Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தயாராயிருங்கள்!

தயாராயிருங்கள்!

அதிகாரம் 78

தயாராயிருங்கள்!

பிறர் பொருளை இச்சிப்பதைப் பற்றியும், பொருள் உடைமைகளுக்கு மட்டுக்கு மீறிய கவனம் செலுத்துவதைப் பற்றியும் ஜனங்களை எச்சரித்த பின்பு, இயேசு உற்சாகப்படுத்துகிறார்: “பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார்.” இவ்வாறு வெறும் ஒரு சிறு எண்ணிக்கையான ஆட்கள் மட்டுமே (1,44,000 என்று பின்னர் அடையாளங்காட்டப்பட்டனர்) பரலோக ராஜ்யத்தில் இருப்பர் என்று இயேசு வெளிப்படுத்துகிறார். நித்திய ஜீவனைப் பெறப் போகிறவர்களில் பெரும்பான்மையோர், அந்த ராஜ்யத்தின் பூமிக்குரிய பிரஜைகளாக இருப்பர்.

என்னே ஒரு மகத்தான பரிசு, “அந்த ராஜ்யம்”! அதைப் பெற்றுக் கொள்ளும் போது சீஷர்களுக்கு இருக்க வேண்டிய சரியான பிரதிபலிப்பை விவரிப்பவராய் இயேசு அவர்களைத் துரிதப்படுத்துகிறார்: “உங்களுக்கு உள்ளவைகளை விற்றுப் பிச்சை கொடுங்கள்.” ஆம், அவர்கள் தங்கள் சொத்துக்களை மற்றவர்கள் ஆவிக்குரிய விதத்தில் பயனடைய உபயோகிக்க வேண்டும். இவ்வாறு ‘என்றுமே குறையாத பொக்கிஷத்தை பரலோகத்திலே’ சேமித்து வைக்க வேண்டும்.

அடுத்து இயேசு அவருடைய திரும்பி வருதலுக்காக தயாராய் இருக்கும்படி தம்முடைய சீஷர்களுக்கு புத்திமதி கொடுக்கிறார். அவர் சொல்வதாவது: “உங்கள் அரைகள் கட்டப்பட்டதாகவும், உங்கள் விளக்குகள் எரிகிறதாகவும், தங்கள் எஜமான் கலியாணத்திலிருந்து வந்து தட்டும் போது, உடனே அவருக்குத் திறக்கும்படி எப்பொழுது வருவார் என்று காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாகவும் இருங்கள். எஜமான் வரும் போது, விழித்திருக்கிறவர்களாகக் காணப்படுகிற ஊழியக்காரரே பாக்கியவான்கள். அவர் அரை கட்டிக் கொண்டு, அவர்களைப் பந்தியிருக்கச் செய்து, சமீபமாய் வந்து, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.”

இந்த உவமையில் எஜமான் திரும்பி வரும் போது ஊழியர்கள் தயாராய் இருப்பது, தங்கள் நீண்ட அங்கிகளை இழுத்து அரை கட்டிக் கொண்டு, நன்கு எரிகின்ற விளக்குகளின் கீழ் தங்களுடைய வேலைகளை அவர்கள் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருப்பதாக காண்பிக்கப்படுகிறது. இயேசு விளக்குகிறார்: “அவர் இரண்டாம் ஜாமத்திலாவது (இரவு 9 மணி முதல் நள்ளிரவு வரை) மூன்றாம் ஜாமத்திலாவது (நள்ளிரவிலிருந்து ஏறக்குறைய காலை 3 மணி வரை) வந்து, அவர்கள் அப்படியே இருக்கக் கண்டால், அவ்வூழியக்காரர் பாக்கியவான்கள்.”

அசாதாரணமான விதத்தில் எஜமான் தம் ஊழியக்காரர்களுக்கு பலனளிக்கிறார். அவர் அவர்களை மேசையில் உட்காரச் செய்து அவர்களுக்கு உணவளிக்க ஆரம்பிக்கிறார். அவர் அவர்களை அடிமைகளாக அல்லாமல், உண்மையான நண்பர்களைப் போல் நடத்துகிறார். அவருடைய வருகைக்காக காத்திருக்கும் போது அவர்கள் தங்கள் எஜமானுக்காக இரவு முழுவதும் தொடர்ந்து வேலை செய்ததற்கு என்னே ஒரு சிறந்த வெகுமதி! இயேசு இவ்வாறு முடிக்கிறார்: “அந்தப்படியே நீங்கள் நினையாத நேரத்தில் மனுஷகுமாரன் வருவார், ஆகையால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள்.

பேதுரு இப்பொழுது கேட்கிறான்: “ஆண்டவரே, இந்த உவமையை எங்களுக்கு மாத்திரம் சொல்லுகிறீரோ, எல்லாருக்கும் சொல்லுகிறீரோ?”

