Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யவீருவின் வீட்டைவிட்டு புறப்பட்டு நாசரேத்துக்கு மீண்டும் செல்லுதல்

யவீருவின் வீட்டைவிட்டு புறப்பட்டு நாசரேத்துக்கு மீண்டும் செல்லுதல்

அதிகாரம் 48

யவீருவின் வீட்டைவிட்டு புறப்பட்டு நாசரேத்துக்கு மீண்டும் செல்லுதல்

இயேசுவுக்கு அந்த நாள் சுறுசுறுப்பான நாளாக இருந்திருக்கிறது—தெக்கப்போலியிலிருந்து கடல் மார்க்கமாக பயணமாய் வந்திருக்கிறார், பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீயை குணப்படுத்தியிருக்கிறார், யவீருவின் மகளை உயிர்த்தெழுப்பியிருக்கிறார். ஆனால் அந்த நாள் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இயேசு யவீருவின் வீட்டைவிட்டு புறப்படுகையில் இரண்டு குருடர் “தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும்” என்று சத்தமிட்டுக்கொண்டே அவர் பின்னே வருகிறார்கள்.

இயேசுவை “தாவீதின் குமாரனே” என்பதாக அழைப்பதன் மூலம், இந்த மனிதர்கள் இயேசுவை தாவீதின் சிங்காசனத்துக்கு வாரிசு எனவும், ஆகவே அவர் வாக்குப்பண்ணப்பட்ட மேசியா எனவும் தாங்கள் நம்புவதை வெளிப்படுத்துகிறார்கள். என்றபோதிலும் இயேசு, உதவிக்கான அவர்களுடைய கூக்குரலை அசட்டை செய்வதுபோல தெரிகிறது, ஒருவேளை அவர்களுடைய உறுதியைச் சோதிப்பதற்காக அவ்விதமாக அவர் செய்கிறார். ஆனால் அந்த மனிதர்கள் விடுவதாக இல்லை. அவர்கள் இயேசு தங்கியிருந்த இடத்துக்கே வந்து, அவர் வீட்டுக்குள் பிரவேசிக்கையில், அவருக்குப் பின்னே உள்ளேப் போகிறார்கள்.

அங்கே இயேசு கேட்கிறார்: “இதைச் செய்ய எனக்கு வல்லமை உண்டென்று விசுவாசிக்கிறீர்களா?”

“ஆம், விசுவாசிக்கிறோம், ஆண்டவரே!” என்று அவர்கள் நம்பிக்கையுடன் பதிலளிக்கிறார்கள்.

ஆகவே அவர்களுடைய கண்களைத் தொட்டு: “உங்கள் விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது” என்று இயேசு சொல்கிறார். உடனே அவர்களால் பார்க்க முடிகிறது! அப்போது இயேசு அவர்களுக்குக் கண்டிப்பாய் கட்டளையிடுவதாவது: “இதை ஒருவரும் அறியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.” ஆனால் மகிழ்ச்சியால் நிரம்பியவர்களாய் அவர்கள் இயேசுவின் கட்டளையை அசட்டை செய்து அத்தேசமெங்கும் அவரைப் பற்றி பேசுகிறார்கள்.

இந்த மனிதர்கள் புறப்பட்டுப் போகையில் பிசாசு பிடித்த ஒரு மனுஷனை ஜனங்கள் அவரிடத்தில் கொண்டுவருகிறார்கள். இவனையே பிசாசு ஊமையனாக்கியது. இயேசு பிசாசைத் துரத்துகிறார், உடனடியாக அவன் பேச ஆரம்பிக்கிறான். ஜனங்கள் இந்த அற்புதங்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டு, “இஸ்ரவேலில் இப்படி ஒருக்காலும் காணப்படவில்லை” என்கிறார்கள்.

