Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சந்தோஷத்தின் ஊற்றுமூலம்

சந்தோஷத்தின் ஊற்றுமூலம்

அதிகாரம் 75

சந்தோஷத்தின் ஊற்றுமூலம்

கலிலேயாவில் தம்முடைய ஊழியத்தின் போது, இயேசு அற்புதங்களைச் செய்தார், மேலும் இப்பொழுது அவற்றைத் திரும்ப யூதேயாவிலும் செய்கிறார். உதாரணமாக, ஒரு மனிதனை பேசமுடியாதபடி செய்த ஒரு பிசாசை அவனிலிருந்து அவர் துரத்துகிறார். ஜனக்கூட்டத்தார் ஆச்சரியமடைகின்றனர், ஆனால் குறை காண்பவர்கள் கலிலேயாவில் எழுப்பின அதே மறுப்பை எழுப்புகின்றனர். “இவன் பிசாசுகளின் தலைவனாகிய பெயெல்செபூலைக் கொண்டு பிசாசுகளைத் துரத்துகிறான்” என்று அவர்கள் உரிமைபாராட்டுகின்றனர். மற்றவர்கள் அவருடைய அடையாளத்தைப் பற்றி மேலுமான அத்தாட்சியைக் கேட்கின்றனர், மேலும் வானத்திலிருந்து ஓர் அடையாளத்தைக் காட்ட வேண்டும் என்று சொல்லி அவரைச் சோதிக்க முயற்சி செய்கின்றனர்.

அவர்கள் என்ன சிந்தித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை அறிந்தவராய், கலிலேயாவில் இருந்தவர்களிடம் கொடுத்த அதே பதிலை யூதேயாவில் இருக்கும் குறைகாண்பவர்களிடம் இயேசு கொடுக்கிறார். தனக்கே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற ஒவ்வொரு ராஜ்யமும் வீழ்ந்து போகும் என்று அவர் குறிப்பிடுகிறார். “ஆகையால்” அவர் கேட்கிறார், “சாத்தானும் தனக்குத் தானே விரோதமாய்ப் பிரிந்திருந்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும்?” தம்மைக் குறை காண்பவர்களின் அபாயகரமான நிலையை அவர் காண்பித்து இவ்வாறு சொல்லுகிறார்: “நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களை மேற்கொண்டிருக்கிறதே.”(NW)

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மோசே ஓர் அற்புதத்தைச் செய்தபோது, ஜனங்கள் எவ்வாறு பிரதிபலித்தார்களோ, அதே போன்று இயேசுவின் அற்புதங்களை காண்பவர்களும் பிரதிபலிக்க வேண்டும். அவர்கள் வியப்புடன்: “இது தேவனுடைய விரல்” என்றார்கள். கற்பலகைகளில் பத்துக் கட்டளைகளைச் செதுக்கியதும் “தேவனுடைய விரல்”தான். “தேவனுடைய விரல்”—அவருடைய பரிசுத்த ஆவி அல்லது கிரியை நடப்பிக்கும் சக்தி—நோயாளிகளை சுகப்படுத்துவதற்கும் பிசாசுகளைத் துரத்துவதற்கும் இயேசுவுக்கு உதவி செய்கிறது. ஆகையால் கடவுளுடைய ராஜ்யம் உண்மையிலேயே இந்த குறைகாண்பவர்களை மேற்கொண்டிருக்கிறது, ஏனென்றால் இயேசு ராஜ்யத்தின் நியமிக்கப்பட்ட ராஜாவாக அவர்களுடைய மத்தியில் இருக்கிறார்.

தன் அரண்மனையை காக்கும் நன்கு ஆயுதம் தரித்த மனிதனை, ஓர் அதிக பலமான ஆள் வந்து அடக்கி ஆட்கொள்வதைப் போன்று, பிசாசுகளைத் துரத்தும் திறமை இயேசுவுக்கு இருப்பதானது சாத்தான் மீது தமக்கு இருக்கும் வல்லமையின் அத்தாட்சியாக இருக்கிறது என்று இயேசு பின்பு விளக்குகிறார். கலிலேயாவில் அசுத்த ஆவியைப் பற்றி சொன்ன ஓர் உவமையை அவர் மறுபடியும் சொல்கிறார். ஓர் ஆவி ஒரு மனிதனைவிட்டு செல்கிறது, ஆனால் அந்த மனிதன் அந்த வெற்றிடத்தை நல்ல காரியங்களால் நிரப்பாவிட்டால், அந்த ஆவி மற்ற ஏழு ஆவிகளோடு திரும்புகிறது, அப்பொழுது அந்த மனிதனின் நிலைமை முதலில் இருந்ததைவிட மோசமாகிறது.

இந்தப் போதனைகளுக்கு செவிகொடுத்துக் கொண்டிருக்கும்போது, கூட்டத்திலிருந்து ஒரு பெண் வியப்பால் சப்தமாக இவ்வாறு சொல்லும்படி உந்தப்படுகிறாள்: “உம்மைச் சுமந்த கர்ப்பமும் நீர் பாலுண்ட முலைகளும் பாக்கியமுள்ளவைகள்.” ஒரு தீர்க்கதரிசியின் தாயாக, முக்கியமாக மேசியாவின் தாயாக இருக்கவேண்டும் என்ற விருப்பம் ஒவ்வொரு யூத பெண்ணுக்கும் இருப்பதால், இந்தப் பெண் இதைச் சொல்வது புரிந்துகொள்ளக்கூடியதாயிருக்கிறது. இயேசுவின் தாயாக இருப்பதால் விசேஷமாக மரியாள் சந்தோஷமுள்ளவளாக இருப்பாள் என்று அவள் ஒருவேளை நினைத்தாள்.

