Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தோட்டத்தில் கடுந்துயரம்

தோட்டத்தில் கடுந்துயரம்

அதிகாரம் 117

தோட்டத்தில் கடுந்துயரம்

இயேசு ஜெபம்பண்ணி முடித்த போது, அவரும் அவருடைய 11 உண்மையுள்ள அப்போஸ்தலர்களும் யெகோவாவுக்கு துதி பாடல்களை பாடுகின்றனர். பின்பு அவர்கள் மேலறையிலிருந்து இறங்கி வந்து இரவின் குளிரில் இருட்டில் வெளியேறி கெதரோன் பள்ளத்தாக்கை கடந்து பெத்தானியாவை நோக்கி திரும்பிச் செல்கின்றனர். ஆனால் செல்லும் வழியில் அவர்கள் பிடித்தமான ஓர் இடத்தில் கெத்செமனே தோட்டத்தில் நிற்கின்றனர். இது ஒலிவ மலையின் மேல் அல்லது ஒலிவ மலைக்கு அருகாமையில் இருக்கிறது. இயேசு தம் அப்போஸ்தலர்களோடு இங்கு ஒலிவ மரங்களுக்கு நடுவில் அடிக்கடி கூடியிருக்கிறார்.

அப்போஸ்தலர்களில் எட்டு பேரை விட்டுவிட்டு—ஒருவேளை தோட்டத்து வாசலின் அருகாமையில்—அவர் அவர்களுக்கு இவ்வாறு கட்டளையிடுகிறார்: “நான் அங்கே போய் ஜெபம் பண்ணுமளவும் நீங்கள் இங்கே உட்கார்ந்திருங்கள்.” பின்பு அவர் மற்ற மூவரையும்—பேதுரு, யாக்கோபு, யோவான்—கூட்டிக்கொண்டு தோட்டத்துக்குள் இன்னும் உள்ளே செல்கிறார். இயேசு துக்கமடைந்து, வியாகுலப்படுகிறார். “என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது; நீங்கள் இங்கே தங்கி, என்னோடே கூட விழித்திருங்கள்” என்று அவர் அவர்களிடம் சொல்கிறார்.

சற்று முன்னே சென்று, இயேசு முகங்குப்புற விழுந்து ஊக்கமாக ஜெபிக்க ஆரம்பிக்கிறார்: “என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது.” அவர் எதை அர்த்தப்படுத்துகிறார்? அவர் ஏன் “மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறார்?” மரிப்பதற்கும் மீட்கும் பொருளை அளிப்பதற்கும் தான் எடுத்திருக்கும் தீர்மானத்திலிருந்து அவர் பின்வாங்கிப் போகிறாரா?

இல்லவே இல்லை! மரணத்திலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று இயேசு வேண்டிக்கொள்ளவில்லை. பலியாக மரிப்பதை தவிர்க்கும்படி ஒரு சமயம் பேதுரு தெரிவித்த எண்ணமும்கூட அவருக்கு வெறுப்பாயிருக்கிறது. மாறாக, அவர் சீக்கிரம் மரிக்கப்போகும் விதத்தைக் குறித்து—ஓர் இகழத்தக்க குற்றவாளியாக மரிப்பது அவருடைய பிதாவின் பெயருக்கு அவதூறு கொண்டு வரும் என்பதைக் குறித்து பயப்படுவதால்—அவர் கடுந்துயரத்தில் இருக்கிறார். இன்னும் சில மணிநேரங்களில் அவர் மிக மோசமான ஆளாக—கடவுளை பழிதூற்றியவராக கழுமரத்தில் அறையப்படப் போகிறார் என்பதை அவர் இப்போது உணருகிறார்! இதுதான் அவரை மிகுதியாக கலக்கமடையச் செய்கிறது.

நீண்ட நேரம் ஜெபித்த பின்பு, இயேசு திரும்பி வந்து மூன்று அப்போஸ்தலர்களும் உறங்கிக் கொண்டிருக்கிறதை காண்கிறார். பேதுருவை நோக்கி அவர் இவ்வாறு சொல்கிறார்: “நீங்கள் ஒருமணி நேரமாவது என்னோடே கூட விழித்திருக்கக்கூடாதா? நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்.” அதிக நேரமாகிவிட்டதையும், அவர்கள் அழுத்தத்தின் கீழ் இருந்ததையும் ஒப்புக்கொண்டு, அவர் இவ்வாறு சொல்கிறார்: “ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது.”

பின்பு இரண்டாவது முறையாக இயேசு செல்கிறார், “இந்தப் பாத்திரத்தை” அதாவது, அவருக்காக யெகோவாவின் நியமிக்கப்பட்ட பங்கு அல்லது சித்தத்தை கடவுள் அவரிடமிருந்து நீக்கிப்போடும்படியாக வேண்டிக்கொள்கிறார். அவர் திரும்பி வரும்போது, அவர்கள் மூவரும் மறுபடியும் உறங்கிக்கொண்டிருப்பதை அவர் காண்கிறார். அவர்கள் சோதனைக்குட்படாதபடிக்கு ஜெபித்துக் கொண்டிருந்திருக்க வேண்டும். இயேசு அவர்களிடம் பேசுகிற போது, என்ன பதில் சொல்ல வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியவில்லை.

