Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன்”

“மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன்”

அதிகாரம் 126

“மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன்”

இயேசு கழுமரத்தில் அறையப்பட்டு இன்னும் அதிக நேரம் ஆகவில்லை, அப்போது நண்பகல் நேரத்தில் ஓர் அசாதாரண மூன்று மணி நேர இருள் ஏற்படுகிறது. அதற்கு காரணம் சூரிய கிரகணமாக இருக்க முடியாது. ஏனென்றால் இவைகள் அமாவாசையின் போது மட்டும் தான் நிகழும். ஆனால் இப்போது பஸ்கா சமயத்தில் சந்திரன் முழுநிறைவாக இருக்கிறது. மேலும், சூரிய கிரகணங்கள் சில நிமிடங்கள் மட்டுமே நீடித்திருக்கும். ஆகையால் அந்த இருள் தெய்வீக வல்லமையால் ஏற்பட்டிருக்கிறது! இது இயேசுவை கேலி செய்பவர்கள் கேலியை நிறுத்தும்படி செய்கிறது, அவர்கள் பழித்துரைப்பதை விட்டுவிடும்படியாகவும் செய்கிறது.

ஒரு கள்ளன் தன் கூட்டாளியை கண்டித்து இயேசு தன்னை நினைவுகூரும்படி கேட்டுக்கொண்டதற்கு முன்பு இந்த முன்பின் எதிர்பாராத இயல்நிகழ்ச்சி நடந்திருந்தால், அவனுடைய மனந்திரும்புலுக்கு இது ஒரு காரணமாக இருந்திருக்கக்கூடும். இயேசுவின் தாய், அவளுடைய சகோதரி சலோமே, மகதலேனா மரியாள், அப்போஸ்தலனாகிய சின்ன யாக்கோபின் தாயாகிய மரியாள் ஆகிய நான்கு பெண்களும் அந்த இருட்டின் போது கழுமரத்திற்கு அருகே செல்கின்றனர். இயேசுவின் பிரியமான அப்போஸ்தலனாகிய யோவான் அவர்களோடு அங்கு இருக்கிறான்.

தான் பாலூட்டி சீராட்டி பேணி வளர்த்த மகன் வேதனையில் அங்கு தொங்கிக் கொண்டிருப்பதை கவனிக்கையில் இயேசுவின் தாயின் இருதயம் எவ்வாறு ‘ஊடுருவக் குத்தப்படுகிறது!’ என்றபோதிலும் இயேசு தம் சொந்த வலியை பாராமல் தம் தாயின் நலனை எண்ணிப்பார்க்கிறார். பெரும் முயற்சியோடு அவர் யோவானை நோக்கி தலையசைத்து தன் தாயிடம் இவ்வாறு சொல்கிறார்: “ஸ்திரீயே, அதோ, உன் மகன்!” பின்பு மரியாளை நோக்கி தலையசைத்து அவர் யோவானிடம் இவ்வாறு சொல்கிறார்: “அதோ, உன் தாய்!”

இயேசு தாம் விசேஷமாக நேசித்த அப்போஸ்தலனிடம் இப்போது விதவையாயிருக்கும் தம் தாயை கவனித்துக்கொள்ளுமாறு இவ்வாறு ஒப்படைக்கிறார். மரியாளின் மற்ற குமாரர்கள் இன்னும் அவரில் விசுவாசம் காண்பிக்காததால் அவர் இதைச் செய்கிறார். இவ்வாறு அவர் தன் தாயின் சரீரப்பிரகாரமான தேவைகளுக்கு மட்டுமல்லாமல் அவளுடைய ஆவிக்குரிய தேவைகளுக்கும் ஏற்பாடு செய்வதில் ஒரு சிறந்த முன்மாதிரியை வைக்கிறார்.

பிற்பகல் சுமார் மூன்று மணியளவில் இயேசு இவ்வாறு சொல்கிறார்: “தாகமாயிருக்கிறேன்.” அவருடைய உத்தமத்தன்மையை உச்ச வரம்பு வரை பரீட்சிப்பதற்காக தம்மிடமிருந்து பாதுகாப்பைத் தம் தகப்பன் விலக்கிக்கொண்டதைப் போல் இயேசு உணருகிறார். ஆகையால் அவர் மிகுந்த சத்தமிட்டு, “என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று கூப்பிடுகிறார். இதைக் கேட்ட போது, அருகில் நின்று கொண்டிருந்த சிலர், “இதோ, எலியாவைக் கூப்பிடுகிறான்” என்று ஆச்சரியப்படுகின்றனர். உடனடியாக அவர்களில் ஒருவன் ஓடி, கடற்காளானைக் காடியிலே தோய்த்து, ஈசோப்புத்தண்டில் மாட்டி அவருக்குக் குடிக்க கொடுக்கிறான். ஆனால் மற்றவர்கள் இவ்வாறு சொல்கின்றனர்: “பொறுங்கள், எலியா இவனை இறக்க வருவானோ பார்ப்போம்.”

