Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

துன்புறுத்தலை எதிர்ப்படுவதற்காக ஆயத்தம்

துன்புறுத்தலை எதிர்ப்படுவதற்காக ஆயத்தம்

அதிகாரம் 50

துன்புறுத்தலை எதிர்ப்படுவதற்காக ஆயத்தம்

தம்முடைய அப்போஸ்தலர்களுக்குப் பிரசங்க வேலையை நிறைவேற்றுவதற்குரிய வழிமுறைகளைப் பற்றி கற்பித்த பிற்பாடு, இயேசு எதிர்ப்பவர்களைக் குறித்து அவர்களை எச்சரிக்கிறார். அவர் சொல்வதாவது: “ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; . . . மனுஷரைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் உங்களை ஆலோசனைச் சங்கங்களுக்கு ஒப்புக்கொடுத்து, தங்கள் ஜெப ஆலயங்களில் உங்களை வாரினால் அடிப்பார்கள். . . . என்னிமித்தம் அதிபதிகளுக்கு முன்பாகவும், ராஜாக்களுக்கு முன்பாகவும் கொண்டுபோகப்படுவீர்கள்.”

தம்மைப் பின்பற்றுகிறவர்கள் எதிர்ப்படவிருக்கும் கடுமையான துன்புறுத்தலின் மத்தியிலும் திரும்பவும் நம்பிக்கையூட்டும் வகையில் அவர் வாக்களிப்பதாவது: “அவர்கள் உங்களை ஒப்புக்கொடுக்கும்போது: எப்படிப் பேசுவோம் என்றும், என்னத்தைப் பேசுவோம் என்றும், கவலைப்படாதிருங்கள்; நீங்கள் பேசவேண்டுவது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும். பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல, உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர்.”

மேலும் “சகோதரன் தன் சகோதரனையும், தகப்பன் தன் பிள்ளையையும், மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள்; பெற்றாருக்கு விரோதமாகப் பிள்ளைகள் எழும்பி அவர்களைக் கொலைசெய்வார்கள்” என்று தொடர்ந்து சொல்லுகிறார். மேலும், “என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்; முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்” என்கிறார்.

பிரசங்கிப்பது முதன்மையான முக்கியத்துவமுள்ளதாக இருக்கிறது. ஆகவே வேலையைத் தடையில்லாமல் செய்து முடிப்பதற்காக விவேகத்தின் அவசியத்தை வலியுறுத்துகிறார். “ஒரு பட்டணத்தில் உங்களைத் துன்பப்படுத்தினால் மறு பட்டணத்திற்கு ஓடிப்போங்கள்; மனுஷகுமாரன் வருவதற்குள்ளாக நீங்கள் இஸ்ரவேலருடைய பட்டணங்களையெல்லாம் சுற்றிமுடியாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றார்.

இயேசு இந்த அறிவுரை எச்சரிக்கை மற்றும் ஊக்குவிப்பையும் 12 அப்போஸ்தலர்களுக்குக் கொடுத்தார் என்பது மெய்தான்; ஆனால் அவருடைய மரணத்துக்கும் உயிர்த்தெழுதலுக்கும் பின்பு உலகம் முழுவதிலும் செய்யப்படவிருந்த பிரசங்க வேலையில் பங்குகொள்பவர்களுக்கும்கூட இவை பொருந்துவதாக இருக்கும். அப்போஸ்தலர்கள் இஸ்ரவேலரிடமாக பிரசங்கிக்கும்படி அனுப்பப்பட்டபோதிலும் அவருடைய சீஷர்கள் இஸ்ரவேலரால் மாத்திரமல்ல எல்லாராலும் பகைக்கப்படுவார்கள் என்று இயேசு சொன்ன உண்மையினால் இது காண்பிக்கப்படுகிறது. மேலுமாக இயேசு அவர்களை அனுப்பி வைத்த அந்தக் குறுகிய கால பிரசங்கிப்பின்போது அவர்கள் அதிபதிகளுக்கும் ராஜாக்களுக்கும் முன்பாகக் கொண்டுவரப்படவில்லை. மேலுமாக விசுவாசிகள் அப்போது அவர்களுடைய குடும்ப அங்கத்தினரால் மரணத்துக்கு ஒப்புக்கொடுக்கப்படவில்லை.