இறுதியில், மூன்றாவது முறையாக இயேசு செல்கிறார், ஏறக்குறைய ஒரு கல் தொலைவு தூரம் சென்று முழங்காற்படியிட்டு பலத்த சப்தத்தோடும் கண்ணீரோடும் அவர் ஜெபிக்கிறார்: “பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்.” ஒரு குற்றவாளியாக அவர் மரிப்பது அவருடைய பிதாவின் பேரில் கொண்டுவரப்போகும் நிந்தனையினால் இயேசு கடுமையான வேதனையை உணருகிறார். ஏன், ஒரு தேவதூஷணம் சொல்பவராக—கடவுளை பழிதூற்றும் ஒருவராக—குற்றம் சாட்டப்படுவது தாங்கிக் கொள்வதற்கு மிக அதிகமாயிருக்கிறது!

இருந்தபோதிலும், இயேசு தொடர்ந்து ஜெபிக்கிறார்: “என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது.” இயேசு கீழ்ப்படிதலோடு தம்முடைய சித்தத்தை கடவுளுடைய சித்தத்துக்கு கீழ்ப்படுத்துகிறார். அப்போது, பரலோகத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, சில உற்சாகமூட்டும் வார்த்தைகளோடு அவரை பலப்படுத்துகிறார். தம் பிதாவின் அங்கீகார புன்முறுவலை அவர் கொண்டிருக்கிறார் என்று தேவதூதன் ஒருவேளை இயேசுவுக்குக் கூறுகிறார்.

என்றபோதிலும், இயேசுவின் தோள்களின் மீது என்னே ஒரு சுமை இருக்கிறது! அவருடைய சொந்த நித்திய ஜீவனும், முழு மானிட இனத்தின் நித்திய ஜீவனும் தராசில் தொங்குகிறது. உணர்ச்சி சம்பந்தப்பட்ட அழுத்தம் மிகப் பெரியதாய் இருக்கிறது. ஆகையால் இயேசு தொடர்ந்து இன்னுமதிக ஊக்கமாக ஜெபிக்கிறார், அவருடைய வியர்வை இரத்தத் துளிகளாய் தரையில் விழுகின்றன. அமெரிக்க மருத்துவ சங்க பத்திரிகை இவ்வாறு கூறுகிறது: “இது ஓர் அரிய நிகழ்ச்சியாய் இருந்தபோதிலும், இரத்த வியர்வை . . . அதிக உயர்ந்த உணர்ச்சி சம்பந்தப்பட்ட நிலைமைகளில் ஒருவேளை ஏற்படலாம்.”

அதற்குப் பிறகு, இயேசு மூன்றாவது முறையாக தம் அப்போஸ்தலர்களிடம் திரும்பி வருகிறார், அவர்கள் மறுபடியும் உறங்கிக் கொண்டிருப்பதை காண்கிறார். அவர்கள் அதிக துக்கத்தால் சோர்வடைந்திருக்கின்றனர். ‘இப்படிப்பட்ட நேரத்தில் நீங்கள் நித்திரை பண்ணி ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்’ என்று அவர் ஆச்சரியப்படுகிறார். “போதும், வேளை வந்தது, இதோ, மனுஷகுமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிறார். என்னைக் காட்டிக் கொடுக்கிறவன், இதோ, வந்துவிட்டான், எழுந்திருங்கள், போவோம்.”

அவர் இன்னும் பேசிக்கொண்டிருக்கையில், யூதாஸ்காரியோத்தும் அவனோடு கூட திரளான ஜனங்களும் பந்தங்களையும், தீவட்டிகளையும், ஆயுதங்களையும் எடுத்துக்கொண்டு வருகின்றனர். மத்தேயு 26:30, 36–47; 16:21–23; மாற்கு: 14:26, 32–43; லூக்கா 22:39–47; யோவான் 18:1–3; எபிரெயர் 5:7.

▪ மேலறையை விட்டு புறப்பட்ட பிறகு, இயேசு அப்போஸ்தலர்களை எங்கே வழிநடத்திச் செல்கிறார்? அவர் அங்கே என்ன செய்கிறார்?

▪ இயேசு ஜெபித்துக் கொண்டிருக்கையில், அப்போஸ்தலர்கள் என்ன செய்துகொண்டிருக்கின்றனர்?

▪ இயேசு ஏன் கடுந்துயரத்தில் இருக்கிறார்? கடவுளிடம் அவர் என்ன வேண்டிக் கொள்கிறார்?

▪ இயேசுவின் வியர்வை இரத்தத் துளிகளாக ஆவது எதைக் குறிப்பிடுகிறது?