இயேசு காடியைப் பெற்றுக்கொண்ட போது, அவர் “முடிந்தது” என்று மகா சத்தமாய்க் கூப்பிடுகிறார். ஆம், அவருடைய தகப்பன் அவரை பூமிக்கு அனுப்பி செய்து முடிக்கச் சொன்ன எல்லா காரியங்களையும் அவர் செய்து முடித்திருக்கிறார். இறுதியில் அவர் “பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்” என்கிறார். இயேசு இவ்வாறு ஜீவசக்தியை கடவுளிடம் ஒப்படைக்கிறார், கடவுள் அதை மறுபடியும் அவரிடம் ஒப்படைப்பார் என்ற நம்பிக்கையுடன். பின்பு அவர் தலையைச் சாய்த்து மரிக்கிறார்.

இயேசு தம்முடைய ஜீவனை விட்ட கணமே, ஒரு கடுமையான பூமியதிர்ச்சி ஏற்படுகிறது, கன்மலைகள் பிளக்கின்றன. அந்த அதிர்ச்சி அவ்வளவு வல்லமையுள்ளதாக இருந்ததால் எருசலேமுக்கு வெளியே இருக்கும் ஞாபகார்த்த கல்லறைகள் உடைந்து திறக்கப்பட்டு அதிலிருந்து பிணங்கள் வெளியே எறியப்படுகின்றன. அவ்வழியே சென்றுகொண்டிருப்பவர்கள் வெளியே கிடந்த அந்தச் செத்த உடல்களைக் கண்டு, நகரத்துக்குள் சென்று அதைக் குறித்து அறிவிக்கின்றனர்.

மேலும், இயேசு மரித்த கணமே தேவாலயத்தில் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து மகா பரிசுத்த ஸ்தலத்தை பிரிக்கும் பெரிய திரைச்சீலை மேல் தொடங்கிக் கீழ் வரைக்கும் இரண்டாகக் கிழிகிறது. இந்த அழகிய வேலைப்பாடுள்ள திரைச்சீலை 18 மீட்டர் உயரமாயும், அதிக கனமாயும் இருக்கிறது! இந்த வியப்பூட்டும் அற்புதம், தம் குமாரனை கொலை செய்தவர்களுக்கு எதிராக கடவுளுடைய கோபாக்கினையை வெளிக்காட்டுவது மட்டுமல்லாமல், மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள், பரலோகத்துக்குத் தானே செல்லும் வழி இப்போது இயேசுவின் மரணத்தால் சாத்தியமாகிறது என்பதையும் தெரிவிக்கிறது.

ஜனங்கள் பூமியதிர்ச்சியை உணரும் போதும், நடக்கும் காரியங்களைப் பார்க்கும் போதும் அதிக பயமடைகின்றனர். கொலை செய்வதற்கு அதிகாரமுடைய நூற்றுக்கு அதிபதி கடவுளுக்கு மகிமை செலுத்துகிறான். “மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன்” என்று அவன் அறிவிக்கிறான். பிலாத்துவுக்கு முன்பு இயேசுவின் விசாரணையின் போது தெய்வீக மகன் என்ற உரிமைபாராட்டு கலந்தாலோசிக்கப்பட்ட போது அவன் ஒருவேளை அங்கு இருந்திருக்கலாம். இயேசு கடவுளுடைய குமாரன் என்றும், ஆம், அவர் எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் என்றும் இப்போது அவன் நம்புகிறான்.

இப்படிப்பட்ட அற்புதமான சம்பவங்களால் மற்றவர்களும்கூட ஆட்கொள்ளப்படுகின்றனர். அவர்கள் தங்கள் ஆழ்ந்த துயரத்தையும் வெட்கத்தையும் தெரிவிக்கும் வகையில் தங்கள் மார்புகளை அடித்துக்கொண்டு வீடுகளுக்குத் திரும்பிச் செல்ல ஆரம்பிக்கின்றனர். இப்படிப்பட்ட பெரும்விளைவுகளையுடைய சம்பவங்களால் மிகவும் உந்தப்பட்ட இயேசுவின் அநேக பெண் சீஷர்கள் இந்தக் காட்சியை தூரத்திலிருந்து கவனித்துக் கொண்டிருக்கின்றனர். அப்போஸ்தலனாகிய யோவானும்கூட அங்கு இருக்கிறான். மத்தேயு 27:45–56; மாற்கு 15:33–41; லூக்கா 23:44–49; 2:34, 35; யோவான் 19:25–30.

▪ மூன்று மணிநேரம் இருள் ஏற்படுவதற்கு சூரிய கிரகணம் ஏன் காரணமாக இருக்க முடியாது?

▪ தம்முடைய மரணத்துக்கு சிறிது நேரத்துக்கு முன்பு, வயதான பெற்றோர்களை உடையவர்களுக்கு இயேசு என்ன சிறந்த முன்மாதிரியை வைக்கிறார்?

▪ மரிப்பதற்கு முன்பு இயேசு கூறிய நான்கு கூற்றுகள் யாவை?

▪ பூமியதிர்ச்சி எதை விளைவிக்கிறது? ஆலய திரைச்சீலை இரண்டாக கிழிந்ததன் முக்கியத்துவம் என்ன?

▪ கொலை செய்யப்படும் இடத்துக்குப் பொறுப்பாயிருக்கும் நூற்றுக்கு அதிபதி அற்புதங்களினால் எவ்வாறு பாதிக்கப்படுகிறான்?