Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நெருக்கடி மிகுந்த ஒரு நாளின் ஆரம்பம்

நெருக்கடி மிகுந்த ஒரு நாளின் ஆரம்பம்

அதிகாரம் 105

நெருக்கடி மிகுந்த ஒரு நாளின் ஆரம்பம்

திங்கட்கிழமை மாலை இயேசு எருசலேமை விட்டு புறப்பட்டு, ஒலிவ மலையின் கிழக்கத்திய சரிவில் இருக்கும் பெத்தானியாவுக்கு திரும்பிச் செல்கிறார். எருசலேமில் அவருடைய இறுதி ஊழியத்தின் இரண்டு நாட்கள் முடிவடைந்துவிட்டன. சந்தேகமின்றி இயேசு மறுபடியும் தம் நண்பனாகிய லாசருவோடு இரவை கழிக்கிறார். வெள்ளிக்கிழமை எரிகோவிலிருந்து வந்து சேர்ந்ததிலிருந்து, இது பெத்தானியாவில் அவர் கழித்த நான்காம் இரவாகும்.

இப்போது, நிசான் 11, செவ்வாய்க்கிழமை விடியற்காலை. அவரும் அவருடைய சீஷர்களும் மறுபடியும் பிரயாணம் செய்கின்றனர். இது இயேசுவின் ஊழியத்தில் நெருக்கடி மிகுந்த நாளாக இருக்கிறது, இதுவரை இல்லாத அதிக வேலைகள் அடங்கிய நாளாக இருக்கிறது. இது அவர் ஆலயத்தில் காணப்படும் கடைசி நாளாகும். அவர் விசாரணை செய்யப்பட்டு கொல்லப்படுவதற்கு முன்பு அவருடைய பொது ஊழியத்தின் கடைசி நாளாக இருக்கிறது.

ஒலிவ மலைக்கு மேல் எருசலேமை நோக்கி இயேசுவும் அவருடைய சீஷர்களும் அதே வழியில் செல்கின்றனர். பெத்தானியாவிலிருந்து வரும் அந்தச் சாலையின் வழியே அதற்கு முந்தின நாள் காலை இயேசு சபித்த மரத்தை பேதுரு கவனிக்கிறான். “ரபீ, இதோ, நீர் சபித்த அத்திமரம் பட்டுப்போயிற்று” என்று அவன் வியந்து கூறுகிறான்.

ஆனால் இயேசு ஏன் அந்த மரத்தை கொன்றார்? ஏன் என்பதை அவர் தொடர்ந்து சொல்கையில் குறிப்பிடுகிறார்: “நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசமுள்ளவர்களாயிருந்தால், இந்த அத்திமரத்திற்குச் செய்ததை நீங்கள் செய்வதுமல்லாமல், இந்த மலையைப் பார்த்து: [அவர்கள் நின்று கொண்டிருக்கும் ஒலிவ மலை] நீ பெயர்ந்து சமுத்திரத்திலே தள்ளுண்டு போ என்று சொன்னாலும் அப்படியாகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். மேலும் நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள்.”

ஆகையால் அந்த மரத்தை பட்டுப் போகச் செய்வதன் மூலம், இயேசு தம்முடைய சீஷர்களுக்கு கடவுள் மேல் அவர்கள் விசுவாசத்தை கொண்டிருக்க வேண்டிய தேவையைப் பற்றிய கண்கூடான படிப்பினையைக் கொடுக்கிறார். அதை அவர் இவ்வாறு சொல்கிறார்: “நீங்கள் ஜெபம் பண்ணும்போது எவைகளைக் கேட்டுக் கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும்.” விரைவில் வரப்போகும் அதிர்ச்சியூட்டும் சோதனைகளின் காரணமாக அவர்கள் விசேஷமாக கற்றுக்கொள்ள வேண்டிய என்னே ஒரு முக்கியமான பாடம்! என்றாலும், அத்திமரம் பட்டுப் போவதற்கும், விசுவாசத்தின் தரத்திற்கும் இடையே மற்றொரு தொடர்பு இருக்கிறது.

