Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தொழுவங்களும் மேய்ப்பனும்

தொழுவங்களும் மேய்ப்பனும்

அதிகாரம் 80

தொழுவங்களும் மேய்ப்பனும்

இயேசு தேவாலயப் பிரதிஷ்டை பண்டிகை அல்லது ஹனூக்காவிற்காக எருசலேமுக்கு வந்திருக்கிறார், அது ஆலயத்தை யெகோவாவுக்கு மறுபடியும் பிரதிஷ்டை செய்ததற்காக கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். ஏறக்குறைய 200 வருடங்களுக்கு முன்பு, பொ.ச.மு. 168-ல் நான்காம் அன்டியாக்கஸ் எப்பிஃபேனஸ் எருசலேமை கைப்பற்றி, ஆலயத்தையும் அதனுடைய பலிபீடத்தின் தெய்வீகத் தன்மையையும் அவமதிப்புச் செய்தான். என்றபோதிலும், மூன்று வருடங்களுக்குப் பின் எருசலேம் மறுபடியும் கைப்பற்றப்பட்டது, ஆலயம் மறுபடியும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதற்குப் பிறகு, வருடாந்தர மறுபிரதிஷ்டை கொண்டாட்டம் நடத்தப்பட்டது.

பிரதிஷ்டை பண்டிகை கிஸ்லேயு 25-ம் நாள் நடைபெறுகிறது, நம்முடைய நவீன நாட்காட்டியில் நவம்பர் மாத கடைசி பாகத்துக்கும் டிசம்பர் மாத முதல் பாகத்துக்கும் இணையான யூத மாதம் அது. பொ.ச. 33-ன் சிறப்பு வாய்ந்த பஸ்காவுக்கு இன்னும் நூற்றுக்குமேற்பட்ட சில நாட்கள் தான் இருக்கிறது. குளிர்க்காலமாய் இருக்கிறதினால் அப்போஸ்தலனாகிய யோவான் “பனிக் காலம்” என்று அதை அழைக்கிறான்.

இயேசு இப்பொழுது ஓர் உவமையை உபயோகிக்கிறார், அதில் மூன்று தொழுவங்களைப் பற்றியும், சிறந்த மேய்ப்பனாக தம்முடைய பங்கைப் பற்றியும் குறிப்பிடுகிறார். அவர் சொல்லும் முதல் தொழுவம் மோசேயின் நியாயப்பிரமாண உடன்படிக்கை ஏற்பாடு என அடையாளங்காட்டப்படுகிறது. நியாயப்பிரமாண சட்டம் ஒரு வேலியைப் போல் இருந்து, கடவுளோடு இந்த விசேஷ உடன்படிக்கையில் இல்லாத ஜனங்களின் கறைப்படுத்தும் பழக்க வழக்கங்களிலிருந்து யூதர்களைப் பிரித்து வைத்தது. இயேசு விளக்குகிறார்: “மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆட்டுத் தொழுவத்துக்குள்; வாசல் வழியாய்ப் பிரவேசியாமல், வேறு வழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான். வாசல் வழியாய்ப் பிரவேசிக்கிறவனோ ஆடுகளின் மேய்ப்பனாயிருக்கிறான்.”

மற்றவர்கள் வந்து தாங்கள் தான் மேசியா அல்லது கிறிஸ்து என்று உரிமைப் பாராட்டிக் கொண்டிருந்தனர், ஆனால் அவர்கள் உண்மையான மேய்ப்பனாக இல்லை. உண்மையான மேய்ப்பனைப் பற்றி இயேசு தொடர்ந்து பேசுகிறார்: “வாசலைக் காக்கிறவன் அவனுக்குத் திறக்கிறான்; ஆடுகளும் அவன் சத்தத்துக்குச் செவி கொடுக்கிறது. அவன் தன்னுடைய ஆடுகளைப் பேர் சொல்லிக் கூப்பிட்டு, அவைகளை வெளியே நடத்திக் கொண்டு போகிறான். . . . அந்நியருடைய சத்தத்தை அறியாதபடியினால் அவைகள் அந்நியனுக்குப் பின்செல்லாமல், அவனை விட்டோடிப்போம்.”

