Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பிலாத்துவிடமிருந்து ஏரோதிடத்திற்கும், பின்பு மறுபடியும் பிலாத்துவிடம்

பிலாத்துவிடமிருந்து ஏரோதிடத்திற்கும், பின்பு மறுபடியும் பிலாத்துவிடம்

அதிகாரம் 122

பிலாத்துவிடமிருந்து ஏரோதிடத்திற்கும், பின்பு மறுபடியும் பிலாத்துவிடம்

இயேசு தாம் ராஜா என்று பிலாத்துவிடம் மறைப்பதற்கு எந்த முயற்சியும் செய்யாதிருந்த போதிலும், தம் ராஜ்யம் ரோமாபுரிக்கு அச்சுறுத்தலாக இல்லை என்று அவர் விளக்குகிறார். “என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல” என்று இயேசு சொல்கிறார். “என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல.” தம் ராஜ்யம் பூமிக்குரிய ஊற்றுமூலத்திலிருந்து இல்லாவிட்டாலும்கூட தமக்கு ஒரு ராஜ்யம் இருக்கிறது என்பதை இயேசு மூன்று தடவைகள் ஒப்புக்கொள்கிறார்.

என்றபோதிலும், பிலாத்து அவரை மேலும் வற்புறுத்தி கேட்கிறான்: “அப்படியானால் நீ ராஜாவோ?” அதாவது, உன்னுடைய ராஜ்யம் இந்த உலகத்தின் பாகமாக இல்லாதபோதிலும்கூட நீ ஒரு ராஜாவா?

பிலாத்து சரியான முடிவுக்கு வந்திருக்கிறான் என்பதை இவ்வாறு பதிலளிப்பதன் மூலம் இயேசு பிலாத்துவுக்கு தெரிவிக்கிறார்: “நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்; சத்தியத்தைக் குறித்துச் சாட்சி கொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான்.”

ஆம், இயேசு பூமியில் வந்ததன் நோக்கம் “சத்தியத்துக்கு” சாட்சி கொடுப்பதற்காகவே, குறிப்பாக அவருடைய ராஜ்யத்தைப் பற்றிய சத்தியம். அதற்காக அவருடைய ஜீவனை கொடுக்க வேண்டியிருந்தாலும் இயேசு அந்தச் சத்தியத்துக்கு உண்மையுள்ளவராக இருக்க தயாராயிருக்கிறார். பிலாத்து “சத்தியமாவது என்ன?” என்று கேட்டாலும், கூடுதலான விளக்கத்துக்காக அவன் காத்திருக்கவில்லை. நியாயத்தீர்ப்பு அளிப்பதற்கு அவன் போதுமானதை கேட்டிருக்கிறான்.

அரண்மனைக்கு வெளியே காத்துக்கொண்டிருக்கும் ஜனக்கூட்டத்தாரிடம் பிலாத்து திரும்பி வருகிறான். தன் பக்கத்தில் இயேசுவை வைத்துக்கொண்டு, பிரதான ஆசாரியரிடமும், அவர்களோடிருந்தவர்களிடமும் அவன் இவ்வாறு சொல்கிறான்: “இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை.”

இந்தத் தீர்மானத்தால் கோபமடைந்து ஜனக்கூட்டத்தார் வற்புறுத்த ஆரம்பிக்கின்றனர்: “இவன் கலிலேயா நாடு தொடங்கி இவ்விடம் வரைக்கும் யூதேயாதேசமெங்கும் உபதேசம்பண்ணி, ஜனங்களைக் கலகப்படுத்துகிறான்.”

யூதர்களின் நியாயமற்றத்தன்மை பிலாத்துவை வியப்படையச் செய்ய வேண்டும். ஆகையால், பிரதான ஆசாரியரும் மூப்பர்களும் தொடர்ந்து கூச்சலிட்டுக் கொண்டிருக்கையில், பிலாத்து இயேசுவிடம் திரும்பி, இவ்வாறு கேட்கிறான்: “இவர்கள் உன் மேல் எத்தனையோ குற்றங்களைச் சாட்டுகிறார்களே, நீ அவைகளைக் கேட்கவில்லையா?” பதிலளிப்பதற்கு இயேசு எந்த முயற்சியும் செய்யவில்லை. அந்த மோசமான குற்றச்சாட்டுகளை எதிர்ப்படுகையிலும் அவர் அமைதியாக இருப்பது பிலாத்துவை வியப்படையச் செய்கிறது.

இயேசு ஒரு கலிலேயன் என்பதை அறிந்து, தனக்கு இருந்த உத்தரவாதத்திலிருந்து விடுபடுவதற்கு பிலாத்து ஒரு வழியை காண்கிறான். கலிலேயாவின் அதிபதியாகிய ஏரோது அந்திப்பா (மகா ஏரோதின் மகன்) பஸ்காவுக்காக எருசலேமில் இருக்கிறார், ஆகையால் பிலாத்து இயேசுவை அவனிடம் அனுப்புகிறான். முன்னர் ஏரோது அந்திப்பா யோவான் ஸ்நானனின் தலையை வெட்டும்படி செய்தான், அதற்கு பின்பு இயேசு செய்து கொண்டிருந்த அற்புதமான கிரியைகளைப் பற்றி அவன் கேள்விப்பட்ட போது, இயேசு உண்மையில் மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்ட யோவான் என்று எண்ணி பயமடைந்தான்.

