Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மார்த்தாளுக்கு புத்திமதியும், ஜெபத்தின் பேரில் அறிவுரையும்

மார்த்தாளுக்கு புத்திமதியும், ஜெபத்தின் பேரில் அறிவுரையும்

அதிகாரம் 74

மார்த்தாளுக்கு புத்திமதியும், ஜெபத்தின் பேரில் அறிவுரையும்

இயேசுவின் யூதேய ஊழியத்தின் போது, பெத்தானியா என்ற கிராமத்துக்குள் அவர் செல்கிறார். இங்கு தான் மார்த்தாள், மரியாள் மேலும் அவர்களுடைய சகோதரனாகிய லாசருவும் வசிக்கின்றனர். ஒருவேளை இயேசு தம்முடைய ஊழியத்தின் ஆரம்ப நாட்களில் இந்த மூன்று பேரையும் சந்தித்திருக்கலாம், ஆகையால் அவர் ஏற்கெனவே அவர்களுடைய நெருங்கிய நண்பராக இருக்கிறார். எப்படியிருப்பினும், இயேசு இப்பொழுது மார்த்தாளின் வீட்டுக்குச் செல்கிறார், அவளால் வரவேற்கப்படுகிறார்.

அவளிடம் இருக்கும் மிகச் சிறந்ததை இயேசுவுக்குக் கொடுக்க மார்த்தாள் ஆவலாயிருக்கிறாள். உண்மையிலேயே, வாக்குப்பண்ணப்பட்ட மேசியா, ஒருவர் வீட்டுக்கு வருகை தருவது பெரும் மதிப்புக்குரியதாய் இருக்கிறது! ஒரு பெரிய விருந்தை தயாரிப்பதில் மார்த்தாள் ஈடுபட்டிருக்கிறாள், அவர் அங்கு தங்கியிருக்கும் சமயத்தை அதிக சந்தோஷமானதாகவும், வசதியானதாகவும் ஆக்குவதற்கு மற்ற அநேக காரியங்களையும் கவனித்துக் கொண்டிருக்கிறாள்.

மறுபட்சத்தில், மார்த்தாளின் சகோதரி மரியாள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருக்கு செவிகொடுத்துக் கேட்டுக் கொண்டிருக்கிறாள். சிறிது நேரத்துக்குப் பிறகு, மார்த்தாள் இயேசுவை அணுகி அவரிடம் சொல்கிறாள்: “ஆண்டவரே, நான் தனியே வேலைசெய்யும்படி என் சகோதரி என்னை விட்டு வந்திருக்கிறதைக் குறித்து உமக்குக் கவையில்லையா? எனக்கு உதவி செய்யும்படி அவளுக்குச் சொல்லும்.”

ஆனால் இயேசு மரியாளிடம் எதையும் சொல்ல மறுக்கிறார். மாறாக, பொருள் சம்பந்தமான காரியங்களில் அளவுக்கு மீறி அவள் அக்கறையுள்ளவளாய் இருப்பதற்காக அவர் மார்த்தாளுக்கு புத்திமதி கொடுக்கிறார். “மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக் குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். தேவையானது [ஒருசில பதார்த்தங்களே அல்லது, NW] ஒன்றே” என்று அவர் தயவாய் கண்டிக்கிறார். சாப்பாட்டுக்காக அநேக பதார்த்தங்களைச் செய்வதற்கு அதிக நேரத்தை செலவழிப்பது அவசியமில்லை என்று இயேசு சொல்கிறார். ஒருசில பதார்த்தங்கள் அல்லது வெறுமென ஒரு பதார்த்தமே போதுமானது.

மார்த்தாளின் உள்நோக்கங்கள் நல்லவையாக இருக்கின்றன. விருந்தினரை உபசரிக்கும் பெண்ணாக இருக்க விரும்புகிறாள். என்றபோதிலும், பொருள் சம்பந்தமான ஏற்பாடுகளுக்கு தன்னுடைய அக்கறையான கவனத்தின் மூலம் கடவுளுடைய சொந்த குமாரனிடமிருந்து வரும் தனிப்பட்ட போதனையை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை அவள் தவற விடுகிறாள்! ஆகையால் இயேசு இவ்வாறு முடிக்கிறார்: “மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்து கொண்டாள்.”