என்றபோதிலும், சந்தோஷத்தின் உண்மையான ஊற்றுமூலத்தைப் பற்றி இயேசு உடனடியாக அந்தப் பெண்ணை திருத்துகிறார். “அப்படியானாலும், தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக் கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள்” என்று அவர் பிரதிபலிக்கிறார். தம்முடைய தாயாகிய மரியாளுக்கு விசேஷ மரியாதை கொடுக்கப்பட வேண்டும் என்று இயேசு ஒருபோதும் குறிப்பிடவில்லை. அதற்குப் பதிலாக, உண்மையான சந்தோஷத்தை எந்தச் சரீரப்பிரகாரமான பிணைப்புகளினாலோ அல்லது சாதனைகளினாலோ அல்ல, கடவுளுடைய உண்மையான ஊழியனாக இருப்பதில் கண்டடையலாம் என்பதை இயேசு காண்பித்தார்.

வானத்திலிருந்து ஓர் அடையாளத்தைக் காண்பிக்க வேண்டும் என்று கேட்ட போது, கலிலேயாவில் அவர் செய்தது போலவே, யூதேயாவில் இருக்கும் ஜனங்களையும் இயேசு கண்டிக்கிறார். யோனாவின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் கொடுக்கப்படுவதில்லை என்று அவர் அவர்களிடம் சொல்கிறார். மூன்று நாட்கள் மீனுக்குள் இருந்ததன் மூலமும், அவனுடைய தைரியமான பிரசங்கிப்பின் மூலமும் யோனா ஓர் அடையாளமாக ஆனான். அது நினிவே மக்கள் மனந்திரும்புவதற்கு தூண்டப்படும்படிச் செய்தது. “இதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்” என்று இயேசு சொல்கிறார். அதே போன்று, சேபா தேசத்து ராணி சாலொமோனின் ஞானத்தைக் கண்டு வியந்தாள். “இதோ, சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்” என்றும்கூட இயேசு சொன்னார்.

ஓர் ஆள் விளக்கைக் கொளுத்தி அதை ஒரு பெட்டிக்குள்ளோ அல்லது கூடைக்குள்ளோ வைக்காமல், ஜனங்கள் வெளிச்சத்தைப் பார்ப்பதற்காக விளக்குத் தண்டின் மேல் வைப்பான் என்று இயேசு விளக்குகிறார். கேட்டுக்கொண்டிருந்தோருள் பிடிவாதமான ஆட்களின் முன் போதிப்பதும் அற்புதங்களைச் செய்வதும், விளக்கின் ஒளியை மறைப்பதற்கு ஒப்பாயிருக்கிறது என்பதை அவர் ஒருவேளை சுட்டிக் காட்டிக் கொண்டிருக்கிறார். அப்பேர்ப்பட்ட கவனிப்பாளர்களின் கண்கள் தெளிவானதாக இல்லை அல்லது ஒருமுகப்படுத்தப்பட்டதாக இல்லை. எனவே அவருடைய அற்புதங்களின் நோக்கம் நிறைவேற்றப்படுவதில்லை.

இயேசு அப்போது தான் ஒரு பிசாசை துரத்தியிருக்கிறார், ஊமையான ஒரு மனிதனை பேச வைத்திருக்கிறார். இது தெளிவான அல்லது ஒருமுகப்படுத்தப்பட்ட கண்களையுடைய ஜனங்களை இந்த மகிமையான வியப்பூட்டும் செயலை போற்றவும், நற்செய்தியை அறிவிக்கவும் செய்திருக்க வேண்டும்! என்றபோதிலும் இந்தக் குறை காண்பவர்களிடம் இது நடைபெறவில்லை. ஆகையால் இயேசு இவ்வாறு முடிக்கிறார்: “உன்னிலுள்ள வெளிச்சம் இருளாகாதபடிக்கு எச்சரிக்கையாயிரு. உன் சரீரம் ஒருபுறத்திலும் இருளடைந்திராமல் முழுவதும் வெளிச்சமாயிருந்தால், ஒரு விளக்கு தன் பிரகாசத்தினாலே உனக்கு வெளிச்சம் கொடுக்கிறது போல, உன் சரீர முழுவதும் வெளிச்சமாயிருக்கும்.” லூக்கா 11:14–36, NW; யாத்திராகமம் 8:18, 19; 31:18; மத்தேயு 12:22, 28.

▪ இயேசு அந்த மனிதனை சுகப்படுத்தியபோது எத்தகைய பிரதிபலிப்பு இருக்கிறது?

▪ “தேவனுடைய விரல்” என்றால் என்ன, கடவுளுடைய ராஜ்யம் எவ்வாறு இயேசுவுக்கு செவிகொடுத்துக் கொண்டிருப்பவர்களை மேற்கொண்டது?

▪ மெய்யான சந்தோஷத்தின் ஊற்றுமூலம் என்ன?

▪ ஓர் ஆள் எவ்வாறு ஒரு தெளிவான கண்ணை கொண்டிருக்க முடியும்?