Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தகப்பனைப் பற்றிய கேள்வி

தகப்பனைப் பற்றிய கேள்வி

அதிகாரம் 69

தகப்பனைப் பற்றிய கேள்வி

பண்டிகையின் போது, யூதத் தலைவர்களோடு இயேசுவின் கலந்தாலோசிப்பு அதிக மும்முரமாக வளர்கிறது. “நீங்கள் ஆபிரகாமின் சந்ததியாரென்று அறிவேன்” என்று இயேசு ஒப்புக்கொள்கிறார். “ஆனாலும் உங்களுக்குள்ளே என் உபதேசம் இடம் பெறாதபடியால், என்னைக் கொலைசெய்யத் தேடுகிறீர்கள். நான் என் பிதாவினிடத்தில் கண்டதைச் சொல்லுகிறேன், நீங்களும் உங்கள் பிதாவினிடத்தில் கண்டதைச் [கேட்டதைச், NW] செய்கிறீர்கள்.”

அவர்களுடைய தகப்பனை அடையாளங் காண்பிக்காமல் இருந்தாலும், அவர்களுடைய தகப்பன் தம்முடைய தகப்பனிலிருந்து வித்தியாசமானவர் என்பதை இயேசு தெளிவாக்குகிறார். இயேசு யாரை மனதில் கொண்டு பேசுகிறார் என்பதை அறியாதவர்களாய், யூதத் தலைவர்கள் பிரதிபலிக்கின்றனர்: “ஆபிரகாமே எங்கள் பிதா.” கடவுளுடைய நண்பனாயிருந்த ஆபிரகாமின் விசுவாசத்தைப் போன்ற அதே விசுவாசம் அவர்களுக்கிருப்பதாக அவர்கள் உணர்கின்றனர்.

என்றபோதிலும், இயேசு இந்தப் பதிலோடு அவர்களை அதிர்ச்சியடையச் செய்கிறார்: “நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகளாயிருந்தால் ஆபிரகாமின் கிரியைகளைச் செய்வீர்கள்.” உண்மையிலேயே, உண்மையான ஒரு மகன் தன் தகப்பனைப் பார்த்துப் பின்பற்றுகிறான். “தேவனிடத்தில் கேட்டிருக்கிற சத்தியத்தை உங்களுக்குச் சொன்ன மனுஷனாகிய என்னைக் கொல்லத் தேடுகிறீர்கள், ஆபிரகாம் இப்படிச் செய்யவில்லையே.” ஆகையால் இயேசு மறுபடியும் சொல்கிறார்: “நீங்கள் உங்கள் பிதாவின் கிரியைகளைச் செய்கிறீர்கள்.”

இன்னும் அவர்கள் இயேசு யாரைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் ஆபிரகாமின் சட்டப்படியான குமாரர்கள் என்று இவ்வாறு தொடர்ந்து சொல்கின்றனர்: “நாங்கள் வேசித்தனத்தினால் பிறந்தவர்களல்ல.” ஆபிரகாமைப் போன்று மெய் வணக்கத்தாராக தங்களை உரிமைப் பாராட்டிக் கொண்டு, அவர்கள் உறுதியாகக் கூறுகின்றனர்: “ஒரே பிதா எங்களுக்குண்டு, அவர் தேவன்.”

ஆனால் உண்மையிலேயே கடவுள் அவர்களுடைய தகப்பனா? “தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத்தில் அன்பாயிருப்பீர்கள். ஏனென்றால் நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன்; நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுப்பினார். என் வசனத்தை நீங்கள் ஏன் அறியாமலிருக்கிறீர்கள்?” என்று இயேசு பிரதிபலிக்கிறார்.

இயேசு தம்மை மறுத்து விட்டதன் விளைவுகளை இந்த மதத்தலைவர்களுக்குக் காண்பிக்க முயற்சி செய்திருக்கிறார். ஆனால் இப்போது அவர் நேரடியாக சொல்கிறார்: “நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்.” பிசாசு என்ன வகையான தகப்பன்? இங்கே அவனை மனுஷ கொலைபாதகன் என்று அடையாளங் காட்டி சொல்கிறார்: “அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறான்.” ஆகையால் இயேசு இவ்வாறு முடிக்கிறார்: “தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனங்களுக்குச் செவி கொடுக்கிறான்; நீங்கள் தேவனால் உண்டாயிராதபடியினால் செவிகொடாமலிருக்கிறீர்கள்.”

இயேசுவின் கண்டனத்தினால் கோபமடைந்தவர்களாய், யூதர்கள் பதிலளிக்கின்றனர்: “உன்னைச் சமாரியனென்றும், பிசாசு பிடித்தவனென்றும் நாங்கள் சொல்லுகிறது சரிதானே?” சமாரியர்கள் யூதர்களால் பகைக்கப்பட்டதன் காரணமாக “சமாரியன்” என்ற பதம் இகழ்ச்சியையும் வெறுப்பையும் காண்பிக்கும் ஒரு சொற்றொடராக உபயோகப்படுத்தப்படுகிறது.

