Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சீஷனாயிருப்பதன் உத்தரவாதம்

சீஷனாயிருப்பதன் உத்தரவாதம்

அதிகாரம் 84

சீஷனாயிருப்பதன் உத்தரவாதம்

நியாய சங்கத்தின் உறுப்பினராயிருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பரிசேயனுடைய வீட்டை விட்டுச் சென்ற பின்பு, இயேசு எருசலேமை நோக்கி தொடர்ந்து செல்கிறார். திரள் கூட்டமான ஜனங்கள் அவரை பின்தொடருகின்றனர். ஆனால் அவர்களுடைய உள்நோக்கங்கள் என்ன? அவரை உண்மையாய் பின்பற்றுபவராய் இருப்பதில் உண்மையில் என்ன உட்பட்டிருக்கிறது?

அவர்கள் பிரயாணம் செய்து கொண்டிருக்கையில், இயேசு ஜனக்கூட்டத்தாரிடம் திரும்பி, இவ்வாறு சொல்வதன் மூலம் அவர்களை அதிர்ச்சியடையச் செய்கிறார்: “யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரரையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.”

இயேசு எதை அர்த்தப்படுத்துகிறார்? தம்மைப் பின்பற்றுகிறவர்கள் சொல்லர்த்தமாக தங்கள் உறவினர்களை வெறுக்க வேண்டும் என்று இயேசு இங்கு சொல்லவில்லை. மாறாக, அவரில் அன்பு கூருவதை விட அவர்களில் குறைவாக அன்பு கூர வேண்டும் என்ற கருத்தில் அவர்களை அவர்கள் வெறுக்க வேண்டும். இயேசுவின் முற்பிதாவாகிய யாக்கோபு லேயாளை “வெறுத்து” ராகேலை நேசித்தான் என்று சொல்லப்பட்டிருக்கிறது, லேயாள் தன் சகோதரியாகிய ராகேலைவிட குறைவாக நேசிக்கப்பட்டாள் என்று அது அர்த்தப்படுத்தியது.

ஒரு சீஷன் “தன் சொந்த ஆத்துமாவையும்” (NW) அல்லது ஜீவனையும்கூட வெறுக்க வேண்டும் என்று இயேசு சொன்னார் என்பதையும் சிந்தித்துப் பாருங்கள். மறுபடியும் இயேசு எதை அர்த்தப்படுத்தினார் என்றால் ஓர் உண்மையான சீஷன் தன் சொந்த ஜீவனைவிட அவரை அதிகம் நேசிக்க வேண்டும் என்பதே. தம்முடைய சீஷனாக ஆவது ஒரு கருத்தார்ந்த உத்தரவாதம் என்பதை இயேசு இவ்வாறு அழுத்திக்காட்டுகிறார். கவனமான சிந்தனையின்றி மேற்கொள்ள வேண்டிய ஏதோவொரு காரியமல்ல.

இயேசுவின் சீஷராக இருப்பதில் இன்னல்களும் துன்புறுத்தலும் உட்பட்டிருக்கின்றன. அதை அவர் தொடர்ந்து குறிப்பிடுகிறார்: “தன் கழுமரத்தைச் சுமந்து கொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்கு சீஷனாயிருக்க மாட்டான்.” (NW) ஆக, ஓர் உண்மையான சீஷன் இயேசு சகித்த அதே நிந்தனையின் சுமையை அனுபவிக்க மனமுள்ளவனாக இருக்க வேண்டும். தேவைப்படுமேயானால், கடவுளுடைய விரோதிகளின் கைகளில் மரித்துப் போவதையும்கூட உட்படுத்தும், இதை இயேசு விரைவில் செய்யப் போகிறார்.

ஆகையால், கிறிஸ்துவின் ஒரு சீஷனாக இருப்பது, அவரைப் பின்பற்றும் திரள் கூட்டமான ஜனங்கள் அதிக கவனமாக ஆராய்ந்து பார்க்க வேண்டிய ஒரு விஷயமாயிருக்கிறது. இயேசு இந்த உண்மையை ஓர் உவமையின் மூலம் அழுத்திக் காண்பிக்கிறார். “உங்களில் ஒருவன் ஒரு கோபுரத்தைக் கட்ட மனதாயிருந்து, அஸ்திபாரம் போட்ட பின்பு முடிக்கத் திராணியில்லாமற் போனால், பார்க்கிறவர்களெல்லாரும்: இந்த மனுஷன் கட்டத் தொடங்கி, முடிக்கத் திராணியில்லாமற் போனான் என்று சொல்லித் தன்னைப் பரியாசம் பண்ணாதபடிக்கு, அதைக் கட்டித் தீர்க்கிறதற்குத் தனக்கு நிர்வாகமுண்டோ இல்லையோ என்று முன்பு அவன் உட்கார்ந்து செல்லுஞ் செலவைக் கணக்குப் பாராமலிருப்பானோ?”

