Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நடைமுறையான ஞானத்தோடு எதிர்காலத்துக்காக ஏற்பாடு செய்யுங்கள்

நடைமுறையான ஞானத்தோடு எதிர்காலத்துக்காக ஏற்பாடு செய்யுங்கள்

அதிகாரம் 87

நடைமுறையான ஞானத்தோடு எதிர்காலத்துக்காக ஏற்பாடு செய்யுங்கள்

தம்முடைய சீஷர்களும், நேர்மையில்லாத வரி வசூலிப்பவர்களும், மற்ற பேர்போன பாவிகளும், வேதபாரகரும், பரிசேயர்களும் அடங்கிய ஜனக்கூட்டத்திடம் அப்போது தான் கெட்ட குமாரனின் கதையை இயேசு சொல்லி முடித்திருக்கிறார். தன் வீட்டு உக்கிராணக்காரனை அல்லது மேலாளனைப் பற்றி சாதகமல்லாத அறிக்கையைப் பெற்றுக் கொண்ட ஐசுவரியவானைப் பற்றிய ஓர் உவமையை தம் சீஷர்களை நோக்கி இப்போது சொல்கிறார்.

இயேசுவின் பிரகாரம், ஐசுவரியவான் தன் வீட்டு மேலாளனை அழைத்து, அவனை வேலையிலிருந்து நீக்கப் போவதாக அவனிடம் சொல்கிறான். “நான் என்ன செய்வேன், என் எஜமான் உக்கிராண விசாரிப்பிலிருந்து என்னைத் தள்ளிப் போடுகிறானே; கொத்துகிறதற்கு எனக்குப் பெலனில்லை, இரக்கவும் வெட்கப்படுகிறேன். உக்கிராண விசாரிப்பை விட்டு நான் தள்ளப்படும்போது, என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்வார் உண்டாகும்படி செய்ய வேண்டியது இன்னதென்று எனக்குத் தெரிய வந்தது,” என்று அவன் யோசிக்கிறான்.

வீட்டு மேலாளரின் திட்டம் என்ன? தன் எஜமானுக்கு கடன்பட்டிருப்பவர்களை அவன் அழைக்கிறான். “நீ என் எஜமானிடத்தில் பட்ட கடன் எவ்வளவு?” என்று கேட்கிறான்.

‘நூறு குடம் [ஒலிவ, NW] எண்ணெய்’ என்று முதலாவது வந்தவன் பதிலளிக்கிறான்.

‘நீ உன் சீட்டை வாங்கி, உட்கார்ந்து, ஐம்பது என்று சீக்கிரமாய் எழுது’ என்று அவனிடம் சொல்கிறான்.

மற்றொருவனை அவன் கேட்கிறான்: ‘நீ பட்ட கடன் எவ்வளவு?’

‘நூறு கலம் கோதுமை’ என்று அவன் சொல்கிறான்.

நீ உன் சீட்டை வாங்கி, எண்பது என்று எழுது.’

தன் எஜமானுக்கு கடன்பட்ட சீட்டுகளை குறைப்பதற்கான உரிமைகள் வீட்டு மேலாளருக்கு இருக்கிறது, ஏனென்றால் அவன் இன்னும் தன் எஜமானின் பண விவகாரங்களுக்கு பொறுப்புள்ளவனாயிருக்கிறான். தொகைகளை குறைப்பதன் மூலம் தன் வேலையை இழக்கும் போது அவனுக்குப் பிரதிபலனாக ஆதரித்து சலுகைகளைத் தந்து உதவுபவர்களை அவன் நண்பர்களாக ஆக்கிக் கொள்கிறான்.

என்ன நடந்தது என்பதை எஜமான் கேட்டபோது, அவன் கவரப்படுகிறான். உண்மையில், அவன் “அநீதியுள்ள உக்கிராணக்காரன் நடைமுறையான ஞானத்தோடு (NW) செய்தான் என்று . . . அவனை மெச்சிக் கொண்டான்.” உண்மையில், இயேசு கூடுதலாக சொல்கிறார்: “ஒளியின் பிள்ளைகளைப் பார்க்கிலும் இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் தங்கள் சந்ததியில் அதிக புத்திமான்களாயிருக்கிறார்கள்.”

இப்போது தம்முடைய சீஷர்கள் கற்கவேண்டிய பாடத்தைக் குறிப்பிடும் விதத்தில் இயேசு உற்சாகப்படுத்துகிறார்: “நீங்கள் [அவைகள், NW] மாளும் போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்வாருண்டாகும்படி, அநீதியான உலகப் பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்.”