ஒரு சமாரியனாக இருப்பதைப் பற்றிய இகழ்ச்சியான பழிச்சாட்டை புறக்கணித்து விட்டு இயேசு பிரதிபலிக்கிறார்: “நான் பிசாசு பிடித்தவனல்ல, நான் என் பிதாவைக் கனம் பண்ணுகிறேன், நீங்கள் என்னைக் கனவீனம் பண்ணுகிறீர்கள்.” தொடர்ந்து இயேசு அதிர்ச்சிதரத்தக்க வாக்கை செய்கிறார்: “ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை.” அவரைப் பின்பற்றுபவர்கள் எல்லாரும் சொல்லர்த்தமாக மரணத்தைக் காணமாட்டார்கள் என்பதாக இயேசு அர்த்தப்படுத்தவில்லை. மாறாக, அவர்கள் நித்திய அழிவு அல்லது அதிலிருந்து உயிர்த்தெழுதல் இல்லாத “இரண்டாம் மரணத்தை” காண மாட்டார்கள்.

என்றபோதிலும், யூதர்கள் இயேசுவின் வார்த்தைகளை சொல்லர்த்தமாக எடுத்துக் கொள்கின்றனர். ஆகையால், அவர்கள் சொல்கின்றனர்: “நீ பிசாசு பிடித்தவனென்று இப்பொழுது அறிந்திருக்கிறோம். ஆபிரகாமும் தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள். நீயோ: ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால் என்றென்றைக்கும் மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்கிறாய். எங்கள் பிதாவாகிய ஆபிரகாமிலும் நீ பெரியவனோ? அவர் மரித்தார், தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள்; உன்னை நீ எப்படிப்பட்டவனாக்குகிறாய்?”

இந்த முழு கலந்தாலோசிப்பிலும் இந்த மனிதர்களுக்கு அவர் தாம் வாக்குப் பண்ணப்பட்ட மேசியா என்ற உண்மையை இயேசு சுட்டிக் காட்டிக்கொண்டிருக்கிறார் என்பது தெளிவாயிருக்கிறது. ஆனால் தம்முடைய அடையாளத்தைப் பற்றிய அவர்களுடைய கேள்விக்கு நேரடியாக பதிலளிப்பதற்குப் பதிலாக, இயேசு சொல்கிறார்: “என்னை நானே மகிமைப்படுத்தினால் அந்த மகிமை வீணாயிருக்கும், என் பிதா என்னை மகிமைப்படுத்துகிறவர், அவரை உங்கள் தேவனென்று நீங்கள் சொல்லுகிறீர்கள். ஆயினும் நீங்கள் அவரை அறியவில்லை, நான் அவரை அறிந்திருக்கிறேன்; அவரை அறியேன் என்று சொல்வேனாகில் உங்களைப் போல நானும் பொய்யனாயிருப்பேன்.”

தொடர்ந்து, இயேசு விசுவாசமுள்ள ஆபிரகாமை மறுபடியும் குறிப்பிட்டு சொல்கிறார்: “உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான்; கண்டு களிகூர்ந்தான்.” ஆம், ஆபிரகாம் விசுவாசக் கண்களோடு வாக்குப்பண்ணப்பட்ட மேசியாவின் வருகைக்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். நம்பிக்கையற்றவர்களாய், யூதர்கள் பிரதிபலிக்கின்றனர்: “உனக்கு இன்னும் ஐம்பது வயதாகவில்லையே, நீ ஆபிரகாமைக் கண்டாயோ?”

“ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்று இயேசு பதிலளிக்கிறார். உண்மையில், பரலோகத்தில் ஒரு வல்லமையான ஆவி ஆளாக, மனிதனாவதற்கு முன் இருந்த தம் வாழ்க்கையை இயேசு குறிப்பிடுகிறார்.

ஆபிரகாமுக்கு முன்பே தாம் இருந்ததாக சொன்ன இயேசுவின் உரிமைப் பாராட்டலால் அதிக கோபமடைந்து, யூதர்கள் அவர் மேல் எறிய கல்லுகளை எடுக்கின்றனர். ஆனால் அவர் மறைந்து கொண்டு காயப்படாமல் ஆலயத்தை விட்டு வெளியே செல்கிறார். யோவான் 8:37–59; வெளிப்படுத்துதல் 3:14; 21:8.

▪ தமக்கும் தம்முடைய விரோதிகளுக்கும் வித்தியாசமான தகப்பன்மார்கள் இருக்கின்றனர் என்பதை இயேசு எவ்வாறு காண்பிக்கிறார்?

▪ யூதர்கள் இயேசுவை ஒரு சமாரியன் என்று அழைப்பதில் உள்ள உட்கருத்து என்ன?

▪ அவரைப் பின்பற்றுபவர்கள் மரணத்தைப் பார்ப்பதில்லை என்று என்ன கருத்தில் இயேசு அர்த்தப்படுத்தினார்?