Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மனுஷகுமாரன் வெளிப்படும் போது

மனுஷகுமாரன் வெளிப்படும் போது

அதிகாரம் 93

மனுஷகுமாரன் வெளிப்படும் போது

இயேசு இன்னும் வடக்குப் பகுதியில் (சமாரியாவிலாவது கலிலேயாவிலாவது) இருக்கையில் ராஜ்யத்தின் வருகையைப் பற்றி பரிசேயர்கள் அவரிடம் கேட்கின்றனர். அது ஆரவாரத்தோடும் பகட்டோடும் வரும் என்று அவர்கள் நம்புகின்றனர். ஆனால் இயேசு சொல்கிறார்: “தேவனுடைய ராஜ்யம் பிரத்தியட்சமாய் வராது. இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது; இதோ, தேவனுடைய ராஜ்யம் உங்கள் மத்தியில் இருக்கிறதே.”

“உங்கள் மத்தியில்” என்ற இயேசுவின் வார்த்தைகள் சில சமயங்களில் “உங்களுக்குள்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. கடவுளுடைய ஊழியர்களின் இருதயங்களில் கடவுளுடைய ராஜ்யம் ஆளுகை செய்கிறது என்று இயேசு அர்த்தப்படுத்தியதாக சிலர் எண்ணியிருக்கின்றனர். இயேசு பேசிக்கொண்டிருக்கும் விசுவாசிகளல்லாத இப்பேர்ப்பட்ட பரிசேயர்களின் இருதயங்களுக்குள் கடவுளுடைய ராஜ்யம் இல்லை என்பது தெளிவாக இருக்கிறது. என்றபோதிலும், அது அவர்கள் மத்தியில் இருக்கிறது, ஏனென்றால் கடவுளுடைய ராஜ்யத்தின் ராஜாவாக நியமிக்கப்பட்டுள்ள இயேசு கிறிஸ்து அவர்கள் மத்தியில் இருக்கிறார்.

ஒருவேளை பரிசேயர்கள் அவ்விடத்தை விட்டுச் சென்ற பின்பு, ராஜ்யத்தின் வருகையைப் பற்றி இயேசு தம்முடைய சீஷர்களோடு மேலுமதிகமாக பேசுகிறார். ராஜ்ய வல்லமையில் அவருடைய எதிர்கால பிரசன்னத்தைக் குறிப்பாக மனதில் வைத்து, இவ்வாறு எச்சரிக்கிறார்: “இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும், சிலர் உங்களிடத்தில் சொல்லுவார்கள்; நீங்களோ போகாமலும் [இந்தப் பொய் மேசியாக்களை] பின்தொடராமலும் இருங்கள். மின்னல் வானத்தின் ஒரு திசையில் தோன்றி மறுதிசைவரைக்கும் பிரகாசிக்கிறது போல் மனுஷகுமாரனும் தம்முடைய நாளிலே தோன்றுவார்.” மின்னல் நெடுந்தொலைவு வரை பரந்து காணப்படுகிறது போல, ராஜ்ய வல்லமையில் அவருடைய பிரசன்னத்தின் அத்தாட்சி அதைக் காண விரும்பும் அனைவருக்கும் தெளிவாக காணப்படும் என்று இயேசு குறிப்பிடுகிறார்.

பின்பு இயேசு அவருடைய எதிர்கால பிரசன்னத்தின் போது ஜனங்களின் மனநிலைகள் என்னவாயிருக்கும் என்பதைக் காண்பிப்பதற்கு, பண்டைய கால சம்பவங்களோடு ஒப்பிடுதல்களை செய்கிறார். அவர் இவ்வாறு விளக்குகிறார்: “நோவாவின் நாட்களில் நடந்தது போல மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும். . . . லோத்தினுடைய நாட்களில் நடந்தது போலவும் நடக்கும்; ஜனங்கள் புசித்தார்கள், குடித்தார்கள், கொண்டார்கள், விற்றார்கள், நட்டார்கள், கட்டினார்கள். லோத்து சோதோமை விட்டுப் புறப்பட்ட நாளிலே வானத்திலிருந்து அக்கினியும் கந்தகமும் வருஷித்து, எல்லாரையும் அழித்துப் போட்டது. மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்.”

