமானால், உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களை போடுவோம்” என்றான்.

பேதுரு பேசிக்கொண்டிருக்கையில், ஒரு பிரகாசமான மேகம் அவர்களை மூடுகிறது, மேகத்திலிருந்து வந்த ஒரு குரல் சொல்கிறது: “இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவி கொடுங்கள்.” அந்தக் குரலைக் கேட்டு சீஷர்கள் முகங்குப்புற விழுகிறார்கள். ஆனால் இயேசு சொல்கிறார்: “எழுந்திருங்கள், பயப்படாதேயுங்கள்.” அவர்கள் அவ்வாறு எழுந்திருக்கையில் இயேசுவைத் தவிர வேறொருவரையும் காணவில்லை.

மறுநாள் அவர்கள் மலையிலிருந்து இறங்குகிற வழியில், இயேசு கட்டளையிடுகிறார்: “மனுஷகுமாரன் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கும் வரைக்கும் இந்தத் தரிசனத்தை ஒருவருக்கும் சொல்ல வேண்டாம்.” தரிசனத்தில் எலியாவின் தோற்றம், சீஷர்களின் மனங்களில் ஒரு கேள்வியை எழுப்புகிறது. “எலியா முந்தி வரவேண்டும் என்று வேதபாரகர் சொல்லுகிறார்களே, அதெப்படியென்று கேட்டார்கள்.”

“எலியா வந்தாயிற்று” என்று இயேசு சொல்கிறார், ‘அவர்கள் அவனை அடையாளங் கண்டு கொள்ளவில்லை.’ என்றபோதிலும், இயேசு, எலியாவைப் போன்றே ஒரு பங்கை நிறைவேற்றிய யோவான் ஸ்நானனைப் பற்றி பேசுகிறார். எலியா எலிசாவுக்கு செய்தது போல, யோவான் கிறிஸ்துவுக்காக வழியை ஆயத்தம் பண்ணினான்.

இயேசுவுக்கும் அவருடைய சீஷர்களுக்கும் இந்தத் தரிசனம் எவ்வளவு பலப்படுத்துவதாய் நிரூபிக்கிறது! இந்தத் தரிசனம் கிறிஸ்துவின் ராஜ்ய மகிமையின் ஒரு முற்காட்சியைப் போலிருக்கிறது. இயேசு ஒரு வாரத்துக்கு முன்பு வாக்கு கொடுத்தபடி, சீஷர்கள் “மனுஷகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக்” கண்டார்கள். இயேசுவின் மரணத்துக்குப் பின், பேதுரு ‘கிறிஸ்துவோடேகூட நாங்கள் பரிசுத்த பர்வதத்திலிருக்கையில், அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டோம்’ என்று எழுதினான்.

வேதாகமங்களில் வாக்குப்பண்ணப்பட்டிருக்கிற கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜா அவர் தான் என்பதை நிரூபிக்க பரிசேயர்கள் இயேசுவிடமிருந்து ஓர் அடையாளத்தைக் கேட்டனர். அப்பேர்ப்பட்ட அடையாளம் அவர்களுக்கு கொடுக்கப்படவில்லை. மறுபட்சத்தில் இயேசுவின் நெருங்கிய சீஷர்கள், ராஜ்ய தீர்க்கதரிசனங்களை உறுதிப்படுத்துகிற இயேசுவின் மறுரூபமாகுதலைக் காண அனுமதிக்கப்படுகின்றனர். பேதுரு பின்னர் இவ்வாறு எழுதினான்: “அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனமும் நமக்கு உண்டு.” மத்தேயு 16:13, மத்தேயு 16:28–17:13; மாற்கு 9:1–13; லூக்கா 9:27–37; 2 பேதுரு 1:16–19.

▪ மரணத்தை ருசி பார்ப்பதற்கு முன், சிலர் எவ்வாறு கிறிஸ்து தம்முடைய ராஜ்யத்தில் வருகிறதைக் காண்கிறார்கள்?

▪ தரிசனத்தில், மோசேயும் எலியாவும் இயேசுவுடன் எதைப் பற்றி பேசுகின்றனர்?

▪ இந்தத் தரிசனம் ஏன் சீஷர்களுக்கு பலப்படுத்தும் உதவியாக இருக்கிறது?