நேரடியாக பதிலளிப்பதற்குப் பதிலாக, இயேசு மற்றொரு உவமையைக் கொடுக்கிறார்: “பணிவிடைக்காரருக்குத் தகுதியான காலத்திலே படி கொடுக்கும்படி எஜமான் அவர்கள் மேல் அதிகாரியாக வைக்கத்தக்க உண்மையுள்ள . . . விசாரணைக்காரன் யாவன்? எஜமான் வரும் போது அப்படியே செய்கிறவனாய்க் காணப்படுகிற ஊழியக்காரன் பாக்கியவான். தனக்குள்ளதெல்லாவற்றின் மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.”

அந்த “எஜமான்” இயேசு கிறிஸ்து என்பது தெளிவாக இருக்கிறது. “விசாரணைக்காரன்” என்பவன் சீஷர்கள் அடங்கிய “சிறு மந்தை”யை ஒரு கூட்டுத் தொகுதியாக படமாகக் குறிப்பிடுகிறது. “பணிவிடைக்காரர்” என்பது பரலோக ராஜ்யத்தைப் பெறப் போகும் 1,44,000 பேர் அடங்கிய இதே தொகுதியைத் தான் குறிப்பிடுகிறது, ஆனால் இந்தச் சொற்றொடர், தனிப்பட்ட நபர்களாக அவர்களுடைய வேலையை சிறப்பித்துக் காட்டுகிறது. உண்மையுள்ள விசாரணைக்காரன் கவனித்துக் கொள்வதற்காக நியமிக்கப்பட்டு கொடுக்கப்பட்ட “உடைமைகள்” (NW) ராஜ்யத்தின் பூமிக்குரிய பிரஜைகள் உட்பட பூமியில் எஜமானின் அரசைச் சார்ந்த அக்கறைகளைக் குறிப்பிடுகிறது.

அந்த விசாரணைக்காரன் அல்லது அடிமை வகுப்பாரின் எல்லா அங்கத்தினர்களும் உண்மையுள்ளவர்களாயிருக்க மாட்டார்கள் என்ற சாத்தியத்தை இயேசு குறிப்பிட்டுக் காட்டுபவராய் உவமையை தொடர்ந்து சொல்கிறார்: “அந்த ஊழியக்காரனோ, என் எஜமான் வர நாள் செல்லும் என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டு, வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும் அடிக்கவும், புசித்துக் குடித்து வெறிக்கவும் தலைப்பட்டால், அவன் நினையாத நாளில் . . . , அந்த ஊழியக்காரனுடைய எஜமான் வந்து, அவனைக் கடினமாய்த் தண்டிப்பான்.”

அவருடைய வருகை யூதர்களுக்கு கடுமையான நேரத்தை கொண்டு வந்திருக்கிறது, ஏனென்றால் சிலர் அவருடைய போதகத்தை ஏற்றுக்கொள்கின்றனர், மற்றவர்கள் அதை மறுத்து விடுகின்றனர் என்று இயேசு குறிப்பிடுகிறார். மூன்று வருடங்களுக்கு முன்பு அவர் தண்ணீரினால் முழுக்காட்டப்பட்டார், ஆனால் இப்போது அவர் மரணத்துக்குள் முழுக்காட்டப்படுவது சீக்கிரத்தில் முடிவடையப் போகிறது. “அது முடியுமளவும் எவ்வளவோ நெருக்கப்படுகிறேன்” என்று அவர் சொல்கிறார்.

இந்தக் குறிப்புகளை தம்முடைய சீஷர்களிடமாக சொல்லிய பிறகு, இயேசு மறுபடியும் ஜனக்கூட்டத்தாரிடம் பேசுகிறார். அவர் யார் என்பதையும் அதனுடைய முக்கியத்துவத்தையும் பற்றிய தெளிவான அத்தாட்சியை அவர்கள் பிடிவாதமாய் ஏற்க மறுப்பதைக் குறித்து அவர் புலம்புகிறார். “மேற்கே மேகம் எழும்புகிறதை நீங்கள் காணும்போது, மழை வருமென்று சொல்லுகிறீர்கள்; அந்தப்படியுமாகும். தென்றல் அடிக்கிறதை நீங்கள் காணும்போது உஷ்ணம் உண்டாகுமென்று சொல்லுகிறீர்கள், அந்தப்படியுமாகும். மாயக்காரரே, பூமியின் தோற்றத்தையும் வானத்தின் தோற்றத்தையும் நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, இந்தக் காலத்தையோ நிதானியாமற் போகிறதென்ன?” லூக்கா 12:32–59.

▪ “சிறு மந்தையில்” எத்தனை பேர் அடங்குவர், அவர்கள் எதை பெற்றுக் கொள்கின்றனர்?

▪ தம்முடைய ஊழியர்கள் தயாராய் இருப்பதற்கான தேவையை இயேசு எவ்வாறு அழுத்திக் காண்பிக்கிறார்?

▪ இயேசுவின் உவமையில் யார் அந்த “எஜமான்,” “விசாரணைக்காரன்,” “பணிவிடைக்காரர்,” “உடைமைகள்”?