பரிசேயர்களும்கூட அங்கிருக்கிறார்கள். அற்புதங்களை அவர்களால் மறுதலிக்கமுடியாது. ஆனால் அவர்களுடைய பொல்லாத அவிசுவாசத்தில், இயேசு நடப்பித்த பலத்த செய்கைகளின் ஊற்றுமூலத்தைக் குறித்து, “இவன் பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறான்” என்று சொல்லி அவர்கள் மீண்டும் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

இந்தச் சம்பவங்கள் நடந்தேறிய பின்பு விரைவில், இயேசு தம்முடைய சொந்த ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பி வருகிறார். இந்த முறை அவருடைய சீஷர்கள் அவரோடுகூட வருகிறார்கள். ஓராண்டுக்கு முன்பு அவர் ஜெப ஆலயத்துக்கு வந்து அங்கே போதித்திருந்தார். ஜனங்கள் அவர் பேசிய இனிய வார்த்தைகளைக் குறித்து முதலில் ஆச்சரியப்பட்டபோதிலும், பின்னால் அவருடைய போதனையில் குற்றங்கண்டுபிடித்து அவரைக் கொலை செய்ய முயற்சி செய்தார்கள். இப்பொழுது, இயேசு இரக்கத்தோடு தம்முடைய முன்னாள் அயலாருக்கு உதவி செய்ய இன்னும் ஒரு முறை முயற்சி செய்கிறார்.

மற்ற இடங்களில் இயேசுவிடம் ஜனங்கள் திரளாக வந்து சேர்ந்தபோதிலும், இங்கே அவர்கள் அவ்விதமாகச் செய்வதில்லை. ஆகவே, ஓய்வுநாளில், போதிப்பதற்காக அவர் ஜெபஆலயத்துக்குப் போகிறார். அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த பெரும்பாலானோர் ஆச்சரியப்படுகிறார்கள். “இவனுக்கு இந்த ஞானமும் பலத்த செய்கைகளும் எப்படி வந்தது?” என்று அவர்கள் கேட்கிறார்கள். “இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? யாக்கோபு யோசே சீமோன் யூதா என்பவர்கள் இவனுக்குச் சகோதரர் அல்லவா? இவன் சகோதரிகளெல்லாரும் நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? இப்படியிருக்க, இதெல்லாம் இவனுக்கு எப்படி வந்தது?”

‘இயேசு நம்மைப்போல உள்ளூர்வாசிதானே’ என்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். ‘அவர் வளருவதை நாம் பார்த்தோம், அவருடைய குடும்பமும் நமக்குத் தெரியும்; அவர் எவ்விதமாக மேசியாவாக இருக்கமுடியும்?’ எல்லா அத்தாட்சிகளின் மத்தியிலும்—அவருடைய மகா ஞானம் மற்றும் அற்புதங்களின் அத்தாட்சிகளின் மத்தியிலும்—அவரை அவர்கள் தள்ளிவிடுகிறார்கள். அவருடைய சொந்த உறவினர்களும்கூட, அவர்களுடைய நெருங்கிய பழக்கத்தின் காரணமாக அவரைக் குறித்து இடறலடைகிறார்கள், இது இயேசுவை பின்வரும் முடிவுக்குவரச் செய்கிறது: “தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் இனத்திலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான்.”

ஆம், இயேசு அவர்களுடைய விசுவாசக்குறைவைக் குறித்து ஆச்சரியப்படுகிறார். ஆகவே அங்கே ஒரு சில நோயாளிகள் மீது கைகளை வைத்து அவர்களைக் குணப்படுத்தியதைத் தவிர, வேறு எந்த அற்புதத்தையும் செய்யவில்லை. மத்தேயு 9:27–34; 13:54–58; மாற்கு 6:1–6; ஏசாயா 9:7.

▪ “தாவீதின் குமாரனே” என்பதாக இயேசுவை அழைப்பதன் மூலம், குருடர்கள் தாங்கள் எதை நம்புவதாகக் காண்பிக்கிறார்கள்?

▪ இயேசுவின் அற்புதங்களுக்குப் பரிசேயர் கொடுக்கும் விளக்கம் என்ன?

▪ நாசரேத்திலிருப்பவர்களுக்கு உதவி செய்ய மீண்டும் வருவது ஏன் இயேசுவின் பேரில் இரக்கமுள்ள செயலாக இருக்கிறது?

▪ நாசரேத்தில் இயேசு என்ன வரவேற்பைப் பெற்றுக்கொள்கிறார்? ஏன்?