Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கூடாரப் பண்டிகையின் போது

கூடாரப் பண்டிகையின் போது

அதிகாரம் 66

கூடாரப் பண்டிகையின் போது

இயேசு முழுக்காட்டுதல் பெற்றதிலிருந்து ஏறக்குறைய மூன்று வருடங்களின் போது அவர் பிரபலமாகிவிட்டிருக்கிறார். அநேக ஆயிரக்கணக்கானோர் அவருடைய அற்புதங்களைப் பார்த்திருக்கின்றனர். அவருடைய வேலைகளைப் பற்றிய அறிக்கைகள் தேசம் ழுமுவதும் பரவியிருக்கின்றன. இப்போது, எருசலேமில் கூடாரப் பண்டிகைக்காக ஜனங்கள் கூடி வருகையில், அங்கே அவருக்காகப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். “அவர் எங்கேயிருக்கிறார்?” என்று அவர்கள் அறிய விரும்புகின்றனர்.

இயேசு வாதத்துக்குரிய ஒரு பொருளாக ஆகிவிட்டிருக்கிறார். சிலர் “அவர் நல்லவர்” என்கிறார்கள். மற்றவர்கள் “அப்படியல்ல, அவன் ஜனங்களை வஞ்சிக்கிறவன்” என்று உறுதியாகக் கூறுகின்றனர். பண்டிகையின் ஆரம்ப நாட்களின் போது, இத்தகைய அடங்கிய பேச்சு அதிகம் அங்கு இருக்கிறது. என்றபோதிலும், இயேசுவின் முன்னிலையில் வெளிப்படையாகப் பேசுவதற்கு ஒருவருக்கும் தைரியமில்லை. இது ஏனென்றால் யூத தலைவர்களிடமிருந்து ஜனங்கள் பழிவாங்கு நடவடிக்கைக்காக பயப்படுகின்றனர்.

பண்டிகை பாதி முடிந்த பின்பு, இயேசு வந்து சேருகிறார். அவர் ஆலயத்துக்குப் போகிறார், அங்கே ஜனங்கள் அவருடைய மகத்தான போதிக்கும் திறமையை கண்டு வியப்படைகின்றனர். இயேசு யூத குருமார்களுக்குரிய பள்ளிகளில் படிக்காததால் யூதர்கள் ஆச்சரியப்படுகின்றனர்: “இவர் கல்லாதவராயிருந்தும் வேத எழுத்துக்களை எப்படி அறிந்திருக்கிறார்?”

“என் உபதேசம் என்னுடையதாயிராமல், என்னை அனுப்பினவருடையதாயிருக்கிறது. அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவனெவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சுயமாய்ப் பேசுகிறேனோ என்று அறிந்து கொள்ளுவான்.” இயேசுவின் போதகம் கடவுளுடைய சட்டத்துக்கு நெருங்கியதாக இருக்கிறது. ஆக, அவர் தம்முடைய சொந்த மகிமையைத் தேடாமல், கடவுளுடைய மகிமையைத் தேடுகிறார் என்பது தெளிவாயிருந்திருக்க வேண்டும். “மோசே நியாயப்பிரமாணத்தை உங்களுக்குக் கொடுக்கவில்லையா?” என்று இயேசு கேட்கிறார். கண்டிக்கும் விதத்தில் அவர் சொல்லுகிறார்: “உங்களில் ஒருவனும் அந்த நியாயப்பிரமாணத்தின் படி நடக்கிறதில்லை.”

“நீங்கள் ஏன் என்னைக் கொலை செய்யத் தேடுகிறீர்கள்?” என்று இயேசு பின்பு கேட்கிறார்.

கூட்டத்தில் இருந்த ஜனங்கள், பண்டிகைக்கு வந்தவர்கள் அப்பேர்ப்பட்ட முயற்சிகளைப் பற்றி அறியாதவராய் இருக்கின்றனர். அப்பேர்ப்பட்ட அற்புதமான போதகரை யாராவது ஒருவர் கொலை செய்ய விரும்புவது நினைக்கமுடியாத ஒன்றாக கருதுகின்றனர். அதனால், இயேசு இவ்வாறு நினைப்பதற்கு, அவரிடம் ஏதோ தவறு இருக்குமென நம்புகின்றனர். “நீ பிசாசு பிடித்தவன்; உன்னைக் கொலை செய்யத் தேடுகிறவன் யார்?” என்று அவர்கள் சொல்கின்றனர்.

