Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

திராட்சத்தோட்ட உவமைகளால் வெளியரங்கமாக்கப்படுதல்

திராட்சத்தோட்ட உவமைகளால் வெளியரங்கமாக்கப்படுதல்

அதிகாரம் 106

திராட்சத்தோட்ட உவமைகளால் வெளியரங்கமாக்கப்படுதல்

இயேசு ஆலயத்தில் இருக்கிறார். எந்த அதிகாரத்தினால் அவர் காரியங்களைச் செய்து கொண்டிருந்தார் என்பதை அறிய விரும்பிய மதத்தலைவர்களை அவர் அப்போது தான் குழப்பமடையச் செய்தார். அவர்கள் தங்கள் குழப்பத்திலிருந்து மீண்டு வருவதற்கு முன்பே இயேசு இவ்வாறு கேட்கிறார்: “உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது?” பின்பு ஓர் உவமையின் மூலமாக, அவர்கள் உண்மையில் என்ன வகையான ஆட்களாய் இருக்கின்றனர் என்பதை அவர் அவர்களுக்கு காண்பிக்கிறார்.

இயேசு சொல்கிறார்: “ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள்; மூத்தவனிடத்தில் அவன் வந்து: மகனே, நீ போய் இன்றைக்குத் திராட்சத் தோட்டத்தில் வேலை செய் என அவனோ: போகிறேன் ஐயா என்றான்; எனினும் போகவில்லை. இரண்டாம் மகனிடத்திலும் அவன் வந்து அப்படியே சொல்ல அவன்: போகமாட்டேனென்று சொல்லியும் பின்பு அவன் மனஸ்தாபப்பட்டுப் போனான். இவ்விருவரில் எவன் தகப்பனுடைய சித்தத்தின்படி செய்தவன்?” என்று இயேசு கேட்கிறார்.

“பிந்தினவன்தான்” என்று அவருடைய எதிராளிகள் பதிலளிக்கின்றனர்.

ஆகையால் இயேசு இவ்வாறு விளக்குகிறார்: “ஆயக்காரரும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.” ஆயக்காரரும் வேசிகளும் முதலில் கடவுளை சேவிக்க மறுத்தனர். ஆனால், பின்னர் இரண்டாவது பிள்ளையைப் போன்று, அவர்கள் மனந்திரும்பி அவரைச் சேவித்தனர். மறுபட்சத்தில், மதத் தலைவர்கள் முதல் பிள்ளையைப் போன்று கடவுளை சேவிப்பதாக உரிமைபாராட்டிக் கொண்டாலும், இயேசு அவர்களைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார்: “யோவான் [ஸ்நானன்] நீதி மார்க்கமாய் உங்களிடத்தில் வந்திருந்தும் நீங்கள் அவனை விசுவாசிக்கவில்லை; ஆயக்காரரும் வேசிகளுமோ அவனை விசுவாசித்தார்கள்; அதை நீங்கள் கண்டும், அவனை விசுவாசிக்கும்படியாகப் பின்பாகிலும் மனஸ்தாபப்படவில்லை.”

அந்த மதத்தலைவர்களின் தோல்வி வெறுமென கடவுளை சேவிப்பதை புறக்கணித்தது மட்டுமல்ல என்று இயேசு அடுத்து காண்பிக்கிறார். இல்லை, அவர்கள் உண்மையில் பொல்லாத, துன்மார்க்க மனிதர்களாய் இருக்கின்றனர். இயேசு சொல்கிறார்: “வீட்டெஜமானாகிய ஒரு மனுஷன் இருந்தான், அவன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலியடைத்து, அதில் ஒரு ஆலையை நாட்டி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரருக்கு அதைக் குத்தகையாக விட்டு, புறதேசத்துக்குப் போயிருந்தான். கனிகாலம் சமீபித்த போது, அதன் கனிகளை வாங்கிக் கொண்டு வரும்படி தன் ஊழியக்காரரைத் தோட்டக்காரரிடத்தில் அனுப்பினான். தோட்டக்காரர் அந்த ஊழியக்காரரைப் பிடித்து, ஒருவனை அடித்து, ஒருவனைக் கொலை செய்து, ஒருவனைக் கல்லெறிந்து கொன்றார்கள். பின்னும் அவன் முந்தினவர்களிலும் அதிகமான வேறே ஊழியக்காரரை அனுப்பினான்; அவர்களையும் அப்படியே செய்தார்கள்.”

“வீட்டெஜமானாகிய” யெகோவா தேவன், தம்முடைய “திராட்சத்தோட்டத்தின்” “தோட்டக்காரரிடம்” அனுப்பிய “ஊழியக்காரர்கள்” தீர்க்கதரிசிகள் ஆவர். இந்தத் தோட்டக்காரர்கள் இஸ்ரவேல் தேசத்தின் முதன்மையான பிரதிநிதிகள். இந்தத் தேசம் கடவுளின் “திராட்சத்தோட்டம்” என்று பைபிள் அடையாளங் காட்டுகிறது.

