Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஞாபகார்த்த இராப் போஜனம்

ஞாபகார்த்த இராப் போஜனம்

அதிகாரம் 114

ஞாபகார்த்த இராப் போஜனம்

இயேசு தம் அப்போஸ்தலர்களின் கால்களை கழுவிய பின்பு, சங்கீதம் 41:9-ல் இருக்கும் வசனத்தை மேற்கோளாக எடுத்து சொல்கிறார்: ‘என்னுடனே அப்பம் புசிக்கிறவன் என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான்.’ பின்பு, ஆவியிலே கலங்கி, இவ்வாறு விளக்குகிறார்: “உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான்.”

அப்போஸ்தலர்கள் துக்கமடைந்து, இயேசுவிடம் ஒவ்வொருவராய்க் கேட்கின்றனர்: “நானோ, நானோ?” யூதாஸ்காரியோத்தும்கூட கேட்பதில் சேர்ந்து கொள்கிறான். மேஜையில் இயேசுவுக்கு அடுத்து இருக்கும் யோவான் இயேசுவின் மார்பிலே சாய்ந்து கொண்டு, இவ்வாறு கேட்கிறான்: “ஆண்டவரே, அவன் யார்?”

“என்னுடனே கூடத் தாலத்தில் கையிடுகிறவனாகிய பன்னிருவரிலொருவனே அவன் என்று சொல்லி, மனுஷகுமாரன் தம்மைக் குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்; ஆகிலும், எந்த மனுஷனால் மனுஷகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனுஷனுக்கு ஐயோ! அந்த மனுஷன் பிறவாதிருந்தானானால் அவனுக்கு நலமாயிருக்கும்” என்று இயேசு பதிலளிக்கிறார். அதற்குப் பின்பு சாத்தான் மறுபடியும் யூதாஸிற்குள் திறந்திருக்கும் அவனுடைய தீய இருதயத்தின் வாயிலாக நுழைகிறான். பின்னர் அன்றிரவு, இயேசு பொருத்தமாகவே யூதாஸை “கேட்டின் மகன்” என்று அழைக்கிறார்.

இயேசு இப்போது யூதாஸிடம் இவ்வாறு சொல்கிறார்: “நீ செய்கிறதைச் சீக்கிரமாய்ச் செய்.” இயேசு எதை அர்த்தப்படுத்துகிறார் என்பதை அப்போஸ்தலர்களில் ஒருவரும் புரிந்துகொள்ளவில்லை. யூதாஸ் பணப்பெட்டியை வைத்துக் கொண்டிருப்பதால், “பண்டிகைக்குத் தேவையானவைகளை” வாங்கு அல்லது அவன் தரித்திரருக்கு ஏதாகிலும் கொடுக்க வேண்டும் என்று இயேசு அவனிடம் இவ்வாறு சொல்கிறார் என்று சிலர் கற்பனை செய்துகொள்கின்றனர்.

யூதாஸ் புறப்பட்டுப் போன பின்பு, இயேசு முற்றிலும் புதிய ஒரு கொண்டாட்டத்தை அல்லது ஞாபகார்த்த ஆசரிப்பை தம் உண்மையுள்ள அப்போஸ்தலர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார். அவர் அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம் பண்ணி, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து, இவ்வாறு சொல்கிறார்: “நீங்கள் வாங்கிப் புசியுங்கள்.” அவர் விளக்குகிறார்: “இது உங்களுக்காக கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்.”

ஒவ்வொருவரும் அப்பம் புசித்த பின்பு, இயேசு ஒரு கோப்பை திராட்சரசத்தை எடுக்கிறார், இது பஸ்கா சேவையில் உபயோகிக்கப்பட்ட நான்காவது கோப்பையாக இருக்கக்கூடும். அதன் மேல் நன்றி தெரிவிக்கும் ஜெபத்தையும் சொல்லி, அவர்களுக்குக் கொடுத்து, அதிலிருந்து பானம் பண்ணும்படி கூறிய பின்பு சொல்கிறார்: “இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது.”

ஆகையால் இது உண்மையில் இயேசுவின் மரணத்தின் ஞாபகார்த்தமாயிருக்கிறது. இயேசு சொல்கிறபடி அவரை நினைவுகூருவதற்கு ஒவ்வொரு வருடமும் நிசான் 14-ம் தேதி அது திரும்ப செய்யப்பட வேண்டும். மரண குற்றத் தீர்ப்பிலிருந்து மனிதவர்க்கம் தப்பிப்பிழைக்கும் வழியை ஏற்பாடு செய்வதற்கு இயேசுவும் அவருடைய பரலோக தகப்பனும் என்ன செய்திருக்கின்றனர் என்பதை அது கொண்டாடுபவர்களின் ஞாபகத்துக்கு கொண்டு வரும். கிறிஸ்துவை பின்பற்றுபவர்களாக ஆகும் யூதர்கள் பஸ்காவுக்கு பதிலாக இந்தக் கொண்டாட்டத்தை செய்ய வேண்டும்.

பழைய நியாயப்பிரமாண உடன்படிக்கைக்குப் பதிலாக இயேசுவின் சிந்திப்பட்ட இரத்தத்தினால் அமலுக்கு கொண்டுவரப்பட்ட புதிய உடன்படிக்கை இப்போது இருக்கிறது. ஒரு பக்கத்தில் யெகோவா தேவன், மற்றொரு பக்கத்தில் ஆவியால்-பிறப்பிக்கப்பட்ட 1,44,000 கிறிஸ்தவர்கள் ஆகிய இரண்டு சார்பினருக்கு இடையே இயேசு கிறிஸ்துவால் இது மத்தியஸ்தம் செய்து வைக்கப்படுகிறது. பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு ஏற்பாடு செய்வது மட்டுமல்லாமல், ராஜ-ஆசாரியர்களாலான பரலோக தேசத்தை உருவாக்குவதை இந்த உடன்படிக்கை சாத்தியமாக்குகிறது. மத்தேயு 26:21–29; மாற்கு 14:18–25; லூக்கா 22:19–23; யோவான் 13:18–30; 17:12; 1 கொரிந்தியர் 5:7.

▪ ஒரு கூட்டாளியைப் பற்றிய என்ன பைபிள் தீர்க்கதரிசனத்தை இயேசு மேற்கோளாக சொல்கிறார், அதை எவ்வாறு பொருத்துகிறார்?

▪ அப்போஸ்தலர்கள் ஏன் ஆழ்ந்த துக்கமடைகின்றனர்? அவர்களில் ஒவ்வொருவரும் என்ன கேட்கின்றனர்?

▪ யூதாஸ் என்ன செய்யும்படி இயேசு சொல்கிறார்? ஆனால் மற்ற அப்போஸ்தலர்கள் இந்தக் கட்டளைகளை எவ்வாறு புரிந்துகொள்கின்றனர்?

▪ யூதாஸ் புறப்பட்டு சென்ற பின்பு, என்ன கொண்டாட்டத்தை இயேசு அறிமுகப்படுத்துகிறார்? அது என்ன நோக்கத்தை சேவிக்கிறது?

▪ புதிய உடன்படிக்கையில் உள்ள இரண்டு சார்பினர் யாவர்? அந்த உடன்படிக்கை எதை நிறைவேற்றுகிறது?