ஒரு கோபுரம் கட்ட விரும்பும் ஒரு மனிதன் அதை ஆரம்பிப்பதற்கு முன், அதை முடிப்பதற்கு பணவசதி தன்னிடம் இருக்கிறதா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்வது போல தம்முடைய சீஷர்களாக ஆவதில், என்ன உட்பட்டிருக்கிறதோ அதை அவர்களால் நிறைவேற்ற முடியும் என்பதை சீஷர்களாக ஆவதற்கு முன் அவர்கள் உறுதியாக தீர்மானித்திருக்க வேண்டும் என்று இயேசு தம்மைப் பின்பற்றும் ஜனக்கூட்டத்தாருக்கு உவமையினால் விளக்குகிறார். மற்றொரு உவமையை இயேசு தொடர்ந்து சொல்கிறார்:

“அன்றியும் ஒரு ராஜா மற்றொரு ராஜாவோடே யுத்தஞ்செய்யப் போகிற போது, தன் மேல் இருபதினாயிரம் சேவகரோடே வருகிற அவனைத் தான் பதினாயிரம் சேவகரைக் கொண்டு எதிர்க்கக்கூடுமோ கூடாதோ என்று முன்பு உட்கார்ந்து ஆலோசனை பண்ணாமலிருப்பானோ? கூடாதென்று கண்டால், மற்றவன் இன்னும் தூரத்திலிருக்கும் போதே, ஸ்தானாபதிகளை அனுப்பி, சமாதானத்துக்கானவைகளைக் கேட்டுக் கொள்வானே.”

பின்பு இயேசு தம் உவமைகளின் குறிப்பை இவ்வாறு சொல்கிறார்: “அப்படியே உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்க மாட்டான்.” அதைத் தான் அவரைப் பின்பற்றும் ஜனக்கூட்டத்தாரும், ஆம், கிறிஸ்துவைப் பற்றி கற்றறிகிற ஒவ்வொருவரும் செய்வதற்கு மனமுள்ளவர்களாய் இருக்கவேண்டும். அவருடைய சீஷர்களாக அவர்கள் இருக்க வேண்டுமென்றால், அவர்களுக்கிருக்கும் எல்லாவற்றையும்—ஜீவன் உட்பட அவர்களுடைய எல்லா உடைமைகளையும்—தியாகம் செய்வதற்கு அவர்கள் தயாராய் இருக்க வேண்டும். இதைச் செய்வதற்கு நீங்கள் மனமுள்ளவர்களாய் இருக்கிறீர்களா?

“உப்பு நல்லது தான்” என்று இயேசு தொடர்ந்து சொல்கிறார். அவருடைய மலைப்பிரசங்கத்தில் அவருடைய சீஷர்கள் ‘பூமிக்கு உப்பாயிருக்கிறார்கள்’ என்று சொன்னார். சொல்லர்த்தமான உப்பு பொருட்களை அழுகாமல் பாதுகாப்பது போல, ஜனங்களை பாதுகாக்கும் செல்வாக்கை அவர்கள் மேல்கொண்டிருக்கின்றனர். “உப்பு சாரமற்றுப் போனால் எதினால் சாரமாக்கப்படும்? அது நிலத்துக்காகிலும், எருவுக்காகிலும் உதவாது, அதை வெளியே கொட்டிப் போடுவார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்” என்று சொல்லி இயேசு முடிக்கிறார்.

ஆகவே சில காலமாக அவருடைய சீஷர்களாக இருப்பவர்களும்கூட தொடர்ந்து இருப்பதற்கான தங்களுடைய தீர்மானத்தில் பலவீனமாகக் கூடாது. அவர்கள் அவ்வாறு செய்வார்களேயானால், அவர்கள் உபயோகமற்றவர்களாக ஆகிவிடுவார்கள், இந்த உலகத்தின் கேலிக்கு இலக்காவர், கடவுளுக்கு முன்பு தகுதியற்றவர்களாக, உண்மையில் கடவுளின் மீது ஒரு நிந்தனையாக இருப்பர். ஆகையால், சாரமற்ற கறைப்படுத்தப்பட்ட உப்பைப் போல் அவர்கள் வெளியே எறியப்படுவர், ஆம் அழிக்கப்படுவர். லூக்கா 14:25–35; ஆதியாகமம் 29:30–33; மத்தேயு 5:13.

▪ ஒருவன் தன்னையும் தன் உறவினர்களையும் “வெறுக்க” வேண்டும் என்பதன் அர்த்தம் என்ன?

▪ என்ன இரண்டு உவமைகளை இயேசு கொடுக்கிறார், அவைகள் எதை அர்த்தப்படுத்துகின்றன?

▪ உப்பைப் பற்றி இயேசுவின் முடிவான வார்த்தைகளின் குறிப்பு என்ன?