Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பரிசேயன் ஒருவனால் உபசரிக்கப்படுகிறார்

பரிசேயன் ஒருவனால் உபசரிக்கப்படுகிறார்

அதிகாரம் 83

பரிசேயன் ஒருவனால் உபசரிக்கப்படுகிறார்

இயேசு இன்னும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பரிசேயனுடைய வீட்டில் இருக்கிறார், நீர்க்கோவை வியாதியினால் அவதியுறும் ஒரு மனிதனை அப்போதுதான் குணமாக்கியிருக்கிறார். உணவின் போது உடன் விருந்தினர்கள் முக்கியமான இடங்களை தேர்ந்தெடுப்பதை அவர் கவனிக்கையில், மனத்தாழ்மையில் ஒரு பாடத்தை அவர் கற்பிக்கிறார்.

“ஒருவனால் கலியாணத்துக்கு நீ அழைக்கப்பட்டிருக்கும் போது, பந்தியில் முதன்மையான இடத்தில் உட்காராதே; உன்னிலும் கனமுள்ளவன் ஒருவேளை அவனால் அழைக்கப்பட்டிருப்பான். அப்பொழுது உன்னையும் அவனையும் அழைத்தவன் உன்னிடத்தில் வந்து: இவருக்கு இடங்கொடு என்பான்; அப்பொழுது நீ வெட்கத்தோடே தாழ்ந்த இடத்திற்குப் போக வேண்டியதாயிருக்கும்” என்று இயேசு விளக்குகிறார்.

ஆகையால் இயேசு இவ்வாறு ஆலோசனை கூறுகிறார்: “நீ அழைக்கப்பட்டிருக்கும் போது, போய், தாழ்ந்த இடத்தில் உட்காரு; அப்பொழுது உன்னை அழைத்தவன் வந்து: சிநேகிதனே, உயர்ந்த இடத்தில் வாரும் என்று சொல்லும் போது, உன்னுடனே கூடப் பந்தியிருக்கிறவர்களுக்கு முன்பாக உனக்குக் கனமுண்டாகும்.” முடிக்கையில், இயேசு இவ்வாறு சொல்கிறார்: “தன்னைத்தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.”

அடுத்து, இயேசு தம்மை விருந்துக்கு அழைத்த பரிசேயனை நோக்கி, கடவுளின் பார்வையில் உண்மையான மதிப்பை உடைய ஒரு விருந்தை எவ்வாறு ஏற்பாடு செய்வது என்பதை விவரிக்கிறார். “நீ பகல் விருந்தாவது இராவிருந்தாவது பண்ணும்போது, உன் சிநேகிதரையாகிலும் உன் சகோதரரையாகிலும், உன் பந்து ஜனங்களையாகிலும், ஐசுவரியமுள்ள அயலகத்தாரையாகிலும் அழைக்க வேண்டாம்; அழைத்தால் அவர்களும் உன்னை அழைப்பார்கள், அப்பொழுது உனக்குப் பதிலுக்குப் பதில் செய்ததாகும். நீ விருந்து பண்ணும்போது ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் அழைப்பாயாக. அப்பொழுது நீ பாக்கியவானாயிருப்பாய்; அவர்கள் உனக்குப் பதில் செய்யமாட்டார்கள்.”

அப்பேர்ப்பட்ட உணவை வசதியற்றவர்களுக்கு ஏற்பாடு செய்வது, அதை செய்பவருக்கு சந்தோஷத்தை கொண்டு வரும், ஏனென்றால் “நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் உனக்குப் பதில் செய்யப்படும்” என்று இயேசு தமக்கு விருந்தளிப்பவரிடம் விளக்குகிறார். பாராட்டுவதற்கு தகுதியுடைய இந்த உணவைப் பற்றிய இயேசுவின் விவரிப்பு, மற்றொரு வகையான உணவைப் பற்றிய எண்ணத்தை உடன் விருந்தினரின் மனதுக்கு கொண்டுவருகிறது. “தேவனுடைய ராஜ்யத்தில் போஜனம் பண்ணுகிறவன் பாக்கியவான்” என்று இந்த விருந்தினன் சொல்கிறான். என்றபோதிலும், அந்தச் சந்தோஷமான எதிர்பார்த்தலை எல்லாருமே தகுந்த மதிப்புடன் கருதுவதில்லை. இதை இயேசு ஓர் உவமையின் மூலம் தொடர்ந்து சொல்கிறார்.

“ஒரு மனுஷன் பெரிய விருந்தை ஆயத்தம் பண்ணி, அநேகரை அழைப்பித்தான். . . . தன் ஊழியக்காரனை நோக்கி: நீ அழைக்கப்பட்டவர்களிடத்தில் போய், எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது, வாருங்கள், என்று சொல்லென்று அவனை அனுப்பினான். அவர்களெல்லாரும் போக்குச் சொல்லத் தொடங்கினார்கள். ஒருவன் ஒரு வயலைக் கொண்டேன், நான் அகத்தியமாய்ப் போய், அதைப் பார்க்க வேண்டும், என்னை மன்னிக்கும்படி வேண்டிக் கொள்ளுகிறேன் என்றான். வேறொருவன்: ஐந்தேர்மாடு கொண்டேன், அதைச் சோதித்துப் பார்க்கப் போகிறேன், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். வேறொருவன்: பெண்ணை விவாகம் பண்ணினேன், அதினால் நான் வரக்கூடாது என்றான்.”

