Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் வணக்கத்தின் பேரில் வைராக்கியம்

யெகோவாவின் வணக்கத்தின் பேரில் வைராக்கியம்

அதிகாரம் 16

யெகோவாவின் வணக்கத்தின் பேரில் வைராக்கியம்

இயேசுவின் ஒன்றுவிட்ட சகோதரர்கள்—மரியாளின் மற்ற குமாரர்கள்—யாக்கோபு, யோசே, சீமோன், யூதாஸ் ஆவர். இவர்கள் அனைவரும் இயேசுவுடனும் அவருடைய சீஷர்களுடனும் கலிலேயா கடலின் அருகிலுள்ள ஒரு பட்டணமாகிய கப்பர்நகூமுக்கு பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன், குடும்பம் அவர்களுக்குத் தேவையான பொருட்களை கட்டித் தருவதற்கு இவர்கள் முதலாவதாக நாசரேத்திலிருக்கும் தங்கள் வீட்டில் ஒருவேளை பயணத்தைச் சற்று நிறுத்தியிருக்கக்கூடும்.

ஆனால் கானா ஊர், நாசரேத் அல்லது கலிலேயா மலைகளில் இருக்கும் மற்ற இடங்களில் தம்முடைய ஊழியத்தைத் தொடராமல் இயேசு ஏன் கப்பர்நகூமுக்குச் செல்கிறார்? ஒரு காரணம் கப்பர்நகூம் முக்கியமான ஓர் இடத்தில் அமைந்திருப்பதினாலும், அது ஒரு பெரிய பட்டணமாக இருப்பதனாலும் ஆகும். மேலும் இயேசுவின் புதிய சீஷர்களில் பலர் கப்பர்நகூமில் அல்லது அதைச் சுற்றியே வசிக்கின்றனர், எனவே அவர்கள் அவரிடமிருந்து பயிற்றுவிப்பைப் பெற தங்களுடைய வீட்டை விட்டுவர வேண்டிய அவசியமிருக்காது.

அவர் கப்பர்நகூமில் இருந்த சமயத்தில், இயேசு அற்புதமான கிரியைகளைச் செய்கிறார். அவர்தாமே இதைச் சில மாதங்களுக்குப் பிறகு வெளிப்படுத்துகிறார். சீக்கிரத்திலேயே இயேசுவும் அவருடைய தோழர்களும் பயணத்தை ஆரம்பிக்கிறார்கள். அது வசந்த காலமாயிருக்கிறது, பொ.ச. 30, பஸ்கா பண்டிகைக்கு ஆஜராயிருக்க எருசலேமை நோக்கிச் செல்கிறார்கள். அங்கே, அவருடைய சீஷர்கள் இயேசுவில் பார்த்திராத ஏதோ ஒரு காரியத்தைப் பார்க்கிறார்கள்.

கடவுளுடைய சட்டத்தின் பிரகாரம், இஸ்ரவேலர் மிருக பலிகளைச் செலுத்தும்படி எதிர்பார்க்கப்பட்டனர். இப்படியிருக்க, அவர்களுடைய வசதிக்காக, எருசலேமிலிருக்கும் வியாபாரிகள் மிருகங்களையும் பறவைகளையும் விற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஆலயத்திற்குள்ளே விற்பனைச் செய்கிறார்கள், மற்றும் ஜனங்களிடமிருந்து அதிகமான பணம் வாங்கி அவர்களை ஏமாற்றுகிறார்கள்.

அதிக கோபமடைந்தவராக, இயேசு கயிற்றிலான ஒரு சவுக்கைச் செய்து, அதைக் கொண்டு விற்பவர்களை வெளியே துரத்துகிறார். காசுக்காரருடைய காசுகளைக் கொட்டி, பலகைகளைக் கவிழ்த்துப் போடுகிறார். “இவைகளை இவ்விடத்திலிருந்து எடுத்துக்கொண்டு போங்கள்!” என்று புறா விற்கிறவர்களிடம் கோபமாகச் சொல்லுகிறார். “என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள்.”

இயேசுவின் சீஷர்கள் இதைப் பார்க்கும்போது, கடவுளுடைய குமாரனைப் பற்றிய தீர்க்கதரிசனம் அவர்களுக்கு ஞாபகம் வருகிறது: “உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்தி வைராக்கியம் என்னைப் பட்சித்தது.” ஆனால் யூதர்கள் அவரை நோக்கி: “நீர் இவைகளைச் செய்கிறீரே, இதற்கு என்ன அடையாளத்தை எங்களுக்குக் காண்பிக்கிறீர்” என்று கேட்கிறார்கள். இயேசு பிரதியுத்தரமாக: “இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன்” என்கிறார்.

இயேசு சொல்லர்த்தமான ஆலயத்தைக் குறித்து பேசுகிறார் என்று யூதர்கள் நினைத்து கேட்கிறார்கள்: “இந்த ஆலயத்தைக் கட்ட நாற்பத்தாறு வருஷம் சென்றதே, நீர் இதை மூன்று நாளைக்குள்ளே எழுப்புவீரோ?” ஆனால் இயேசு தம்முடைய சரீரமாகிய ஆலயத்தைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறார். மூன்று வருடங்கள் கழித்து, அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பப்பட்ட போது, அவருடைய சீஷர்கள் அவர் சொன்ன இந்தக் காரியத்தை நினைவுகூருகிறார்கள். யோவான் 2:12-22; மத்தேயு 13:55; லூக்கா 4:23.

▪ கானா ஊர் கல்யாணத்திற்குப் பிறகு இயேசு எந்த இடங்களுக்குப் பயணம் செய்கிறார்?

▪ இயேசு ஏன் கோபப்படுகிறார்? பிறகு அவர் என்ன செய்கிறார்?

▪ இயேசுவின் செயல்களைப் பார்க்கையில் அவருடைய சீஷர்கள் எதை நினைவுகூருகிறார்கள்?

▪ “இந்த ஆலயத்தைக்” குறித்து இயேசு என்ன சொல்கிறார், அவர் எதை அர்த்தப்படுத்துகிறார்?