Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சீஷனாவதற்கு சாத்தியமற்றவன்

சீஷனாவதற்கு சாத்தியமற்றவன்

அதிகாரம் 45

சீஷனாவதற்கு சாத்தியமற்றவன்

இயேசு கரையேறுகையில் என்னே ஒரு பயங்கரக் காட்சி! பக்கத்திலிருந்த ஒரு கல்லறையிலிருந்து இரண்டு கொடிய மனிதர்கள் அவரை நோக்கி ஓடிவருகிறார்கள். அவர்கள் பிசாசு பிடித்தவர்கள். அவர்களில் ஒருவன் மற்றவனைவிட அதிகக் கொடியவனும் அதிகக் காலம் பிசாசின் பிடியில் இருந்திருக்கக்கூடுமாதலால், அவன் பிறர் கவனத்திற்குரியவனாயிருக்கிறான்.

இந்தப் பரிதாபத்துக்குரிய மனிதன் வெகு காலமாகக் கல்லறைகளின் மத்தியில் நிர்வாணமாக வாழ்ந்துவந்திருக்கிறான். அவன் இரவும் பகலும் தொடர்ந்து கூப்பாடு போட்டுக்கொண்டும், தன்னையே கற்களால் அடித்துக்கொண்டும் இருந்தான். அவன் அந்தளவுக்குக் கொடியவனாக இருந்ததால், அவ்வழியாகச் செல்ல யாருக்குமே தைரியம் இல்லை. அவனைச் சங்கிலியால் கட்டிப்போடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் அவன் விலங்குகளையும் கால்களில் கட்டியிருந்த இரும்புச் சங்கிலியையும் முறித்துவிடுகிறான். அவனைக் கட்டுப்படுத்துவதற்கு எவருக்குமே பெலன் இல்லை.

அந்த மனிதன் இயேசுவிடம் நெருங்கிவந்து, அவருடைய பாதத்தில் விழும்போது, அவன் “இயேசுவே, உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தாத படிக்குத் தேவன் பேரில் உமக்கு ஆணை,” என்று சத்தமிடும்படி அவனைக் கட்டுப்படுத்திய பிசாசுகள் செய்கின்றன.

“அசுத்த ஆவியே, இந்த மனுஷனை விட்டுப் புறப்பட்டுப்போ,” என்று இயேசு சொல்லுகிறார். “உன் பேர் என்ன?” என்று இயேசு கேட்கிறார்.

“நாங்கள் அநேகராயிருக்கிறபடியால் என் பேர் லேகியோன்,” என்ற பதில் வந்தது. தங்களுடைய பிடியில் இருப்பவர்கள் படும் பாடுகளைக் கண்டு பிசாசுகள் களிப்படைகின்றன. கோழைத்தனமான ஆவியில் கும்பலாக அவர்களை ஆட்டிப்படைப்பதில் மகிழ்ச்சி காண்கின்றன. ஆனால் இயேசுவைப் பார்த்து தங்களை அபிஸிற்குள் அனுப்பிவிட வேண்டாம் என்று கெஞ்சுகின்றன. கொடிய பிசாசுகளையுங்கூட மேற்கொள்ள இயேசுவுக்கு இருந்த மிகுந்த வல்லமையை நாம் மறுபடியும் காண்கிறோம். தங்களுடைய தலைவனாகிய பிசாசாகிய சாத்தானுடன் தாங்கள் அபிஸில் போடப்படுவதுதானே கடைசியில் தங்களுக்கான கடவுளுடைய நியாயத்தீர்ப்பு என்பதைப் பிசாசுகள் அறிந்திருக்கின்றன என்பதையும் இது வெளிப்படுத்துகிறது.

பக்கத்தில் இருந்த மலையில் ஏறக்குறைய 2,000 பன்றிகள் மேய்ந்துகொண்டிருந்தன. எனவே அந்தப் பிசாசுகள், “பன்றிகளுக்குள்ளே போகும்படி, அவைகளுக்குள்ளே எங்களை அனுப்பும்,” என்று சொல்லுகின்றன. தெளிவாகவே, மாம்ச சிருஷ்டிகளின் உடல்களைத் தாக்குவதில் பிசாசுகள் ஏதோ ஒரு வகையான, இயல்புக்கு மீறிய கொடுமையில் இன்பம் காண்கின்றன. பன்றிகளுக்குள் பிரவேசிக்க இயேசு அவற்றை அனுமதித்தபோது, அந்த 2,000 பன்றிகளும் கூட்டமாய் உயர்ந்த மேட்டிலிருந்து ஓடி கடலில் பாய்ந்து அமிழ்ந்து மாளுகின்றன.

