Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பரம்பரை சொத்து உரிமை பற்றிய கேள்வி

பரம்பரை சொத்து உரிமை பற்றிய கேள்வி

அதிகாரம் 77

பரம்பரை சொத்து உரிமை பற்றிய கேள்வி

இயேசு பரிசேயனுடைய வீட்டில் உணவருந்திக் கொண்டிருக்கிறார் என்பதை ஜனங்கள் அறிந்திருக்கின்றனர். ஆகையால் அவர்கள் ஆயிரக்கணக்கில் வெளியே கூடி வந்து, இயேசு வெளியே வருவதற்காக காத்திருக்கின்றனர். இயேசுவை எதிர்த்து, ஏதாவது தவறாக சொல்வாரா என்று பார்த்து அவரைப் பிடிப்பதற்காக காத்திருக்கும் பரிசேயர்களைப் போல் இல்லாமல், ஜனங்கள் போற்றுதலோடு அவருக்கு ஆவலாய் செவி கொடுக்கின்றனர்.

இயேசு, முதலாவது தம்முடைய சீஷர்களிடம் திரும்பி சொல்கிறார்: “நீங்கள் மாயமாகிய பரிசேயருடைய புளித்தமாவைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.” உணவருந்தும் போது வெளிப்படுத்திக் காட்டியபடி, பரிசேயர்களின் முழு மத ஒழுங்குமுறையும் மாய்மாலத்தால் நிரம்பியிருக்கிறது. ஆனால் கடவுள் பற்றுடையவர்களைப் போல் வெளித்தோற்றத்துக்கு காட்சியளிப்பதால் பரிசேயர்களின் துன்மார்க்கத்தனம் ஒருவேளை மறைக்கப்பட்டு போனாலும், இறுதியில் அது வெளிப்படுத்தப்படும், “வெளியாக்கப்படாத மறைபொருளுமில்லை, அறியப்படாத இரகசியமுமில்லை” என்று இயேசு சொல்கிறார்.

கலிலேய பிரசங்கப் பயணத்துக்காக 12 பேரை அனுப்பிய போது அவர் கொடுத்த உற்சாகமூட்டும் வார்த்தைகளைத் திரும்பவும் இயேசு சொல்லத் தொடங்குகிறார். அவர் சொல்கிறார்: “சரீரத்தைக் கொலை செய்து, அதன்பின்பு அதிகமாக ஒன்றும் செய்யத் திராணியில்லாதவர்களுக்குப் பயப்படாதிருங்கள்.” கடவுள் ஒரு சிட்டுக்குருவியை கூட மறந்து போகிறதில்லை, ஆதலால் கடவுள் அவர்களை மறக்க மாட்டார் என்று இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களுக்கு உறுதியளிக்கிறார். அவர் சொல்கிறார்: “ஜெப ஆலயத்தலைவர்களுக்கும், துரைத்தனத்தார்களுக்கும் அதிகாரமுள்ளவர்களுக்கும் முன்பாக உங்களைக் கொண்டு போய் விடும் போது: . . . நீங்கள் பேசவேண்டியவைகளைப் பரிசுத்த ஆவியானவர் [பரிசுத்த ஆவி, NW] அந்நேரத்திலே உங்களுக்குப் போதிப்பார்.”

ஜனக்கூட்டத்திலிருந்து ஒரு மனிதன் பேசுகிறான். “போதகரே, ஆஸ்தியைப் பாகம் பிரித்து என் வீதத்தை எனக்குத் தரும்படி என் சகோதரனுக்குக் கட்டளையிட வேண்டும்” என்று அவன் கேட்டுக் கொள்கிறான். மூத்த மகன் சொத்திலிருந்து இரண்டு பங்கை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று மோசேயின் சட்டம் குறிப்பிடுகிறது. ஆகையால் விவாதம் செய்வதற்கு எந்தக் காரணமும் இருக்கக்கூடாது. ஆனால் அந்த மனிதன் சட்டத்துக்கு இசைவான தன் பங்கிற்கும் அதிகமாக கேட்கிறான் என்பது தெளிவாயிருக்கிறது.

