Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

முற்றத்தில் மறுப்புகள்

முற்றத்தில் மறுப்புகள்

அதிகாரம் 120

முற்றத்தில் மறுப்புகள்

கெத்செமனே தோட்டத்தில் இயேசுவை கைவிட்டு விட்ட பின்பு, பேதுருவும், யோவானும் மற்ற அப்போஸ்தலர்களோடுகூட பயத்தில் ஓடுகையில் இடையே நிற்கின்றனர். அன்னாவின் வீட்டுக்கு இயேசு கொண்டுபோகப்படும் போது அவர்கள் அவரோடே செல்கின்றனர். அன்னா பிரதான ஆசாரியனாகிய காய்பாவிடம் அவரை அனுப்பும் போது, பேதுருவும் யோவானும் தூரத்தில் அவருக்குப் பின் செல்கின்றனர். தங்கள் சொந்த ஜீவன்களுக்கான பயமும் தங்கள் எஜமானுக்கு என்ன நேரிடுமோ என்பதைப் பற்றி ஆழ்ந்த அக்கறையாலும் அலைக்கழிக்கப்படுகின்றனர்.

பரந்த இடமுடைய காய்பாவின் வீட்டுக்கு வந்து சேருகையில், யோவான் பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாயிருந்ததினால் முற்றத்துக்குள் அவனால் செல்ல முடிந்தது. ஆனால் பேதுரு வெளியே வாசலருகே நிற்கிறான். ஆனால் விரைவில் யோவான் திரும்பி வந்து வாசல்காக்கிற ஒரு வேலைக்காரியிடம் பேசுகிறான், பேதுரு உள்ளே செல்வதற்கு அனுமதிக்கப்படுகிறான்.

இப்போது குளிராக இருப்பதனால் வீட்டு வேலைக்காரர்களும், பிரதான ஆசாரியரின் அலுவலர்களும் கரி நெருப்புண்டாக்குகின்றனர். இயேசுவின் விசாரணையின் முடிவை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் போது குளிர்க்காய்வதற்காக பேதுரு அவர்களோடு சேர்ந்து கொள்கிறான். அங்கு, பேதுருவை உள்ளே அனுப்பிய வாசல்காக்கிறவள் பிரகாசமான நெருப்பின் வெளிச்சத்தில் அவனை நன்றாக பார்க்கிறாள். “நீயும் கலிலேயனாகிய இயேசுவோடே கூட இருந்தாய்!” என்று அவள் உரத்த குரலில் சொல்கிறாள்.

அடையாளங்கண்டுபிடிக்கப்பட்டதால் நிலைகுலைந்து, பேதுரு எல்லாருக்கும் முன்பாக இயேசுவை அறிந்திருப்பதை மறுதலிக்கிறான். “நீ சொல்லுகிறது எனக்குத் தெரியாது” என்று அவன் சொல்கிறான்.

அப்போது பேதுரு வாசல் மண்டபத்துக்கு அருகே செல்கிறான். அங்கு, வேறொருத்தியும் அவனை கவனித்து, அங்கே நின்று கொண்டிருந்தவர்களிடம்: “இவனும் நசரேயனாகிய இயேசுவோடே கூட இருந்தான்.” என்று சொல்கிறாள். “அந்த மனுஷனை நான் அறியேன்” என்று ஆணையிட்டு பேதுரு மீண்டும் ஒருமுறை மறுதலிக்கிறான்.

பேதுரு முற்றத்திலேயே இருக்கிறான், கூடுமானவரை மறைவாக இருக்க முயற்சி செய்கிறான். இந்தச் சமயத்தில் விடியற்காலை இருட்டில் சேவல் கூவுகிறதை கேட்டு ஒருவேளை அதிர்ச்சியடைகிறான். இதற்கிடையில் இயேசுவின் விசாரணை முற்றத்துக்கு மேலே வீட்டின் ஒரு பகுதியில் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. அத்தாட்சி கொடுப்பதற்காக கொண்டுவரப்பட்ட பலவிதமான சாட்சிகள் போகிறதையும் வருகிறதையும் கீழே காத்துக் கொண்டிருக்கும் பேதுருவும் மற்றவர்களும் சந்தேகமின்றி பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இயேசுவின் ஒரு கூட்டாளியாக பேதுரு அடையாளங் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து சுமார் ஒரு மணிநேரம் ஆகிறது. இப்போது சுற்றி நின்றுகொண்டிருப்பவர்களில் அநேகர் அவரிடம் வந்து இவ்வாறு சொல்கின்றனர்: “மெய்யாகவே நீயும் அவர்களில் ஒருவன்; உன் பேச்சு உன்னை வெளிப்படுத்துகிறது.” அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவன் மல்குஸ் என்பவனின் உறவினனாக இருக்கிறான். மல்குஸ்-ன் காதை பேதுரு வெட்டினான். “நான் உன்னை அவனுடனே கூடத் தோட்டத்திலே காணவில்லையா?” என்று அவன் சொல்கிறான்.