பன்றிகளை மேய்த்துக்கொண்டிருந்தவர்கள் இதைப் பார்த்தபோது, இதைப் பட்டணங்களுக்கும் நகர்ப்புறங்களுக்கும் சென்று அறிவிக்க விரைகிறார்கள். அதைக் கேட்டு ஜனங்கள் நடந்ததைப் பார்க்க வருகிறார்கள். அவர்கள் வந்து பார்க்கும்போது, அதோ, பிசாசுகள் வெளியேறிய அந்த மனிதன், உடுத்தியவனாகவும் தெளிந்த புத்தியுள்ளவனாகவும் இயேசுவின் பாதபடியில் உட்கார்ந்திருப்பதைப் பார்க்கிறார்கள்!

அந்த மனிதன் எப்படி சுகம் பெற்றான் என்பதை நேரில் கண்ட சாட்சிகள் ஜனங்களிடம் அறிக்கை செய்கிறார்கள். அந்தப் பன்றிகளின் விந்தையான மரணத்தையும் பற்றி சொல்லுகிறார்கள். இதைக் கேட்ட மாத்திரத்தில் ஜனங்களைப் பயம் குடிகொள்கிறது. தங்களுடைய பிராந்தியத்தை விட்டுச் சென்றுவிடும்படியாக அவர்கள் இயேசுவை வேண்டிக்கொள்ளுகிறார்கள். அப்படியே அவரும் அதற்கு இணங்கி படவில் ஏறுகிறார். பிசாசு பிடித்திருந்தவன் அவருடனே வருவதற்கு தன்னை அனுமதிக்கும்படியாக வேண்டிக்கொள்கிறான். ஆனால் இயேசு அவனிடம், “நீ உன் இனத்தாரிடத்தில் உன் வீட்டிற்குப் போய், கர்த்தர் [யெகோவா, NW] உனக்கு இரங்கி, உனக்குச் செய்தவைகளையெல்லாம் அவர்களுக்கு அறிவி,” என்கிறார்.

தாம் சுகப்படுத்தும் ஒருவன் அதைப் பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்று இயேசு சொல்வது வழக்கம், ஏனென்றால் ஜனங்கள் உணர்ச்சிவசப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில் முடிவெடுப்பதை அவர் விரும்புகிறதில்லை. ஆனால், இந்த விஷயத்தில் வித்தியாசமாயிருந்தது பொருத்தமே, ஏனென்றால், அநேகமாய், இப்பொழுது இயேசு அங்கு போகும் வாய்ப்பு இல்லாதிருக்கக்கூடிய அந்த மக்களிடம் ஒரு சமயம் பிசாசு பிடித்தவனாயிருந்த அந்த மனிதன் சாட்சி சொல்லிக்கொண்டிருப்பான். மேலும், நன்மை செய்வதற்கு இயேசுவிடமிருந்த வல்லமைக்கு அந்த மனிதன் அங்கு இருப்பதே சாட்சி பகருவதாயிருக்கும். மேலும் பன்றிகள் இழக்கப்பட்டிருப்பதன்பேரில் பரப்பப்படும் எந்த விதமான சாதகமற்ற அறிக்கைகளுக்கும் எதிராக சாட்சியாயிருக்கும்.

ஒரு சமயம் பிசாசுபிடித்திருந்தவனாயிருந்த அந்த மனிதன் இயேசு சொன்னவிதமாகவே போய்விடுகிறான். இயேசு தனக்குச் செய்த எல்லாவற்றையும் அவன் தெக்கப்போலி முழுவதும் அறிவிக்க ஆரம்பிக்கிறான், ஜனங்கள் ஆச்சரியப்படுகிறார்கள். மத்தேயு 8:28–34; மாற்கு 5:1–20; லூக்கா 8:26–39; வெளிப்படுத்துதல் 20:1–3.

▪ பிசாசுபிடித்தவர்கள் இரண்டு பேர் இருக்க, ஏன் ஒருவனிடமாகக் கவனம் திருப்பப்படுகிறது?

▪ எதிர்காலத்தில் தாங்கள் அபிஸில் போடப்படுவார்கள் என்பதைப் பிசாசுகள் அறிந்திருக்கின்றன என்பதை எது காட்டுகிறது?

▪ பிசாசுகள் ஏன் மனிதரையும் மிருகங்களையும் பற்றிக்கொள்ள விரும்புகின்றன?

▪ பிசாசு பிடித்திருந்த அந்த மனிதனுக்குத் தான் செய்ததை அவன் மற்றவர்களிடம் சொல்லும்படியாகச் சொன்னதில் இயேசு ஏன் ஒரு வித்தியாசத்தை உண்டுபண்ணினார்?