Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஜெபத்துக்கான தேவையும் மனத்தாழ்மைக்கான தேவையும்

ஜெபத்துக்கான தேவையும் மனத்தாழ்மைக்கான தேவையும்

அதிகாரம் 94

ஜெபத்துக்கான தேவையும் மனத்தாழ்மைக்கான தேவையும்

முன்பு அவர் யூதேயாவில் இருக்கையில், ஜெபத்தில் விடாமுயற்சியுடன் இருப்பதற்கான முக்கியத்துவத்தைப் பற்றி இயேசு ஓர் உவமையை சொன்னார். இப்போது, எருசலேமுக்கு தம்முடைய கடைசி பயணத்தின் போது, அவர் மறுபடியும் ஜெபத்தில் நிலைத்திருப்பதற்கான தேவையை அழுத்திக் காண்பிக்கிறார். இந்த மேலுமான உவமையை அவர் தம் சீஷர்களிடம் சொல்லும் போது அவர் இன்னும் சமாரியாவிலோ அல்லது கலிலேயாவிலோ ஒருவேளை இருந்திருக்கக்கூடும்:

“ஒரு பட்டணத்திலே ஒரு நியாயாதிபதி இருந்தான்; அவன் தேவனுக்குப் பயப்படாதவனும் மனுஷரை மதியாதவனுமாயிருந்தான். அந்தப் பட்டணத்திலே ஒரு விதவையும் இருந்தாள்; அவள் அவனிடத்தில் போய்: எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் எனக்கு நியாயஞ் செய்ய வேண்டும் என்று விண்ணப்பம் பண்ணினாள். வெகு நாள் வரைக்கும் அவனுக்கு மனதில்லாதிருந்தது. பின்பு அவன்: நான் தேவனுக்குப் பயப்படாமலும் மனுஷரை மதியாமலும் இருந்தும், இந்த விதவை என்னை எப்பொழுதும் தொந்தரவு செய்கிறபடியினால், இவள் அடிக்கடி வந்து என்னை அலட்டாதபடி இவளுக்கு நியாயஞ் செய்ய வேண்டும்.”

பின்பு இயேசு தம் கதையின் பொருத்தத்தை இவ்வாறு சொல்கிறார்: “அநீதியுள்ள அந்த நியாயாதிபதி சொன்னதைச் சிந்தித்துப் பாருங்கள். அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ் செய்யாமலிருப்பாரோ?”

யெகோவா தேவன் எந்த விதத்திலும் அந்த அநீதியுள்ள நியாயாதிபதியைப் போல் இருக்கிறார் என்ற அர்த்தத்தில் இயேசு பேசவில்லை. மாறாக, அநீதியான நியாயாதிபதியும்கூட தொடர்ந்த கெஞ்சுதல்களுக்கு பிரதிபலிப்பார் என்றால், முழுநிறைவாய் நீதியுள்ளவராயும், நல்லவராயும் இருக்கும் கடவுள் தம்முடைய ஜனங்கள் விடாமல் தொடர்ந்து ஜெபிக்கையில் பதிலளிப்பார் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இருக்கக்கூடாது. ஆகையால் இயேசு தொடர்ந்து சொல்கிறார்: “சீக்கிரத்திலே [கடவுள்] அவர்களுக்கு நியாயஞ் செய்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.”

நீதி சிறுமையானவர்களுக்கும் ஏழைகளுக்கும் பெரும்பாலும் மறுக்கப்பட்டு அதிகாரமும் பணமும் மிகுந்தவர்களுக்கு சலுகைகள் அளிக்கப்படுகின்றன. என்றபோதிலும், கடவுள் துன்மார்க்கர் நியாயப்படி தண்டிக்கப்படுவதை பார்த்துக்கொள்வது மட்டுமல்லாமல், தம்முடைய ஊழியர்களுக்கு நித்திய ஜீவனை அளிப்பதன் மூலம் அவர்களுக்கு நீதி செய்யப்படும்படி பார்த்துக் கொள்வார். ஆனால் கடவுள் சீக்கிரத்தில் நியாயஞ் செய்வார் என்பதை எத்தனை பேர் உறுதியாக நம்புகின்றனர்?