ஜனக்கூட்டத்தார் அதை ஒருவேளை உணராதிருந்தாலும்கூட யூதத் தலைவர்கள் இயேசு கொல்லப்பட வேண்டும் என்று விரும்புகின்றனர். ஒன்றரை வருடங்களுக்கு முன்பு ஓய்வு நாளில் இயேசு ஒரு மனிதனை சுகப்படுத்திய போது, தலைவர்கள் அவரைக் கொலைசெய்ய முயற்சி செய்தனர். ஆகையால் இயேசு இப்போது அவர்களுடைய நியாயமற்றத் தன்மையை இவ்வாறு அவர்களைக் கேட்பதன் மூலம் சுட்டிக் காட்டுகிறார்: “மோசேயின் நியாயப்பிரமாணம் மீறப்படாதபடிக்கு ஓய்வுநாளில் மனுஷன் விருத்தசேதனம் பெறலாமென்றால், நான் ஓய்வு நாளில் ஒரு மனுஷனை முழுவதும் சுகமாக்கினதினாலே என்மேல் எரிச்சலாயிருக்கலாமா? தோற்றத்தின்படி தீர்ப்புச் செய்யாமல், நீதியின்படி தீர்ப்பு செய்யுங்கள்.”

நிலைமையை அறிந்த எருசலேமின் குடிமக்கள் இப்போது சொல்கின்றனர்: “இவனையல்லவா கொலை செய்யத் தேடுகிறார்கள்? இதோ, இவன் தாராளமாய்ப் பேசுகிறானே, ஒருவரும் இவனுக்கு ஒன்றும் சொல்லுகிறதில்லையே, மெய்யாய் இவன் கிறிஸ்துதான் என்று அதிகாரிகள் நிச்சயமாக அறிந்திருக்கிறார்களோ?” இயேசு தான் கிறிஸ்து என்று இந்த எருசலேமின் குடிமக்கள் ஏன் நம்புகிறதில்லையென்று விளக்குகின்றனர்: “இவன் இன்ன இடத்திலிருந்து வந்தவனென்று நாம் அறிந்திருக்கிறோம், கிறிஸ்து வரும்போதோ, அவர் இன்ன இடத்திலிருந்து வருகிறவரென்று ஒருவனும் அறிய மாட்டானே.”

இயேசு பதிலளிக்கிறார்: “நீங்கள் என்னை அறிவீர்கள், நான் எங்கேயிருந்து வந்தேனென்றும் அறிவீர்கள்; நான் என் சுயமாய் வரவில்லை, என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர், அவரை நீங்கள் அறியாதிருக்கிறீர்கள். நான் அவரால் வந்திருக்கிறபடியினாலும், அவர் என்னை அனுப்பியிருக்கிறபடியினாலும், நானே அவரை அறிந்திருக்கிறேன்.” ஒருவேளை அவரைச் சிறையில் போடுவதற்கோ அல்லது கொலை செய்வதற்கோ அப்போது அவர்கள் அவரைப் பிடிக்க முயற்சி செய்கின்றனர். என்றபோதிலும், அவர்கள் வெற்றிபெறவில்லை, ஏனென்றால் இயேசு மரிப்பதற்கான நேரம் இன்னும் வரவில்லை.

அப்படியிருந்தும் அநேகர் இயேசுவில் விசுவாசம் வைக்கின்றனர், உண்மையிலேயே அவர்கள் அவ்வாறு தான் செய்ய வேண்டும். ஏன், அவர் தண்ணீர் மேல் நடந்திருக்கிறார், காற்றுகளை அடக்கியிருக்கிறார், கொந்தளிப்பான கடல்களை அமைதிப்படுத்தியிருக்கிறார், சில அப்பங்களையும் மீன்களையும் கொண்டு ஆயிரக்கணக்கானோரை போஷித்திருக்கிறார், சுகவீனரை சுகப்படுத்தியிருக்கிறார், முடவரை நடக்க வைத்திருக்கிறார், குருடர்களின் கண்களைத் திறந்திருக்கிறார், குஷ்டரோகிகளை குணப்படுத்தியிருக்கிறார், மேலும் மரித்தோரையும் உயிர்த்தெழுப்பியிருக்கிறார். ஆகையால் அவர்கள் கேட்கின்றனர்: “கிறிஸ்து வரும் போது, இவர் செய்கிற அற்புதங்களைப் பார்க்கிலும் அதிகம் செய்வாரோ?”

ஜனக்கூட்டத்தார் இந்தக் காரியங்களை முறுமுறுத்துக் கொண்டிருக்கிறதை பரிசேயர்கள் கேட்டபோது, அவர்களும், பிரதான ஆசாரியர்களும் இயேசுவை கைது செய்ய அதிகாரிகளை அனுப்புகின்றனர். யோவான் 7:11–32.

▪ இயேசு எப்போது பண்டிகைக்கு வந்துசேருகிறார், ஜனங்கள் அவரைப் பற்றி என்ன சொல்லுகின்றனர்?

▪ இயேசு பிசாசு பிடித்தவர் என்று ஏன் சிலர் சொல்கின்றனர்?

▪ இயேசுவைப் பற்றி என்ன எண்ணத்தை எருசலேமின் குடிமக்கள் கொண்டிருக்கின்றனர்?

▪ அநேகர் ஏன் இயேசுவில் விசுவாசம் வைக்கின்றனர்?