நோவாவின் நாட்களிலும் லோத்தின் நாட்களிலும் இருந்த ஜனங்கள், புசிப்பது, குடிப்பது, கொள்வது, விற்பது, நடுவது, கட்டுவது போன்ற வழக்கமான வேலைகளை வெறுமென செய்ததன் காரணமாக அவர்கள் அழிக்கப்பட்டனர் என்று இயேசு சொல்லவில்லை. நோவாவும், லோத்தும் அவர்களுடைய குடும்பங்களும்கூட இந்தக் காரியங்களைச் செய்தனர். ஆனால் மற்றவர்கள் கடவுளுடைய சித்தத்துக்கு எந்தக் கவனமும் செலுத்தாமல் இப்பேர்ப்பட்ட அன்றாடக வேலைகளைச் செய்து கொண்டிருந்தனர், ஆகையால் இந்தக் காரணத்துக்காகத் தான் அவர்கள் அழிக்கப்பட்டனர். இதே காரணத்துக்காகத் தான், இந்தக் காரிய ஒழுங்கு முறையின் மேல் வரப்போகும் மிகுந்த உபத்திரவத்தின் போது கிறிஸ்து வெளிப்படுகையில் ஜனங்கள் அழிக்கப்படுவர்.

ராஜ்ய வல்லமையில் அவருடைய எதிர்கால பிரசன்னத்தின் அத்தாட்சிக்கு விரைவாக பிரதிபலிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அழுத்திக் காட்டுபவராய் இயேசு கூடுதலாக சொல்கிறார்: “அந்த நாளிலே வீட்டின் மேலிருப்பவன் வீட்டிலுள்ள தன் பண்டங்களை எடுத்துக் கொண்டு போக இறங்காமல் இருக்கக் கடவன்; அப்படியே வயலிலிருக்கிறவன் பின்னிட்டுத் திரும்பாமலும் இருக்கக்கடவன். லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள்.”

கிறிஸ்துவின் பிரசன்னத்தின் அத்தாட்சி தோன்றும் போது, ஜனங்கள் பொருள் உடைமைகளுக்காக தங்களுக்கு இருக்கும் பற்றுதல் சரியான நடவடிக்கை எடுப்பதற்கு தங்களை தடைசெய்யவிடக்கூடாது. சோதோமை விட்டு வெளியே வரும் வழியில் லோத்தின் மனைவி, பின்னால் விட்டு வந்த பொருட்களுக்காக ஆசையுடன் திரும்பிப் பார்த்தாள், ஓர் உப்புத் தூணாக ஆனாள்.

தம்முடைய எதிர்கால பிரசன்னத்தின் போது இருக்கப் போகும் நிலைமையை தொடர்ந்து விவரிப்பவராய் இயேசு தம்முடைய சீஷர்களிடம் இவ்வாறு சொல்கிறார்: “அந்த இராத்திரியில் ஒரே படுக்கையில் படுத்திருக்கிற இரண்டு பேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான். திரிகை திரிக்கிற இரண்டு ஸ்திரீகளில் ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், மற்றவள் கைவிடப்படுவாள்.”

ஏற்றுக்கொள்ளப்படுவது என்பது, நோவா தன் குடும்பத்தோடு பேழைக்குள் செல்வதற்கும், தேவதூதர்கள் லோத்தையும் அவன் குடும்பத்தையும் கூட்டிக்கொண்டு சோதோமுக்கு வெளியே வருவதற்கும் ஒப்பாக இருக்கிறது. அது இரட்சிப்பைக் குறிக்கிறது. மறுபட்சத்தில், கைவிடப்படுவது என்பது அழிக்கப்படுவதற்கு ஆளாவதை அர்த்தப்படுத்துகிறது.

இந்தச் சமயத்தில் சீஷர்கள் “எங்கே, ஆண்டவரே?” என்று கேட்கின்றனர்.

“உடல் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்துகூடும்” என்று இயேசு பதிலளிக்கிறார். இரட்சிப்புக்காக “ஏற்றுக்கொள்ளப்படுபவர்கள்” “உடலைச்” சுற்றி அவர்கள் ஒன்றுகூடுவதனால் நீண்ட தூரப் பார்வையையுடைய கழுகுகளைப் போல் இருக்கின்றனர். தம்முடைய காணக்கூடாத பிரசன்னத்தின் போது ராஜ்ய வல்லமையில் உள்ள மெய்யான கிறிஸ்துவையும், யெகோவா ஏற்பாடு செய்யும் ஆவிக்குரிய விருந்தையும் இந்த உடல் குறிக்கிறது. லூக்கா 17:20-37, NW; ஆதியாகமம் 19:26.

▪ பரிசேயர்களின் மத்தியில் ராஜ்யம் எவ்வாறு இருந்தது?

▪ என்ன விதத்தில் கிறிஸ்துவின் பிரசன்னம் மின்னலைப் போன்று இருக்கிறது?

▪ கிறிஸ்துவின் பிரசன்னத்தின் போது ஜனங்கள் தங்கள் செயல்களுக்காக ஏன் அழிக்கப்படுவர்?

▪ ஏற்றுக்கொள்ளப்படுவது மேலும் கைவிடப்படுவது என்பவைகளின் அர்த்தம் என்ன?