“அந்த மனுஷனை அறியேன்” என்று பேதுரு ஆவேசத்தோடே உறுதியாகக் கூறுகிறான். அந்த விஷயத்தைக் குறித்து தான் உண்மையை சொல்லவில்லையென்றால் தன்மீது தானே தீமையை வரவழைத்துக் கொள்வதைப் போல் சபித்து, சத்தியம் பண்ணுவதன் மூலம் அவர்கள் எல்லாரும் தவறாக புரிந்து கொண்டிருக்கின்றனர் என்று அவர்களை நம்ப வைப்பதற்கு முயற்சி செய்கிறான்.

மூன்றாவது முறையாக பேதுரு மறுதலிக்கும் போது, ஒரு சேவல் கூவுகிறது. அந்தச் சமயத்தில் இயேசு வெளியே வந்து முற்றத்துக்கு மேல் இருக்கும் மாடி முன்முகப்புக்கு வந்து திரும்பி பேதுருவை நோக்கிப் பார்க்கிறார். சில மணிநேரங்களுக்கு முன்பு மேலறையில் இயேசு சொன்னதை பேதுரு உடனே நினைவுகூருகிறான்: “சேவல் இரண்டு தரம் கூவுகிறதற்கு முன்னே, நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய்.” தன்னுடைய பாவத்தின் பாரத்தால் நெருக்கப்பட்டு, பேதுரு வெளியே சென்று மனங்கசந்து அழுகிறான்.

இது எவ்வாறு நடக்கக்கூடும்? தன் ஆவிக்குரிய பலத்தைக் குறித்து அவ்வளவு நிச்சயமாக இருந்த பேதுரு எவ்வாறு தன் எஜமானை மூன்று முறை அடுத்து அடுத்து மறுதலிக்க முடியும்? சந்தேகமின்றி சூழ்நிலைமைகள் விழிப்பற்ற நிலையில் பேதுருவை திடுக்கிடச் செய்கின்றன. உண்மை திரித்துக் கூறப்படுகிறது, இயேசு ஓர் இழிவான குற்றவாளியாக காண்பிக்கப்படுகிறார். சரியானதை தவறானது போலவும் குற்றமற்றவரை குற்றமுள்ளவராகவும் தோன்றச் செய்கின்றனர். ஆகையால் அந்தச் சமயத்தில் இருந்த அழுத்தங்களினால் பேதுரு சமநிலையை இழந்துவிடுகிறான். திடீரென அவனுடைய உண்மைத்தவறாமையின் சரியான உணர்வு குலைந்துவிடுகிறது; மனித பயத்தால் அவன் செயலிழந்துவிடுகிறான். நமக்கு அது ஒருபோதும் ஏற்படாதிருப்பதாக! மத்தேயு 26:57, 58, 69–75; மாற்கு 14:30, 53, 54, 66–72; லூக்கா 22:54–62; யோவான் 18:15–18, 25–27.

▪ பேதுருவும் யோவானும் பிரதான ஆசாரியனின் முற்றத்துக்குள் எவ்வாறு பிரவேசிக்க முடிகிறது?

▪ பேதுருவும் யோவானும் முற்றத்தில் இருக்கையில், வீட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது?

▪ ஒரு சேவல் எத்தனை தடவை கூவுகிறது? கிறிஸ்துவை அறிந்திருப்பதை பேதுரு எத்தனை தடவைகள் மறுதலிக்கிறான்?

▪ பேதுரு சபித்து, சத்தியம் பண்ணுகிறதன் அர்த்தமென்ன?

▪ இயேசுவை தான் அறிந்திருப்பதை மறுதலிக்கும்படி பேதுருவை செய்வித்தது எது?