Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பெத்தானியாவில், சீமோனுடைய வீட்டில்

பெத்தானியாவில், சீமோனுடைய வீட்டில்

அதிகாரம் 101

பெத்தானியாவில், சீமோனுடைய வீட்டில்

இயேசு எரிகோவை விட்டுப் புறப்பட்டு, பெத்தானியாவை நோக்கிச் செல்கிறார். கடினமான திணைநிலப் பகுதி மீது 19 கிலோமீட்டர் ஏறிச் செல்ல வேண்டியிருப்பதால், இந்தப் பயணம் ஏறக்குறைய ஒரு நாள் முழுவதையும் எடுத்துவிடுகிறது. எரிகோ கடல் மட்டத்துக்கு ஏறக்குறைய 250 மீட்டர் கீழ் இருக்கிறது, பெத்தானியா கடல் மட்டத்துக்கு ஏறக்குறைய 760 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. லாசரு மற்றும் அவனுடைய சகோதரிகளின் வீடு பெத்தானியாவில் இருக்கிறது என்பதை நீங்கள் நினைவுபடுத்திப் பார்க்கலாம். இந்தச் சிறு கிராமம் எருசலேமிலிருந்து ஏறக்குறைய மூன்று கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது, ஒலிவமலையின் கிழக்கத்திய சரிவில் அமைந்திருக்கிறது.

அநேகர் பஸ்காவுக்காக எருசலேமுக்கு ஏற்கெனவே வந்து சேர்ந்துவிட்டிருக்கின்றனர். அவர்கள் தங்களை ஆசார முறைப்படி சுத்தம் செய்து கொள்ள முன்கூட்டியே வந்திருக்கின்றனர். அவர்கள் ஒருவேளை செத்த உடலைத் தொட்டிருக்கலாம் அல்லது தங்களை அசுத்தமாக்கக்கூடிய ஏதோவொன்றை செய்திருக்கலாம். ஆகவே பஸ்காவை ஏற்கத்தகுந்த விதமாய் கொண்டாடுவதற்கு அவர்கள் தங்களை சுத்தம் செய்து கொள்வதற்கான செயற்படுமுறைகளை கடைப்பிடிக்கின்றனர். முன்னமே வந்து சேர்ந்தவர்கள் ஆலயத்தில் ஒன்றாக கூடி வருகையில், இயேசு பஸ்காவுக்கு வரக்கூடும் என்று அநேகர் யூகிக்கின்றனர்.

எருசலேம் இயேசுவைப் பற்றி கருத்து வேறுபாடு கொண்ட உணர்ச்சி மிகுந்த இடமாக இருக்கிறது. அவரைப் பிடித்து கொலை செய்ய வேண்டும் என்று மதத் தலைவர்கள் விரும்புகின்றனர் என்பதை பொது மக்கள் எல்லாரும் நன்றாக அறிந்திருக்கின்றனர். உண்மையில், யாராவது அவர் இருக்கும் இடத்தைப் பற்றி அறிய வந்தால் அவர்கள் சென்று அவர்களிடம் அறிவிக்க வேண்டும் என்று அவர்கள் உத்தரவிட்டிருந்தனர். சமீப மாதங்களில் மூன்று முறைகள்—கூடாரப் பண்டிகையின் போது, பிரதிஷ்டை பண்டிகையின் போது, அவர் லாசருவை உயிர்த்தெழுப்பியதற்குப் பின்—அவர்கள் அவரை கொலை செய்வதற்கு முயற்சி செய்திருக்கின்றனர். ஆகையால், இயேசு மற்றொரு முறை பொது மக்கள் இருக்கும் இடத்துக்கு வருவாரா? என்று ஜனங்கள் ஆச்சரியப்படுகின்றனர். “உங்களுக்கெப்படித் தோன்றுகிறது?” என்று ஒருவரையொருவர் நோக்கி கேட்டுக் கொள்கின்றனர்.

இதற்குள் இயேசு பஸ்காவுக்கு ஆறு நாட்களுக்கு முன்பே பெத்தானியாவுக்கு வந்து சேருகிறார், யூத நாட்காட்டியின்படி பஸ்கா நிசான் 14-ம் தேதி வருகிறது. நிசான் 8-ம் தேதியின் ஆரம்பமாயிருக்கும் வெள்ளிக்கிழமை மாலை ஏதோ ஒருசமயம் இயேசு பெத்தானியா வந்து சேருகிறார். அவர் பெத்தானியாவுக்கு சனிக்கிழமை பிரயாணம் செய்திருக்க மாட்டார். ஏனென்றால் ஓய்வுநாளில்—வெள்ளிக்கிழமை சூரிய அஸ்தமனத்திலிருந்து சனிக்கிழமை சூரிய அஸ்தமனம் வரை—பிரயாணம் செய்வதை யூத சட்டம் தடை செய்கிறது. இயேசு முன்பு செய்தது போலவே, இப்போதும் லாசருவின் வீட்டுக்குச் சென்று வெள்ளிக்கிழமை இரவை அங்கு கழிக்கிறார்.