ஆகவே இயேசு அவருடைய சீஷர்கள் “மனுஷகுமாரன் வருவதற்குள்ளாக” பட்டணங்களையெல்லாம் சுற்றி முடியாது என்பதாகச் சொல்வதன் மூலம், மகிமைப்படுத்தப்பட்ட அரசராக அர்மகெதோனில் யெகோவாவின் மரண தண்டனைத் தீர்ப்பை நிறைவேற்றும் அதிகாரியாக இயேசு கிறிஸ்து வருவதற்கு முன்பாக குடியிருக்கப்பட்ட பூமி முழுவதிலும் கடவுளுடைய ஸ்தாபிக்கப்பட்ட ராஜ்யத்தைப் பற்றிய பிரசங்கிப்பை செய்து முடிக்கக்கூடாதவர்களாக இருப்பார்கள் என்பதை தீர்க்கதரிசனமாக நமக்குச் சொல்லிக்கொண்டிருந்தார்.

தொடர்ந்து அவர் பிரசங்கிப்பின் சம்பந்தமாக அறிவுரைகளைக் கொடுக்கையில் இயேசு சொன்னதாவது: “சீஷன் தன் போதகனிலும், வேலைக்காரன் தன் எஜமானிலும் மேற்பட்டவனல்ல.” ஆகவே இயேசுவை பின்பற்றுகிறவர்கள், அவர் தேவனுடைய ராஜ்யத்தைப் பிரசங்கித்ததற்காக அனுபவித்தது போன்றே அதேவிதமாக கொடுமையாக நடத்தப்படுவதையும் துன்புறுத்தப்படுவதையும் எதிர்ப்பார்க்க வேண்டும். என்றபோதிலும் அவர்களுக்கு அவர் அறிவுரை கூறுவதாவது: “ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே [கெஹென்னாவிலே, NW] அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.”

இந்தக் காரியத்தில் இயேசு ஒரு முன்மாதிரியை வைத்தார். எல்லா வல்லமையுமுள்ள யெகோவா தேவனிடமாகத் தம்முடைய உண்மைத்தவறாமையை விட்டுக்கொடுப்பதற்குப் பதிலாக, அவர் மரணத்தைப் பயமில்லாமல் சகிப்பவராக இருந்தார். ஆம், யெகோவா தேவன் ஒருவருடைய “ஆத்துமாவை” (இந்த இடத்தில் உயிருள்ள ஆத்துமாவாக ஒருவருடைய எதிர்கால எதிர்ப்பார்ப்புகளை என்றர்த்தப்படுகிறது) அழிக்க வல்லவராக இருப்பது மட்டுமல்லாமல் நித்திய ஜீவனை அனுபவித்துக் களிக்க ஒருவரை உயிர்த்தெழுப்பவும் முடியும். யெகோவா தேவன் என்னே ஓர் அன்பான, இரக்கமுள்ள பரம தகப்பன்!

அடுத்ததாக இயேசு அவர்களிடமாக யெகோவா தேவனின் அன்புள்ள அக்கறையை உயர்த்திக் காண்பிக்கும் ஓர் உவமையினால் தம்முடைய சீஷர்களை ஊக்குவிக்கிறார்: “ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா?” என்று அவர் கேட்கிறார். “ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது. உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது. ஆதலால், பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.”

இயேசு அறிவிக்கும்படியாக தம்முடைய சீஷர்களிடம் ஒப்புவித்த ராஜ்ய செய்தியை ஒரு சில குடும்ப அங்கத்தினர்கள் ஏற்றுக்கொண்டு மற்றவர்கள் அதை புறக்கணிக்கையில், அது குடும்பங்களில் பிரிவினைகளை உண்டாக்கும். “பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்” என்பதாக அவர் விளக்குகிறார். “சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்பவந்தேன்.” இதன் காரணமாக, குடும்ப அங்கத்தினர் ஒருவர் பைபிள் சத்தியத்தை ஏற்றுக்கொள்ள தைரியம் தேவைப்படுகிறது. “தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல,” மேலும் “மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல” என்று இயேசு சொல்லுகிறார்.

தம்முடைய அறிவுரைகளை முடிப்பவராக இயேசு, தம்முடைய சீஷர்களை ஏற்றுக்கொள்பவன் தம்மையே ஏற்றுக்கொள்பவனாக விளக்குகிறார். “சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியவரில் ஒருவனுக்கு ஒரு கலசம் தண்ணீர் மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற்போகான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.” மத்தேயு 10:16–42.

▪ தம்முடைய சீஷர்களுக்கு இயேசு என்ன எச்சரிக்கைகளைக் கொடுத்தார்?

▪ எப்படிப்பட்ட ஊக்குவிப்பையும் ஆறுதலையும் அவர்களுக்குத் தந்தார்?

▪ இயேசுவின் போதனைகள் ஏன் நவீன நாளைய கிறிஸ்தவர்களுக்கும் பொருந்துகின்றன?

▪ எந்தவிதத்தில் இயேசுவின் சீஷன் அவனுடைய போதகரைக் காட்டிலும் மேம்பட்டவன் அல்ல?