இப்போது, ஏரோது இயேசுவை பார்ப்பதற்கு எதிர்பார்த்து அதிக சந்தோஷமடைகிறான். இது இயேசுவின் நலனின் பேரில் அக்கறை இருப்பதாலோ அல்லது அவருக்கு விரோதமான குற்றச்சாட்டுகள் உண்மையா இல்லையா என்பதை கண்டுபிடிக்க அவன் உண்மையிலேயே முயற்சி செய்ய விரும்புவதாலோ அல்ல. மாறாக, இயேசு சில அற்புதங்கள் செய்வதைக் காண்பதற்கு அதிக ஆர்வமுள்ளவனாயிருக்கிறான்.

என்றபோதிலும், இயேசு, ஏரோதின் ஆர்வத்தை திருப்தி செய்ய மறுத்துவிடுகிறார். உண்மையில், ஏரோது அவரை கேள்வி கேட்கையில், அவர் ஒரு வார்த்தைகூட சொல்வதில்லை. ஏமாற்றமடைந்து, ஏரோதும் அவருடைய போர்ச்சேவகரும் இயேசுவை கேலி செய்கின்றனர். ஒரு மினுக்கான வஸ்திரத்தை அவருக்கு உடுத்தி, அவரை ஏளனம் செய்கின்றனர். பின்பு அவர்கள் அவரை பிலாத்துவிடம் மறுபடியும் அனுப்புகின்றனர். இதன் விளைவாக, முதலில் விரோதிகளாக இருந்த ஏரோதும் பிலாத்துவும் இப்போது நல்ல நண்பர்களாக ஆகின்றனர்.

இயேசு திரும்பி வந்தபோது, பிலாத்து, பிரதான ஆசாரியர்களையும், யூத அதிகாரிகளையும் ஜனங்களையும் கூடி வரச் செய்து, இவ்வாறு சொல்கிறான்: “ஜனங்களைக் கலகத்துக்குத் தூண்டிவிடுகிறவனாக இந்த மனுஷனை என்னிடத்தில் கொண்டு வந்தீர்கள்; நான் உங்களுக்கு முன்பாக விசாரித்த போது, இவன் மேல் நீங்கள் சாட்டுகிற குற்றங்களில் ஒன்றையும் நான் இவனிடத்தில் காணவில்லை. உங்களை ஏரோதினிடத்திற்கும் அனுப்பினேன்; அவரும் இவனிடத்தில் குற்றம் காணவில்லை; மரணத்துக்கேதுவாக இவன் ஒன்றும் செய்யவில்லையே. ஆனபடியால் இவனைத் தண்டித்து, விடுதலையாக்குவேன்.”

இவ்வாறு பிலாத்து இயேசுவை இரண்டு முறை குற்றமற்றவர் என்று அறிவித்தான். அவரை விடுதலை செய்வதற்கு அவன் ஆர்வமுள்ளவனாயிருக்கிறான், பொறாமையின் காரணமாக மட்டுமே ஆசாரியர்கள் அவரை ஒப்படைத்திருக்கின்றனர் என்பதை அவன் உணருகிறான். இயேசுவை விடுதலை செய்வதற்கு பிலாத்து தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கையில், அவ்வாறு செய்வதற்கு இன்னுமதிக பலமான தூண்டுதலைப் பெறுகிறான். அவன் நியாயாசனத்தில் உட்கார்ந்திருக்கையில், அவனுடைய மனைவி ஒரு செய்தி அனுப்புகிறாள்: “நீர் அந்த நீதிமானை ஒன்றும் செய்ய வேண்டாம்; அவர் நிமித்தம் இன்றைக்குச் [தெய்வீக செயலினால் தோன்றிய] சொப்பனத்தில் வெகுபாடுபட்டேன்.”

என்றபோதிலும், இந்தக் குற்றமற்ற மனிதனை விடுதலை செய்ய வேண்டும் என்று தான் அறிந்திருக்கிறபோதிலும் பிலாத்து எவ்வாறு அவரை விடுதலை செய்ய முடியும்? யோவான் 18:36–38; லூக்கா 23:4–16; மத்தேயு 27:12–14, 18, 19; 14:1, 2; மாற்கு 15:2–5.

▪ தன் ராஜபதவியைப் பற்றிய கேள்விக்கு இயேசு எவ்வாறு பதிலளிக்கிறார்?

▪ தம் பூமிக்குரிய வாழ்க்கையில் இயேசு சாட்சி கொடுத்த “சத்தியம்” என்ன?

▪ பிலாத்துவின் நியாயத்தீர்ப்பு என்ன? ஜனங்கள் எவ்வாறு பிரதிபலிக்கின்றனர்? பிலாத்து இயேசுவை என்ன செய்கிறான்?

▪ ஏரோது அந்திப்பா யார்? இயேசுவை காண்பதற்கு ஏன் அவன் அவ்வளவு சந்தோஷப்படுகிறான்? அவன் அவரை என்ன செய்கிறான்?

▪ பிலாத்து இயேசுவை விடுதலைசெய்வதற்கு ஏன் ஆர்வமுள்ளவனாயிருக்கிறான்?