இஸ்ரவேல் தேசம் இந்த அத்திமரத்தைப் போன்று, ஏமாற்றமடையச் செய்யும் தோற்றத்தை கொண்டிருக்கிறது. அந்தத் தேசம் கடவுளோடு ஓர் உடன்படிக்கை உறவுக்குள் இருந்தாலும், அவருடைய கட்டளைகளை கடைப்பிடிப்பதாக வெளிப்புறமாக தோற்றமளித்தாலும், அது விசுவாசமில்லாமலும், நல்ல கனிகள் அற்றதாகவும் நிரூபித்திருக்கிறது. விசுவாசமின்மையின் காரணமாக, அது கடவுளுடைய சொந்த குமாரனையே வேண்டாமென்று தள்ளிவிடும் போக்கிலும்கூட இருக்கிறது! எனவே, கனிகொடாத அத்திமரத்தை பட்டுப் போகச் செய்வதன் மூலம், இந்தக் கனிகொடாத, விசுவாசமில்லாத தேசத்தின் முடிவான விளைவு என்னவாயிருக்கும் என்பதை இயேசு விளக்கமாக கண்கூடாகக் காட்டுகிறார்.

விரைவில் இயேசுவும் அவருடைய சீஷர்களும் எருசலேமுக்குள் செல்கின்றனர், அவர்களுடைய வழக்கத்தின்படி அவர்கள் ஆலயத்துக்குச் செல்கின்றனர், அங்கே இயேசு கற்பிக்கத் தொடங்குகிறார். பணம் மாற்றுபவர்களுக்கு எதிராக முந்தின நாள் இயேசு எடுத்த நடவடிக்கையை சந்தேகமின்றி மனதில் கொண்டவர்களாய் பிரதான ஆசாரியர்களும் ஜனத்தின் மூப்பரும் அவரை எதிர்க்கின்றனர்: “நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்?”

அதற்கு பதிலளிப்பவராய் இயேசு இவ்வாறு சொல்கிறார்: “நானும் உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன், அதை எனக்குச் சொல்லுவீர்களானால், நானும் இன்ன அதிகாரத்தினாலே இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லுவேன். யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ? மனுஷரால் உண்டாயிற்றோ? யாரால் உண்டாயிற்று?”

எவ்வாறு பதிலளிப்பது என ஆசாரியர்களும் மூப்பரும் தங்களுக்குள்ளே கலந்து பேச ஆரம்பிக்கின்றனர். “தேவனால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், அப்படியானால் ஏன் அவனை விசுவாசிக்கவில்லை என்று நம்மைக் கேட்பார்; மனுஷரால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், ஜனங்களுக்குப் பயப்படுகிறோம், எல்லாரும் யோவானைத் தீர்க்கதரிசியென்று எண்ணுகிறார்களே.”

என்ன பதிலளிப்பது என்று தலைவர்களுக்குத் தெரியவில்லை. ஆகையால் அவர்கள் இயேசுவிடம் இவ்வாறு பதிலளிக்கின்றனர்: “எங்களுக்குத் தெரியாது.”

“நானும் இன்ன அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லேன்” என்று இயேசு சொல்கிறார். மத்தேயு 21:19–27; மாற்கு 11:19–33; லூக்கா 20:1–8.

▪ செவ்வாய், நிசான் 11-ஐ பற்றிய முக்கியத்துவம் என்ன?

▪ அத்திமரத்தைப் பட்டுப் போகச் செய்தபோது என்ன பாடங்களை இயேசு கற்பிக்கிறார்?

▪ எந்த அதிகாரத்தினால் தான் காரியங்களைச் செய்கிறார் என்று கேட்டவர்களிடம் இயேசு எவ்வாறு பதிலளிக்கிறார்?