இயேசு சரியாகவே அதில் உட்படுவதற்கு மறுக்கிறார். “மனுஷனே, என்னை உங்களுக்கு நியாயாதிபதியாகவும் பங்கிடுகிறவனாகவும் வைத்தவன் யார்?” என்று அவர் கேட்கிறார். பின்பு அவர் இந்த முக்கியமான அறிவுரையை ஜனக்கூட்டத்தாருக்குக் கொடுக்கிறார்: “பொருளாசையைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல.” ஆம், ஒரு மனிதன் எவ்வளவு தான் ஆஸ்திகளைக் கொண்டிருந்தாலும், பொதுவாக அவன் மரித்து, எல்லாவற்றையும் பின்னே விட்டுச் செல்வான். இந்த உண்மையை அழுத்திக் காட்டுவதற்கும், கடவுளோடு ஒரு நற்பெயரை வளர்க்கத் தவறுவதன் அறிவற்ற செயலை காண்பிப்பதற்கும் இயேசு ஓர் உவமையை உபயோகிக்கிறார். அவர் விளக்குகிறார்:

“ஐசுவரியமுள்ள ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது. அப்பொழுது அவன்: நான் என்ன செய்வேன்? என் தானியங்களைச் சேர்த்து வைக்கிறதற்கு இடமில்லையே; நான் ஒன்று செய்வேன், என் களஞ்சியங்களை இடித்து, பெரிதாகக் கட்டி, எனக்கு விளைந்த தானியத்தையும் என் பொருள்களையும் அங்கே சேர்த்து வைத்து, பின்பு: ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்துவைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக் கொண்டான். தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும்?”

முடிவாக இயேசு குறிப்பிடுகிறார்: “தேவனிடத்தில் ஐசுவரியவானாயிராமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கிறவன் இப்படியே இருக்கிறான்.” சீஷர்கள் ஒருவேளை செல்வங்களைக் குவித்துக் கொண்டு செல்லும் அறிவற்ற செயலின் கண்ணியில் சிக்கிக் கொள்ளாமல் இருந்தாலும் அன்றாடக வாழ்க்கையின் கவலைகளால் தங்கள் முழு ஆத்துமாவோடும் யெகோவாவுக்குச் செய்யும் சேவையிலிருந்து எளிதில் திருப்பப்படலாம். ஆகையால் இயேசு, மலைப்பிரசங்கத்தில் ஏறக்குறைய ஒன்றரை வருடங்களுக்கு முன்பு தான் கொடுத்திருந்த சிறந்த புத்திமதியை திரும்பச் சொல்வதற்கு இந்தச் சமயத்தைப் பயன்படுத்துகிறார். தம்முடைய சீஷர்களிடமாக திரும்பி அவர் சொல்கிறார்:

“இப்படியிருக்கிறபடியினால், என்னத்தை உண்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும், என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள். . . . காகங்களைக் கவனித்துப் பாருங்கள், அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, அவைகளுக்குப் பண்டசாலையுமில்லை, களஞ்சியமுமில்லை, இல்லாவிட்டாலும் அவைகளையும் தேவன் பிழைப்பூட்டுகிறார். . . . காட்டுப் புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப் பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை, என்றாலும் சாலொமோன் முதலாய்த் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். . . .

“ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று, நீங்கள் கேளாமலும் சந்தேகப்படாமலும் இருங்கள். இவைகளையெல்லாம் உலகத்தார் நாடித் தேடுகிறார்கள்; இவைகள் உங்களுக்கு வேண்டியவைகளென்று உங்கள் பிதாவானவர் அறிந்திருக்கிறார். தேவனுடைய ராஜ்யத்தையே தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.”

பொருளாதார ரீதியில் காலங்கள் கடினமாக ஆகும்போது இயேசுவின் வார்த்தைகள் விசேஷமாக கவனிப்புக்குரியவையாய் இருக்கின்றன. ஒரு நபர் தன்னுடைய பொருளாதார தேவைகளைக் குறித்து மட்டுக்கு மீறி அதிக கவலையுள்ளவராகி, ஆவிக்குரிய முயற்சிகளில் தளர ஆரம்பிக்கையில், அவர் உண்மையில் தம்முடைய ஊழியர்களுக்கு ஏற்பாடு செய்யும் கடவுளின் வல்லமையில் விசுவாசமின்மையை வெளிக்காட்டுகிறார். லூக்கா 12:1–31; உபாகமம் 21:17.

▪ சொத்து உரிமையைப் பற்றி அந்த மனிதன் ஏன் கேட்கிறான், இயேசு என்ன புத்திமதி கொடுக்கிறார்?

▪ இயேசு என்ன உவமையை உபயோகிக்கிறார், அதனுடைய குறிப்பு என்ன?

▪ என்ன புத்திமதியை இயேசு திரும்பவும் சொல்கிறார், அது ஏன் பொருத்தமாயிருக்கிறது?