“தோட்டக்காரர்கள்” “ஊழியக்காரரை” மோசமாக நடத்தி கொலை செய்ததால், இயேசு இவ்வாறு விளக்குகிறார்: “கடைசியிலே அவன்: [திராட்சத்தோட்டத்து எஜமான்] என் குமாரனுக்கு அஞ்சுவார்கள் என்று சொல்லி, தன் குமாரனை அவர்களிடத்தில் அனுப்பினான். தோட்டக்காரர் குமாரனைக் கண்டபோது: இவன் சுதந்தரவாளி; இவனைக் கொன்று, இவன் சுதந்தரத்தைக் கட்டிக் கொள்வோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு; அவனைப் பிடித்துத் திராட்சத் தோட்டத்திற்குப் புறம்பே தள்ளிக் கொலைசெய்தார்கள்.”

இப்போது, மதத் தலைவர்களை நோக்கி இயேசு இவ்வாறு கேட்கிறார்: “திராட்சத் தோட்டத்தின் எஜமான் வரும் போது, அந்தத் தோட்டக்காரரை என்ன செய்வான்.”

“அந்தக் கொடியவரைக் கொடுமையாய் அழித்து, ஏற்ற காலங்களில் தனக்குக் கனிகளைக் கொடுக்கத்தக்க வேறே தோட்டக்காரரிடத்தில் திராட்சத்தோட்டத்தைக் குத்தகையாகக் கொடுப்பான்” என்று அந்த மதத் தலைவர்கள் பதிலளிக்கின்றனர்.

யெகோவாவின் “திராட்சத்தோட்டமாகிய” இஸ்ரவேலின் “தோட்டக்காரர்களில்” அவர்களும் சேர்க்கப்பட்டிருப்பதால், தாங்கள் அறியாமலேயே தங்கள் மீது இவ்வாறு நியாயத்தீர்ப்பை அறிவித்துக் கொள்கின்றனர். இப்படிப்பட்ட தோட்டக்காரர்களிடமிருந்து யெகோவா எதிர்பார்க்கும் கனியானது உண்மையான மேசியாவாகிய அவருடைய குமாரனில் விசுவாசம் வைப்பதாகும். இப்பேர்ப்பட்ட கனியை அவர்கள் கொடுக்கத் தவறினதினால் இயேசு இவ்வாறு எச்சரிக்கிறார்: “வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று, அது கர்த்தராலே [யெகோவாவாலே, NW] ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது என்று நீங்கள் வேதத்தில் [சங்கீதம் 118:22, 23-ல்] ஒருக்காலும் வாசிக்கவில்லையா? ஆகையால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும். இந்தக் கல்லின் மேல் விழுகிறவன் நொறுங்கிப் போவான்; இது எவன் மேல் விழுமோ அவனை நசுக்கிப் போடும்.”

இயேசு அவர்களைப் பற்றிதான் பேசிக்கொண்டிருக்கிறார் என்பதை வேதபாரகரும் பிரதான ஆசாரியரும் இப்போது கண்டுகொண்டனர், உரிமையுள்ள “சுதந்தரவாளி”யாகிய அவரை அவர்கள் கொலை செய்ய விரும்புகின்றனர். ஆகையால் ஒரு தேசமாக கடவுளுடைய ராஜ்யத்தில் ஆட்சியாளர்களாக இருக்கும் சிலாக்கியம் அவர்களிடமிருந்து எடுக்கப்படும், ‘திராட்சத் தோட்டக்காரர்களாலான’ ஒரு புதிய தேசம் உருவாக்கப்படும், அது தகுதியான பழங்களைக் கொடுக்கும்.

இயேசுவை ஒரு தீர்க்கதரிசியாக கருதும் ஜனக்கூட்டத்தாருக்குப் பயப்படுவதால் மதத்தலைவர்கள் இந்தச் சமயம் அவரைக் கொலை செய்ய முயற்சி செய்யவில்லை. மத்தேயு 21:28–46, தி.மொ.; மாற்கு 12:1–12; லூக்கா 20:9–19; ஏசாயா 5:1–7.

▪ இயேசுவின் முதல் உவமையில் இருக்கும் இரண்டு பிள்ளைகள் யாரை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்?

▪ இரண்டாவது உவமையில், “வீட்டெஜமான்,” “திராட்சத்தோட்டம்,” “தோட்டக்காரர்,” “ஊழியக்காரர்,” “சுதந்தரவாளி,” ஆகியோர் யாரை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்?

▪ ‘திராட்சத்தோட்டக்காரர்களுக்கு’ என்ன சம்பவிக்கும், யார் அவர்களுக்குப் பதிலாக நியமிக்கப்படுவர்?