யோவான் ஸ்நானன் முதல் தொழுவத்தின் “வாசலைக் காக்கிறவனாக” இருந்தான். வாசலைக் காக்கிறவனாக யோவான், மேய்ச்சலுக்கு வழிநடத்த அந்த அடையாளப்பூர்வமான ஆடுகளுக்கு இயேசுவை அடையாளங் காட்டுவதன் மூலம், அவருக்குத் ‘திறந்தான்.’ இயேசு பேர் சொல்லி அழைத்து, வழிநடத்திச் செல்லும் இந்த ஆடுகள் இறுதியில் மற்றொரு தொழுவத்துக்குள் சேர்க்கப்படுகின்றன. அதை அவர் விளக்குகிறார்: “நானே ஆடுகளுக்கு வாசல் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்,” அதாவது ஒரு புதிய தொழுவத்தின் வாசல். இயேசு தம்முடைய சீஷர்களோடு புதிய உடன்படிக்கையை ஏற்படுத்தி அதைத் தொடர்ந்து வந்த அடுத்த பெந்தெகொஸ்தே நாளன்று அவர்கள் மீது பரலோகத்திலிருந்து பரிசுத்த ஆவியை ஊற்றின போது, அவர்கள் இந்தப் புதிய தொழுவத்துக்குள் சேர்க்கப்படுகின்றனர்.

தம்முடைய பங்கை இன்னுமதிகமாய் விளக்குபவராய் இயேசு சொல்கிறார்: “நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான். . . . நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். . . . நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறது போலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறது போலவும், நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்.”

சிறிது காலத்திற்கு முன் இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களை ஆறுதல்படுத்தி, இவ்வாறு சொல்லியிருக்கிறார்: “பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார்.” இறுதியில் 1,44,000 பேர் என்ற எண்ணிக்கையை அடையும் இந்தச் சிறு மந்தை இந்தப் புதிய அல்லது இரண்டாம் தொழுவத்துக்குள் வருகிறது. ஆனால் இயேசு தொடர்ந்து சொல்கிறார்: “இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டு வர வேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவி கொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும்.”

“வேறே ஆடுகள்,” “இந்தத் தொழுவத்தில் இல்லாததால்” அவைகள் மற்றொரு தொழுவத்தில், ஒரு மூன்றாவது தொழுவத்தில் இருக்க வேண்டும். இந்தக் கடைசி இரண்டு தொழுவங்கள் வித்தியாசமான முடிவுகளைக் கொண்டிருக்கின்றன. ஒரு தொழுவத்தில் இருக்கும் “சிறு மந்தை” கிறிஸ்துவோடு பரலோகத்தில் ஆட்சி செய்யும், மற்றொரு தொழுவத்தில் இருக்கும் “வேறே ஆடுகள்” பரதீஸிய பூமியில் வாழும். இரண்டு தொழுவங்களில் இருந்தபோதிலும், இந்த ஆடுகளுக்கு பொறாமை இல்லை, பிரித்து வைக்கப்பட்டிருப்பதாக அவர்கள் உணர்வதில்லை. இயேசு சொல்கிறபடி, அவர்கள் “ஒரே மேய்ப்பனின்” கீழ் “ஒரே மந்தை”யாகின்றனர்.

சிறந்த மேய்ப்பனாகிய இயேசு கிறிஸ்து, இரண்டு தொழுவத்தில் உள்ள ஆடுகளுக்கும் தம் ஜீவனை மனமுவந்து கொடுக்கிறார். “நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக் கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக் கொண்டேன்” என்று அவர் சொல்கிறார். இயேசு இதைச் சொன்ன போது, யூதர்களுக்குள்ளே ஒரு பிரிவினை உண்டாகிறது.

ஜனக்கூட்டத்தில் இருந்த அநேகர் சொல்கின்றனர்: “இவன் பிசாசு பிடித்தவன், பயித்தியக்காரன்; ஏன் இவனுக்குச் செவி கொடுக்கிறீர்கள்?” ஆனால் மற்றவர்கள் இவ்வாறு பிரதிபலிக்கின்றனர்: “இவைகள் பிசாசு பிடித்தவனுடைய வசனங்களல்லவே.” இரண்டு மாதங்களுக்கு முன்பு குருடனாகப் பிறந்த மனிதனை சுகப்படுத்தியதைக் குறிப்பிட்டு, அவர்கள் சொல்கின்றனர்: “குருடருடைய கண்களைப் பிசாசு திறக்கக்கூடுமா?” யோவான் 10:1–22; 9:1–7; லூக்கா 12:32; வெளிப்படுத்துதல் 14:1, 3; 21:3, 4; சங்கீதம் 37:29.

▪ பிரதிஷ்டைப் பண்டிகை என்பது என்ன, அது எப்பொழுது கொண்டாடப்படுகிறது?

▪ முதல் தொழுவம் என்பது எது, அதனுடைய வாசலைக் காக்கிறவன் யார்?

▪ வாசலைக் காக்கிறவன் மேய்ப்பனுக்கு எவ்வாறு திறக்கிறான், அதற்குப் பின் ஆடுகள் எதற்குள் சேர்க்கப்படுகின்றன?

▪ சிறந்த மேய்ப்பனின் இரண்டு தொழுவங்கள் யாரால் ஆனவை, அவர்கள் எத்தனை மந்தைகளாக ஆகின்றனர்?