இயேசு அந்த உக்கிராணக்காரனை அவனுடைய அநீதிக்காக அல்ல, ஆனால் அவனுடைய வருங்காலத்தைக் குறித்த நடைமுறையான ஞானத்திற்காக பாராட்டுகிறார். அடிக்கடி “இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள்” தங்களுக்கு திரும்ப சலுகைகளை கொடுப்பவர்களோடு நண்பர்களாகிக் கொள்வதற்கு தங்கள் பணத்தையோ அல்லது ஸ்தானத்தையோ திறமையுடன் உபயோகிக்கின்றனர். ஆகையால் கடவுளுடைய ஊழியர்கள், “ஒளியின் பிள்ளைகளும்”கூட தங்கள் பொருள் சம்பந்தமான உடைமைகளை, தங்கள் “அநீதியான செல்வங்களை” தங்களுக்கு நன்மை பயக்கும் விதத்தில் ஞானமாக உபயோகிக்க வேண்டிய தேவை இருக்கிறது.

ஆனால் இயேசு சொல்கிறவிதமாய், இந்தச் செல்வங்களைக் கொண்டு அவர்களை “நித்தியமான வீடுகளிலே” ஏற்றுக்கொள்பவர்களோடு அவர்கள் நண்பர்களாகிக் கொள்ள வேண்டும். சிறு மந்தையைச் சேர்ந்த அங்கத்தினர்களுக்கு இந்த இடங்கள் பரலோகத்தில் இருக்கின்றன; “வேறே ஆடுகளுக்கு” அவைகள் பரதீஸிய பூமியில் இருக்கின்றன. யெகோவா தேவனும், அவருடைய குமாரனும் மட்டுமே நபர்களை இந்த இடங்களுக்குள் ஏற்றுக்கொள்ள முடியுமாதலால் நம்மிடம் இருக்கும் “அநீதியான செல்வங்களை” ராஜ்ய அக்கறைகளை ஆதரிப்பதற்கு உபயோகிப்பதன் மூலம் அவர்களோடு நட்பை வளர்க்க நாம் ஊக்கமாக உழைக்க வேண்டும். அப்போது பொருளாதார செல்வங்களை இழந்தாலும் அல்லது அழிந்து போனாலும்—அவைகள் நிச்சயமாக அழிந்து போகும்—நம்முடைய நித்திய எதிர்காலம் உறுதியளிக்கப்பட்டதாய் இருக்கும்.

இந்தப் பொருளுடைமைகள் அல்லது அற்பமான காரியங்களையும்கூட கவனித்துக் கொள்வதில் உண்மையுள்ளவர்களாக இருக்கும் நபர்கள், அதிக முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை கவனித்துக் கொள்வதிலும்கூட உண்மையுள்ளவர்களாயிருப்பர் என்று இயேசு தொடர்ந்து சொல்கிறார். “அநீதியான உலகப்பொருளைப் பற்றி நீங்கள் உண்மையாயிராவிட்டால், யார் உங்களை நம்பி உங்களிடத்தில் மெய்யான பொருளை [அதாவது, ஆவிக்குரிய அல்லது ராஜ்ய அக்கறைகளை] ஒப்புவிப்பார்கள்? வேறொருவனுடைய காரியத்தில் [தம்முடைய ஊழியர்களிடம் கடவுள் ஒப்படைக்கும் ராஜ்ய அக்கறைகளில்] நீங்கள் உண்மையுள்ளவர்களாயிராவிட்டால், உங்களுக்கு யாதொன்றைச் [நித்தியமான வீடுகளிலே ஜீவன் என்ற பரிசை] சொந்தமாகக் கொடுப்பவர் யார்?”

நாம் கடவுளின் உண்மையுள்ள ஊழியர்களாகவும் அதே சமயத்தில் அநீதியான செல்வங்கள், பொருளாதார செல்வங்களுக்கு அடிமைகளாகவும் இருக்க முடியாது. இதை இயேசு இவ்வாறு முடிக்கிறார்: “எந்த ஊழியக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ் செய்யக்கூடாது; ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான், அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டை பண்ணுவான். தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ் செய்ய உங்களாலே கூடாது.” லூக்கா 15:1, 2; 16:1–13; யோவான் 10:16.

▪ இயேசுவின் உவமையில் இருக்கும் உக்கிராணக்காரன் பிற்பாடு தனக்கு உதவி செய்யக்கூடியவர்களை எவ்வாறு நண்பர்களாக ஆக்கிக் கொள்கிறான்?

▪ “அநீதியான செல்வங்கள்” (NW) யாவை, அவைகளைக் கொண்டு நாம் எவ்வாறு நண்பர்களை உண்டுபண்ணலாம்?

▪ “நித்தியமான வீடுகளுக்குள்ளே” யார் நம்மை ஏற்றுக்கொள்வர், இந்த இடங்கள் யாவை?