Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கூடுதலான தோற்றங்கள்

கூடுதலான தோற்றங்கள்

அதிகாரம் 129

கூடுதலான தோற்றங்கள்

சீஷர்கள் இன்னும் மனம் வாடிய நிலையிலேயே இருக்கின்றனர். காலியாக இருக்கும் கல்லறையின் முக்கியத்துவத்தையும் புரிந்துகொள்ளவில்லை, பெண்களின் அறிக்கைகளையும் அவர்கள் நம்பவில்லை. ஆகையால் பின்னர் ஞாயிற்றுக்கிழமையன்று, கிலெயோப்பாவும் மற்றொரு சீஷனும் எருசலேமை விட்டு ஏறக்குறைய பதினெரு கிலோமீட்டர் தூரமான எம்மாவு என்ற இடத்துக்குப் புறப்படுகின்றனர்.

செல்லும் வழியில் அந்நாளைய சம்பவங்களை அவர்கள் சம்பாஷித்துக் கொண்டிருக்கையில், ஓர் அந்நியன் அவர்களோடே சேர்ந்து கொள்கிறார். “நீங்கள் . . . ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளுகிற காரியங்கள் என்ன?” என்று அவர் கேட்கிறார்.

துக்கமான முகங்களோடு சீஷர்கள் நிற்கின்றனர். கிலெயோப்பா இவ்வாறு பதிலளிக்கிறான்: “இந்நாட்களில் எருசலேமிலே நடந்தவைகளை அறியாதபடிக்கு நீர் அந்நியராயிருக்கிறீரோ?” “எவைகள்?” என்று அவர் கேட்கிறார்.

“நசரேயனாகிய இயேசுவைக் குறித்தவைகளே” என்று அவர்கள் பதிலளிக்கின்றனர். “நம்முடைய பிரதான ஆசாரியரும் அதிகாரிகளும் அவரை மரண ஆக்கினைக்குட்படுத்தி, சிலுவையில் [கழுமரத்தில், NW] அறைந்தார்கள். அவரே இஸ்ரவேலை மீட்டிரட்சிப்பவர் என்று நாங்கள் நம்பியிருந்தோம்.”

கிலெயோப்பாவும் அவனுடைய கூட்டாளியும் அந்நாளின் வியப்பூட்டும் சம்பவங்களை—தேவதூதர்கள் காணப்பட்ட அசாதாரண காட்சியைப் பற்றியும் காலியான கல்லறையைப் பற்றியும்—விளக்குகின்றனர். ஆனால் அவர்கள் இந்தக் காரியங்களின் அர்த்தத்தைக் குறித்து தங்கள் மனங்குழம்பிய நிலையை அறிக்கையிடுகின்றனர். அந்த அந்நியன் அவர்களை இவ்வாறு கடிந்துரைக்கிறார்: “தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே, கிறிஸ்து இவ்விதமாகப் பாடுபடவும், தமது மகிமையில் பிரவேசிக்கவும் வேண்டியதில்லையா?” பின்பு அவர் பரிசுத்த பதிவிலிருந்து கிறிஸ்துவைக் குறித்த பகுதிகளை விளக்கிக் காட்டுகிறார்.

இறுதியில் அவர்கள் எம்மாவு என்ற இடத்துக்கு அருகே வந்து சேருகின்றனர், அந்த அந்நியன் அவர்களை விட்டு பிரிந்து போவதைப் போல் பாவனைச் செய்கிறார். அதிகமாக அவரிடமிருந்து காரியங்களைக் கேட்க விரும்புவதால் சீஷர்கள் அவரை இவ்வாறு வருந்திக் கேட்டுக் கொள்கின்றனர்: “நீர் எங்களுடனே தங்கியிரும், சாயங்காலமாயிற்று.” ஆகையால் அவர் உணவுக்காக அங்கே தங்குகிறார். அவர் அப்பத்தை எடுத்து, ஜெபம் செய்து, அதைப் பிட்டு அவர்களிடம் கொடுக்கையில், அவர் உண்மையில் மனித உருவில் இயேசு என்பதை அவர்கள் கண்டுணர்கின்றனர். ஆனால் அதற்குப் பிறகு அவர் மறைந்து போகிறார்.

அந்த அந்நியன் அவ்வளவு காரியங்களை எவ்வாறு அறிந்திருந்தார் என்பதை அவர்கள் இப்போது புரிந்து கொள்கின்றனர்! “வழியிலே அவர் நம்முடனே பேசி, வேதவாக்கியங்களை நமக்கு விளங்கக் காட்டின பொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா?” என்று அவர்கள் கேட்கின்றனர். தாமதமின்றி, அவர்கள் உடனடியாக எழுந்து எருசலேம் வரை திரும்ப செல்கின்றனர், அங்கே அவர்கள் அப்போஸ்தலர்களையும் அவர்களோடு கூடியிருப்பவர்களையும் காண்கின்றனர். கிலெயோப்பாவும் அவனுடைய கூட்டாளியும் விஷயத்தை சொல்வதற்கு முன்பு, மற்றவர்கள் உணர்ச்சி வசப்பட்டு இவ்வாறு அறிக்கை செய்கின்றனர்: “கர்த்தர் மெய்யாகவே உயிர்த்தெழுந்து சீமோனுக்குத் தரிசனமானார்!” பின்பு இருவரும் இயேசு எவ்வாறு அவர்களுக்கும் காட்சியளித்தார் என்பதை விவரிக்கின்றனர். அந்நாளில் நான்கு முறைகள் தம்முடைய சீஷர்களில் வித்தியாசமான நபர்களுக்கு அவர் காட்சியளித்திருக்கிறார்.

