Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நியாயசங்கத்தின் முன், பின்பு பிலாத்துவிடம்

நியாயசங்கத்தின் முன், பின்பு பிலாத்துவிடம்

அதிகாரம் 121

நியாயசங்கத்தின் முன், பின்பு பிலாத்துவிடம்

ரவு முடியும் தறுவாயில் இருக்கிறது. பேதுரு இயேசுவை மூன்றாவது முறையாக மறுதலித்திருக்கிறார், நியாய சங்க அங்கத்தினர்கள் அப்போது தான் தங்கள் போலி விசாரணையை முடித்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றிருக்கின்றனர். என்றபோதிலும், வெள்ளிக்கிழமை காலை விடிந்த உடனேயே, அவர்கள் மறுபடியும் கூடுகின்றனர், இம்முறை அவர்களுடைய ஆலோசனை சங்க மன்றத்தில் கூடுகின்றனர். கடந்த இரவு நடந்த விசாரணை, சட்டத்துக்கு ஒத்திருந்தது என்ற தோற்றத்தை கொடுப்பதே அநேகமாக அவர்களுடைய நோக்கம். இயேசு அவர்களுக்கு முன்னால் கொண்டு வரப்பட்ட போது, இரவில் சொன்னது போலவே அவர்கள் சொல்கின்றனர்: “நீ கிறிஸ்துவா? அதை எங்களுக்குச் சொல்.”

“நான் உங்களுக்குச் சொன்னாலும் நம்பமாட்டீர்கள்” என்று இயேசு பதிலளிக்கிறார். “நான் உங்களிடத்தில் வினவினாலும் எனக்கு மாறுத்தரம் சொல்லமாட்டீர்கள்.” என்றபோதிலும், இயேசு தாம் யார் என்பதை தைரியமாக குறிப்பிட்டுக் காட்டுகிறார்: “இது முதல் மனுஷகுமாரன் சர்வ வல்லமையுள்ள தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பார்.”

“அப்படியானால், நீ தேவனுடைய குமாரனா?” என்று எல்லாரும் அறிய விரும்புகின்றனர்.

“நீங்கள் சொல்லுகிறபடியே நான் அவர் தான்” என்று இயேசு பதிலளிக்கிறார்.

கொலை செய்வதற்கு தீவிரமாய் காத்திருக்கும் இந்த மனிதர்களுக்கு, இந்தப் பதில் போதுமானதாயிருக்கிறது. அவர்கள் இதை தேவ தூஷணமாக கருதுகின்றனர். “இனி வேறு சாட்சி நமக்கு வேண்டுவதென்ன?” என்று அவர்கள் கேட்கின்றனர். “நாமே இவனுடைய வாயினாலே கேட்டோமே.” ஆகையால், அவர்கள் இயேசுவைக் கட்டி, கொண்டு போய், தேசாதிபதியாகிய பொந்தியு பிலாத்துவினிடத்தில் ஒப்படைக்கின்றனர்.

இயேசுவைக் காட்டிக் கொடுத்தவனாகிய யூதாஸ் நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டிருக்கிறான். இயேசு மரண ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதைக் கண்டு மனஸ்தாபப்படுகிறான். ஆகையால் அவன் அந்த 30 வெள்ளிக்காசை திரும்பக் கொடுப்பதற்கு பிரதான ஆசாரியரிடத்திற்கும், மூப்பரிடத்திற்கும் செல்கிறான். “குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக் கொடுத்ததினால் பாவஞ் செய்தேன்” என்று அவன் விளக்குகிறான்.

“எங்களுக்கென்ன, அது உன் பாடு” என்று அவர்கள் இரக்கமின்றி பதிலளிக்கின்றனர். ஆகையால் யூதாஸ் அந்த வெள்ளிக்காசை தேவாலயத்திலே எறிந்துவிட்டு, புறப்பட்டுப் போய், தன்னையே தூக்கிலிட்டுக் கொள்ள முயற்சி செய்கிறான். என்றபோதிலும், யூதாஸ் கயிற்றை கட்டிய கிளை முறிந்து, அவனுடைய உடல் கீழே இருக்கும் பாறைகளில் விழுகிறது, அங்கே அது வெடித்துச் சிதறுகிறது.

வெள்ளிக்காசை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்பதைப் பற்றி பிரதான ஆசாரியர்கள் நிச்சயமாயில்லை. “இது இரத்தக்கிரயமானதால், காணிக்கைப் பெட்டியிலே இதைப் போடலாகாதென்று” அவர்கள் முடிவு செய்கின்றனர். ஆகையால், ஒன்றாகக் கூடி ஆலோசித்த பிறகு, அந்நியரை அடக்கம் பண்ணுவதற்குரிய குயவனுடைய நிலத்தை அந்தப் பணத்தைக் கொண்டு வாங்குகின்றனர். ஆகையால் அந்த நிலம் “இரத்த நிலம்” என்றழைக்கப்படுகிறது.

தேசாதிபதியின் அரண்மனைக்கு இயேசு கொண்டு போகப்பட்ட போது இன்னும் விடியற்காலையாகவே இருக்கிறது. ஆனால் அவரோடு கூட சென்ற யூதர்கள் அரண்மனைக்குள் பிரவேசிக்க மறுக்கின்றனர், ஏனென்றால் புறஜாதியாரோடு அப்படிப்பட்ட நெருக்கமான கூட்டுறவு அவர்களைக் கறைப்படுத்தும் என அவர்கள் நம்புகின்றனர். ஆகையால் அவர்களோடு ஒத்துப் போவதற்கு பிலாத்து வெளியே வருகிறான்: “இந்த மனுஷன் மேல் என்ன குற்றஞ்சாட்டுகிறீர்கள்?” என்று அவன் கேட்கிறான்.