என்றபோதிலும், பெத்தானியாவில் குடியிருக்கும் மற்றொருவர் இயேசுவையும் அவருடைய கூட்டாளிகளையும் சனிக்கிழமை மாலை உணவுக்கு அழைக்கிறார். அந்த மனிதன் முன்பு குஷ்டரோகியாயிருந்த சீமோன் என்பவன். இவன் ஆரம்பத்திலேயே ஒருவேளை இயேசுவால் குணமாக்கப்பட்டிருக்கலாம். தன்னுடைய கடுமையாக உழைக்கும் சுபாவத்துக்கு ஏற்றவாறு, மார்த்தாள் விருந்தினர்களுக்கு பணிபுரிந்து கொண்டிருக்கிறாள். ஆனால் மரியாள் அவளுடைய குணத்துக்குப் பொருத்தமாக இயேசுவை கவனித்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் இம்முறை வாதத்தை தூண்டும் விதத்தில் செய்கிறாள்.

மரியாள் ஏறக்குறைய அரை கிலோகிராம் பரிமள தைலம், “களங்கமில்லாத நளதம்” கொள்ளும் ஒரு வெள்ளைக்கல் பரணியை, அல்லது சிறிய குப்பியைத் திறக்கிறாள். இது அதிக விலைமதிப்புள்ளதாயிருக்கிறது. உண்மையிலேயே அதனுடைய மதிப்பு ஏறக்குறைய ஒரு வருட ஊதியத்துக்கு சமமாயிருக்கிறது! மரியாள் அந்தத் தைலத்தை இயேசுவின் தலை மற்றும் பாதங்கள் மீது ஊற்றி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைக்கிறாள், தைலத்தின் நறுமணம் வீடு முழுவதையும் நிரப்புகிறது.

சீஷர்கள் கோபமடைந்து இவ்வாறு கேட்கின்றனர்: “இந்த வீண்செலவு என்னத்திற்கு?” பின்பு யூதாஸ்காரியோத்து இவ்வாறு சொல்கிறான்: “இந்தத் தைலத்தை முந்நூறு பணத்துக்கு விற்று, தரித்திரருக்குக் கொடாமல் போனதென்ன?” ஆனால் யூதாஸ் ஏழைகளைப் பற்றி உண்மையிலேயே அக்கறையுள்ளவனாயில்லை, ஏனென்றால் அவன் சீஷர்கள் வைத்திருந்த பணப்பெட்டியிலிருந்து திருடிக்கொண்டிருந்தான்.

இயேசு மரியாளுக்கு ஆதரவாக பேசுகிறார். “அவளை விட்டு விடுங்கள்” என்று அவர் கட்டளையிடுகிறார். “ஏன் அவளைத் தொந்தரவு படுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்கிரியையைச் செய்திருக்கிறாள். தரித்திரர் எப்போதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள், உங்களுக்கு மனதுண்டாகும் போதெல்லாம் நீங்கள் அவர்களுக்கு நன்மை செய்யலாம், நானோ எப்போதும் உங்களிடத்தில் இரேன். இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்; நான் அடக்கம் பண்ணப்படுவதற்கு எத்தனமாக, என் சரீரத்தில் தைலம் பூச முந்திக் கொண்டாள். இந்தச் சுவிசேஷம் உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.”

இயேசு இப்போது பெத்தானியாவில் 24 மணிநேரங்களுக்கு மேல் இருக்கிறார், அவர் அங்கு இருப்பதைப் பற்றிய செய்தி எங்கும் பரவுகிறது. ஆகையால், இயேசுவைக் காண்பதற்கு அநேகர் சீமோனின் வீட்டுக்கு வருகின்றனர், ஆனால் அவர்கள் அங்கு வந்திருந்த லாசருவையும் காண வருகின்றனர். ஆகையால் பிரதான ஆசாரியர்கள் இயேசுவை மட்டுமல்லாமல், லாசருவையும்கூட கொலை செய்வதற்கு ஆலோசனை பண்ணுகிறார்கள். இது ஏனென்றால், அவர் மரித்தோரிலிருந்து எழுப்பிய ஒருவன் உயிரோடு இருப்பதைக் கண்டு அநேகர் இயேசுவில் விசுவாசம் வைக்கின்றனர்! உண்மையில், இந்த மதத் தலைவர்கள் எவ்வளவு கொடூரமானவர்களாய் இருக்கின்றனர்! யோவான் 11:55–12:11; மத்தேயு 26:6–13; மாற்கு 14:3–9; அப்போஸ்தலர் 1:12.

▪ எருசலேமில் உள்ள ஆலயத்தில் என்ன கலந்தாலோசிப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது, ஏன்?

▪ இயேசு ஏன் பெத்தானியாவுக்கு சனிக்கிழமை வராமல் வெள்ளிக்கிழமை வந்து சேர்ந்திருக்க வேண்டும்?

▪ இயேசு பெத்தானியாவுக்கு வந்து சேர்ந்த போது, அவர் ஓய்வுநாளை எங்கே செலவழித்திருக்கக்கூடும்?

▪ மரியாளின் என்ன செயல் வாக்குவாதத்தை கிளப்பிவிடுகிறது, இயேசு எவ்வாறு அவளை ஆதரித்துப் பேசுகிறார்?

▪ பிரதான ஆசாரியர்களின் மிகப்பெரிய கொடுமையை எது சிறப்பித்துக் காண்பிக்கிறது?