இயேசு திடீரென்று ஐந்தாவது முறையாக காட்சியளிக்கிறார். சீஷர்கள் யூதர்களுக்கு பயப்பட்டு கதவுகளை பூட்டியிருந்த போதிலும் அவர் உள்ளே சென்று, அவர்கள் நடுவிலே நின்று இவ்வாறு சொல்கிறார்: “உங்களுக்குச் சமாதானம்.” அவர்கள் ஓர் ஆவியைக் காண்கிறதாக கற்பனை செய்து கொண்டு பயப்படுகின்றனர். அவர் தான் ஒரு பேய் உருவம் அல்ல என்பதை விளக்கி, இயேசு இவ்வாறு சொல்கிறார்: “நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன? நான் தான் என்று அறியும்படி, என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப் பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறது போல ஒரு ஆவிக்கு இராதே.” அப்படி சொல்லியும், அவர்கள் நம்புவதற்கு தயங்குகின்றனர்.

அவர் உண்மையிலேயே இயேசு என்பதை அவர்கள் புரிந்து கொள்ள உதவி செய்வதற்கு, அவர் இவ்வாறு கேட்கிறார்: “புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா?” பொரித்த மீன் கண்டத்தை வாங்கி புசித்த பின்பு, அவர் இவ்வாறு சொல்கிறார்: “மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக் குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேற வேண்டியதென்று, நான் உங்களோடிருந்த போது [என் மரணத்துக்கு முன்பு] உங்களுக்குச் சொல்லிக் கொண்டு வந்த விசேஷங்கள் இவைகளே.”

தொடர்ந்து, அவர்களுக்கு ஒரு பைபிள் படிப்பு நடத்தும் வகையில் இயேசு போதிக்கிறார்: “எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து பாடுபடவும், மூன்றாம் நாளில் மரித்தோரிலிருந்தெழுந்திருக்கவும் வேண்டியதாயிருந்தது; அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது. நீங்கள் இவைகளுக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள்.”

ஏதோ ஒரு காரணத்தினால் இந்த ஞாயிற்றுக்கிழமை மாலை கூட்டத்தில் தோமா இல்லை. ஆகையால் அதைத் தொடர்ந்து வரும் நாட்களில், மற்றவர்கள் சந்தோஷத்துடன் அவனிடம் இவ்வாறு சொல்கின்றனர்: “கர்த்தரைக் கண்டோம்.”

“அவருடைய கைகளில் ஆணிகளினாலுண்டான காயத்தை நான் கண்டு, அந்தக் காயத்திலே என் விரலையிட்டு, என் கையை அவருடைய விலாவிலே போட்டாலொழிய விசுவாசிக்க மாட்டேன்” என்று தோமா எதிர்ப்பு தெரிவிக்கிறான்.

எட்டு நாட்களுக்குப் பின்பு சீஷர்கள் மறுபடியும் வீட்டுக்குள்ளே கூடுகின்றனர். இம்முறை தோமாவும் அவர்களுடனே கூட இருக்கிறான். கதவுகள் பூட்டப்பட்டிருந்தாலும், இயேசு மறுபடியும் அவர்கள் நடுவே வந்து நின்று இவ்வாறு சொல்கிறார்: “உங்களுக்குச் சமாதானம்.” பின்பு, தோமாவிடம் திரும்பி அவர் இவ்வாறு சொல்கிறார்: “நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப் பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு.”

“என் ஆண்டவரே! என் தேவனே!” என்று தோமா வியப்புடன் கூறுகிறான்.

“தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய்,” என்று இயேசு சொல்கிறார். “காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள்.” லூக்கா 24:11, 13–48; யோவான் 20:19–29.

▪ எம்மாவுக்குச் செல்லும் சாலையில் இரண்டு சீஷர்களிடம் ஓர் அந்நியன் என்ன கேள்விகள் கேட்கிறார்?

▪ சீஷர்களின் இருதயங்கள் அவர்களுக்குள்ளே கொழுந்துவிட்டு எரியும்படி அந்த அந்நியன் என்ன சொல்கிறார்?

▪ அந்த அந்நியன் யார் என்பதை சீஷர்கள் எவ்வாறு கண்டுணர்கின்றனர்?

▪ கிலெயோப்பாவும் அவனுடைய கூட்டாளியும் எருசலேமுக்கு திரும்பின போது, என்ன கிளர்ச்சியூட்டும் அறிக்கையை அவர்கள் கேட்கின்றனர்?

▪ இயேசு தம் சீஷர்களிடம் என்ன ஐந்தாவது தோற்றத்தை அளிக்கிறார்? அந்தச் சமயத்தின் போது என்ன நடக்கிறது?

▪ இயேசுவின் ஐந்தாவது தோற்றத்துக்கு எட்டு நாட்களுக்குப் பின் என்ன நடக்கிறது? இயேசு உயிரோடிருக்கிறார் என்பதை தோமா எவ்வாறு இறுதியில் நம்புகிறான்?