“இவன் குற்றவாளியாயிராவிட்டால், இவனை உம்மிடத்தில் ஒப்புக்கொடுக்க மாட்டோம்” என்று அவர்கள் பதிலளிக்கின்றனர்.

இதில் உட்பட்டுவிடுவதை தவிர்க்க விரும்புவதால் பிலாத்து இவ்வாறு பிரதிபலிக்கிறான்: “இவனை நீங்களே கொண்டு போய், உங்கள் நியாயப்பிரமாணத்தின்படி நியாயந்தீருங்கள்.”

தங்கள் கொலைசெய்யும் எண்ணத்தை வெளிக்காட்டி, யூதர்கள் இவ்வாறு உரிமைபாராட்டுகின்றனர்: “ஒருவனையும் மரண ஆக்கினை செய்ய எங்களுக்கு அதிகாரமில்லை.” உண்மையில், அவர்கள் பஸ்கா பண்டிகையின் போது இயேசுவை கொலை செய்வார்களேயானால், அது பொதுமக்கள் கிளர்ச்சி செய்யும்படி செய்யும், ஏனென்றால் அநேகர் இயேசுவை அதிக மதிப்புக்குரியவராக கருதுகின்றனர். ஆனால் ஓர் அரசியல் குற்றச்சாட்டின் பேரில் ரோமர்கள் அவரை கொலை செய்யும்படி அவர்கள் செய்தால் இது பொது மக்களுக்கு முன்பாக இருக்கும் உத்தரவாதத்திலிருந்து அவர்களை விடுவிக்கும்.

ஆகையால் அந்த மதத் தலைவர்கள், இதற்கு முன் நடந்த விசாரணையின் போது தேவதூஷணம் சொன்னதற்காக இயேசுவை கண்டனம் செய்ததை குறிப்பிடாமல், இப்போது வித்தியாசமான குற்றச் சாட்டுகளை பொய்யாகக் கட்டுகின்றனர். மூன்று-பகுதிகளாலான குற்றச்சாட்டை அவர்கள் சுமத்துகின்றனர்: “[1] இவன் தன்னைக் கிறிஸ்து என்னப்பட்ட ராஜாவென்றும், [2] ராயருக்கு வரி கொடுக்க வேண்டுவதில்லையென்றும் சொல்லி, [3] ஜனங்களைக் கலகப்படுத்தக் கண்டோம்.”

இயேசு தம்மை ராஜாவாக உரிமைபாராட்டிக் கொள்ளும் குற்றச்சாட்டு தான் பிலாத்துவுக்கு கவலையாயிருக்கிறது. ஆகையால், அவன் அரண்மனைக்குள் மறுபடியும் பிரவேசித்து, இயேசுவை தன்னிடம் அழைத்து இவ்வாறு கேட்கிறான்: “நீ யூதருடைய ராஜாவா?” வேறு வார்த்தைகளில் சொன்னால், இராயனுக்கு எதிராக உன்னையே ராஜாவாக அறிவித்துக் கொள்வதன் மூலம் நீ சட்டத்தை மீறினாயா?

அவரைப் பற்றி பிலாத்து ஏற்கெனவே எவ்வளவு கேள்விப்பட்டிருக்கிறான் என்பதை இயேசு அறிந்து கொள்ள விரும்புகிறார், ஆகையால் அவர் இவ்வாறு கேட்கிறார்: “நீராய் இப்படிச் சொல்லுகிறீரோ? அல்லது மற்றவர்கள் என்னைக் குறித்து இப்படி உமக்குச் சொன்னார்களோ?”

அவரைப் பற்றி ஒன்றும் தெரியாது என்பதை பிலாத்து வெளிப்படையாகத் தெரிவித்து, உண்மைகளை அறிந்து கொள்ள விரும்புகிறான். அவன் பதிலளிக்கிறான்: “நான் யூதனா? உன் ஜனங்களும் பிரதான ஆசாரியரும் உன்னை என்னிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள், நீ என்ன செய்தாய்?”

அரசபதவியை பற்றிய விவாதத்தை இயேசு எந்த விதத்திலும் காலம் கடத்தி ஏமாற்றுவதற்கு முயற்சி செய்யவில்லை. இப்போது இயேசு கொடுக்கும் பதில் சந்தேகமின்றி பிலாத்துவை ஆச்சரியமடையச் செய்கிறது. லூக்கா 22:66–23:3; மத்தேயு 27:1–11; மாற்கு 15:1; யோவான் 18:28–35; அப்போஸ்தலர் 1:16–20.

▪ என்ன நோக்கத்துக்காக நியாயசங்கம் மறுபடியும் காலையில் ஒன்று கூடிவருகிறது?

▪ யூதாஸ் எவ்வாறு மரிக்கிறான்? 30 வெள்ளிக்காசைக் கொண்டு என்ன செய்யப்படுகிறது?

▪ தாங்களே அவரை கொல்வதற்கு பதிலாக ரோமர்கள் இயேசுவை கொலைசெய்யும்படி ஏன் யூதர்கள் விரும்புகின்றனர்?

▪ இயேசுவுக்கு விரோதமாக யூதர்கள் என்ன குற்றச்சாட்டுகள் சொல்கின்றனர்?