Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பிறப்பதற்கு முன்பே கனப்படுத்தப்படுகிறார்

பிறப்பதற்கு முன்பே கனப்படுத்தப்படுகிறார்

அதிகாரம் 2

பிறப்பதற்கு முன்பே கனப்படுத்தப்படுகிறார்

காபிரியேல் தூதன் இளம் பெண் மரியாளிடம் அவள் நித்திய ராஜாவாக ஆகப்போகும் ஓர் ஆண்குழந்தையைப் பெற்றெடுப்பாள் என்று சொல்லிய பின்பு, மரியாள் கேட்கிறாள்: “இது எப்படியாகும்? புருஷனை அறியேனே.”

“பரிசுத்த ஆவி உன்மேல் வரும்,” என்று காபிரியேல் விளக்குகிறார், “உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.”

தன் செய்தியை மரியாள் நம்பும்படி உதவ காபிரியேல் தொடர்ந்து சொல்கிறார்: “இதோ, உனக்கு இனத்தாளாயிருக்கிற எலிசபெத்தும் தன் முதிர்வயதிலே ஒரு புத்திரனைக் கர்ப்பந்தரித்திருக்கிறாள்; மலடியென்னப்பட்ட அவளுக்கு இது ஆறாம் மாதம். தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை.”

மரியாள் காபிரியேலின் வார்த்தையை ஏற்றுக் கொள்கிறாள். அவளுடைய பிரதிபலிப்பு என்ன? “இதோ, நான் ஆண்டவருக்கு [யெகோவாவுக்கு, NW] அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள்.”

காபிரியேல் சென்றவுடனேயே, மரியாள் தயாராகி யூதாவிலுள்ள மலைநாட்டிலே கணவனாகிய சகரியாவுடன் வாழும் எலிசபெத்தை காண செல்கிறாள். நாசரேத்திலுள்ள மரியாள் வீட்டிலிருந்து, இது மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு நீண்ட பயணமாயிருக்கிறது.

மரியாள் இறுதியில் சகரியாவின் வீட்டுக்கு வந்து சேர்ந்து, உள்ளே பிரவேசித்து ஒரு வாழ்த்துதலை சொல்கிறாள். அப்போது எலிசபெத்து பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, மரியாளிடம் அவள் சொல்கிறாள்: “ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது. என் ஆண்டவருடைய தாயார் என்னிடத்தில் வந்தது எனக்கு எதினால் கிடைத்தது. இதோ, நீ வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் வயிற்றிலுள்ள பிள்ளை களிப்பாய்த் துள்ளிற்று.”

இதைக் கேட்டவுடன், மரியாள் இருதயப்பூர்வமான நன்றியோடு பிரதிபலிக்கிறாள்: “என் ஆத்துமா கர்த்தரை [யெகோவாவை, NW] மகிமைப்படுத்துகிறது. என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது. அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப் பார்த்தார்; இதோ, இது முதல் எல்லாச் சந்ததிகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள். வல்லமையுடையவர் மகிமையானவைகளை எனக்குச் செய்தார்.” தனக்கு தயவு காண்பிக்கப்பட்டபோதிலும், மரியாள் எல்லா கனத்தையும் கடவுளுக்கு செலுத்துகிறாள். “அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது” என்று அவள் சொல்கிறாள், “அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது.”

ஏவப்பட்ட தீர்க்கதரிசன பாடலினால் கடவுளை தொடர்ந்து துதித்து மரியாள் அறிவிக்கிறாள்: “தம்முடைய புயத்தினாலே பராக்கிரமஞ் செய்தார்; இருதய சிந்தையில் அகந்தையுள்ளவர்களைச் சிதறடித்தார். பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளி, தாழ்மையுள்ளவர்களை உயர்த்தினார். பசியுள்ளவர்களை நன்மைகளினால் நிரப்பி, ஐசுவரியமுள்ளவர்களை வெறுமையாய் அனுப்பி விட்டார். நம்முடைய பிதாக்களுக்கு அவர் சொன்னபடியே, ஆபிரகாமுக்கும் அவன் சந்ததிக்கும் என்றென்றைக்கும் இரக்கஞ் செய்ய நினைத்து, தம்முடைய தாசனாகிய இஸ்ரவேலை ஆதரித்தார்.”

மரியாள் ஏறக்குறைய மூன்று மாதங்கள் எலிசபெத்துடன் தங்குகிறாள், எலிசபெத்தின் கர்ப்ப காலத்தின் கடைசி வாரங்களின் போது, சந்தேகமின்றி அவள் ஒரு பெரிய உதவியாயிருக்கிறாள். கடவுளுடைய உதவியுடன் பிள்ளையை சுமந்து கொண்டிருக்கும் இந்த இரண்டு விசுவாசமுள்ள பெண்களும், அவர்களுடைய வாழ்க்கையின் ஆசீர்வதிக்கப்பட்ட சமயத்தில் ஒன்றாக இருப்பது உண்மையிலேயே மிகச் சிறந்ததாயிருக்கிறது!

பிறப்பதற்கு முன்பே இயேசுவுக்கு கொடுக்கப்பட்ட கனத்தை நீங்கள் கவனித்தீர்களா? எலிசபெத்து அவரை “என் ஆண்டவர்” என்றழைத்தாள், மேலும் மரியாள் முதலில் தோன்றிய போது அவளுடைய பிறவாத பிள்ளை மகிழ்ச்சியால் துள்ளிற்று. மறுபட்சத்தில் மற்றவர்கள் மரியாளையும் அவளுக்குப் பிறக்க இருக்கும் பிள்ளையையும் பின்னர் அவமரியாதையாக நடத்தினர் என்பதை நாம் காணப்போகிறோம். லூக்கா 1:26–56.

▪ மரியாள் எவ்வாறு கருத்தரிப்பாள் என்பதை புரிந்து கொள்ள அவளுக்கு உதவுவதற்கு காபிரியேல் என்ன சொல்கிறார்?

▪ பிறப்பதற்கு முன்பே இயேசு எவ்வாறு கனப்படுத்தப்பட்டார்?

▪ கடவுளை புகழ்ந்து ஒரு தீர்க்கதரிசன பாடலில் மரியாள் என்ன சொல்கிறாள்?

▪ மரியாள் எலிசபெத்தோடு எவ்வளவு காலம் தங்குகிறாள், இந்தச் சமயத்தின் போது மரியாள் எலிசபெத்தோடு தங்குவது ஏன் பொருத்தமானதாய் இருக்கிறது?