ஜெபத்தின் வல்லமையோடு விசேஷமாக விசுவாசத்தை சம்பந்தப்படுத்தி, இயேசு கேட்கிறார்: “மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ?” இக்கேள்வி பதிலளிக்கப்படாமல் விடப்பட்டிருந்தாலும், கிறிஸ்து ராஜ்ய வல்லமையில் வரும் போது அப்பேர்ப்பட்ட விசுவாசம் பொதுவாக இருக்காது என்பது அதன் அர்த்தமாக இருக்கக்கூடும்.

இயேசுவுக்கு செவிகொடுத்துக் கேட்டுக் கொண்டிருப்பவர்களுக்குள் தங்களுடைய விசுவாசத்தில் சுய–நிச்சய உணர்ச்சி கொண்ட சிலர் இருக்கின்றனர். தாங்கள் நீதிமான்கள் என்று அவர்கள் தங்கள் பேரிலேயே நம்பிக்கை வைத்து மற்றவர்களை இழிவாகக் கருதுகின்றனர். இந்தத் தொகுதியில் இயேசுவின் சீஷர்களில் சிலரும்கூட சேர்க்கப்படக்கூடும். ஆகையால் அவர் அப்படிப்பட்டவர்களை நோக்கி பின்வரும் உவமையை சொல்கிறார்:

“இரண்டு மனுஷர் ஜெபம் பண்ணும்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன். பரிசேயன் நின்று: தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப் போலவும், இந்த ஆயக்காரனைப் போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்தி வருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்.”

பரிசேயர்கள் மற்றவர்களை கவர்ச்சிப்பதற்காக பொது இடங்களில் தங்கள் நீதியை காட்டுவதில் பேர் போனவர்கள். தாங்களாகவே ஏற்படுத்திக் கொண்ட உபவாசங்களுக்கான பொதுவான நாட்கள் திங்கட்கிழமைகளும், வியாழக்கிழமைகளும் ஆகும். வயலில் விளைந்த சிறு பூண்டுகளில் கூட பத்தில் ஒரு பங்கை தவறாமல் செலுத்துகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு கூடாரப் பண்டிகையின் போது, பொது ஜனங்களிடமாக அவர்களுக்கிருந்த வெறுப்பு அவர்கள் பின்வருமாறு சொல்லிய போது வெளிப்படுத்தப்பட்டது: “வேதத்தை [அதாவது, அதற்கு கொடுக்கப்பட்ட பரிசேய விளக்கம்] அறியாதவர்களாகிய இந்த ஜனங்கள் சபிக்கப்பட்டவர்கள்.”

அப்படி “சபிக்கப்பட்ட” ஒரு நபரைப் பற்றி இயேசு தம்முடைய உவமையில் தொடர்ந்து சொல்கிறார்: “ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என் மேல் கிருபையாயிரும்.” ஆயக்காரன் [வரி வசூலிப்பவன்] தாழ்மையோடு தன் குறைபாடுகளை ஒப்புக்கொண்டதன் காரணமாக இயேசு இவ்வாறு சொல்கிறார்: “அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப் போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.”

ஆக, இயேசு தாழ்மையோடு இருப்பதற்கான தேவையை மறுபடியும் அழுத்தியுரைக்கிறார். சுய–நீதியுள்ள பரிசேயர்களின் செல்வாக்குள்ள சமுதாயத்தில் வளர்க்கப்பட்டதாலும், ஸ்தானமும் மேற்பதவியும் எப்போதும் வலியுறுத்தப்பட்டதாலும், இயேசுவின் சீஷர்களும்கூட பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பது ஆச்சரியமாய் இல்லை. என்றபோதிலும், மனத்தாழ்மையில் என்னே சிறந்த பாடங்களை இயேசு கற்பிக்கிறார்! லூக்கா 18:1–14; யோவான் 7:49.

▪ அநீதியுள்ள நியாயாதிபதி விதவையின் வேண்டுகோளின்படி ஏன் செய்கிறான், இயேசுவின் உவமையினால் என்ன பாடம் கற்பிக்கப்படுகிறது?

▪ இயேசு வருகையில் எத்தகைய விசுவாசத்தை எதிர்பார்ப்பார்?

▪ பரிசேயன் மற்றும் ஆயக்காரன் பற்றிய தன் உவமையை இயேசு யாரை நோக்கி சொல்கிறார்?

▪ பரிசேயர்களின் என்ன மனநிலை தவிர்க்கப்பட வேண்டியதாயிருக்கிறது?