என்னே ஒப்புக்கொள்ளத்தகாத சாக்குப்போக்குகள்! பொதுவாக ஒரு நிலம் அல்லது வீட்டுவிலங்குகள் அவைகள் வாங்கப்படுவதற்கு முன்பே பரிசோதிக்கப்படுகின்றன, ஆகையால் அதற்குப் பின்பு, அவைகளைப் பார்ப்பதற்கு உண்மையில் அவசரத் தேவை எதுவுமில்லை. அதே போன்று, ஒரு நபரின் திருமணம் அப்பேர்ப்பட்ட ஒரு முக்கியமான அழைப்பை ஏற்றுக்கொள்ள அவனைத் தடைசெய்யக்கூடாது. ஆகையால் இந்தச் சாக்குப்போக்குகளைப் பற்றி கேட்ட போது, எஜமான் கோபமடைந்து, தன் அடிமைக்கு இவ்வாறு கட்டளையிடுகிறான்:

“நீ பட்டணத்தின் தெருக்களிலும் வீதிகளிலும் சீக்கிரமாய்ப் போய், ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் இங்கே கூட்டிக்கொண்டு வா என்றான். ஊழியக்காரன் அப்படியே செய்து: ஆண்டவரே, நீர் கட்டளையிட்டபடி செய்தாயிற்று, இன்னும் இடம் இருக்கிறது என்றான். அப்பொழுது எஜமான் ஊழியக்காரனை நோக்கி: நீ பெருவழிகளிலும் வேலிகளருகிலும் போய், என் வீடு நிறையும்படியாக ஜனங்களை உள்ளே வரும்படி வருந்திக் கூட்டிக் கொண்டு வா; அழைக்கப்பட்டிருந்த அந்த மனுஷரில் ஒருவனாகிலும் என் விருந்தை ருசிபார்ப்பதில்லை.”

இந்த உவமையினால் என்ன நிலைமை விவரிக்கப்பட்டிருக்கிறது? உணவை ஏற்பாடு செய்யும் “எஜமான்” யெகோவா தேவனை பிரதிநிதித்துவம் செய்கிறான்; அழைப்பிதழை அளிக்கும் “ஊழியக்காரன்” இயேசு கிறிஸ்து; “மகத்தான இராவிருந்து” (NW) பரலோக ராஜ்யத்தில் அங்கத்தினராவதற்குரிய வாய்ப்புகள்.

ராஜ்யத்தில் அங்கத்தினராவதற்கு அழைப்பை மற்ற எல்லாருக்கும் மேலாக முதலாவது பெற்றவர்கள் இயேசுவின் நாட்களிலிருந்த யூத மதத் தலைவர்கள். என்றபோதிலும், அவர்கள் அழைப்பை ஏற்க மறுத்தனர். ஆக, பொ.ச. 33 பெந்தெகொஸ்தே நாளிலிருந்து குறிப்பாக, யூத தேசத்தில் இழிவாக கருதப்பட்டவர்களிடமாகவும் எளிமையானவர்களிடமாகவும் இரண்டாம் அழைப்பு அளிக்கப்பட்டது. ஆனால் கடவுளுடைய பரலோக ராஜ்யத்தில் 1,44,000 இடங்களை பூர்த்தி செய்வதற்கு போதுமான ஆட்கள் பிரதிபலிக்கவில்லை. ஆகையால் பொ.ச. 36-ல் மூன்றரை வருடங்களுக்குப் பின்பு, மூன்றாவதும் கடைசியானதுமான அழைப்பு விருத்தசேதனம் செய்யப்படாத யூதரல்லாதவர்களுக்கு அளிக்கப்பட்டது. அப்பேர்ப்பட்டவர்களை கூட்டிச் சேர்ப்பது நம்முடைய நாள் வரையாக தொடர்ந்து வந்திருக்கிறது. லூக்கா 14:1–24.

▪ மனத்தாழ்மையில் என்ன பாடத்தை இயேசு கற்பிக்கிறார்?

▪ கடவுளின் பார்வையில் மதிப்பை உடைய விருந்தை ஒருவர் எவ்வாறு அளிக்கமுடியும், அளிப்பவருக்கு ஏன் அது மகிழ்ச்சியைக் கொண்டுவரும்?

▪ அழைக்கப்பட்ட விருந்தினர்களின் சாக்குப்போக்குகள் ஏன் ஒப்புக்கொள்ளத் தகாதவையாய் இருக்கின்றன?

▪ “மகத்தான இராவிருந்து” என்ற இயேசுவின் உவமையின் மூலம் என்ன பிரதிநிதித்துவம் செய்யப்படுகிறது?