பின்னர் மற்றொரு சமயத்தில், ஒரு சீஷன் இயேசுவை கேட்கிறான்: “ஆண்டவரே, யோவான் தன் சீஷருக்கு ஜெபம் பண்ணப் போதித்தது போல, நீரும் எங்களுக்குப் போதிக்க வேண்டும்.” ஏறக்குறைய ஒன்றரை வருடங்களுக்கு முன்பு இயேசு தம்முடைய மலைப்பிரசங்கத்தில் மாதிரி ஜெபத்தைக் கொடுத்த போது, இந்தச் சீஷன் ஒருவேளை அங்கிருந்திருக்க மாட்டான். ஆகையால் இயேசு தம்முடைய போதனைகளை மறுபடியும் சொல்கிறார். ஆனால் அதைத் தொடர்ந்து, ஜெபத்தில் விடா முயற்சியுடன் ஈடுபட்டிருக்க வேண்டியதன் அவசியத்தை அழுத்திக் காண்பிக்க ஓர் உவமையை சொல்கிறார்.

“உங்களில் ஒருவன் தனக்குச் சிநேகிதனாயிருக்கிறவனிடத்தில் பாதி ராத்திரியிலே போய்: சிநேகிதனே, என் சிநேகிதன் ஒருவன் வழிப்பிரயாணமாய் என்னிடத்தில் வந்திருக்கிறான், அவன் முன் வைக்கிறதற்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை, நீ மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகத் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டான். வீட்டுக்குள் இருக்கிறவன் பிரதியுத்தரமாக: என்னைத் தொந்தரவு செய்யாதே, கதவு பூட்டியாயிற்று, என் பிள்ளைகள் என்னோடே கூடப் படுத்திருக்கிறார்கள், நான் எழுந்திருந்து, உனக்குத் தரக்கூடாது என்று சொன்னான். பின்பு, தனக்கு அவன் சிநேகிதனாயிருக்கிறதினிமித்தம் எழுந்து அவனுக்குக் கொடாவிட்டாலும், தன்னிடத்தில் அவன் வருந்திக் கேட்கிறதினிமித்தமாவது எழுந்திருந்து, அவனுக்குத் தேவையானதைக் கொடுப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.”

தம்முடைய கதையில் இருந்த நண்பனைப் போன்று யெகோவா தேவன் விண்ணப்பங்களுக்கு பிரதிபலிக்க மனமில்லாதவராய் இருக்கிறார் என்பதை இந்த ஒப்பிடுதலின் மூலம் இயேசு மறைமுகமாகக் குறிப்பிட்டுக் காட்டவில்லை. இல்லை, தொடர்ந்து விடாப்பிடியாக கேட்டுக்கொண்டிருந்த வேண்டுகோளுக்கு மனமில்லாத நண்பன் பிரதிபலிக்கும் போது, நம்முடைய அன்பான பரலோகத் தகப்பன் எவ்வளவு அதிகமாக பிரதிபலிப்பார் என்பதை அவர் உவமையாய் விளக்குகிறார்! இயேசு தொடர்ந்து சொல்கிறார்: “நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: [தொடர்ந்து, NW] கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; [தொடர்ந்து, NW] தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; [தொடர்ந்து, NW] தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும். ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.”

பின்பு இயேசு அபூரண, பாவமுள்ள மானிட தகப்பன்மார்களைச் சுட்டிக்காட்டி சொல்கிறார்: “உங்களில் தகப்பனாயிருக்கிற ஒருவனிடத்தில் மகன் . . . மீனைக் கேட்டால் மீனுக்குப் பதிலாய்ப் பாம்பைக் கொடுப்பானா? அல்லது முட்டையைக் கேட்டால், அவனுக்குத் தேளைக் கொடுப்பானா? பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும் போது, பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?” ஜெபத்தில் விடாமுயற்சியுடன் ஈடுபட்டிருப்பதற்கு உண்மையிலேயே என்னே உந்துவிக்கும் உற்சாகத்தை இயேசு கொடுக்கிறார். லூக்கா 10:38–11:13, NW.

▪ மார்த்தாள் ஏன் இயேசுவுக்கு அவ்வளவு பெரிய விருந்தை செய்கிறாள்?

▪ மரியாள் என்ன செய்கிறாள், மார்த்தாளுக்குப் பதிலாக மரியாளை ஏன் இயேசு போற்றுகிறார்?

▪ ஜெபத்தின் பேரில் தம்முடைய போதனைகளை திரும்பச் சொல்வதற்கு இயேசுவை தூண்டியது எது?

▪ ஜெபத்தில் விடாமுயற்சியுடன் ஈடுபட்டிருக்க வேண்டியதன் அவசியத்தை இயேசு எவ்வாறு உவமையால் விளக்குகிறார்?